நூல் அறிமுகம்: நா.ஞானபாரதியின் ’அபிநயாவின் தும்மல்’ – வெ.நீலகண்டன்

நூல் அறிமுகம்: நா.ஞானபாரதியின் ’அபிநயாவின் தும்மல்’ – வெ.நீலகண்டன்




நூல் : அபிநயாவின் தும்மல்
ஆசிரியர் : நா.ஞானபாரதி
விலை : ரூ. ₹140
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

இடதுசாரி இதழ்கள்வழி அறியப்பட்ட இளம் தலைமுறைப் படைப்பாளி ஞானபாரதியின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் இடம்பெற்றுள்ள 14 சிறுகதைகளும் வெவ்வேறு வாழ்க்கைச்சூழல்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக இருக்கின்றன. காட்டுக்குள் விலங்குகளைப் பார்க்கும் ஆவலோடு உள்ளே நுழைகிற நவீன், சார்லஸ், மாறன் வழி, ஒரு பழங்குடி மனிதனின் உள நேர்மையையும் வனத்தைப் ‘பாதுகாக்கும்’ ஒரு அதிகாரியின் வஞ்சனையையும் பேசுகிற முதல் சிறுகதையே நூலை விரைந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

நம் வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் வதைகள் குறித்த அழுத்தமான பதிவாக இருக்கிறது ‘தோசை’ சிறுகதை. திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஆசிரியையாக, சனியும் ஞாயிறும் மனைவியாகக் கடமையாற்றும் ஒரு பெண் பட்டினியோடு வயிற்றைத் தடவியபடி வகுப்புக்குள் செல்லும் அந்த கணம், சுளீரென்று மனதைத் தைக்கிறது. நம் குடும்ப அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் எல்லா மாற்றங்களும் பெண்களை உபயோகிக்கும் யுத்தியுடனே இருக்கின்றன. மேலும் மேலும் அவர்களின் தலையில் சுமையேற்றுகின்றன.

‘வரலட்சுமி நோன்பு’ சிறுகதை, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொண்ட ஓர் ஆணின் மன உணர்வைப் பேசுகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காட்சியை விரித்து அக்கதையை ஞானபாரதி நகர்த்திச்செல்லும் போக்கே அழகாக இருக்கிறது.

இந்த நூலின் ஆகச்சிறந்த கதையென ‘அபிநயாவின் தும்ம’லைச் சொல்லலாம். திருமண வாழ்க்கை பற்றி நிறைய கனவுகளோடு அறைக்கு வரும் அபிநயாவை ஓர் எந்திரம்போலக் கையாள்கிறான் கதிர், பெண்ணின் நிலையில் இருந்து அந்த அவஸ்தையை எழுதுகிறார் ஞானபாரதி

‘தண்டனை’, ஒரு ஆணவக்கொலையைக் காட்சிப்படுத்துகிறது. உயிராக நேசிக்கும் காதலன் விபத்தில் சிக்கிவிட காலம் கடந்து அது விபத்தல்ல, கொலையென்று உணர்கிறாள் மஹா. தந்தையையும் மாமனையும் பழிவாங்க மஹா எடுக்கும் முடிவு கதையின் மையமாக இருக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சில கதைகள் பிரசார நெடியோடு இருந்தாலும், உணர்வுகள் பூசி சமன்செய்கிறார் ஞானபாரதி.
வரவேற்கத் தகுந்த நூல்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *