அபிதா – லா.ச.ராமாமிருதம் | மதிப்புரை தயாஜி 

அபிதா – லா.ச.ராமாமிருதம் | மதிப்புரை தயாஜி 

இப்படி ஒரு கதைச் சொல்லல் சாத்தியமா என வாசித்து முடித்ததும் தோன்றியது. முற்றிலும் நனவோடையில் சொல்லப்பட்டுள்ள கதை. லா.ச.ராமாமிருதத்தின் வாசிக்க வேண்டிய புததகம் என பல எழுத்தாளர்கள் முன்மொழிந்த படைப்பு.
வாசிக்க ஆரம்பித்த பொழுதில், ஏனோ முழுமையாய் உள்வாங்க முடியவில்லை. சிரமம். லா.ச.ராவின் எழுத்தினை முதலாவதாக வாசிப்பது அதன் காரணமாக இருக்கலாம். இதற்கு முன் அவரின் சிறுகதைகள் கூட வாசித்ததாய் நினைவில் இல்லை.
மெல்ல அவரில் எழுத்தில் இருக்கும் கவிநயம் என்னை இழுக்க ஆரம்பித்தது. திரும்ப திரும்ப வாசிக்கிறேன், உரைநடை என் கண்முன்னே நிழலாடத் தொடங்கியது. கொஞ்சம் பிசகினாலும் கதையின் தன்மை கெட்டுவிடும். கத்தி மேல் நடப்பது போல தனக்கான பாதையில் மிக கவனமாக கதை பயணிக்கின்றது.
காதல் கதைதான். அதிலும் தோல்வி கண்ட காதல் கதை. அதில் சொல்வதற்கு என்ன இருக்கப்போகிறது. சொல்லலாம். சொல்வதற்கு என்னவெல்லாமோ அதில் இருப்பதை லா.ச.ரா காட்டியுள்ளார். அம்பி கதாப்பாத்திரம் ஆசை, ஏக்கம், காதல், காமம், ஏமாற்றம், பழிவாங்கள் என எல்லாவற்றியும் தன் நினைவோடையில் சொல்லிச் செல்கிறார்.
அம்பிக்கும் சாவித்திரிக்கும் எப்படி திருமணம் ஆனது என்பதில் இருந்து கதை தொடங்குகின்றது. அந்த தொடக்கம் கொடுத்த எதிர்ப்பார்ப்பு அடுத்தடுத்து காணாமல் போகிறது. உற்ற தம்பதிகளாக இருக்கப் போகின்றார்கள் என்ற வாசகர்களின் எண்ணம் மெல்ல மெல்ல மாறுகிறது. இவர்களுக்குள் இருப்பது ‘நீயா நானா’. யார் யாரைத் தோற்கடிக்கப் போகின்றார்கள் என்கிற பந்தயம்.
சும்மா: அபிதா. – ஒரு பார்வை.
ஒரு நாள் மழையின் தூறல் அழுகையாய் உருவெடுக்கிறது. அவளும் அப்படித்தானே அழுதிருப்பாள் என நினைக்கிறார். யாரவள். அங்குதான் அம்பியின் பழைய நினைவுகள் தொடங்குக்கிறது. அங்குதான் சகுந்தலை அறிமுகமாகிறாள். அம்பியின் கடந்த காலத்தில் எத்தனையோ நம்பிக்கைகள் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகள். இருந்தும் சகுந்தைலையை விட்டு பட்டிணத்திற்கு ஓடிப்போகிறார்.
வயோதிகத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலும் அம்பியின் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதாகவே மனதில் படுகிறது. ஒரு நாள் தன் மனைவி சாவித்திரியுடன் தனது பழைய ஊருக்குச் செல்கிறார். அவர் எதிர்ப்பார்த்துச் சென்றவர்கள் பலர் அங்கு உயிருடன் இல்லை. அவரின் மனம் சகுந்தலையைத் தேடுகிறது. அவளுக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிகிறது. ஆனால் அவள் காணக்கிடைக்கவில்லை. அவள் இறந்துவிட்டாள் என அறிகிறார்.
                        எழுத்தாளர் லா.ச.ரா. எனும் லா.ச.ராமாமிருதம்
ஆனால், இறந்துவிட்ட சகுந்தலையே அவளில் மகளாக பிறந்து ‘அபிதா’வாக அவர் முன் நிற்கிறாள். யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம் அது. அவளின் மரணத்திற்கு தான்தான் காரணம் என நினைக்கிறார்.சகுந்தலைதான் தனக்காக மீண்டும் பிறந்திருக்கிறாள் எனவும் நினைக்கிறாள்.
அம்பியின் மனம் அபிதாவை எப்படிப் பார்க்கிறது. அவர் என்ன செய்யப் போகிறார். ஏன் அதுவெல்லாம் நடக்கிறது. அவரின் அடுத்த நடவடிக்கை என்ன, என நாவல் வாசகர்களை தன் பக்கம் ஆழமாக இழுத்துக் கொள்கிறது.
தனக்கே உரிய கவிதை நடையில் நாவல் முழுக்கவும் நம்மை ஈர்க்கின்றார்.
ஒவ்வொன்றையும் நம் கண்முன்னே காட்டுகிறார். நம்முன்னே பல கேள்விகள். நமது கடந்த காலத்தை நோக்கி விசாரணையை முன் வைக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல் என பலரும் முன்மொழிவதற்கு நிச்சயம் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
புத்தகம் – அபிதா
எழுத்து – லா.ச.ராமாமிருதம்
பதிப்பகம் – உயிர்மை பதிப்பகம்
விலை – 70.00 ரூபாய்
தயாஜி
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *