புத்தக அறிமுகம்: ஆயுதம் செய்வோம் – லா. காரல் சே.  (இந்திய மாணவர் சங்கம்)

 

வகுப்பறை சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது . ஆசிரியர் மாணவர்களைப் பார்க்கும் முறை, மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்க்கும் முறை, தேர்வு எவ்வாறு ஒரு மனிதனின் உள்ளார்ந்தத் திறனைச் சோதிப்பதாக அமையவேண்டும், சக ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஏச்சுப் பேச்சுக்களுக்கு அஞ்சாமல் துணிந்து மாணவர்களுக்கு நல்லது செய்யும் ஆசிரியர்களைக் குறித்து என வகுப்பறையில் நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட அருமையான புத்தகம் இதுவாகும். இந்நூலின் ஆசிரியர் என். மாதவன் குழந்தைகளுக்கான “துளிர்” மாத இதழ் பத்திரிகையில் பணியாற்றியவர். சமச்சீர்க் கல்வி போன்ற ஏராளமான போராட்டத்தில் பங்கேற்று தனது அனுபவங்களை பல்வேறு நூல்களில் கொடுத்துள்ளார்.

ஆயுதம் செய்வோம்

இக்கதை தொகுப்பில் உள்ள “ஆயுதம் செய்வோம்” எனும் கதையில், ஆசிரியர் பரந்தாமன் என்பவர் தனது பள்ளிக்குப் பேருந்தில் செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் சம்பவங்களே இக்கதையாக விரிகிறது. ஆசிரியர் ஒருவர் பள்ளியின் செயல்வழி கற்றலுக்கான உபகரணங்களை எடுத்துச்செல்லும் போது சலித்துக் கொள்கிறார். ஆனால் அதே பேருந்தில் கிராமத்திலிருந்து நகரத்துக்குப் பயணம் செய்யும் ஒரு ஆசாரியோ தன்னுடன் தான் தொழில் செய்யும் கருவிகளை மகிழ்வுடன் எடுத்துச் செல்கிறார். பேருந்தில் பயணச்சீட்டுக்குப் பணமின்றி பரிதவித்து பேச்சின்றி நிற்கும் தனியார் பள்ளி மாணவியையும், வெடித்த வெண்கலமாய், மடை திறந்த வெள்ளமாய்ப் பேசும் தமது அரசுப் பள்ளி குழந்தைகளையும் பார்த்து அவர்களின் இரு வேறு சிந்தனைகளைக் கவனிக்கிறார். இவற்றையெல்லாம் அசைபோட்டவாறே நாளிதழைத் திறக்கிறார் ஆசிரியர். “எனக்கு ஒரு மரத்தினை வெட்டுவதற்கு எட்டு மணி நேரம் கொடுக்கப்படுமானால் எனது கருவிகளைக் கூராக்கவே முதல் ஆறு மணி நேரத்தினைப் பயன்படுத்துவேன்” என்ற வாசகம் கண்ணில்படுகிறது.

இவ்வாறான கல்வி சார்ந்த கதைகளைக் கொண்ட நூலாக இந்நூல் அமைந்துள்ளது. வகுப்பறைகளை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அறுவடை செய்யும் இடமாக இல்லாமல் உரையாடல்கள் நிறைந்த புரிதல்கள் உருவாக்கும் களமாக மாற்றுவதற்கு இந்நூல் மேலும் ஒரு ஆயுதமாகும்.

ஆயுதம் செய்வோம் - என்.மாதவன் - பாரதி ...

புத்தகம்: ஆயுதம் செய்வோம்
புத்தகம் ஆசிரியர்: என். மாதவன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 48
விலை : ₹35