நூல் அறிமுகம்: சாத்திரியின் *ஆயுத எழுத்து (நாவல்)* – எஸ். ஃபாயிஸா அலிநூல்: ஆயுத எழுத்து (நாவல்)
நூலாசிரியர்: சாத்திரி
வெளியீடு: திலீபன் பதிப்பகம்.
விலை: ரூபாய் 300.

உள்ளார்ந்த நேர்மையோடு காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் பாசிசத்தின் இருவேறு முகங்கள்.

எந்த தேசமாயினும்..எந்த மதமாயினும்..எந்தக் காலமேயாயினும்..அடக்குமுறைகள் கூடாது,அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருவி ஆயுதமாகிவிடவும் கூடாது. என்பதனைக் கொலைகளோடும் குருதிப் பிசுபிசுப்போடும் அழுத்திச் சொல்கிறது ஆயுத எழுத்து நாவல்.

கொலைகளிலே தொடங்கிக் கொலைகளுக்கூடாகவே வளர்ந்து.. கொலையோடே முடியும் இந்நாவலை படித்து முடித்த பதட்டமும் கலக்கமும் நிரம்பிய அந்தக் கணங்களுக்குள் சட்டென என் நினைவிற்கு வந்தது, வாலெளடுத்தவன் வாளால் மடிவான்
என்ற அரேபியப் பொன்மொழிதான்.

பாடசாலைப் பருவத்திலேயே படிப்பை இடையில் கைவிட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்ட ஆயுதஎழுத்து நாவலாசிரியர் சாத்திரி அவர் சார்ந்திருந்த போராட்ட அமைப்பிற்காய் மிக நீண்ட காலம் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலுமாய்..
இயங்கியவர்.
தற்போது புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார்.
பத்திரிகையாளராகவும் பணிபுரியும் இவரின் பிற படைப்புகள் அவலங்கள்,அன்று சிந்திய ரத்தம் என்பனவாகும்.

60அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலின் அணிந்துரையில் “இந்நாவலை ப் படிக்கும் உங்களுக்குள் கோபம்,வெறுப்பு,ஆதங்கம்,சிரிப்பு,கவலை,சலிப்பு என்ற ஏதாவது ஓர் உணர்வையாவது ஏற்படுத்தி இருப்பின் இப்புத்தகத்தை எழுதிய நோக்கத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.” எனக் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

தன்னுடைய போராட்ட அனுபவங்களில் 40% இனையே தான் பதிவு செய்திருப்பதாக குறிப்பிடுவதைப் பார்க்கும்போது இந்த 40%இலேயே 4000 கிளைக் கதைகள் விரிகின்றதே..முழுதும் வெளிக்கொணரப்படின் எவ்வகையான அதிர்வலைகள் கிளர்ந்தெழப் போகிறதோ என்ற சிந்தனையோடுதான்
நாவலுக்குள் நுழைகிறேன்.

1983 இன் யாழ்ப்பாணக் கிராமியச் சூழலில் விடியும் அழகிய காலைப்பொழுது.
அன்பான அம்மாவும்,கண்டிப்பும் ஆணாதிக்க சிந்தனையும் நிறைந்த அப்பாவும் ..கூடவே உடன் பிறப்புகளுமாய் சராசரி குடும்பத்தின்
நாலாவது பிள்ளையாய் நாவலின் நாயகனான அவன
கோபமும்..நகைச்சுவையும்..காதலுணர்வும் நிரம்பப் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவன்.

அன்று அவனது பிரதேசத்தில் விடுதலைக்கான போராளிகளின் கண்ணிவெடி யில் சிக்கி சீருடைக்காரர் சிதைந்தழிய அதற்கான அவர்களின் பழிவாங்கலாய்.. அவர்கள் நிகழ்த்திய கண்டபடியான துப்பாக்கிச் சூட்டில் அவனது அப்பாவி நண்பன் சிவாவும் இறந்து போகிறான்.

எதிர்பாராத இந்தக் கோர நிகழ்வின் பாதிப்பு அவனது பிஞ்சு மனசின் அடியாழம் வரை நிறைந்து போகிறது.

மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து கதறிய நன்பணின் தாயின் துயரக்குரல் அவனது காதுகளில் நெடு நாட்களாய் தங்கியும் விடுகிறது.

அடிக்கிறவங்களை திருப்பி அடிக்க முடியாதா..என்ற அவனது நியாயமான ஆதங்கம் பெரும்பாலான இளைஞர்களைப் போலவே இயக்கத்தில் சேர்தல் ஒன்றே இறுதியான முடிவென்றாகியது.
அவனின் உறுதிமிக்க இம்முடிவை அம்மாவின் பேரன்போ..பள்ளித் தோழியின் உயிர்க் காதலோ ..இல்லை அவனுக்கான உயர்கல்விக் கனவுகளோ நிறுத்தவுமில்லை .

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான..அடிமைப் படுத்தப்பட்ட தன் மண்ணுக்கான விடுதலை எனும் ஒற்றைக் கனவு சுமந்து ஒரு இரவில் அவனும் கடல் தாண்டிப் புறப்படுகிறான்.

நாவலின் அடுத்தடுத்த பக்கங்களுக்குள் முதல் காதல்… கடற்பயண அனுபவங்கள்..பயிற்சிக் கால நிகழ்வுகள்..என ஒவ்வோர் வரிகளும் உணர்வுகளை உருக்கும் அழகிய கவிதை போல பார்த்துப் பார்த்துச் செதுக்கப் பட்டிருக்கும் .தொடர்ந்தும் ..சொந்த மண்ணில் போராளிப் படைவீரனாக..துப்பாக்கியும் அதே குறும்புத் தனமுமாய்..போர் சார்ந்த நிகழ்வுகளோடு கழியும்.

இங்கு இவர்களின் எதிரி இராணுவம் மட்டுமன்றி..சொந்த மண்ணின் இதே விடுதலைக்காய் போராட வந்த சகோதர இயக்கங்கள்..அரசியல் தலைமைகள். தம்மிலும் சிறுபான்மை யான .சகோதர இனங்கள்..என இவர்களின் எதிராளி களின் எல்லைகள் அர்த்தமேயின்றி விரிவு கொள்ளும்.

இத் துரதிஷ்ட சம்பவங்கள் தொடர்பில் இந்நாவல் மிக வெளி்ப்படையாகப் பேசியிருப்பது இந்நாவலின் சிறப்பம்சமாகக்கூடக் கொள்ளலாம்.

யுத்தம் என்ற பெயரில் அயல் நாட்டிலும் உள்நாட்டிலும் இடம் பெறும் கோரச் சம்பவங்கள்.. குழிபறிப்புக்கள்.. காட்டி கொடுப்புகள்.. பழிவாங்கும் சம்பவங்கள்..பெண்களை உணர்பூர்வமாய் அடிமையாக்கித் தந்திரமாக அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட கறை படிந்த நிகழ்வுகள்..போன்றவை சிதைந்த உடல்களும்..கண்ணீரும்.. ஒப்பாரியுமாய்..நாவலாசரியருக்கே உரித்தான நுட்பமான பார்வையும்..எள்ளல் தொனியுமாய். காட்டப் பட்டிருக்கும்.

அடுத்தடுத்த அத்தியாயங்களில்..அவன் சிங்கப்பூர்,தாய்லாந்து, ஜேர்மன்,பிரான்ஸ், சுவிஸ், இங்கிலாந்து,இந்தோனேசியா,நைஜீரியா,ருமேனியா,இத்தாலி,போலந்து,மியான்மார்,பெல்ஜியம்,கிழக்கு ஆபிரிக்கா…என பல நாடுகளுக்கும் ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சாகச வீரனாய் மாறிமாறிப் பறக்கிறான்..

பறப்பு எல்லைகள் விரிய..விரிய..சுயஒழுக்கம்..கட்டுப்பாடுகள் யாவும்கூட அவனை விட்டும் தூரமாகிட..
கனவிலும் கூட நாம் காணாத போராட்டத்தின் இன்னொரு முகம் நமக்கான காட்சிகளாய் விரிகின்றன.

ஆயுத, மருந்துக் கொள்வனவுகள்..போதைப் பொருள் கடத்தல்கள்.. ஆள்மாறாட்ட மோசடிகள்..பொதுமக்களிடம் நிதிதிரட்டக்கள்..திரட்டிய நிதிப்பதுக்கல்கள்..எனப் புலம்பெயர் நாடுகளில் நமது கற்பனைப் புலன்களுக்கும் எட்டாத இன்னொரு மர்மயுத்தம் அவனது சாகசப் பயணங்களூடே நமக்கு ஆச்சரியங்களாய் நிகழ்த்திக் காட்டப் பட்டாலும் ..அவனோடும்..சக தோழர்களோடும் கூடவே ஒட்டிக்கொண்டு அலையும் விதவிதமான மது போத்தல்களும்… பெண்ணுடல்களும். நம்மை முகம் சுழிக்கவும் வைக்கின்றன.

இடைக்கிடையே அபூர்வமாய் சில மனிதநேய செயற்பாடுகளும் அவனால் செய்யப் படுதல் கொஞ்சம் ஆறுதல்.

ஆனாலும் அவனின் தலைமையின் தொலைபேசிக் கட்டளைக்கு கீழ்படிந்து செத்துப் பிழைத்தபடி..சட்டம்,ஒழுங்கு அற விழுமியங்கள்..சிந்தனைகள் மறந்து அவனும் தோழர்களும் சதா ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

ஏதோ ஆங்கிலத் திரைப்படக் காட்சிகளை ரசிப்பதுபோல உள்ளுக்குள் மாறி மாறி ப் பரவும் அதிர்வலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டதான கனத்த மௌன வாசிப்போடு நகரும் இப்பக்கங்களுக்குள் நிறையத் தகவல்கள் வலிந்து திணிக்கப் பட்டதாலோ என்னவோ..முதல் அத்தியாயங்கள் போலன்றி நாவலின் புனைவு மொழி கொஞ்சம் சிதைந்து போனதான உணர்வு என்னுள்.

தனக்கென எந்த சுய விருப்பு வெறுப்புகளற்று எதிர்பார்ப்புகளும் இன்றி நாடு..நாடு என்றே ஓடிக் கொண்டிருந்தவனுக்கு ஒருநாள்
மேலிடத்தின் அதே மந்திரக் கட்டளை தமது கட்டமைப்பு எல்லாம் கலைத்து விட்டு சொந்த வாழ்க்கைக்கு போகுமாறு பணிக்கிறது.

அந்த எல்லாமும் முடிந்து போன யுத்த முடிவுப் பொழுதொன்றில் அவன் கைச் செலவுக்கும் கூடக் காசின்றி தனித்துப் போகிறான்.

அத்தனை திறமைகள் நிரம்பப் பெற்றிருந்தும் இனித் தனக்காய் என்ன தொழில் செய்வது என்றறியாது தடுமாறிப் போகிற அவனது கையறு நிலை கண்டு அவனில் இதுவரைக்கும் இருந்த எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் கூட மெல்லத் தணிந்து கருணை துளிர்க்கிறது.இறுதியில் உணவு விடுதி ஒன்றில் கோப்பைகள் கழுவும் வேலை கிடைக்கிறது.
சிரமங்களோடும்..இடுப்பு வலியோடும்..ஒவ்வொரு கோப்பையாய் கழுவும்போது ஊர் சுற்றாமல் படியடா..படியடா..என்று அப்பா திட்டிய திட்டுக்கள் அவனது நினைவுக்கு வரும் கணங்களுக்குள் மறுபடியும் நாவலின் ஆரம்பத்தில் வருகிற பிள்ளைப் பருவத்து அவனாய் மாறிப் போகையில் நெகிழ்வோடும்..தாய்மையின் பரிவன் போடும் அரவணைத்துக் கொள்ளும் வாசக உள்ளங்கள்.

தனியாட்சி என்றும்..முப்படை.என்றும்..இன்னும் தன்னிறைவுப் பொருளாதாரம்,சு உற்பத்திகள்,ஆகாய விமானத்தயாரிப்பு என்றெல்லாம் முழு உலகையும் வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்த எந்தப் பெரிய இயக்கம் ஒன்று..தன்னையே நம்பி வந்தோரை.. தமக்காய் ஓடி..ஓடி உழைத்தோ ரை…சொந்த மக்களை..எல்லாம் அம்போ எனக் கைவிட்டபடி தாமும் மாண்டுபோகிறது.

செய்..அல்லது செத்துமடி என்பதெல்லாம் நடைமுறை யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணான கொள்கை என்பதையெல்லாம் அப்போதே கூட இருந்து துதி பாடியோர் ஏன் உணர்த்தத் தவறினர் என்ற வினா காலத்தின் முன் அழியாது எஞ்சி நிற்கிறது.

இனி இழக்க ஒன்றுமில்லை.நினைவுகளை அழிக்க மந்திரமும் இல்லை என்ற இறுதி நிலையில் அளவுக்கு மீறியபோதையோடு அவன் பள்ளத்தாக்கில் தவறி வீழ்வதோடு ஆயுத எழுத்தும் முற்றுப் பெறுகிறது.

முப்பது வருடப் போராட்டத்தின் மொத்தத் தகவலையும் திணித்தடக்கிட வேண்டுமெனும் பெரு முயல்வுகளுக்குள் படைப்பாளி புனைவின் அழகியல்,மொழி,கட்டமைப்பு..தொடர்பில் எல்லாம் முழுக் கவனம் கொள்ள முடியாமல் திணறிப் போயிருக்கிறார்.

அதோடு நாவல் முழுக்க வருகிற பரிச்சயமான உண்மைப் பெயர்களும்..சம்பவங்களும்..வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையில் நம்மை தாடுமாறச் செய்கிறது.

இந்நாவலில் என்னை மிகவும் பாதித்ததும் நாவலாசிரியர் மிகவும் வெளிப்படையாக நடுநிலையில் நின்று பேசி இருப்பதுமான சில விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
1.வடபுல முஸ்லிம்கள் தமது பூர்வீக மண்ணை விட்டும் ஒரே நாளில் வெளியேற்றப் பட்ட துயர நிகழ்வு.
2.நாவலின் 47 ம் அத்தியாயத்தில் வரும் வரும் கிழக்கு மாகாண அப்பாவி முஸ்லிம் அனாதைச் சிறுவன் கிச்சான் இஸ்மாயில் கரிகாலன் என்பவரால் கொடூரமான முறையில் கொல்லப் படுகின்றமை.
3 இதில் வந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சில பெண்பாத்திர வார்ப்புகள்.
இவைகள் தொடர்பில் நிறையவே கேள்விகள் எனக்குள் அலையலையாய் எழுந்தடங்கியதையும் குறிப்பிட்டே இதை முடிக்க வேண்டியிருக்கிறது.

நாவலாசிியரின் உள்ளார்ந்த நேர்மையும் கடின உழைப்பும் நாவல் முழுக்க நமக்குப் புலப் படுகிறது.
நாவலாசிரியருக்கு என்
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

எஸ். ஃபாயிஸா அலி
இலங்கை.