ஆயுத எழுத்து

சாத்திரி

திலீபன் பதிப்பகம்

       தமிழகத்தைப் பொருத்தளவில் இலங்கையில்  நிகழ்த்தப்பட்ட 30 வருடத் தமிழிழப் போர் குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சி வாயிலாக வந்த செய்திகள் பலவும் உண்மைகள் மறைக்கப்பட்ட, ஒருதலைப்பட்சமானக் கருத்துக்களாகவே ஒவ்வொரு காலக்கட்டத்தில் நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்திரா ஆட்சிக் காலத்தில் இலங்கையுடனான உறவு, ராஜீவ் ஆட்சி காலத்தில் இந்திய அமைதிப்படை, சிங்கள அரசுடன் சேர்ந்து அங்கு செய்த அட்டூழியங்கள், விடுதலை புலிகளின் முரணான செயல்பாடுகள், சக போராட்டக் குழுக்களை அழித்தொழித்த அவர்களின் சர்வாதிகார போக்கு, ராஜீவ் காந்தி படுகொலை போன்றவை புலிகளின் ஆயுதப்போருக்கான ஆதரவு, எதிர் மனோநிலையை மாறி மாறி நம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிகழ்வுகள்.

       குறிப்பாக என் பள்ளிக்காலங்களில் ஈழப்போர் குறித்தான அரசியல் பார்வையோ, புரிதலோ இல்லாத சூழ்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை, தமிழகத்தில் அதைத் தொடர்ந்த கலவரங்கள்  அனைவருக்கும் நினைவிருக்கும். அப்படுகொலைக்கான  சதிவேலையில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த  அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஈடுப்பட்டதுப் போல் ஒவ்வொரு தொண்டர்கள் வீட்டையும், குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை நேரடியாக எதிர்க்கொண்டது மறக்கமுடியாத நிகழ்வு. கம்யூனிஸ்ட் வீடு என்பதால் வீசி எறியப்பட்ட, ஜன்னலை பதம் பார்த்தக் கற்களிலிருந்து நாங்களும் எங்கள் டிவியும் மயிரிலையில் தப்பினோம்.   மனித வெடிக்குண்டாக மாண்டுப்போன தானு, கொலைக் குற்றவாளிகளாக தேடப்பட்ட சிவராசன் மற்றும் சுபாவின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து வீடுவீடாக காவல்துறை நடத்திய விசாரணைகள், அதனைத் தொடர்ந்து பரப்பப் பட்ட வதந்திகள் என விடுதலைப் புலிகள் குறித்தான திகில் செய்திகள் வந்தவண்ணமிருந்தன.   இவற்றைக் குறித்து விவாதிக்கவே அச்சப்படும் மனோநிலையை என் சக மாணவர்களிடமும், மக்களிடமும்   பார்த்திருக்கிறேன்.

       இலங்கை உள்நாட்டுப் போரினால் யாழ்த்தமிழர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டது, அம்மக்கள் உயிர், உடமைகள் இழந்து வாடும் கொடுமைகளையை சில திரைப்படங்கள், புத்தகங்கள், கதைகளிலிருந்தே ஒரளவு அறிய முடிந்தது. அப்படி படித்த ஒருசில புத்தகங்களில் போரின் கொடூரங்கள், படுக்கொலைகள், அப்பாவி மக்கள் படும் அவலம்  என அவற்றில் விவாதிக்கப் படும் நிகழ்வுகள் மனதை பிசையும். போரின் விளைவுகள் அப்படித்தான் என்றாலும் அப்படைப்புகளை படித்து முடிப்பது பெரும் அவஸ்த்தையாக உணர்ந்திருக்கிறேன்.  இவையெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, ஈழப்போரில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள், யுக்திகள், இழைத்த தவறுகள் என விவரிக்கும் படைப்புகளை இது வரை படித்ததில்லை. திலீபன் பதிபகத்தின் வெளியீட்டில், சாத்திரி அவர்கள் எழுதிய, “ ஆயுத எழுத்து”, புத்தகம் பற்றிய தோழர்.அன்பரசன் எழுதிய விமர்சனம் முகநூலில் படித்தப் போதும், அவர் பகிர்ந்த விசயங்கள் அப்புத்தகத்தை படிக்கும் ஆவலை அதிக படுத்தியது. குறிப்பாக ஈழ மக்களின் விடுதலைக்காக கிட்டதட்ட 32 ஆயுதக்குழுக்கள் செயல்பட்டதாக குறிப்பிட்டச் செய்தி ஆச்சரியத்தை கொடுத்தது.  சாத்திரி தனது முன்னுரையில் ஆயுதக் குழுவில் தனது மற்றும் இன்னும் பல போராளிகளின் அனுபவங்களின் தொகுப்பாக ”அவனை”, உருவாக்கி ”பல நாடுகளில் பல பெயர்களில் உளவியவன்”, என்ற வர்ணனையுடன் தொடங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

சாத்திரியின் ஆயுத எழுத்து | Read Book Reviews | Buy Tamil & English Books  Online | CommonFolks

       சாதாரணமான பள்ளி மாணவனாக தொடங்கி, அன்றைய அரசியல் சூழ்நிலையில் ”தன் இனத்தின் விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே வழியென போராட்ட குழுக்களால் ஈர்க்கப்பட்டு, போராடத் துணிந்த பல தீரமிக்க இளைஞர்களில் அவனும் ஒருவன். பள்ளிப்படிப்பை முடித்து எந்த இயக்கத்தில் சேர்வது என்ற யோசனையில், ”புளொட்டைத் தவிர்த்தால், அவனது அடுத்த தேர்வாக ஈ.ப்.ஆர்.எல்.எஃப் இருந்தது. அவர்களும் கையில் பெரிய கம்யூனிச புத்தகங்களைப் படிக்கக் கொடித்ததால் விடுதலைப் புலிகளோடு இணைந்துகொள்ள முடிவெடுத்திருந்தான்” என அவன் இயக்கத்தில் சேர எடுத்த கொள்கை முடிவை பகடியுடன் தொடங்கியிருப்பார் ஆசிரியர்.

       வேகமான கதையோட்டத்தில் வந்துப்போகும் எண்ணற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில முகங்கள், சில நிகழ்வுகள், கதையை முடித்த சில நாட்கள் மனதைவிட்டு அகழாமல் இருந்தது. விடுதலைப் புலிகளால் யாழ் நிலத்தைவிட்டு ஒரே நாளில் முஸ்லீம் மக்கள் இரக்கமில்லாமல் விரட்டபடும் போது,  அவன் இயக்கத்தின் ஆரம்பக்கால நண்பனாக வரும் பீட்டர், தனக்கு கிடைத்த தண்டனைக்காக குப்பியை கடித்து தற்கொலை செய்துக் கொள்ளும்போது, ஆர்மிக்காரர்களால் வளைக்கப்பட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கும் வெள்ளையன், இந்திய ஆர்மியால் கொல்லப்படும் அப்பாவி யாழ்தேவி கந்தையா, யாழ் நூலகயெரிப்பிற்கு பதிலடித்தர கரும்புலிப் பெண்ணாக வெடித்தி சிதறும் ‘ரெஜினாவின் அப்பாவித்தனமும், சிங்கள விசாரணை அதிகாரியாக வந்து, விசாரணை என்ற பெயரில் ”அவனை”, பாடாய்ப்படுத்தி, பிறகு அவனுக்கு நெருக்கமாகும் இராணியின் எதிர்பாராத மரணம் என இன்னும் பலப்பலக் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஆனால் அந்நிகழ்வுகளை  அசைப் போடுவதற்கோ அல்லது அதிர்ச்சியாவதற்கோ இடம் தராமல் கதையோட்டம் எதற்கும் நிற்காமல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஜெட் வெகத்தில் போகிறது. சிங்கள இராணுவம் மற்றும் அமைதிப்படையால் அவனின் தந்தை, சகோதிரி மற்றும் சிலர் படுகொலை செய்யப்பட, இறந்தவர்கள் உடலை அவன் தன் கையால் எறிக்கும்போது, அவனின், அம்மக்களின் வலியை அவனது குடும்பம் மட்டுமல்ல, ஈழத்தில் பல்லாயிரம் குடும்பங்கள் யாரோ ஒருவரை இழந்து கதறினார்கள். எங்கள் கதறல்கள் யாவும் அவர்கள் தேசத்தின் காற்றிலேயே கறைந்து போனது; யார் காதிலும் விழவில்லை.., என படிப்பவர்கள் மனதில் இவ்வரிகள் கடத்தும்.

ஈழப் போராட்டத்தின் துயர நிழல்! | ஈழப் போராட்டத்தின் துயர நிழல்! -  hindutamil.in

       புலிகளின் இயக்க செயல்பாடுகளில், பிரபாகரின் திருமணம், இந்திய படையின் தலையீட்டால், இயக்கம் ஆயுதங்களை ஒப்படைக்க  ஒத்துக்கொண்டது, இதனால் போராளிகள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம், அதிருப்தி, ஆரம்பத்தில் இந்தியாவின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை, பிறகு அதிருப்தியாக மாறிய காரணங்கள், இந்தியப்படைகள் புலிகளுக்கு எதிரி அமைப்புக்கள் மற்றும் இலங்கை  படையினருடன் எப்படி இணைந்து களமிறங்கியது என்பனப் போன்ற பல்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை  இந்நாவல்  விவாதிக்கிறது. போராளியாக அவனது அனுபவங்களை பகிரும் அதே வேளையில் கிட்டத்தட்ட 30 வருட ஈழவிடுதலைக்காக, இலங்கை இராணுவத்தின் இனவெறிக்கெதிரான தீரத்துடன் ஆயுதம் தாங்கி போராடிய போராளிக்குழுக்களின் வெற்றிகள், தோல்விகள், விடுதலைப் புலிகளின் யுக்திகள், பல்வேறுக்குழுக்கிடையில் நடந்த மோதல்கள், சதிவேலைகள் துரோகங்கள், கொலைகள், அப்பாவி போராளிகளின் தியாகங்களென பலத்தரப்பட்ட அம்சங்களை வெளிப்படையாக, உண்மையான வரலாற்று தரவுகளுடன் புனைவையும் கலந்து தைரியமான, விறுவிறுப்பான படைப்பை தந்திருக்கிறார் சாத்திரி.

       இந்திய, இலங்கை படை பிராபகரனை பிடிக்க, கொலைசெய்ய எடுத்தவியூகங்கள், பிராபகரனை பிடிக்க தமிழர் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்திய, இந்திய அதிகாரி தெய்வேந்தர் சர்மாவை கொல்ல அவனும், அவன் நண்பர்களும் திட்டம் தீட்டி செய்து முடிப்பது, புலிகளுக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடுத்த, அவன் தன் குழுக்களுடன் போடும் திட்டங்கள், எடுக்கும் முயற்சிகள் படிக்கும்பொழுது ஒரு பிரமாண்டமான அதிரடி திரைப்படம் உறுவாக்க நல்ல கதைகளமாகவும், அத்தகைய படத்தை பார்க்கும் அனுபவத்தையும் தரும். சொந்த வாழ்க்கை, சமூக பிரச்சனைகளை, போராட்டங்களின் விளைவுகளை, உணர்ச்சிப் பூர்வமாக மட்டும் அனுகாமல், பிரச்சனையை சற்றுதூரம் வைத்து பார்க்கும் பொழுது அவற்றைக் குறித்த உண்மையான நிலையை உணரமுடியும். அந்த வகையில் ஒரு போராளி, தான் செயல்பட்ட இயக்கத்தை யுக்திகள், சாதக பாதகங்களுடன், அவ்வியக்கத்தின் செயல்பாடுகள் மீதான விமர்சனத்தையும் ஆசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து இருக்கிறார்.  

       ஈழமண்ணில் விவரிக்கப்படும் கதைக்களத்தில் உள்ள விறுவிறுப்பு, சுவரஸ்யம், வெளிநாடுகளில் அவனது அனுபவப்பகிர்வில் சற்றுக்குறைவதாக தோன்றுகிறது. சாதாரணமாக, போர் தொடர்பான புத்தகங்களை படிக்கும் பொழுது ஏற்படும் மன அழுத்ததிற்கு பயந்தே அவற்றை படிக்க தயங்குவேன்.  ஈழ தமிழ்ப் படைப்புக்களில் அவர்களின் மொழி நடை அப்புத்தகத்தோடு ஒன்ற சிறிது கடினமாக தோன்றும். ஆயுத எழுத்தும் ஆரம்பத்தில் மொழி நடை வேகத்தடையாக தோன்றினாலும் வெகு விரைவில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. எளிமையான எழுத்து நடை, அதே நேரத்தில் திடுக்கிடும், மயிர் குச்சறியும் பல நிகழ்வுகளை பெரிதுபடுத்தாமல் சாதாரணமாக, கடந்து போகிற எழுத்து நடையை மிகவும் வித்தியாசமாக உணர்ந்தேன்.  ”அவன்” வாழ்க்கையில் நடக்கும் பல அதிரடி அனுபவங்கள், பல சாகசங்களை உள்ளடக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படத்தை பார்த்த அல்லது விறுவிறுப்பு குறையாத ஒரு க்ரைம், திரில்லர் கதையை படித்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த நாவல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *