நூல் – ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்.
ஆசிரியர் – ஸ்டீபன் ஹாக்கிங்.
தமிழில் PSV குமாரசாமி.
வெளியீடு – மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்.
விலை – ரூ.399
ஆண்டு – 2023 ஏழாம் பதிப்பு.
மனித குலம் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால் புதிய கோள்களை கண்டுபிடித்து அதில் மனிதர்களையும், விண்கலங்களையும் தொடர்ந்து அனுப்ப வேண்டும். புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்படாமல் போனால் மனிதகுலத்திற்கு பிரச்சினையே…
இன்றிருக்கும் நிலையில் மனித மூளையுடன் போட்டி போடும் நிலைக்கு ‘AI’ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டால் அதன்பிறகு மனிதனால் அத்தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அது மனித சிந்தனை ஆற்றலை விஞ்சி விடும். அது எங்கே கொண்டு செல்லும் என்றால் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் புகுத்திவிட்டால் பிறகு அவ்வாயுதங்களை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு AI சென்றுவிட்டால் அதன் பிறகான பேரபாயம் பூமியை சிதைத்து விடும். மற்றொரு பக்கம் AI நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை பிரதி எடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றால் பிறகு அந்தத் தொழில்நுட்பம் வேற்றுக்கிரக உயிரினங்களோடு தொடர்பை உண்டாக்கும் நிலைக்குச் செல்லும். நாம் அது தெரியாமல் திகைத்து நிற்கும் நிலை உருவாகும். அப்படித்தான் ஆரம்பத்தில் நெருப்பை கண்டுபிடித்தோம். பிறகு அதை கட்டுப்படுத்த தெரியாமல் திணறினோம். பிறகு தொழில்நுட்பத்தால் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தது, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது இந்நிலையால் அறிவியலுக்கு தேவையான நிதியுதவி பெருமளவு குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் அறிவியல் கருத்துக்களை உள்வாங்காமல் அறிவியல் அறிஞர்களையே முரணாக பார்க்கும் நிலை உருவானது
பிரபஞ்சத்தின் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மேலே குறிப்பிட்ட கருத்துக்களை தனது ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’ என்னும் மஞ்சுள் பதிப்பக நூலில் குறிப்பிட்டிருப்பார்.
கருந்துளை என்ன செய்யும், கால பயணம் சாத்தியமா, கால வெளியை வளைக்க முடியுமா இப்படி நிறைய அறிவார்ந்த கேள்விகளை எழுப்பியே பதில்களையும் தெள்ளத் தெளிவாக உதிர்த்துச் செல்கிறார். ஒரு நூலில் நகைச்சுவை, அறிவியல் தகவல்கள், மக்கள் வாழ்நிலை, மக்களை சுரண்டுவதால் ஏற்படும் பிரச்சினை என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இந்நூலில் வர்ணித்திருப்பார். பண வீக்கத்தையும், பிரபஞ்சத்தையும் நல்லா நச்சின்னு கோடிட்டு இணைத்து நகைச்சுவையாய் நம்முடன் பேசுவார். அப்பப்பா இந்நூலில் அறிவியல் வெளி பரந்து விரிந்துள்ளது.
“மனிதகுலத்திற்கு ஸ்டீபன் ஹாக்கிங் விட்டுச் செல்லும் இறுதிக் கொடை இந்நூல். மனிதகுலத்தின் வருங்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ளது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது.” -தேசியப் பொது வானொலி, அமெரிக்கா.
குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். நாமும் தொடர்ந்து அறிவியலோடு நடைபழகுவோம்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!