ஆறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இது என் முதல் நூல் .இது முதல் குழந்தை போல….68 வயதில் பிறந்த குழந்தை. இந்த முதல் குழந்தையின் பிரசவத்திற்கு பலவிதங்களில் உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி என்கிறார் ஆசிரியர். “ஆயிரம் மணிநேர வாசிப்பு சவால்” திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியவர் சுனில் கிருஷ்ணன். இதை” ஆயிரம் மணி நேர வாசிப்பு தவம்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இந்த நூலின் ஆசிரியர் சாந்தமூர்த்தியின் அப்பா ஜெகநாதன், பரவாக்கோட்டை கிராமத்தில் அவர் காலத்தில் பொதுவுடமை கட்சியின் கிளை செயலாளராக இருந்ததோடு மளிகை கடை வைத்து நடத்தி இருக்கிறார். அந்த கடையில் மகன் சாந்தமூர்த்தி அப்பாவுக்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பொருட்களை மடித்துக் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக வார இதழ்களை அந்த காலத்தில் பயன்படுத்துவது வழக்கம் .அப்படித்தான் இவர் அப்போது வந்த எல்லா பழைய நூல்களையும் படித்திருக்கிறார் .அதோடு அப்பாவுடன் கருத்து முதல் வாதம்.. பொருள் முதல்வாதம் பற்றி எல்லாம் விவாதம் நடந்திருக்கிறது என்பதை நினைவு கூறுகிறார். அவற்றின் அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்காக.. வாசிப்பை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய பிற்காலத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே உள்ள நூலகங்களை தேடுவதில் கொண்டு போய் விட்டிருக்கிறது. பரவாக்கோட்டையில் இருந்த நூலகத்தில் இரு உறுப்பினர் சந்தா பதிவு செய்து அந்த வயதிலேயே நிறைய நூல்களை வாசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இவருக்கான வாசிப்பிற்கான சூழலை பெற்றோருடன்…மளிகை கடையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சுனில் கிருஷ்ணன் அறிவித்த” ஆயிரம் மணிநேர வாசிப்பு மராத்தான்” பற்றி வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தை கொடுப்பது அவசியம். இந்தத் திட்டத்தின் படி ஒரு ஆண்டில் ஒரு வாசகர் ஆயிரம் மணி நேர வாசிப்பை எப்போது முடிக்கிறார் என்று அவர் வாசித்த நேரத்தை பதிவு செய்து அளவிட்டு அறிவிப்பதாகும் .அவர் எந்த மொழி நூலையும் படிக்கலாம்.. என்ன வகையான நூலையும் படிக்கலாம். ஆனால் அது புத்தகமாக இருக்க வேண்டும். மற்றபடி செய்தித்தாள்களோ ,முகநூல், வாட்ஸ்அப் போன்றவைகளோ கூடாது. வாசிப்பதற்கான நேரத்தை கூகுள் சீட் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய மேல் விவரங்களுக்கு வாசகர்கள் இந்நூல் ஆசிரியருடன் நேரிலோ..வலைப்பூ மூலமோதொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இங்கே குறிப்பிட வேண்டியது தற்போது சர்வதேச அளவில் 90 பேர் வரை பங்கெடுத்து இருக்கும் இந்த வாசிப்பு சவால் போட்டியில் இந்நூலின் ஆசிரியரான மன்னார்குடி ஜெ. சாந்தமூர்த்தி அவர்கள் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறார் என்பதே ஆகும்.

கல்வித்துறையில் பணியாற்றிய திரு. சாந்தமூர்த்தி அவர்கள் 2013இல் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணி நிறைவு செய்தார் .அதற்குப் பிறகு தீவிரமான வாசிப்பில் ஈடுபட்டார். நூல் முழுவதும் அவருக்கு தொடர்ந்து வாசிக்கக் கூடிய வழக்கம் எப்படி ஏற்பட்டது.. தொடர் வாசிப்பின் அவசியம் என்ன.. பலன்கள் என்ன ..என்பதை பற்றி எல்லாம் விரிவாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஆசிரியர்களிடம் பெற்றோர்களிடம் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கம் என்பது எப்படி மங்கிப் போயிருக்கிறது என்பது பற்றி மிக வருத்தத்துடன் இந்த நூலில் அங்கலாய்க்கிறார்.

எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள் தன்னுடைய அணிந்துரையில் திரு சாந்தமூர்த்தி அவர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் வாசித்திருக்கிறார் .அதே வேகத்தை போட்டி முடிந்த பிறகும் தொடர்கிறார் .தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 150 முதல் 180 புத்தகங்களை வாசிக்கிறார். இந்தியாவில் இவர் அளவு வாசிக்கும் பிறிது ஒரு வாசகர் இருப்பது சந்தேகமே .அதிகாலை 4 மணிக்கு தொடங்கி வாசிக்கிறார். தேவையற்ற பயணங்கள் ,சமூக ஊடகங்கள் ,சினிமா, தொலைக்காட்சி அரட்டை என பலவற்றை கவனமாக நிராகரித்துள்ளார். தன்னுடைய அகம் ஆர்வம் கொள்ளும் துறையின் ஆகச் சிறந்த நூல்களை வாசித்து முடிக்கவே ஓர் ஆயுள் போதாது என்று இருக்கையில் கண்டதையும் கற்று பண்டிதன் ஆக வேண்டியது இல்லை .இவரது நூல் பகுப்பு முறையும் சுவாரஸ்யமானது. அவரை பொறுத்தவரை இரண்டே பிரிவுகள்தான் Light/Heavy தான். வாசித்தவற்றை தன்னுடைய மூன்று பேத்திகளுடன் பகிர்வது சாந்த மூர்த்தியின் வழக்கம். வாசியுங்கள்.. வாசியுங்கள்.. என்று சொல்வதை விட எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்வது… வாசித்தவற்றைச் சொல்லி ஆர்வத்தை தூண்டுவதும் மிக அவசியம் என நினைக்கிறேன்என்கிறார் செல்வேந்திரன் அவர்கள் .ஒவ்வொரு ஆண்டும் அவர் வாசித்த நூல்களின் பட்டியலை தன்னுடைய வலைப்பூ பக்கத்தில் பகிர்ந்து இருப்பது வாசகர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.எனவே வாசக அன்பர்கள் இந்த நூலை வாங்கி படிப்பதுடன் கூடவே …அவருடைய வலைப்பூபக்கத்தையும் பின் தொடர்வது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

*கடந்த ஆறு ஆண்டுகளாக மன்னார்குடியில் செயல்பட்டு வரும் மன்னார்குடி அறிவொளிவாசிப்பு இயக்கத்திற்கும் 2019 முதல் மூன்று முறை நடைபெற்ற மன்னார்குடி புத்தகத் திருவிழாவிற்கும் மன்னார்குடியைச் சேர்ந்த
திரு சாந்தமூர்த்தி அவர்களின் வாசிப்பு மராத்தான் சாதனை உத்வேகமூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவர் பெரும்பாலும் மின் நூல்களையே(ebooks) அமேசான் கிண்டில்(Amazon Kindle app) செயலி மூலம் வாசிக்கிறார். வாசிப்பதற்கான நேரத்தை எப்படி இவர் கண்டுபிடிக்கிறார் என்பதை நூலில் சுவாரசியமாக விவரிக்கிறார். ஒருபுறம் தன்னுடைய பேத்தியை வளர்க்கும் பணி.. குறிப்பாக கல்வி அளிக்கும் சோதனை முயற்சியின் ஊடாகவே வாசிப்பும் நிகழ்வது வாசகனுக்கு ஒரு படிப்பினையாகவும் இவர் தருகிறார். கல்வித்துறையில் இவரது நெடிய அனுபவம் இதற்கு உதவி செய்திருக்கிறது. நூல் முழுவதும் பரவலாக… எழுத்தாளர் ஜெயமோகன் மீதுள்ள இவரது அபிமானமும்.. மகாபாரதம் மீதுள்ள ஈர்ப்பும் வெளிப்படுகிறது.
படிப்பு வாசனையே இல்லாத தன்னுடைய அம்மாவும் அப்பாவும் எப்படி ஆர்வத்துடன் வாசிப்பில் ஈடுபட்டார்கள் என்பதை ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொள்கிறார்
சாந்த மூர்த்தி அவர்கள் .கிராம பாமர சூழலோ, பொருளாதார வாழ்க்கை சிக்கல்களோ, ஒருவரது வாசிப்பை முடமாக்கி விடாது. பெற்றோர் ,உறவினர், ஆசிரியர், நண்பர் யாராவது ஒருவர் வாசகராக இருந்து விட்டால் போதும்… அதன் மூலம் ஒருவருக்குள் வாசிப்பு பொறி விழுந்து விட்டால் அது பல்கி பெருகிவிடும் என்கிறார். ஒரு கிராமத்தில் சினிமா கொட்டகை என்பது எப்படி ஒரு கவர்ச்சியோ அதைப்போல சாந்தமூர்த்திக்கு நூலகம் ஒரு படு கவர்ச்சியான மையமாக இருந்திருக்கிறது. இவர் பிற்காலத்தில் தன்னுடைய மகள்கள் வசித்த அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோதும் கூட அங்கேயும் நூலகங்களையே தேடிச் சென்றிருக்கிறார்.

” ஆயிரத்தில் ஒருவரல்ல, பல்லாயிரத்தில் ஒருவர் மேற்கொள்ளும் செயலாக வாசிப்பு இன்று இருக்கிறது” என்று இன்றைய வாசிப்பின் நிலையைவெளிப்படுத்துகிறார்.

1980 ஆம் ஆண்டில் இருந்தே தான் வாசிக்கும் புத்தகங்களின் பட்டியலை ஆண்டு தோறும் பராமரித்து வருவதாக கூறுகிறார் சாந்தமூர்த்தி. இவர் பள்ளியில் ஆசிரியராக… தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது பள்ளி நூலகத்திற்காக நூல்கள் வாங்கும்போது தானும் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் தரமான நல்ல நூல்களையே சுயநல நோக்கத்தோடும் கூட வாங்கினேன் என்று குறிப்பிடுகிறார். இன்று பள்ளி நூலகங்களில் நூலகர் என்று தனியாக இல்லாத போது யாராவது ஒரு ஆசிரியரிடம் நூலகர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்படுகிறது. நூலகத்துக்கு என தனி அறை இருப்பதால் கூட சில பேர் அதை விரும்பக் கூடும். ஆனாலும் கூட புத்தகங்கள் கொடுப்பதால் காணாமல் போய்விடுமோ.. அது தன்னை பாதிக்குமோ என்று பல ஆசிரியர்கள் பயப்படுவதையும் நிதர்சனமாக குறிப்பிடுகிறார் ஆசிரியர் அவர்கள்.

வாசிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் புத்தகங்கள் வேண்டும். அவை மிகச் சிறந்தவையாக இருக்க வேண்டும். அவற்றை எங்கே எப்படி தேடுவது ..மகள் வீட்டில் இருந்த லேப்டாப்பை பயன்படுத்தி அதில் கூகுளை பயன்படுத்தி புத்தக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டேன். உலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கிய படைப்புகள்.. மிக உயர்ந்தவிருதான நோபல் பரிசு வென்ற நூல்களின் பட்டியல்களை தெரிவு செய்தேன்.

இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நூல்களின் பட்டியல்களையும் எடுத்ததில்.. எல்லாமே ஆங்கில மொழி நூல்கள். நான் ஏற்கனவே அறிந்திருந்த ஆனால் படித்திராத புத்தகங்களை திரட்டத் தொடங்கி இருந்தேன். மரபான புத்தகங்கள் …செவ்வியல்களின் ஆங்கில மொழியாக்கங்கள்..
ஆசைதீர. www.gutenburg.orgல் இருந்து செலவின்றி கொஞ்சம் சிரமத்துடன் சில நாட்கள் முயன்று பதிவிறக்கம் செய்தேன்……… என்று தனது வாசிப்பின் ஆரம்பகால அனுபவத்தை நூலில் பதிவு செய்கிறார்.

இவருக்கு இடையில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடல்நலம் பாதித்ததை கூட தன் வாசிப்பிற்கு கிடைத்த வரமாக கருதினார். இப்படி மணிக்கணக்கில் தொடர்ந்து வாசித்தால் தன் மறை கழண்டு விடுமோ என்று அஞ்சியதாக கூட குறிப்பிடும் அவர் வாசிப்பதால் மறைகழண்டால் என்றால் என்ன… என்றும் சமரசம் செய்து கொண்டாராம்..
வாசிப்பு என் வாழ்க்கையின் விருப்பங்களில் ஒன்றாக… என் வேட்கைகளில் ஒன்றாக …என் இன்ப நாட்களில் முக்கியமான ஒன்றாக இருந்தது. இப்போது அது தினசரி பணியாகவும்.. பொழுதுபோக்காகவும் ஒரே நேரத்தில் மாறிவிட்டது. தமிழ் மக்களிடத்தில் ஒரு மாதிரியான எழுத்தறிவின்மை பெருகிக் கொண்டிருக்கிறது.. எழுதவோ படிக்கவோ தெரியும் ..ஆனால் தெரியாது என்ற வினோதமான நிலை .நான்கு வரிகளுக்கு மேல் படிக்கவோ நான்கு வரிகள் கூட எழுதவோ முடியாமல் 90 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள். இந்த கணக்கு இதைவிட கூடுதலாகவும் இருக்கும்.

வாசிப்பு மராத்தான் போட்டியின் மூலம்.. வாசிப்பதை ரசித்து அனுபவிக்கும் முதல் தர வாசகர்களும் …இளம் எழுத்தாளர்களும்தான் முதலில் விரும்பிச் சேர்ந்தார்கள் .வாசிக்கும் பழக்கத்தை முதல் முறையாக ஒரு பத்து பேரிடம் உருவாக்க முடிந்தால் கூட அது வெற்றி தான். எப்போதும் எண்ணிக்கை முக்கியமே அல்ல.. ஒரு காட்டில் மந்தை மந்தையாக சிங்கங்களோ புலிகளோ அலைவதில்லை.. கொஞ்சம் விதை நெல் போதும் என்கிறார் இவர். போட்டி என்ற சாக்கில் சிறிது அதிகமாக வாசிக்க முடிந்தால் அது லாபம்தானே என்கிறார். எப்போதும் சோம்பி உடல் சுருட்டி தூங்கி கொண்டு இருப்பவருக்கும்.. சில மணி நேர ஓய்வு தவிர்த்து எப்போதும் உழைத்து கொண்டிருப்பவருக்கும் 24 மணி நேரம் என்பது சமமாகவே வாய்த்து இருக்கிறது… நாய்க்கு வேலையும் இல்லை… அதைப் போல அலைச்சலும் இல்லை என்பார்கள்… நேரத்தை சரியாக அளந்து குறிக்கும் போதுதான் எவ்வளவு குறைவான நேரம் நாம் படிக்கிறோம் என்பது புரியவரும். தினம் எவ்வளவு நேரம் அர்த்தம் இல்லாமல் பயனற்று தண்டமாக வீணாகிறது என்று புரிகிறது. தேவையற்ற நேரத் செலவை முடிந்த அளவு குறைக்க வேண்டும் அல்லது அறவே நிறுத்த வேண்டும் என்கிறார். பேஸ்புக் பார்ப்பதில் உண்மையில் என்ன லாபம் ..அதைவிட தண்டமான வேலை உலகில் உண்டா என்று கூறும் சாந்தமூர்த்தி அவர்கள்,… பிற்காலத்தில் அதையே தன்னுடைய வாசிப்பு மராத்தானை வாசகர்களிடையே கொண்டு போக பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

நூல் முழுவதும் ஆங்காங்கே நிறைய அறிவுரைகளை.. படிப்பினைகளை… ஜோக் வடிவிலும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். “யாருக்கும் புத்தகங்களை இரவல் கொடுக்காதீர்கள். நான் இரவலாக பெற்ற புத்தகங்களை கொண்டு ஒரு நூலகமே அமைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார்மார்க் ட்வைண் என்று மேற்கோளை எடுத்தாள்கிறார் ஆசிரியர்.

எனக்கு வயது 64ஆகிறது .இதனால் சில வசதிகளும் பலவீனங்களும் உண்டு. நான் பணியில் இல்லை.. எனவே படிக்க நேரம் கிடைக்கிறது .நான் காதலிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டியது இல்லை. அதனால் நேரம் கிடைக்கிறது .எனக்கு ஸ்ட்ரோக் வந்து உடல் நலம் பாதித்தது. அதனால் வீட்டிலே முடங்கியதால் நேரம் கிடைக்கிறது .நடந்தால் உடம்புக்கு நல்லது என்று டாக்டர் சொல்கிறார்.. அவரே கால்வலிக்கும்போது நடப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறா.ர் அவருடைய எந்த அறிவுரையை கேட்பது என்கிறார். சிறுவயதில் நான் பெரும்பாலும் சூரிய உதயங்களை பார்த்ததில்லை. ஒரு காலத்தில் விடியற்காலை நாலு மணி என்பது நள்ளிரவு போல் இருந்தது .ஆனால் இன்று காலை நாலு மணிக்கு எழுந்திருந்து படிக்க ஆரம்பித்து விடுகிறேன் என்கிறார். இப்போது பத்து நிமிடம் படிக்காமல் இருப்பது கூட என்னவோ போல் இருக்கிறது.. பத்து நிமிஷம் ஒரு மனிதனால் எப்படி படிக்காமல் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. நான்கு ஐந்து முறை வெற்றி பெற்று பழகிவிட்டால் பிறகு வெற்றி பெறாமல் இருப்பது சிரமம்….என்பது
போன்ற வசனங்களால் நூல் நிரம்பி வழிகிறது..
வாசிப்பின் மகிழ்ச்சியும்.. மகத்துவமும்… ஆனந்தமும் ..வாசிப்பவனுக்குத்தானே புரியும்?!…

12.09.2019 எனக்கு முக்கியமான நாள்.. அன்று ஆயிரம் மணி நேர வாசிப்பை நிறைவு செய்தேன்.. இதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் ஐந்து மாதங்கள்… அதாவது 151 நாட்கள், வாசித்த மொத்த புத்தகங்கள் 89. என்கிறார் வாசிப்பு மராத்தான்

வெற்றியாளர் எங்கள் மன்னார்குடி சாந்த மூர்த்தி அவர்கள்!… வாசிப்பை வலியுறுத்தும் இந்த நூல் மறுபுறம் குழந்தைகள் சிறு வயதில் கல்வி கற்பதை பற்றியும் மிக அக்கறையோடு சொந்த அனுபவத்தின் வழி எடுத்துக்கூறுகிறது. குழந்தை மேகத்தை முயல் என்று சொன்னால் அது பொய் சொல்வதாக பொருள் இல்லை ..அதற்கு கற்பனைத் திறன் இருக்கிறது என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆசிரியர் how can we deal with problem children? என்றார் .அதற்கு என் பதில் there maybe some problem parents or some problem teachers ..there are no problem children என்கிறார்.
கற்றல் என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல கற்றல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்வு. விருப்பப்படும் போது மட்டும் செய்யும் செயல் அல்ல. அது உடல் ஆரோக்கியம் போல.. உடற்பயிற்சி ..உண்ணுதல் …உறங்குதல்.. பல்துலக்குவது போல.. நேற்றுதான் பல்துலக்கினோமே.. இன்று துலக்க வேண்டுமா என்று இருந்திடமுடியாது. நேற்று தான் சாப்பிட்டோமே என்றா சொல்கிறோம். வயிறும்.. உயிரும் இருக்கும் வரை சாப்பிட்டுதான் ஆக வேண்டும்.. அப்படித்தான் வாசிப்பும் இருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்கிறார் சாந்தமூர்த்தி ! மேலும் பெரிய மகிழ்ச்சிக்காக சிறிது காலத்துக்கு சில சிறு மகிழ்ச்சிகளை தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார். பொதுவாக நம் தமிழ் மக்களுக்கு எதிலும் ஆவணம் பராமரிப்பதிலும் அதற்காக சிறிது மெனக்கிடுவதிலும் ஆர்வமின்மையும் சோம்பலும் உண்டு..
கணவனும் மனைவியும் ஆளுக்கு ஒருபுறம் கைகளில் புத்தகங்களோடு அமர்ந்து விட்டால் அறிவும் வளரும்.. சண்டையும் குறையும் இந்தத் திட்டத்தை எங்கள் வீட்டில் நான் செயல்படுத்தினேன். இன்று என் மனைவியும் மராத்தான் போட்டியில் இருக்கிறார் என்கிறார்.

*இது உண்மையில் நூல் விமர்சனமோ.. நூல் அறிமுகமோ அல்ல ..ஆயிரம் மணிநேர வாசிப்பு மராத்தான் போட்டி என்ற ஒன்று இருக்கிறது என்பதைn அறிமுகப்படுத்துவதும் அதில் போட்டியாளர்களை அதிகப்படுத்துவதும் முக்கிய நோக்கம்.

 

                     நூலின் தகவல்கள் 

நூலின் பெயர் : “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்”

ஆசிரியர் : ஜெ. சாந்தமூர்த்தி

வெளியீடுவிருட்சம் வெளியீடு

பக்கங்கள் 110 பக்கங்கள்

விலை ரூ.100

முதல் பதிப்பு  : டிசம்பர் 2023

நூல் தேவைக்கு : 9444113205 & 9176613205

       

       நூல் அறிமுகமும் எழுதியவர் 

மன்னை இரா. இயேசுதாஸ்
(மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம்)

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *