வகுப்பறையை கலகலப்பாக வைத்திருக்கும் வழிகளைப் பற்றி பலவித முயற்சிகளில் ஈடுபட்டுவரும் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் கலகல வகுப்பறை சிவா அவர்கள் இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உரையாடல் வழியே வகுப்பறையை உயிர்ப்பிக்கும் பல்வித யதார்த்த வழிகளை அலசும்‌ இக்கட்டுரைகள் வளரும் சமூகத்திற்கு கல்வியின் அவசியத்தை உணர்த்துகிறது.

புதுப்புது தொழில்நுட்பங்கள் புதிய புதிய அறிவியல் கருவிகள் யுகம் விரைவான வளர்ச்சியில் வேக நடைபோட அடிப்படையாக மனிதனின் மனதுக்குள் அறிவு வெளிச்சமும் திறமையின் பாய்ச்சலும் உழைப்பின் மீதான நம்பிக்கையும் ஊற்றெடுக்க வேண்டும். அத்தகு நிலைக்குச் செல்ல மனிதனுக்கு அடித்தளமாக வளம் சேர்ப்பது அவன் பெறும் கல்வியும் அதன் வாயிலாக சேமிக்கும் உலக அனுபவமும் அவனுக்கு கைகொடுக்கின்றன.

வளரும் சமுதாயத்தின் போக்கிற்கேற்ப கல்வியும் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.கல்வியின் திட்டங்களும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.ஆனால் கல்வியை பிஞ்சுகளின் மூளைக்குள் மதிய வைத்து உலகத்தின் போக்கினை உணர்த்திடும் வகுப்பறையின் உருமாற்றம் பெரிதாக மாறவேயில்லாமல் இன்னும் போதனை முறையிலும் தேர்வு முறையிலும் நின்று கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பள்ளியில் நுழைவதே மக்களுக்கு இயலாத சூழல் நிலவி வந்தது. நீண்ட போராட்ட வரலாறுகளுக்குப் பிறகு எல்லோருக்குமான வாழ்வை வளப்படுத்த கல்வியின் கதவுகள் திறக்க ஆரம்பித்தன.வளமும் தேவையும் வளர வளர பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்குகிறது.கல்வித் தகுதிக்கேற்ப வேலையோ வேலையை திறம்பட செய்வதற்கான திறமையை வளர்க்கும் கல்விமுறையோ வளர்ந்த இருக்கிறதா என்பதை அலசுதல் காலத்தின் கட்டாயம்.

எழுத்துத் தேர்வின் வழியேயும் மதிப்பெண் அறிக்கை மூலமுமே ஒருவரது திறன்கள் மதிப்பிடப்படும் நிலையே இன்னும் தொடர்கிறது.மனதுக்குள் கல்வியின் வாயிலாக கற்றுக்கொள்ளும் வாழ்வியல் திறன்கள் முழுமையடைந்து அவனது வாழ்க்கைத் தரத்தைக் கட்டமைக்க உதவவேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. மாறாத தேர்வு முறைகள், வளர்ந்து கொண்டேயிருக்கும் குறிப்பேடுகள் நிரப்புதல், ஆவணப் பராமரிப்புகள் என நீளும் வேலைப்பட்டியலுக்குள் தன்னைக் கரைக்காமலும் பொறுமையைத் தொலைக்காமலும் இயந்திரத்தனமான அன்றாடக் கடமைகளிலிருந்து விடுபட்டும் மாணவர்களின் கல்விக்குள் தம்மை ஒப்படைத்துக் கொள்வது ஆசிரியர்களின் அவசியமாகிறது.

பெருகும் கட்டமைப்பு தளங்களுக்குள் இறுக்கமான நிறுவனமாக பள்ளிகள் தம்மை உருமாற்றிக் கொண்டு மாணவர் மனதுக்குள் உலகத்தையே நகலெடுத்து ஒப்புவித்துவிட வேண்டும் என்ற ஓட்டத்தில் இளைப்பாற நேரமற்று இயங்குகின்றன.பள்ளியின் இவ்வித வகுப்பறை அழுத்தங்கள் அதிகரித்த போதும் ஆசிரியர்களின் களம் மாணவர்களை உயிர்ப்பிக்கும் வகுப்பறை என்பதை ஏற்றுக்கொண்டு செயலாற்றிட வேண்டும்.

தேடலும் அதன்வழியே புதுப்புது உத்திகளைக் கையாளுவதன் மூலமும் ஆர்வத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு மாணவர்களின் மனதுக்குள் ஒன்றிப் போய்விடும் ஆசிரியரின் முயற்சிகள் வகுப்பறைக்குள் மாணவர் மனங்களுக்குள் பலவித அறிவுத் திறப்புகளை வெளிக் கொணர வைக்கும். மதிப்பெண்களை நோக்கி ஓடும் இன்றைய காலகட்ட கல்வியின் ஓட்டத்தில் புதுப்புது முயற்சிகள் செய்து பார்த்திட ஆசிரியர்களுக்கான வெளி அவசியமாகிறது. நடைமுறையில் இம்முயற்சிகள் கற்றல் கற்பித்தலுக்கான வேகத்தை தடைசெய்யும் சிக்கல்களும் எழுப்பி விடுகின்றன. இப்படியான தருணத்தில் கல்வி போதிப்பதைத் தாண்டி அவர்களின் மனதிற்குள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை, தன்னம்பிக்கைகளை, பிரச்சனைகளுக்கு அவர்களிடமிருக்கும் தீர்வு முறைகளை வெளிக்கொணரும் ஆசிரியர்களின் முயற்சிகளை எல்லோருக்கும் அறியச் செய்திடும் இக்கட்டுரைத் தொகுப்பு புதுப்புது மாற்றங்களை விதைக்கக் காத்திருக்கும் நிறைய ஆசிரியர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்.

பாடப்புத்தகங்களைத் தாண்டி நூலக வாசிப்பை மாணவர் மத்தியில் புகுத்திடும்போது அறிவின் விசாலப் பார்வை மேலும் விரிவடைந்து கல்வியின் மீதான நம்பிக்கையை எதிர்காலத்தின் மீதான அக்கறையை உருவாக்கும் என்பதை உணர்த்திடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதுப்புது நூல்களை அறிமுகம் செய்துகொண்டே இருப்பர்.

ஒவ்வொரு குழந்தைகளுக்குள் ஒளித்து கிடக்கும் பாராட்டுக்கு ஏங்கும் மனப்பான்மையைக் கண்டு வகுப்பறையில் அவர்களைக் கொண்டாடும்போது கல்வியின் மீதான பிடிப்பை உணர்த்தி தம்மீதான தன்னம்பிக்கையைத் தூண்டிவிடும் கல்வி தொடர்பான மாணவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் ஆசிரியர்கள் மீது ஈடுபாடும் மதிப்பும் அதிகரிக்கும். அதன்வழியே படிப்பை இன்னும் எளிமையாக அவர்களுக்குள் ஆழமாகப் புகுத்தி விட முடியும்.

குடும்ப அமைப்பும் வாழ்க்கை மாற்ற முறைகளும் மாணவர்களுக்குள் புதுவித உத்திகளை உருவாக்கியிருக்கையில் காலத்திற்கேற்ப ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் மாணவர்களை நோக்கி தம்மை செலுத்திக் கொள்கிறார்கள்.குழந்தைகளைக் கையாளும் வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அவர்களோடு இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொள்வது ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவசர அவசியமாகிறது.

மாணவர்களுடனான உரையாடல்களை அவசியப்படுத்தி வகுப்பறையை உயிர்ப்பிக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஆசிரியர்கள் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். வளரிளம் பருவக் குழந்தைகளின் மனப்போக்கையும் எதிர்காலக் கனவுகளையும் உள்வாங்கி அவர்களது வாழ்வியல் நெறிமுறைகளை வளப்படுத்தும் நம்பிக்கையை விதைக்கும் இந்நூலின் வழியே ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றுக்கொள்ள சிறப்பான அனுபவங்கள் புதைந்திருக்கின்றன.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : ஆயிரம் ஜன்னல் வகுப்பறை

நூலாசிரியர் : கலகல வகுப்பறை சிவா

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

நூலைப்  பெற : 044 2433242

முதல் பதிப்புஜூலை 2023

விலை : ரூ.₹110/-

பக்கம்  : 104

நூலறிமுகம் எழுதியவர்:- 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *