“நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” என்ற பாடல் வரிகளின் அர்த்தம் எளிதாக விளங்கும். அதை தனிமனிதன் ஒவ்வொருவரும் உணரவும் முடியும். அது காதலன் காதலி குறித்தான பாடலாக இருப்பினும். தனக்கு விருப்பமான தலைவர்கள் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நூல்கள் அல்லது தனக்கு நெருக்கமான உறவுகள் நண்பர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை எங்காவது கேட்டாலோ படித்தாலோ அந்த மயக்கம் யாவருக்கும் ஏற்படும். அப்படி ஒரு மயக்கம் எனக்கும் சமீபத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உலாவிய ஒரு பெயர் எனக்கு துள்ளல் மயக்கத்தை தந்தது.
நான் வசிக்கும் ஊரின் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தான் அந்த ஊர். நான் நடந்தே அதிக நாள்கள் பயணப்பட்ட அந்த ஊரில் தான் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை.
மருத்துவம், விவசாயம், ஆசிரியர் பணி, அச்சுக்கலை, புகைப்படக்கலை மற்றும் தமிழ் இசை அறிஞர்; ஆய்வாளர். தமிழிசையின் தந்தை என போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர், அந்த ஊரில் தான் பிறந்திருக்கிறார் என்று அறியும் போது மனசுக்குள் கர்வம் கலந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ‘சாம்ட்ரை’ என்று மக்கள் வழக்கு மொழியில் இருக்கும் சாம்பவர் வடகரை என்னும் ஊரில் 1859 ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முத்துசாமி–அன்னம்மாள் தம்பதியினர்க்கு பிறந்தவர்தான் தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதர்.
முத்துசாமியின் தந்தை சுப்பிரமணிய நாடார் அவர்களுக்கு பதிமூன்று குழந்தைகள். ஆனால் பதிமூன்று குழந்தைகளும் நிலைக்கவில்லை. காலரா என்னும் கொடிய நோயிக்கு பதினொரு பிள்ளைகள் பலியாகினர். ஆபிரகாம் பண்டிதரின் தந்தை முத்துசாமியும் அவரது சகோதரி மட்டுமே சுப்பிரமணிய நாடார்க்கு நிலைத்தனர்.
அந்த காலகட்டத்தில் சுப்பிரமணிய நாடார் கிறித்தவ சமயத்தை தழுவினார். ஒரு சிலர் ஆபிரகாம் பண்டிதரின் தந்தைக்கு பதிமூன்று குழந்தைகள் என தவறுதலாக குறிப்பிடுகிறார்கள்.
ஆபிரகாம் பண்டிதரின் தந்தை முத்துசாமி அவர்கள் பண்டிதர் பிறந்த சில வருடத்திலே சாம்பவர் வடகரையிலிருந்து அருகிலுள்ள பங்காளா சுரண்டை ஊருக்கு குடியேறுகிறார். தந்தை முத்துசாமி அவர்கள் ஒரு பாதிரியாரிடம் தோட்ட பணியாளராக வேலை செய்கிறார். தாய் அன்னம்மாள் ஆலய பணியும், சிறுவர் சிறுமியர்க்கு வேத பாடங்கள் கற்றுத்தரும் பணியும் செய்கிறார். பண்டிதர் பின் நாட்களில் பெரும் தோட்டப் பண்ணை வைத்து விவசாயம் செய்யும் எண்ணங்கள் தந்தை முத்துசாமியின் மூலமாக தோன்றியிருக்கலாம்
ஆபிரகாம் பண்டிதர் ஆரம்பக்கல்வியை பங்களா சுரண்டையிலேயே படிக்கிறார். பன்றிகுளம் என்னும் ஊரில் உயர் ஆரம்ப கல்வியும்..பின்னர் திண்டுக்கல் சென்று அங்குள்ள நிர்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று சுரண்டைக்கு திரும்பி… சுரண்டைக்கு அருகிலுள்ள திருமலாபுரம் என்ற ஊரில் ஆசிரியர் பணியை தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே திருமலாபுரத்தில் ஆசிரியர் பணி செய்தவர். மீண்டும் திண்டுக்கலுக்கு செல்கிறார்.
திண்டுக்கல்லில் யார்க் (York) என்ற ஆங்கிலேயர் நடத்திய ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியை தொடர்கிறார் ஆபிரகாம் பண்டிதர். யார்க் (York) பள்ளியின் தலைவர். புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர். ஆபிரகாம் பண்டிதர் ‘யார்கி’டம் புகைப்படக்கலை நுட்பத்தை கற்று அக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றார். பின்னாளில் இதன் காரணமாக 1909 ம் ஆண்டு அவர் லண்டனில் உள்ள அரசு கலைச்சங்கத்தின் உறுப்பினராக( Member of the Royal Society Arts, London) தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் கந்தசாமி பிள்ளை என்பவர் அச்சகம் நடத்தி வந்தார். அவரிடம் நட்பு கொண்ட ஆபிரகாம் பண்டிதர் அவரிடம் அச்சுக்கலை கற்று தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாய் 1912 ல் தஞ்சையில் மின்விசையில் இயங்கும் முதல் அச்சகமான ‘லாலி அச்சகம்’ என்ற மின்விசை அச்சகம் ஒன்றை நிறுவி.. வரலாற்றில் பதிப்பக ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்தி உள்ளார் ஆபிரகாம் பண்டிதர்.
1882 ல் திண்டுக்கல்லில் ஆசிரியர் பணியின் போது பள்ளி விடுமுறை காலத்தில் சொந்த ஊரான சுரண்டைக்கு வந்தபோது ஆபிரகாம் பண்டிதர்க்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க எண்ணி திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திற்கு உட்பட்ட நாஞ்சான்குளம் என்னும் ஊரில் வேதக்கண் அவர்களின் மகளான ஞானவடிவு பொன்னம்மாள் அவர்களை திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஞானவடிவு பொன்னம்மாள் அந்த காலகட்டத்திலேயே உயர்நிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இருவரும் ஆபிரகாம் பண்டிதரின் நண்பர் ஞானமுத்து என்பவரின் அழைப்பின் பேரில் தஞ்சாவூருக்கு சென்றனர்.
தஞ்சையில் W.H.பிளேக் (W.H.Blake) அவர்களை சந்தித்து பூக்கடைப்பள்ளி என்றழைக்கப்பட்ட நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணியை தொடர்ந்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆபிரகாம் பண்டிதர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் தலைமை ஆசிரியராகவும் ஆபிரகாம் பண்டிதர் தமிழ் பண்டிதராகவும் பணி செய்ததுதான். அந்த காலக்கட்டத்தில் பெண்கள் படிப்பது பெரும் சவாலான காலம், அதுவும் மனைவி தலைமை ஆசிரியராகவும் கணவர் தமிழ் ஆசிரியராகவும் ஒரே பள்ளியில் வேலை செய்தது அந்த காலச்சூழலில் பெரிய மாற்றம் தான்.
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் ஆசிரியர் பணியின் ஓய்வின் போது மருத்துவம் சார்ந்த ஓலைச்சுவடிகளை தேடித் தேடி படித்தார். சில நோயாளிகளுக்கு மருந்துகளை அவரே தயாரித்து கொடுத்தார் சித்த மருத்துவ குறிப்புகளை அறிந்துகொள்ள முனைந்து திரு.பொன்னம்பலம் என்ற சித்த வைத்தியர் உதவியுடன் சுருளிமலை பகுதிகள் முழுவதும் சுற்றினார். அங்குதான் கருணாந்தமகரிஷியின் அறிமுகம் கிடைகிறது. மருத்துவ மூலிகைகள் பற்றி அறிந்துக் கொள்கிறார். பின்னாளில் 1890ல் தஞ்சையில் தனது ஆசிரியர் பணியை விட்டு விட்டு முழுமையாக மருத்துவ தொழிலை ஆபிரகாம் பண்டிதரும் அவரது மனைவி செய்ய துவங்கினார்கள். தான் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கு “கருணானந்த சஞ்சீவி மருந்துகள்”என பெயரிட்டு மருத்துவம் செய்தார்.
அந்த காலகட்டத்தில் சித்த வைத்தியத்தில் சிறந்து விளங்குபவர்களை பண்டூவர் என்று அழைப்பார்கள் அது மருவியே பண்டிதர் ஆனது. ஆப்ரகாமும் பண்டிதரானார் சித்த மருத்துவ தொழில் அவருக்கு பெரும் பேரும் புகழும் தேடித் தந்தது. அவரின் மருந்துகள் சிங்கப்பூர், இலங்கை, பர்மா என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் ஆனது
மருத்துவ வருமானத்தை வைத்து தஞ்சையில் 100 ஏக்கர் நிலத்தில் தோட்டப் பண்ணை அமைத்து பெரும் அளவில் விவசாயமும் செய்ய தொடங்கினார். அந்த தோட்டப் பண்ணைக்கு ‘கருணானந்தபுரம்’ என பெயரும் வைத்தார்.
மூலிகை செடிகள் அனைத்து விதமான பழ வகைகள், கரும்பு, சோளம் மற்றும் மலர்கள் என அனைத்தையும் தோட்டத்தில் பயிரிட்டார். குறிப்பாக ராஜா கரும்பு என்னும் புதிய வகை கரும்பை உருவாக்கியவனார். ஆஸ்திரேலியா செந்நிற சோளம் மற்றும் பல கலப்பினை சோளவகைகளை சோதனை முறையில் பயிரிட்டு ஆராயவும் செய்தார். புதிய பயிர் ரகங்கள் உருவாக்கியும் இருக்கிறார்.
அதுமட்டுமின்றி ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை மற்றும் பட்டுப்பூச்சி பண்ணையும் வைத்து செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1907 முதல் 1914 வரையிலும் பல்வேறு விவசாய பொருட்காட்சிகளில் பங்குபெற்று தங்கப்பதக்கங்களும் நற்சான்றிதழ் பட்டங்களும் பெற்றது கூடுதல் சிறப்பு.
1908 ல் அன்றைய சென்னை மாகாண ஆளுநர் ‘சர் ஆர்தர் லாலி’ கருணானந்தபுரத்தை பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார். 1909 ம்ஆண்டு சித்த மருத்துவ துறையிலும், வேளாண்மைத் துறையிலும் ஆற்றிய அரும் பணிக்காக பாராட்டி அன்றைய அரசாங்கம் ‘ராவ் சாஹிப்’ என்ற பட்டத்தை வழங்கி ஆபிரகாம் பண்டிதரை சிறப்பித்தது.
இப்படி ஆசிரியர் பணி புகைபடக்கலைஞர் சோதிடம் கணிக்கும் முறை அச்சுக்கலை மருத்துவம் விவசாயம் என எல்லாவற்றையும் சாதித்து காட்டிய ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையை ஆய்வு செய்துதான் மாபெரும் சாதனை….
“இசை உருவானது செந்தமிழே- முதல்
ஏழிசை கண்டதும் செந்தமிழே”.. என்பார்கள் தென்னிந்திய இசைகளின் மூலம் தமிழ் இசையின் இலக்கணமே என்பதை ஆய்வின் மூலம் முதன் முதலில் நிறுவித்தவரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரே.
அதுவரை 22 சுருதிகள் தான் தென்னிந்திய இசையில் இருந்தது என்கிற கூற்றை மறுத்து, 12 ஸ்வரஸ்தானங்கள் 24 சுருதிகளாகவே வர முடியும் என்றும் 48, 96 என்று நுண் சுருதிகளாகவும் வளரும் ஆற்றல் கொண்டது இசைத் தமிழ் என்றும் நிறுவினார். அதை 1916 ம் ஆண்டு பாரோடவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் தன் மகள்களான மரகதவல்லி, கனகவல்லி இருவரையும் வீணையிலும் இசைத்தும் வாய் பாட்டின் மூலம் பாடியும் நிறுவிக்கவும் செய்தார்.
1912 முதல் 1916 ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி ஏழு இசை மாநாடுகளை தன் சொந்த செலவில் நடத்தியிருக்கிறார். ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசையின் ஆராய்ச்சி நூலான “கருணாமிர்த சாரகம்” காலவேட்டத்தில் மறைந்து கிடந்த தமிழ் இசை வரலாற்றை உலகிற்கு தந்தது.
இன்று இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை கல்வியை வால் பிடித்து பின்னோக்கி போனால் அங்கு ஆபிரகாம் பண்டிதர் இருப்பார். இளையராஜா அவர்களும், ரகுமான் அவர்களும், தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவர்கள் தன்ராஜ் மாஸ்டர் ஆரம்பகாலத்தில் ஆபிரகாம் பண்டிதரின் மகன் ஜோதி பாண்டியனிடன் இசை கற்றவர். தன்ராஜ் மாஸ்டரின் தந்தை கோவிந்தராஜ் ஆபிரகாம் பண்டிதரிடம் உதவியாளராக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது.
தமிழிசையின் வரலாறும் ஆபிரகாம் பண்டிதரின் வரலாறும் முற்றுப்பெறாதது. 2008-ம் ஆண்டு அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கபட்டது
தன் வாழ்நாள் முழுவதும் கலையால் ஆராய்ச்சியால் பொழுதளந்த தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதருக்கு பிறப்பிடத்தில் சிறப்பிக்கு வண்ணம் ஏதுமில்லை.. தென்காசி தனிமாவட்டமாகிவிட்டது ஆபிரகாம் பண்டிதர் பெயரில் அரசு அவரின் பிறப்பிடத்தில் எதாவது ஒன்றை நிறுவினால் சிறப்பாக இருக்கும்.
– பிச்சுமணி
99521 32280
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.