Achin Wanak - Interview by Daniel Denvir | அச்சின் வனைக் - டேனியல் டென்விர் நேர்காணல்

மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் : நேர்காணல்

டேனியல் டென்விர்
ஜேக்கபின் இதழ்
2024 மார்ச் 24

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஹிந்து தேசியவாத இயக்கத்தின் தேர்தல் அரசியல் பிரிவாகும். இந்தக் கிரகத்தின் மிகப்பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட தீவிர வலதுசாரி சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது இருக்கிறது. அதன் எழுச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றைக் காண வேண்டும்.

அச்சின் வனைக்

தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலரான அச்சின் வனைக் ஆம்ஸ்டர்டாமைச் சார்ந்த டிரான்ஸ்நேஷனல் இன்ஸ்டிட்யூட்டின் தில்லி தளத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளராவார். ‘வலிமிகு மாற்றம்: இந்தியாவில் முதலாளித்துவ ஜனநாயகம்’, ‘ஹிந்து அதிகாரத்துவத்தின் எழுச்சி’ ஆகிய நூல்களை அவர் எழுதியுள்ளார்.Israel flays lecture on Gaza conflict at Jindal University in Haryana

 

டேனியல் டென்விர்

டேனியல் டென்விர் ஆல்-அமெரிக்கன் நேட்டிவிசம் என்ற நூலின் ஆசிரியர். ஜேக்கபின் ரேடியோவில் தி டிக் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார்.

CANCELLED - Daniel Denvir - "All-American Nativism" | Seminary Co-op Bookstores

 அச்சின் வனைக் – டேனியல் டென்விர் நேர்காணல்

தீவிர வலதுசாரிகளின் எழுச்சி உலகளாவிய நிகழ்வாக இன்றைக்குக் காணப்படுகிறது. இந்தப் பூமியில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவைப் போல வேறெங்கும் வலதுசாரிகள் வலுவுடன் இருப்பதாகத் தெரிய வரவில்லை. பாரதிய ஜனதா கட்சி 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறது. வெறுமனே ஒரு கட்சியாக மட்டுமே அது இருக்கவில்லை. பாஜக மற்றும் அதன் தொண்டர்கள் அமைப்பாக இருக்கும் ஹிந்து தேசியவாத தன்னார்வம் கொண்ட, துணை ராணுவத்தைப் போன்ற அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றின் பார்வை இந்தியப் பெருமை குறித்த ராணுவவாதம், வன்முறைப் பாதை நோக்கியே உள்ளது. முஸ்லீம்களுக்கென்று வரலாறு எதுவுமில்லை, எனவே நிகழ்காலத்தில் அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்ற பார்வையும் அவர்களுக்கு இருக்கிறது.

டேனியல் டென்விர் இந்தியாவின் அழுத்தமான அரசியல் பிரச்சனைகள் குறித்து ஜேக்கபின் ரேடியோவின் பாட்காஸ்ட் நிகழ்வான தி டிக் நிகழ்ச்சியின் சார்பில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது அச்சின் வனைக்குடன் விவாதித்தார். இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள, தேசப்பிரிவினைக்கு முந்தைய சவால்களை ஆராய்ந்த அவர்கள் இருவரும் பாஜகவின் ஏற்றத்தை புதிய தாராளவாதத்தின் எழுச்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு-காந்தி பாரம்பரியத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் எனத் தங்களுக்குள்ளாக வாதிட்டனர்.
தெளிவு மற்றும் நீளம் கருதி இந்த நேர்காணல் திருத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி டேனியல் டென்விர்: இந்த நேர்காணலை பிரதமர் நரேந்திர மோடி, அவரது பாரதிய ஜனதா கட்சி அதாவது பாஜக குறித்த கேள்விகளுடன் நாம் தொடங்கலாம்.

Exclusive interview with PM Modi: “I take all my decisions through the prism of Nation First” - India Today

அச்சின் வனைக்: தேசிய தன்னார்வலர் அமைப்பு என அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சிறுவயதிலேயே தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி. அந்த அமைப்பின் சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். தன்னுடைய பதின்ம வயதின் பிற்பகுதியில் ஆர்எஸ்எஸ்சின் முழுநேர உறுப்பினராக மாறிய மோடி அந்த அமைப்பின் படிநிலையில் மெதுவாக முன்னேறினார்.

மோடி 1980களின் பிற்பகுதி 1990களின் முற்பகுதியில் பாஜகவிற்கு மாறிக் கொண்டார். ராமஜென்ம பூமி பிரச்சாரத்தின் போது பல்வேறு வகைகளில் தேவைப்பட்ட பாத்திரங்களுக்காக அவர் உட்பட பல தொண்டர்களை ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு வழங்கியது. அதன் பிறகு கிடைத்த பதவிகள் மூலமாக தன்னை மேம்படுத்திக் கொண்ட மோடி பாஜக தலைமையில் இருந்த குஜராத் மாநில முதலமைச்சராக பின்னர் நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் மாநில முதல்வர் என்ற முறையில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிய அவரால் அதிக முக்கியத்துவத்தைப் பெற முடிந்தது.. குஜராத்தில் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதன் காரணமாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அவரது புகழ் பெருகியது. அந்தப் புகழே 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஆர்எஸ்எஸ்சில் தனக்கான ஆதரவை அதிகரித்துக் கொள்வதற்கான வழியை அவருக்குப் பெற்றுத் தந்தது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் முக்கியமான பதவிகளை வகித்திருந்த மூத்த தலைவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக 2013ஆம் ஆண்டு மோடி நியமிக்கப்பட்டார். அதுவே மோடியின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.

உங்கள் இரண்டாவது கேள்வி – பாரதிய ஜனதா கட்சி பற்றியது. தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புடைய சங்கங்கள், அமைப்புகளின் வலையமைப்பாக இருக்கின்ற சங் பரிவாரின் அரசியல் பிரிவாகவே பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வலையமைப்பு அமெரிக்கா உட்பட உலகளவில் தனது கிளைகளைக் கொண்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) என்ற அமைப்பையும் தனக்குள் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

பெண்கள் பிரிவு, தொழிற்சங்கக் கூட்டமைப்பு, பாதுகாப்புப் படையுடன் ஒப்பிடப்படக் கூடிய பஜ்ரங் தள் எனும் ஹனுமன் வீரர்கள் குழு உட்பட பலவிதமான அமைப்புகளும் அதில் அடங்கும். ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவு தன்னுடைய முந்தைய பிறவியில் 1951ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை ஜனசங்கம் என அறியப்பட்டது. ஜனசங்கம் இந்திராகாந்தியை ஆட்சியில் இருந்து வெளியேற்றிய ஆளும் கூட்டணியில் 1977ஆம் ஆண்டு இணைந்தது. ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் 1979ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இருந்து ஜனசங்கம் வெளியேற்றப்பட்டது.

பின்னர் பாரதிய ஜனதா கட்சி என்று 1980ஆம் ஆண்டு முதல் தன்னை மறுபெயரிட்டுக் கொண்ட அந்தக் கட்சி இந்திய அரசியலில் படிப்படியாக முக்கியத்துவம் பெறத் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால் உருவான வெற்றிடத்தைக் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் அந்தக் கட்சி முதன்முதலாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றுவதற்கான பாதையில் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் உருவான கூட்டணிகளுக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸைப் போன்ற மூன்று நடுநிலைவாதக் கட்சிகளின் ஆட்சியை பாஜக தொடர வேண்டியிருந்தது. அந்தக் கூட்டணிகள் எதுவாலும் தங்களுடைய முழு பதவிக் காலத்தை முடிக்க முடியாமல் போனது. அந்த மாற்றங்களுக்குப் பிறகு கூட்டணி அமைத்து 1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியும் 2004ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.

பின்னர் காங்கிரஸ் கட்சி பத்தாண்டு காலம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. அதற்குப் பிறகு 2014ஆம் ஆண்டு முப்பத்தியொரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெறும் வகையிலான இந்தியத் தேர்தல் முறையின் காரணமாக ஒரு கட்சி பெறுகின்ற வாக்கின் அளவிற்கும், நாடாளுமன்றத்தில் அதற்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் அதிக வேறுபாடு இருந்து வருகிறது
வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது ஒற்றைக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி பொதுவாக நாற்பத்தியொரு சதவிகிதம் முதல் நாற்பத்தியொன்பது சதவிகிதம் வரை வாக்குகளைப் பெற்றிருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக வெறுமனே முப்பத்தியொரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக குறைவான பெரும்பான்மையுடன் 2014ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது. ஹிந்தி பேசுகின்ற மத்திய மற்றும் வட இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு இருந்த ஆதிக்கமே அதற்குக் காரணமாயிற்று.

2019ஆம் ஆண்டில் தன்னுடைய வாக்கு அளவை முப்பத்தியொரு சதவிகிதத்திலிருந்து முப்பத்தியேழு சதவிகிதமாக அதிகரித்துக் கொண்ட பாஜக நாடாளுமன்ற இடங்களின் அடிப்படையில் கணிசமான அளவிற்குப் பெரும்பான்மையைப் பெற்றது. இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் குவிந்திருந்த அந்தக் கட்சிக்கான வாக்குகளே அந்த வெற்றிக்குக் காரணமாகின. குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் பாஜகவால் அந்த தேர்தலில் நாடாளுமன்றத்தில் மிகக் கணிசமான பெரும்பான்மையைப் பெற முடிந்தது.

இவ்வாறு சொல்லி பாஜக மேலாதிக்கத்தின் அளவை, அதனுடைய சித்தாந்தத்திற்கான கருப்பொருள்களின் பிரபலத்தை எந்த விதத்திலும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது

Why the Far Right Rules Modi's India

 

ஹிந்து தேசியவாதம் பாரதிய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்ற கருத்தாக்கத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறது. பெரும்பாலும் ‘ஹிந்துத்துவம்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்ற ஹிந்து தேசியவாதத்தின் ஒரு வடிவமாகவே அது இருக்கிறது. உண்மையில் எதனை ஹிந்துத்துவா கட்டமைக்க நினைக்கிறது? பாசிசத்தின் ஒரு வடிவம் என விவரிக்கப்படுவதை முன்னெடுக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளால் இந்த அளவிற்கான அதிகாரத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள முடிந்தது?

அதனை பாசிச குணாதிசயங்கள் கொண்ட அதிகாரம் என்றே நான் கூறுவேன். இந்தியச் சூழலில் பாசிசத்தின் மற்றொரு மாறுபாடாக, வடிவமாக பாஜக இருக்கிறதா, அதனிடம் பாசிச குணாதிசயங்கள் உள்ளனவா என்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. வெளிப்படையான பாசிச குணாதிசயங்களைக் கொண்ட மோசமான தீவிர வலதுசாரி சக்தியாகத் திகழும் பாஜக மிகப் பெரிய ஆபத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

ஹிந்துத்துவா என்பது ஹிந்துத்துவம் என்பதாகவே பொருள்படுகிறது. அதனைச் சுட்டிக்காட்டும்போது நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஹிந்துத்துவத்தை இந்தியாவின் சாராம்சம், இந்திய தேசியத்தின் சாராம்சம் என்று குறிப்பிடுகின்ற அடிப்படை வாதமும் இருந்து வருகிறது. ஹிந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்திய தேசியவாதம் அடிப்படையில் ஹிந்து தேசியவாதமாகவே இருக்கிறது. பல நாடுகளில் உள்ளதைப் போல மத தேசியவாதத்தை மையமாகக் கொண்டுள்ள இன அடிப்படையிலான தேசியவாதமும் உள்ளது. இந்தக் கருத்து எவ்வாறு விரிவடைந்து வளர்ந்துள்ளது?

தங்களுக்கிடையே போட்டியிட்டுக் கொள்ளும் தேசியவாதங்கள் எப்போதும் இருந்தே வந்துள்ளன. தேசிய போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியால் கூட்டு தேசியவாதம் என அழைக்கப்படும் மற்றொரு கருத்தாக்கம் வழிநடத்தப்பட்டது என்றாலும் இந்திய ஹிந்து சாரம் என்ற கருத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவிலான அனுதாபங்கள் அடிமட்டத்தில் எப்போதும் இருந்தே வந்துள்ளன.

ஹிந்துத்துவத்தை ஹிந்து மதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஹிந்து என்பது ஓர் அரசியல் கட்டமைப்பு. அனைத்து மதங்களைப் போல ஹிந்து மதமும் அரசியல் கட்டுமானத்திற்கு, அரசியல் இயக்கங்கள், போராட்டங்களை வடிவமைப்பதற்காக ஒரு மதமாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் இத்தாலிய, ஜெர்மன் பாசிசத்திடமிருந்து தனக்கான உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டது. அந்த அமைப்பிற்கு 1980களின் நடுப்பகுதி வரையிலும் குறிப்பிடத்தக்க அளவிலே தேர்தல் செல்வாக்கு எதுவும் இருக்கவில்லை.

ஆனாலும் இந்தியாவின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிலான செல்வாக்கைப் பெற்றிருந்த அவர்களால் குடிமைச் சமூகத்திற்குள் தங்களை ஆழமாகப் பதித்துக் கொள்ள முடிந்தது. அவர்களுக்கிக் கிடைத்த வெற்றி பெரும்பாலும் சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் பல்வேறு சமூகத் தேவைகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையிலே அவர்களிடமிருந்த மிகப் பரந்த அடிமட்ட இருப்பையே சார்ந்திருந்தது.

கடந்த இருபதாண்டுகளில் அவர்கள் இப்போது கிராமங்களுக்குள்ளும் விரிவடைந்துள்ளனர். பாரம்பரியமாக இடதுசாரிகளிடம் இருந்த பலத்தைப் போல கருத்தியல் ரீதியாக உறுதியான, ஒழுக்கமான தொண்டர்களைக் கொண்டிருப்பது அவர்களுடைய அடித்தளத்தை வளர்த்தெடுப்பதற்கு முக்கியமானதாக இருந்துள்ளது. ஐரோப்பாவில் போர் இடைக்காலம் போன்ற சவாலான காலகட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவின் போது நிலைத்து நின்ற இடதுசாரி இயக்கங்களுக்கு இணையாக தேர்தல் திறமை இல்லாவிட்டாலும் அவர்களாலும் தொடர்ந்து நிலைத்து நிற்க முடிந்துள்ளது.
அடிமட்டத்தில் விரிவான பரந்த அளவிலான அமைப்புடன் உள்ள ஒரே நிறுவனமாக மற்றவர்களிடமிருந்து அவர்களால் தனித்து நிற்க முடிந்துள்ளது. உலகளவில் மற்ற தீவிர வலதுசாரி இயக்கங்களுடன் ஒப்பிடும் போது ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களிடம் பல வேறுபாடுகள் தென்படுகின்றன. அவர்களுடைய வலிமையை விளக்க அந்த வேறுபாடுகளே போதுமானவையாக இருக்கின்றன.

ஒன்று நீடித்து நிற்பது – ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் அல்லது இந்த உலகில் வேறு எங்காவது தொன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான இருப்புடன் இருக்கின்ற தீவிர வலதுசாரி அமைப்பு ஏதேனும் இருக்கிறதா?

இரண்டாவதாக அடித்தட்டு மக்களுடன் மிகவும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ள பாசிச குணாதிசயங்களைக் கொண்ட தீவிர வலதுசாரி சக்திகள் – அவர்களை எவ்வாறு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் – இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. அவர்கள் ஈடு இணையற்ற வகையில் குடிமைச் சமூகத்திற்குள் நன்கு ஊடுருவியுள்ளனர். தொண்டர்களை உருவாக்கும் அவர்களுடைய பணி குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் இருக்கிறது.

காங்கிரஸின் மேலாதிக்கம் 1947ஆம் ஆண்டு முதல் 1960களின் பிற்பகுதி வரையிலும் இருந்து வந்த போதிலும்கூட, எண்ணிக்கையின் அடிப்படையில் மிக வலுவானதொரு தொண்டர் தளத்தைப் பெருமையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டிருந்துள்ளது. எகிப்தில் உள்ள ஹமாஸ் இயக்கங்களைப் போல ஆர்எஸ்எஸ் தனக்கென்று பல துணை அமைப்புகளை உருவாக்கி, தன்னுடைய செயல்பாட்டை, செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. மதச்சார்பற்று இருப்பதற்கான தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், பேரிடர் நிவாரண முயற்சிகள், கலாச்சார முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கு உதவி வருவதே இந்தியச் சமூகத்தில் அவர்களுக்கு தனித்துவமான பலனை மிகப்பரந்த உள்ளமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இடதுசாரிக் கட்சிகளைத் தவிர இந்தியாவில் உள்ள வேறு எந்த சக்தியாலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத இந்தப் பலன்களை அவர்களால் மட்டும் சில பிராந்தியங்களில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. மிக வலுவான தொண்டர் அமைப்பை தீவிர இடதுசாரி மற்றும் பிரதான இடதுசாரிகளைப் போல தீவிர வலதுசாரிகளும் தங்களுக்கிடையே பொதுவான பண்பாக வரலாற்றுரீதியாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தேசியப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செயல்வீரர்கள் இருந்தனர். ஆனால் பிந்தைய காலகட்டத்தில் அந்தக் கட்சியின் சித்தாந்தம் தவறாகிப் போன நிலையில் ஆதரவாளர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்ட தொண்டர்கள் என்று யாரும் அந்தக் கட்சிக்கு இல்லாமல் போனது. ஆதரவளிப்பவர்கள், வாடிக்கையாளர்கள் என்ற வலையமைப்புடன் மட்டுமே அந்தத் தலைமை கட்டமைக்கப்பட்டதன் காரணமாக பாஜக அபரிமிதமாக வளர்ந்தது. அந்த வளர்ச்சியின் அளவைப் புரிந்துகொள்ள சில தோராயமான புள்ளிவிவரங்களை இங்கே தருகிறேன்.

தன்னிடம் பதினெட்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனப் பாஜக கூறுகிறது. அந்த எண்ணிக்கை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகமாகும். ஆனாலும் பாஜகவில் மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உறுப்பினராகலாம் என்றுள்ள நிலைமை பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் செயலற்ற நிலைமையில் இருப்பதற்கே வழிவகுத்துக் கொடுத்துள்ளது. ஆயினும் செயலற்ற உறுப்பினர்களிடம் பாஜகவிற்கு இருக்கும் பிரபலத்தையே அது காட்டுவதாக இருக்கிறது.

கட்சியில் உள்ள எண்ணூறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்சிக்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. கட்சிக்கென்று நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பு, மாணவர் கூட்டமைப்பு உட்பட முப்பத்தாறு துணை நிறுவனங்கள் இருக்கின்றன. கூடுதலாக கட்சி பெண்கள் பிரிவையும் குறிப்பிடத்தக்க வகையில் பராமரித்து வருகிறது. கட்சியின் மேற்பார்வையில் உள்ள விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கலாச்சாரம் மற்றும் மத விவகாரங்களை நிர்வகித்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு முப்பது முதல் ஐம்பது லட்சம் வரை உறுப்பினர்களுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முழுநேரப் பணியாளர்களுடன் இயங்கி வரும் அந்த அமைப்பு. பல்வேறு சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்கள், கிராமப்புறங்களில் அறுபதாயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது.

தொண்டர் அமைப்பு என்ற வகையில் அந்த எண்ணிக்கை அதிகம் எனவே தோன்றுகிறது.

ஆம். அதன் பல துணை அமைப்புகளுக்கு முதுகெலும்பாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக பல இடங்களில் முழுநேர ஊழியர்களை ஆர்எஸ்எஸ் வழங்கி வருகிறது. அதனுடைய படிநிலை அமைப்பு மேலிருந்து கீழ் வரையிலும் கீழ்ப்படிதலை உறுதி செய்து தருகிறது. அதன் காரணமாக மிகவும் பயனுள்ள மேற்பார்வை, ஒருங்கிணைப்புடன் அந்த அமைப்பு இயங்கி வருகிறது.

உண்மையில் அதுவே அந்த அமைப்பின் வலிமைக்குச் சிறந்த ஆதாரமாகவும் இருக்க்கிறது. கணிசமான எண்ணிக்கையிலான முழு நேர ஊழியர்களுடன் இயங்கி வருகின்ற அந்த அமைப்பில் உள்ளவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்களாக இல்லாமல் செயல்பட்டு வருகின்ற உறுப்பினர்களின் ஈடுபாட்டையும் பயன்படுத்திக் கொள்கிறது. மிகப்பெரிய ட்ரோல் ராணுவத்துடன் உள்ள ஆர்எஸ்எஸ் வாராந்திரக் கூட்டங்களை வழக்கமாக நடத்தி வருகிறது. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப தன்னை திறமையாக மாற்றியமைத்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் தனது செய்திகளைப் பரப்புவதில் மிகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் சமீபத்திய செயல்பாடுகளைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளம் இருக்கிறது என்றாலும் அதன் வலிமை குறித்து கூறுவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கலாச்சாரத் தனித்துவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் பல தசாப்தங்களுக்கு இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்து வந்தது. ஆனால் அது இப்போது தன்னுடைய முந்தைய சுயத்தை இழந்து மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸின் பழைய மேலாதிக்கம் எவ்வாறு செயல்பட்டது, அது பின்னர் எவ்வாறு செயல் இழந்து போனது என்பது போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாஜகவின் புதிய மேலாதிக்கத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். அதுகுறித்து கொஞ்சம் பேச விரும்புகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் 1964ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்கான மாதிரி எவ்வாறு இருந்தது என்பதை முதலில் விளக்கிக் கூறுவீர்களா?

தேசியப் போராட்டக் காலத்தின் போது ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரமே சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியைப் போல தேசியப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஓர் அமைப்பாக தீவிரத்துடன் பங்கேற்றதில்லை – அதன் கவனம் முழுக்க ஆங்கிலேயர்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் மீதே கூடுதலாக இருந்தது. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பெற்ற மரியாதையே சுதந்திரத்திற்குப் பிந்தைய காங்கிரஸின் வெற்றிக்கான காரணமாக இருந்தது.

இரண்டாவதாகச் சொல்வதென்றால் காங்கிரஸிற்கான ஆதரவு வலையமைப்பை காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் கிராமப்புறத் தலைவர்கள், கிராமப்புற மேல்தட்டைச் சார்ந்தவர்களிடையே உருவாக்கியிருந்தனர். அந்த வலையமைப்பு சுதந்திரத்திற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்குக் கட்சியைத் தக்கவைத்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது. இருப்பினும் சித்தாந்த ரீதியாக உறுதியான, ஒழுக்கமான தொண்டர்களை வளர்த்தெடுக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் கொண்டிருந்த சித்தாந்தம் காங்கிரஸுடம் இருக்கவில்லை. காங்கிரஸின் சித்தாந்தம் அதிகம் குழப்பத்துடனே இருந்தது.
காங்கிரஸ் சித்தாந்தம் சோசலிசம், முதலாளித்துவம், ஒருங்கிணைந்த தேசியவாதத்துடன் இணைந்த மதச்சார்பின்மை குறித்த தளர்வான விளக்கம், வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை அணிசேராமை, தேர்தல்கள் மற்றும் அடிப்படை குடிமை உரிமைகள் போன்ற ஜனநாயகக் கொள்கைகள் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

1964ஆம் ஆண்டு நேருவின் மரணத்திற்குப் பிறகு 1960களின் பிற்பகுதி வரையிலும் நீடித்திருந்த காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்கு அதன் பன்முகச் சித்தாந்தத்தின் மீது உருவான நம்பகத்தன்மையே காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் அந்த நம்பகத்தன்மை 1967ஆம் ஆண்டு முற்றிலுமாகத் தளர்வடைந்தது.
பலகாலத்திற்கு அந்த நம்பகத்தன்மை நீடித்திருந்தமைக்கு காங்கிரஸ் மீதிருந்த நற்பெயர், அது வளர்த்தெடுத்திருந்த ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள் கொண்ட விரிவான வலையமைப்பு, இந்திய சுதந்திரத்தின் ஆரம்ப பத்தாண்டுகளில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் போன்றவையே காரணமாக இருந்திருக்கலாம். காலனித்துவ ஆட்சியின்போது மக்களின் வாழ்நிலைகள் மிக மோசமான நிலைமையிலேயே இருந்தன. ஆனால் 1947ஆம் ஆண்டு முதல் 1960களின் பிற்பகுதி வரை சுமார் மூன்றரை சதவிகித வளர்ச்சி விகிதம், பொதுத் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை நிறுவப்பட்டு அரசு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன.

மட்டுப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட வளர்ச்சிவாத முயற்சிகளை காங்கிரஸ் கட்சியால் நீட்டித்துக் கொள்ள முடிந்த போதிலும் தன்னுடைய வளர்ச்சி நோக்கங்களை அடைய அந்தக் கட்சி கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று. 1970களின் பிற்பகுதியில் அது தெளிவாகத் தெரிந்தது.

இந்திய அரசியல் பிராந்தியமயமாக்கப்படுவதன் தொடக்கத்தைக் குறிக்கின்ற வகையில் தங்கள் விசுவாசத்தை கிராமப்புற மேல்தட்டு வர்க்கத்தினர் பிராந்தியக் கட்சிகள் மீது மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவிலான சவாலை அதன் காரணமாக எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. பிராந்திய அளவில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தோற்றத்தில் குறிப்பாக 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் கவனிக்கத்தக்க வகையில் அந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அதன் விளைவாக தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள அரசு அதிகாரத்தைப் பெறுவதை, ஆதரவளிக்கும் அமைப்புகளை நம்பியிருந்த காங்கிரஸ் தேசிய மற்றும் மாகாணத் தேர்தல்களில் தனது கோட்டையை இழக்க நேரிட்டது.

இறுதியாக வளர்ச்சிவாதப் பொருளாதாரத் திட்டத்திலிருந்து புதிய தாராளவாதத்திற்கு காங்கிரஸ் நகர்ந்தது. வரலாற்றுரீதியாக அதன் விளைவுகள் எவ்வாறு இருந்தன? காங்கிரஸ், பாஜகவிடம் புதிய தாராளவாதம் குறித்து இருந்த ஒருமித்த கருத்து பாஜகவின் எழுச்சிக்கான இடத்தை உருவாக்கித் தர உதவியதா?

ஆரம்பத்தில் கெயின்சியனிசத்தின் மூன்றாம் உலகப் பதிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்த இந்திய பொருளாதாரச் சித்தாந்தம் அரசு தலைமையிலான வளர்ச்சிவாதத்தால் வகைப்படுத்தப்பட்டது. ஆனாலும் நேருவின் தலைமையின் கீழ் இருந்த இந்தியாவின் முயற்சிகள் தென் கொரியா போன்ற நாடுகளைப் போன்று வெற்றிகரமான வளர்ச்சிவாத அரசை நிறுவத் தவறின. அந்த தோல்வியால் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக எழுச்சிமிக்க முதலாளித்துவத் தோற்றத்துடன் இந்தியா ஒத்துப்போக வேண்டியதாயிற்று.

அதிகரித்து வந்த முதலாளித்துவம் கொடுத்த அழுத்தம், உலகளாவி ஏற்பட்ட மாற்றங்கள் மற்ற நாடுகளில் செய்ததைப் போல இந்தியாவையும் புதிய தாராளவாதப் பாதையை நோக்கித் தள்ளின. புதிய தாராளமயம் ஒரு நிலையான நிலை என்பதைக் காட்டிலும் ஒரு திசை என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டது. நாடுகள் அந்தத் திசையில் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து வெவ்வேறு வேகங்களில் நகர்ந்தன. தாங்கள் உணர்ந்து கொண்ட கெயின்சியனிசத்தின் தோல்விகள் காரணமாக 1970களின் பிற்பகுதியில் அதிலிருந்து விலகி ரீகனிசத்தின் கீழ் அமெரிக்கா, தாட்சரிசத்தின் கீழ் இங்கிலாந்து போன்ற நாடுகள் புதிய தாராளவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டன.

தொழிலாள வர்க்கம் அடைந்த கடுமையான தோல்விகளால் பல்வேறு நாடுகளில் புதிய தாராளவாதத்தை நோக்கிய மாற்றம் மிகவும் எளிதாகிப் போனது. அமெரிக்காவில் பாட்கோ (PATCO – தொழில்முறை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு) அமைப்பின் தோல்வி, இங்கிலாந்தில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போன்றவை முக்கிய தருணங்களாக இருந்தன. இந்தியாவில் 1982ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாபெரும் ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் தோல்விக்குப் பிறகு புதிய தாராளவாதத்தை நோக்கிய நகர்வு வேகம் பெற்றது.

பிரதான எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்தப் பொருளாதார மாற்றம் வெற்றி பெறும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த போராட்டத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பே பொதுவாகக் காணப்பட்டது. அதாவது ஜெஸ்ஸி ஜாக்சனின் தோல்வி பில் கிளின்டனின் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகக் கட்சியினரின் எழுச்சிக்கு வழி வகுத்தது. அதேபோல் இங்கிலாந்தில் பென்னிசம் முறியடிக்கப்பட்ட பிறகு டோனி பிளேயரின் தலைமையில் புதிய தொழிற்கட்சி உருவானது. ஆனால் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் என்று எதுவும் நடக்கவில்லை; புதிய தாராளவாதத்தை நோக்கி நாட்டை அந்தக் கட்சியே – எதிர்க்கட்சி அல்ல – இட்டுச் சென்றது. 1980களில் பாஜகவிற்கு தேர்தல் முக்கியத்துவம் மிகக் குறைவாகவே இருந்தது.

1980களில் பாஜகவின் கவனம் முழுக்க ராம ஜென்மபூமி இயக்கத்தின் மூலம் தன்னை வளர்த்துக் கொள்வதிலேயே இருந்தது. தான் குறிப்பிடத்தக்க பங்காளியாக இருக்க வேண்டுமானால் ஆளும் வர்க்கத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதை பாஜக உணர்ந்து கொண்டது. அதன் விளைவாக சங்பரிவாருடன் இணைந்து தனது பொருளாதார தேசியவாதத்தின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகி புதிய தாராளவாதப் போக்குடன் பாஜக தன்னை இணைத்துக் கொண்டது.
1991க்குப் பிறகு காங்கிரஸால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய தாராளமய நகர்வு வேகமடைந்தது. இருப்பினும் அதற்கான கருத்தொற்றுமையை பாஜகவிடமிருந்து அதனால் ஆரம்பத்தில் பெற முடியவில்லை. அந்த நகர்வு வேகமெடுத்த பிறகு பிரதான இடதுசாரிகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் புதிய தாராளவாத திசையை ஏற்றுக் கொண்டன.

1998ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக புதிய தாராளவாதக் கருத்தொற்றுமையின் ஒரு பகுதியாக மாறிப் போனது. பிரதான இடதுசாரிகள் அதற்கு எதிராகப் போராட முயன்றாலும், மேற்கு வங்க மாநிலம் தொழில்மயமாக்கலை முன்னெடுப்பதற்காக தீவிர விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இடதுசாரிகளின் உரையாடல் புதிய தாராளவாதத்திற்கு எதிரானதாக இருந்து வந்த நிலையில் அவர்களின் நடைமுறை அதுபோல இருக்கவில்லை என்பதால் அவர்கள் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டனர்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உலகளாவிய போக்கு உருவானது. அதனை நான் எரிக் ஹோப்ஸ்பாமைப் பின்பற்றி கலாச்சாரத் தனித்துவ அரசியல் எனக் குறிப்பிட்டேன். அந்த நிகழ்வு தனிப்பட்டு சுதந்திரமாக அல்லது இணைந்து இனம், மதம், தேசியவாதம் உட்பட பல்வேறு வடிவங்களை எடுத்தது.

முந்தைய முதலாம் உலகில் ஐரோப்பாவில் காணப்பட்ட இனவாதம், இனவெறி ஆகியவை அதற்கான எடுத்துக்காட்டுகளாக இருந்தன. முந்தைய இரண்டாம் உலகில் இருந்த முன்னாள் யூகோஸ்லாவியா, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தேசியவாதப் புறக்கணிப்பு நிலவியது. மத தீவிரவாதம் உலகளாவி கிறிஸ்தவ, ஹிந்து, இஸ்லாமிய, பௌத்த தீவிரவாதம் என்றிருந்து வருகிறது. இஸ்ரேல் யூத மதத்தின் தீவிரவாத வடிவத்தை நிரூபிக்கும் வகையிலேயே இருக்கிறது.
வலதுசாரி வெளிப்பாடுகளின் ஸ்திரத்தன்மை தேசிய வலதுசாரி அரசியல் மற்றும் சித்தாந்தங்களின் தனித்துவமான பண்புகளையே சார்ந்துள்ளது. ஜனநாயகத்தை அரித்தெடுத்த சித்தாந்த சீர்குலைவு மற்றும் வருமானம், செல்வம், அதன் விளைவாக அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து குறிப்பிடத்தக்க விரக்திகள் உருவாகிட வளர்ச்சிவாதத்தின் தோல்விகளேள் வழிவகுத்துக் கொடுத்தன. ஒட்டுமொத்தமாக இந்தக் காரணிகள் அனைத்தும் சேர்ந்து பரவலான விரக்தியை, கோபத்தைத் தூண்டின. அந்த அதிருப்தியை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் அது அரசியல் சூழ்ச்சிக்கான களத்தை வடிவமைத்தது. கடந்த பத்து ஆண்டுகளில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி சர்வாதிகார ஜனரஞ்சகத்தின் வடிவத்தை அது எடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

மையம் தாங்காது பரம்பரை ஆட்சிக்கு காங்கிரஸ் கொடுத்த முக்கியத்துவம் அதனுடைய மேலாதிக்கத்தின் அடிப்படையை எந்த அளவிற்குத் தகர்த்தது அல்லது குறைந்தபட்சம் ஒத்திசைவான சித்தாந்தத்திற்காக மிகக் குறைவான பிரபலத்துடன் இருந்த குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு அந்த மேலாதிக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியை மறுப்பதற்கு அது எவ்வாறு துணைநின்றது?

இந்தியாவைப் பொருத்தவரை புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை. வலுவான கட்டமைப்புகளைக் கொண்ட கட்சிகளைப் போலல்லாமல் குடும்ப வாரிசு, தலைமையைச் சுற்றியுள்ள கூட்டம் ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் தலைமை அடிப்படையில் புதிய தாராளவாதத்தை நோக்கி நகர்வதற்குத் துணைநின்றன.

அது காங்கிரஸ் கட்சி மீது கணிசமான ஏமாற்றத்தை, அதிருப்தியை உருவாக்கியது பற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை. காங்கிரஸ் கட்சியால் ஒத்திசைவான அமைப்பை ஏன் பராமரிக்க முடியாமல் போனது என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வியாகும். அந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி கட்சியின் ஆதரவாளர், வாடிக்கையாளர் அடிப்படையிலான வலையமைப்பில் ஏற்பட்ட மாற்றத்திலேயே உள்ளது.

தங்களுக்குக் கீழ்நிலையில் இருந்தவர்களைக் கட்டுப்படுத்தி வந்த கிராமப்புற மேல்தட்டுக் கட்டமைப்பை இழந்ததாலேயே கட்சி தனக்கான ஒத்திசைவை இழந்தது. அதுவே அதிகாரத்தைப் பெறும் வாய்ப்பால் மட்டுமே சமாதானமடைந்த பல்வேறு பிரிவுகளுக்கு காங்கிரஸுக்குள் புகலிடம் தந்தது. அத்தகைய கோஷ்டி பிளவுகளுடன், வலுவான ஒருங்கிணைந்த சித்தாந்தமும் இல்லாமல் போனதால் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் குடும்பம் நடுவராகப் பணியாற்ற வேண்டியதாயிற்று. அந்த வேலையும்கூட காங்கிரஸ் கட்டமைப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அதிக அளவிற்கு சவாலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆக வாரிசு ஆட்சியின் முடிவை மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து மிகப் பெரிய வீழ்ச்சியடைந்ததையும் நாம் காண்கிறோம். அந்தக் கட்சிக்கான வரலாறு மற்றும் அதன் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு இவையனைத்தும் மறந்து போகும் என்று நான் கணிக்கப் போவதில்லை. ஆனாலும் லத்தீன் அமெரிக்காவில் ஒருகாலத்தில் இருந்த மையவாதக் கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சியும் பாரம்பரியமாக ஒரு வகையான

மையவாதக் கட்சியாகவே இருக்கிறது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அந்தந்த சமூகங்களின் வளர்ச்சியில் இந்தக் கட்சிகள் முக்கியமான பங்குடன் இருந்தன. அவை இறக்குமதிக்கு மாற்றாக தொழில்மயமாக்கல் போன்ற உத்திகளை ஆதரித்தன. அவர்களும் தங்கள் அணிகளுக்குள் காங்கிரஸ் கட்சியைப் போல இடது, வலது பிரிவுகளை உள்ளடக்கி வைத்திருந்தனர். இருப்பினும் காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சிக்கான அவர்களுடைய திட்டங்கள் தடுமாற்றம் அடைந்ததால் இந்த மையவாதக் கட்சிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இதேபோன்றதொரு முறையை பொலிவியா, பெரு, பிரேசில், கொலம்பியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல்வேறு மையவாதக் கட்சிகளிடம் பார்த்திருக்கிறோம். அவற்றில் பல கட்சிகள் அளவில் சிறுத்து விட்டன. அவை முந்தைய முதலாளித்துவ மையவாதத்திலிருந்து வெளிப்படையான வலதுசாரி நிறுவனங்களாக மாற்றப்பட்டு விட்டன அல்லது முற்றிலும் இருட்டடிப்புக்குள்ளாகி விட்டன. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை அது இன்னும் முழுமையாக மறைந்து போய் விடவில்லை என்றாலும் சிறிய, வெளிப்படையான வலதுசாரிப் பிரிவாக அது மாற்றம் கண்டுள்ளது என்றே கூறுவேன்.

பாஜகவின் எழுச்சிக்கான முக்கிய தருணமாக ராம ஜென்மபூமி பிரச்சாரம் இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட மிகப் பெரிய ஹிந்து தேசிய இயக்கத்தின் விளைவாக கடவுள் பிறந்த இடம் என்ற காரணத்தை வலியுறுத்தி ஹிந்து தேசியவாதிகள் பதினாறாம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர். இந்தியர்களை ஹிந்து அரசியலுக்குள் அணிதிரட்டவும், பாஜக அதிகாரத்தைக் கட்டியெழுப்பவும் அந்தப் பிரச்சாரத்தை ஹிந்து தேசியவாதிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விளக்குங்களேன்.

சுதந்திரப் போராட்ட காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய, நீண்ட காலம் நீடித்து நின்ற மக்கள் இயக்கமாக ஹிந்து தேசிய இயக்கம் இருக்கிறது. பல ஆண்டு காலமாக அது நீடித்து இருந்து வருகிறது. வடக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் மட்டுமல்லாது தெற்கு, கிழக்கிலும் கூட மிகப் பெரிய இயக்கமாக அது இருக்கிறது. அனுதாபிகளுடன் இணைந்து தனது தொண்டர் படையை வலுப்படுத்திக் கொண்ட அந்த இயக்கம் பல்வேறு வழிகளில் மிகச் சாதாரண மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ராமர் கோவில் குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து சாதாரண மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் குறிப்பிடத்தக்க வகையிலான ஆற்றலுடன் இருந்தனர்.

கணிசமான அளவு நூல்கள், ராமர் குறித்த தொலைக்காட்சித் தொடரின் பிரபலம் வழியாகக் கிடைத்த ஆதரவால் அந்தக் காலகட்டத்தில் ஏராளமான மத ஊர்வலங்கள், வாகன அணிவகுப்புகள் நடைபெற்றன.. மிகச் சாதாரணமான மக்கள் அந்த இயக்கத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்திக் கொடுத்தது.

வருங்காலத்தில் அந்த இடத்தில் வரப் போகின்ற ராமர் கோவிலைக் கட்டுவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கற்களைச் சேகரித்துக் கொடுப்பது என்று மக்கள் அனைத்து வகையிலும் தங்களை அந்த இயக்கத்துடன் ஈடுபடுத்திக் கொண்டனர். செங்கற்களைப் பிரதிஷ்டை செய்வது அல்லது அதற்காக உதவுவது போன்று மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மக்கள் தங்கள் பங்கை அளித்திட பலவகைகளிலும் ஊக்குவித்தன. அத்தகைய முயற்சிகள் தாங்கள் தீவிரமாக அர்த்தமுள்ள முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதான சிந்தனையை அந்த மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன.

நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்காக ‘ரொட்டிகள் மற்றும் பராத்தாக்களைத் தயாரித்துக் கொடுங்கள்’ என்று மக்களிடம் கோரிக்கை வைக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ள குடும்பத்தினர் அவற்றைத் தயார் செய்து கொடுப்பார்கள். அதுபோன்று நடத்தப்பட்ட பிரச்சாரமே அவர்களை மக்களுடன் இணைத்து வைத்தது; உண்மையில் அது மத உணர்வைக் கொண்டு நடத்தப்பட்ட நாடகமாகவே இருந்தது. அந்த இயக்கத்தை ஆதரித்தவர்களிடம் காணப்பட்ட மிகச் சாதாரண உணர்வுநிலைக்கும், அந்த இயக்கத்தில் முன்னணியில் இருந்த சங்பரிவார், ஆர்எஸ்எஸ், விஎச்பி உறுப்பினர்கள், தொண்டர்களின் உணர்வுநிலைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்தது. தங்களுடைய கலாச்சார செல்வாக்கு காரணமாக அந்த அமைப்புகள் அந்தப் பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்குடன் இருந்தன. இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘அங்கே ஒரு மசூதி இருப்பது தெரியும். அந்த மசூதியை இடிக்கப் போவதாக நாங்கள் கூறவில்லை. வேறொரு கோவில் அங்கே கட்டப்பட வேண்டும் என்று சொன்னால் அதில் என்ன தவறு இருக்கப் போகிறது’ என்ற வகையிலேயே அந்த இயக்கத்திற்கான பெரும்பாலான மிகச் சாதாரண ஹிந்து ஆதரவாளர்களின் மனநிலை இருந்தது. ஆக ராமர் கோவில் கட்டுகின்ற யோசனைக்கு மக்களுடைய ஆதரவு ஏற்கனவே இருந்தது.

ஆனாலும் அதுபோன்ற சராசரி உணர்வுகள் இறுதி இலக்கை, முடிவைத் தீர்மானிப்பதில்லை. முன்னணியில் இருப்பவர்களின் உணர்வுகளே மசூதியை இடிப்பதை நோக்கி எப்போதும் சாயும். கட்டுவதைக் காட்டிலும் இடிப்பதே அவர்களைப் பொருத்தவரை முக்கியமானதாகும். அதுதான் இறுதியில் நடந்தேறியது.
‘எந்தவொரு இயக்கத்தின் திசையும் மிகச் சாதாரண சராசரி உணர்வுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. தீவிரச் செயல்பாட்டில் உள்ள கூறுகளின் உணர்வுகளாலேயே அது தீர்மானிக்கப்படும்’ என்று வலியுறுத்திக் கூறிய விளாடிமிர் லெனின் போன்றவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த விஷயமாகவே அது நடந்தேறியது. மேலும் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பிரச்சனையைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட வெகுஜன இயக்கத்தின் கட்டுமானமாக அது இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். வெகுகாலம் கட்டமைக்கப்பட்ட பிரச்சனையாகவே அது இருந்துள்ளது.

தங்கள் வாழ்க்கைக்காக, தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்காக அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே குடியிருந்து கொள்ள விரும்பிய, இந்தியாவில் மீண்டும் குடியேறுவது பற்றிய எண்ணம் எதுவும் இல்லாத புலம்பெயர் இந்தியர்களில் பெரும்பகுதியினர் இந்த இயக்கத்தில் தங்களை நுழைத்துக் கொண்டு இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இந்த இயக்கத்தை எதிர்க்கும் குற்றத்தை இழைத்து வருகிறார்கள் என்று கூறி வருகின்ற அசாதாரண சூழ்நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்றே கருதுகிறேன்.

அது மிகவும் அசாதாரணமான நிலையாகும். சாதிய அமைப்பு காரணமாக பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஹிந்துக் கோவில்கள் எவையும் ஹிந்துக்கள் அனைவருக்குமாகத் திறந்து வைக்கப்படவில்லை என்ற உண்மையை அனைவரும் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. பெரும்பாலான ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது சாதியினருக்கு மட்டுமே உடைமையாக இருந்தன.

அவையனைத்தும் மறந்து போய் விட்டது. நாம் இப்போது சரியான ஆதாரங்கள் எதுவுமற்ற கோபம், மனக்குறையின் கட்டுமானமே அத்தகைய உணர்வுகளுக்குக் காரணமாக இருந்து வருவதைக் காண்கிறோம் என்பதையே இங்கே கூற வருகின்றேன். இதுபோன்றதொரு உத்வேகத்தை உருவாக்க முடிந்துள்ளதே அவர்களுடைய வெற்றிக்கான அறிகுறியாக இருக்கிறது. செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்றைக் காட்டிலும், உலகளவில் வரலாற்றுத் தவறு என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றைச் சுற்றி மிகப் பெரிய இயக்கத்தைத் திரட்டுவது இப்போது மிகவும் எளிதான காரியமாக இருக்கிறது.
ஹிந்து தேசியத்தைக் கட்டமைத்தல்

ஆர்எஸ்எஸ்சும், பாஜகவும் தங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு ஹிந்து மதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைக்க வேண்டியிருந்தது? ஹிந்து மதம் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த மதம் என்ற அவர்களுடைய கற்பனையான விளக்கம் வரலாற்று யதார்த்தத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
ஹிந்து மதம் குறித்து பல்வேறு புரிதல்கள் இருந்துள்ளன. ஹிந்து மதம் தத்துவார்த்த, நடைமுறை அம்சங்களை முறையே உயர்ந்த பாரம்பரியம், குறைவான பாரம்பரியம் எனப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஒரு வாதம் இருந்து வருகிறது. இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களில் காணப்படுகின்ற இது போன்ற வேறுபாடுகளையே அந்த இருமை பிரதிபலிக்கிறது.

அது ஒரு வகையான பார்வை. இரண்டாவது பார்வை ஹிந்து மதம் பலவிதமான நடைமுறைகளைக் கொண்ட மொசைக் போன்றது என்பதாக இருக்கிறது. சில தனித்துவமான விஷயங்கள் அந்த மொசைக்கின் ஊடே இருந்து அது நிலைத்திருப்பதை உறுதி செய்கின்றன. இது இரண்டாவது பார்வை.
ஹிந்து மதம் உண்மையில் ஒன்றைப் பற்றி மற்றொன்று எதுவும் அறிந்திராத, தங்களுக்குள் உண்மையில் எவ்வித தொடர்புகளும் இல்லாத வெவ்வேறு பிரிவுகள், நடைமுறைகளால் ஆனது என்பதாக நான் கொண்டிருக்கும் மூன்றாவது நிலைப்பாடு மிகத் துல்லியமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
பொது சகாப்தத்திற்கு முன்பு அல்லது பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு வரையில் இல்லாமல் ஒரு மதமாக ஹிந்து மதம் என்ற சொல் வரலாற்றின் மிகவும் பிற்பகுதியிலேயே தோன்றியது என மதிப்புமிக்க வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். உண்மையில் பதினாறாம் நூற்றாண்டில்தான் ஹிந்து என்ற வார்த்தை இந்திய மக்களுக்கான சுய அடையாளமாக முக்கியத்துவம் பெற்றது.

ஹிந்து என்ற சொல் வரலாற்றுரீதியாக சிந்து என்ற வார்த்தையிலிருந்தே பெறப்பட்டது. மேற்கு ஆசியாவில் தோன்றிய அந்த வார்த்தை சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலத்தைக் குறிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக பல்வேறு காரணிகள் ஒருமை மதம் என்ற கருத்தை உருவாக்கிடத் தங்கள் பங்கை அளித்தன. இந்த வரலாற்றுப் பரிணாமத்தை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய திட்டங்களுக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தி ஆர்எஸ்எஸ் வடிவமைத்து வந்துள்ளது.

பலவிதமான நடைமுறைகள், நம்பிக்கைகளை உள்ளடக்கிய ஹிந்து மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த மதம் தனக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளுமாறு ஹிந்துத்துவா இன்றைக்கு வலியுறுத்தி வருகிறது.
ஓரளவிற்கு அது சுய-கீழைத்தேயவியலின் வடிவமாக இருக்கிறதா?

ஆமாம் அது ஒரு வகையில் நீங்கள் சொல்வதுடன் தொடர்புடையதே. ஏனென்றால் ஒற்றை ஹிந்து மதம் என்ற கருத்து இந்திய சூழலுக்குள் பின்னர் திணிக்கப்பட்ட ஐரோப்பிய மதக் கருத்துகளின் பாதிப்பைக் கொண்டதாகுவே இருக்கிறது. குறிப்பாக ஹிந்து என்ற வலுவான உணர்வு தோன்றிய காலகட்டத்தில்தான் அந்தக் கருத்து இந்திய தேசிய இயக்கத்திற்குள் கட்டமைக்கப்பட்டது.

கூட்டு தேசியவாதம் பற்றி நான் முன்பு பேசியதை நினைவில் கொள்ளவும். காலனித்துவம் என்றால் என்ன? காலனித்துவம் என்பது காலனித்துவப்படுத்தப்பட்டவர்களின் தோல்வியையே குறிக்கிறது. காலனித்துவத்தால் தாங்கள் தோற்கடிக்கப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொண்ட இந்தியர்கள் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகத் தொடங்கினர்.

மேல்தட்டினர் சுய மதிப்பு உணர்வுடன் இருந்ததால் அவர்களிடத்தும் அந்த உணர்வு தோன்றியிருக்கலாம். அந்த சுயமதிப்பு உணர்வு அவர்களிடம் எவ்வாறு வந்தது? காலனியாதிக்கம் தோல்வியடையும் காலகட்டத்தில் தங்களைப் பற்றிய உணர்வு அவர்களுக்கு எவ்வாறு வந்தது? பொருள் மட்டத்தில் அவர்களால் அந்த உணர்வைப் பெற்றிருக்க முடியாது. ஆங்கிலேயர்களிடம் இருந்த தொழில்நுட்பம், ராணுவ மட்டத்திலும் அவர்களால் அதைப் பெற்றிருக்க முடியாது. ஆங்கிலேயர்களிடம் இல்லாத சுயமரியாதை உணர்வும், மேன்மையும் கொண்டவர்கள் என்று எந்த விதத்தில் அவர்களால் தங்களைப் பற்றி பேச முடிந்திருக்கும்?

கலாச்சாரம், மதம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் மட்டுமே அவர்களால் அவ்வாறு பேச முடிந்திருக்கும். ஹிந்து மதம் குறிப்பிடத்தக்க அளவிலான சகிப்புத்தன்மை கொண்ட மதம், பொதுவான மதம், செமிடிக் மதங்களில் உள்ளதைப் போல முன்மொழிவு உண்மையைக் கொண்டிராத மதம் என்பதால் அதில் சிலுவைப் போர்கள், ஜிஹாத்கள் மற்றும் பல கொடூரங்கள் இல்லை என்ற கருத்தாக்கத்திற்கான கட்டுமானத்தின் ஆரம்பம் அந்த இடத்தில்தான் துவங்குகிறது.

அரசியல் தேசியவாதத்தைப் பெறுவதற்கு ஒருவிதக் கலாச்சார தேசியவாதம் தேவைப்படும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய போராட்டக் காலத்திலே இந்திய அடையாளத்தின் மீது தங்கள் சொந்தக் கண்ணோட்டத்துடன் இருந்த தேசியவாதத்தின் பல்வேறு வடிவங்கள் தோன்றின.

அவற்றில் ஆர்எஸ்எஸ்சால் பரிந்துரைக்கப்பட்ட, சர்தார் பட்டேல் போன்ற தலைவர்களின் ஆதரவு பெற்ற ஒரு வடிவம் ஹிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியது. இந்தியாவின் பன்முகத்தன்மையை தன்னுடைய வரையறுக்கும் பண்பாகக் கொண்டு ஒருங்கிணைந்த தேசியவாதக் கருத்தை மற்றொரு வடிவம் முன்வைத்தது. அந்த அணுகுமுறை வரலாற்றுரீதியாக இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் வேற்றுமையில் ஒற்றுமைக்கான மூலத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும் அல்லது கண்டுபிடிக்க வேண்டும். மிகமிகப் பழமையானது என்று கருதப்படுவதால் இந்தியாவில் ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் வருவதற்கு முந்தையதாகவே அது இருக்க வேண்டும். எனவே அது மறைமுகமாக அல்லது வெளிப்படையாக ஹிந்து மதத்தின் குறிப்பாக பிராமண ஹிந்து மதத்தின் செழுமையில் வேரூன்றியுள்ளது என்பதைக் கூற முனைகிறது.

அப்போது இங்கே உருவான கட்டுமானத்தை உங்களால் இப்போது காண முடியும். தேசிய போராட்டக் காலத்தில் துரிதப்படுத்தப்பட்ட அந்தக் கட்டுமானம் சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.

இந்த எளிமையான எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்: 1931ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியின மக்கள் ஆன்மவாதிகளாக வகைப்படுத்தப்பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பழங்குடி மக்களை ஹிந்துக்கள் என்ற பிரிவின் கீழ் மானுடவியலாளர்கள் வகைப்படுத்தினர். ஹிந்துமயமாக்குகின்ற செயல்முறையையே அது விளக்குகிறது. ஹிந்து மதம் என்பது தனித்துவத்துடன் இருப்பதற்கு மாறாக பல பிரிவுகளின் தொகுப்பாகவே இருக்கிறது. தங்களுக்கிடையே ஒருங்கிணைந்த அடையாளத்துடன் அந்தப் பிரிவுகள் இருப்பதை அது தடுக்கவில்லை. அதற்குப் பங்களித்த பல்வேறு அழுத்தங்கள், தாக்கங்கள் மிகப் பெரிய மதக் கட்டமைப்பிற்குள் அவரவருக்குச் சொந்தமான உணர்வை, ஆதரவை தனிநபர்களுக்கு வழங்கின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மத அடையாளம் கட்டமைக்கப்பட்டது.

தேசியம் குறித்த ‘உறங்கும் அழகு’ என்ற கருத்தாக்கம் காலனித்துவநீக்கம் காலனித்துவத்திற்கு எதிரான தேசியவாதத்தின் வடிவத்தை எடுக்க வேண்டிய தேவையுடனே காலனித்துவத்துடன் இணைந்து எழுகின்ற நவீன தேசிய அரசின் எழுச்சி இருப்பதால் தேசியவாதத்தின் வரலாறு ஒருவகையில் இங்கே மதரீதியான இணையுடன் இருப்பதாகவே தோன்றுகிறது. மத அடையாளம் ஏகத்துவ மதங்களால் பல வழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகில் தான் ஒருபோதும் இருந்திராத வகையில் ஒத்திசைவான ஒற்றை மதமாக மாற வேண்டிய நிலை ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டது என்றே தோன்றுகிறது.

தேசியவாதம், தேசம் என்ற கருத்தாக்கத்தைச் சுற்றியே இங்கே முக்கியமான கேள்விகள் எழுவதாகக் கூறுவேன். தேசத்தைப் போன்று தேசியவாதமும் கட்டமைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. தேசமும், தேசியவாதமும் நவீன கட்டுமானம் என்று வாதிடுகின்ற சிறுபான்மையினரும் உள்ளனர்.
வெகுஜன அரசியல் சகாப்தத்தைச் சார்ந்ததாக, நவீனமானதாக இருப்பதால் ஒருபுறத்தில் அது வெளிப்படையான உண்மையாகவே இருக்கிறது. அரசின் வடிவத்துடன் உள்ள தேசிய-அரசு நவீனமானதாகவும் உள்ளது. ஆனாலும் தேசம் என்பது பழையதா அல்லது புதியதா என்ற சர்ச்சை அறிஞர்களுக்கிடையே இன்னும் நிலவி வருகிறது. தேசம் என்பது கலாச்சாரம், அரசியலாக இருப்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் தேசத்தின் கலாச்சார பரிமாணத்தைக் காட்டிலும் அரசியல் பரிமாணமே முக்கியமானது என்று வலியுறுத்துகின்ற மாறுபட்ட கருத்தும் நவீனத்துவவாதிகளுக்கு இடையே இருந்து வருகிறது.

தேசியத்தைக் காட்டிலும் கலாச்சார பரிமாணத்தை வலியுறுத்தி வருபவர்களுக்கு மாறாக இனம் அல்லது குடிமை என வகைப்படுத்தப்படுகின்ற வகையிலே தேசியவாதம் குறித்து பொதுவான பல்வேறு விளக்கங்களும் இருந்து வருகின்றன. இருப்பினும் அதை இன்னும் வித்தியாசமாகப் பார்க்கவே விரும்புகிறேன். தங்களுடைய கடந்த காலம் குறித்த கதைகளை அனைத்து நாடுகளும் உருவாக்குகின்றன. அடிப்படைவாத தேசியவாதத்துடன் ஒப்பிடும்போது குடிமை தேசியவாதம் அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதாக, சகிப்புத்தன்மையுடன் இருக்கிறது. தேசியவாதம் குறித்து அடிப்படையில் இரண்டு கண்ணோட்டங்கள் இருக்கின்றன.

ரத்தம், மதம், இனம், மொழி அல்லது பழக்கவழக்கங்கள் தொடர்பில் உண்மையான பாரம்பரியத்தை உள்ளடக்கி, உண்மையான வாரிசு யார் என்பதில் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் வரலாற்றுப் பாரம்பரியமாக தேசியவாதத்தைப் பார்க்கின்ற கண்ணோட்டம் இருக்கிறது. அதனை சமகால சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வு என்பதாகக் காண்கின்ற மாற்றுக் கண்ணோட்டமும் இருக்கிறது. அந்தப் பார்வை தேசியவாதம் என்பது கூட்டாக நாம் உருவாக்குவது என்றுள்ளது. பன்முக கலாச்சாரம் மற்றும் பல்வேறு வழிகளில் அமெரிக்கர் அல்லது ஆஸ்திரேலியர் என அடையாளம் காணும் வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுவதைப் போன்ற தேசிய அடையாளத்திற்கான பல்வேறு விளக்கங்களை அத்தகைய முன்னோக்கு அனுமதிக்கிறது.

அடிப்படைவாதக் கருத்தாக்கம் உங்களிடம் இருக்கும் போது நீங்கள் ‘இந்தியராக உங்களை உணர்வதற்கு இதுதான் உண்மையான ஒரே வழி. இந்த அம்சம் மிகமிக முக்கியமானது. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நம்மைப் பலவீனப்படுத்துகின்ற ஆபத்தையே உருவாக்குகிறீர்கள். அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றே சொல்வீர்கள்.

அவ்வாறு சொல்வது வங்கதேசம் போன்ற இஸ்லாமிய அரசு தன்னுடைய ஹிந்து சிறுபான்மையினர் மீது அல்லது முஸ்லீம் அல்லாதவர்களாகக் கருதப்படும் அகமதியா சமூகத்தின் மீது பாகிஸ்தான் எடுக்கும் நிலைபாட்டையே பிரதிபலிக்கும். இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்கள் அதுபோன்ற கருத்துகளையே முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தங்கள் உணர்வுகளாக எதிரொலிக்கின்றன.

ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டு சில குழுக்களின் ஜெர்மானியத்தன்மையை ஜெர்மனியர்கள் கேள்விக்குள்ளாக்குவது அல்லது இங்கிலாந்தின் கலாச்சாரம் ஆசியர்களால் சீரழிக்கடிக்கப்பட்டதாக மார்கரெட் தாட்சர் கவலைகளை வெளிப்படுத்துவது போன்ற சூழல்களில் இதுபோன்ற மனநிலையே தெளிவாக வெளிப்படுகிறது. மெக்சிகன் குடியேறிகள் அல்லது கறுப்பின அமெரிக்கர்கள் உண்மையான வெள்ளையர்கள் அல்ல எனக் காண்கின்ற அமெரிக்க வெள்ளை தேசியவாதிகள் சிலரின் – அமெரிக்காவில் குறைந்து வருகின்ற சக்தியாக அவர்கள் இருந்தாலும் – முன்னோக்கையே அது பிரதிபலிப்பதாகக் கருதுகிறேன். ஆனாலும் ஹிந்து தேசியவாதம் இந்தியச் சூழலில் நிச்சயமாக அதிகரித்தே வருகிறது.

தேசியம் குறித்த்தாக ‘உறங்கும் அழகு’ என்ற கருத்தாக்கமே இங்கே நடைமுறையில் இருக்கிறது. இந்தியச் சூழலில் நன்கு அறியப்பட்டுள்ள கதை ஒன்றுடன்உறங்கும் அழகு என்ற அந்தக் கருத்து இணைந்துள்ளது. அந்தக் கதையில் வரும் உறங்கும் அழகு நெடுங்காலம் செயலற்ற நிலையில் கிடந்த ஹிந்து மதத்தைக் குறிக்கிறது. அந்த விசித்திரக் கதையில் ஒரு முத்தத்தின் மூலமாக இளவரசர் சார்மிங் உறங்கும் அழகை எழுப்புவதைப் போல ஹிந்துத்துவ சக்திகள் அரசியல் நடவடிக்கை மற்றும் ஆதரவை அளிப்பதன் மூலம் ஹிந்து மதத்தை உறக்கத்திலிருந்து எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஹிந்து மதத்தின் தூக்கத்திற்கு துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள், முகலாயர்கள் போன்ற முஸ்லீம் ஆட்சியாளர்களின் பங்கு உள்ளிட்ட பல வரலாற்றுக் காரணிகள் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹிந்து மதத்தைத் தூங்க வைத்த தீய சூனியக்காரிகள் என்று முஸ்லீம்களைச் சித்தரித்து, அதன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வைத் திரட்ட முயலும் அந்தச் சித்தாந்தம். இயல்பான தேசியவாதத்தின் ஒரு வடிவத்தையே முன்வைக்கிறது. அது புத்துயிர் பெறக்கூடியதாக உள்ள நிலையான கலாச்சாரப் பண்புகளில் வேரூன்றிய காலமற்ற ஹிந்து அடையாளத்தின் இருப்பை உறுதிப்படுத்தித் தருகிறது. நீங்கள் முன்பு குறிப்பிட்டதைப் போல பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன் காதல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அந்த இயல்பான தேசியவாதம் இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து தேசியவாதத்தை ஆதரிப்பவர்களின் கருத்துகள் இந்தியாவில் தோன்றியவையாக அல்லாமல் மேற்குலகிடமிருந்து தழுவி ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருப்பது முற்றிலும் முரண்பாடான காரியம் எனவே தோன்றுகிறது!

அதற்காக மிகப் பெரிய அளவிலே இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கும். வரலாற்றை அவ்வாறு மாற்றி எழுதவே பாஜக இப்போது முயன்று வருகிறது.

ஆம். ஆயிரம் ஆண்டுகால அந்நிய ஆட்சியைப் பற்றியே மோடி 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றவுடன் பேசிய முதல் பேச்சு இருந்தது. வேறு விதமாகச் சொல்வதென்றால் பிரிட்டிஷார் மீது அவர் எந்தவித ஆர்வமும் காட்டவில்லை; பதினாறாம் நூற்றாண்டு வரை அவர்கள் இங்கே வரவே இல்லை.

ஆம். கிழக்கிந்திய கம்பெனி பதினாறாம் நூற்றாண்டில் வந்தது என்றாலும் அந்நியர்கள் வந்ததாகக் குறிப்பிடும் போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுவதன் மூலம் மோடி அனைவரையும் விடுத்து கடந்த காலத்தில் படையெடுத்த குறிப்பிட்ட வெளிநாட்டினரை மட்டுமே குற்றம் சாட்ட விரும்புகிறார். இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்ததில்லை – அது பலரும் இணைந்த கூட்டமைப்பாகவே இருந்துள்ளது. இந்தியா என்ற பெயர் பல்வேறு அரசுகளுடன் இருந்த உலகின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட பெயராகவே இருக்கிறது. ஆக இப்போது நடப்பவற்றை வரலாற்றை மீண்டும் எழுதுவதாக மட்டுமே நம்மால் காண முடிகிறது.

இந்தியா மீது படையெடுப்பு முகலாயர்களுக்கு முன்பே தொடுக்கப்பட்டது என பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் கருதுகிறார்களா?

முகலாயர்கள் பின்னர்தான் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்னதாகவே ஆப்கானியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள் இங்கே இருந்துள்ளனர். பல்வேறு ஆட்சியாளர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

பிரிவினைக்கான பாரம்பரியம்சுதந்திரமான பூர்வீக இந்தியா எங்கே, எப்போது இருந்தது?

முஸ்லீம்கள் வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் வராத சில பகுதிகள் இருந்துள்ளன. அங்கெல்லாம் வணிகம் காரணமாக வந்தவர்களே ஆட்சியில் இருந்தனர். அரேபியா மற்றும் இந்திய மேற்குக் கடற்கரைக்கு இடையிலான வர்த்தகத்தின் விளைவாக ஆரம்பகால முஸ்லீம்களில் சிலர் கேரளா போன்ற இடங்களுக்கு வந்து சேர்ந்தனர். அதேபோல் கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவை அடைவதற்கு முன்பே கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

பௌத்தம் போன்ற இந்தியப் பூர்வீக மதங்கள் ஹிந்து மதத்துடன் தொடர்புடையவை என்ற வாதத்தை ஹிந்துத்துவா முன்வைக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக அது கருதுகிறது. தாய்நாடு இந்தியாவாக இருந்தாலும், அவர்களுடைய மதம் இந்தியாவைச் சேர்ந்ததாக இல்லையென்றால் உண்மையான இந்தியர்கள் என அவர்கள் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பழங்குடியினராக ஏற்றுக்கொள்ளப்படும் பௌத்தர்கள், ஜைனர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை.

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுடன் பிரச்சனைகள் உள்ள போதிலும் கிறிஸ்தவ மக்கள்தொகை இரண்டரை சதவிகிதம் மட்டுமே இருப்பதால் கிறிஸ்துவர்களைப் பொருத்தவரை பிரச்சனை மிகவும் குறைவாகவே இருக்கிறது.. பிரிவினைக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்காக இருந்த முஸ்லீம் மக்கள்தொகை தற்போது பதினான்கு சதவிகிதமாக மட்டுமே உள்ளது. அயல்நாட்டு மதத்தைக் கொண்டவர்களாகக் கருதப்படும் கம்யூனிஸ்டுகளுடனும் பாஜகவிற்குப் பிரச்சனைகள் உள்ளன. கம்யூனிஸ்டுகளிடம் உள்ள சர்வதேசியத்தின் காரணமாக அவர்கள் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசத்தின் மீது விசுவாசத்துடன் இருப்பதில்லை என்றே கருதி வருகின்றனர். .

பிரிவினை குறித்து பேசுகையில் 1947ஆம் ஆண்டு தேசப்பிரிவினை பிரிட்டிஷ் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியதே காலனித்துவத்திலிருந்து பின்காலனித்துவ சகாப்தத்திற்கு மாறுவதற்கான அடித்தளமான தருணமாக இருந்தது எனக் கூறலாமா? பத்து முதல் இருபது லட்சம் மக்களைக் கொன்ற, பல லட்சக்கணக்கானோர் இடம்பெயரக் காரணமாக இருந்த அந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும் வகுப்புவாத வன்முறைச் செயல்கள் நிகழ்த்தப்பட்ட பின்காலனித்துவ இந்தியாவிற்கான களத்தை அதுவே அமைத்துக் கொடுத்தது.

உண்மையில் அது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்த போதிலும் அதன் விளைவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கவில்லை. இந்தியாவில் கூறப்பட்டு வருகின்ற வழக்கமான கதைகளுக்கு மாறாக பிரிவினைக்கான முதன்மைப் பொறுப்பை காங்கிரஸ் கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னா கருத்தில் கொள்வதற்குத் தயாராக இருந்த தளர்வானதொரு கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ள அந்த நேரத்தில் காங்கிரஸ் தயாராக இல்லை.

மேலாதிக்கத்துடனான, மையப்படுத்தப்பட்ட, ஒன்றுபட்ட இந்தியாவையே காங்கிரஸ் தனது இலக்காகக் கொண்டிருந்தது. பிரிவினைக்கான பழி பகிர்ந்து கொள்ளப்படுவதாக இருந்த போதிலும், அந்தப் பழியை காங்கிரஸ் கட்சியே முக்கியமாக சுமக்க வேண்டும் என்பதே எனது பார்வையாகும். தனது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஜின்னா பின்னர் பயன்படுத்திக் கொண்ட வகுப்புவாத கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பது அதன் பொருள் அல்ல. ஆனாலும் பிரிவினையை ஒருபோதும் அத்தகைய நடவடிக்கைகள் நியாயப்படுத்தப் போவதில்லை. .

கூட்டமைப்பு என்ற சிந்தனையை வெளிப்படையாகக் கொண்டிருந்த போதிலும் ஜின்னா ஹிந்துக்கள் பெரும்பான்மையுடன் உள்ளதொரு நாட்டில் முஸ்லீம்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த அக்கறையுடனும் இருந்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது தாராளவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களாலும் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தப்படுகின்ற வகையில் இறுதியில் பிரிவினை என்ற சோகத்திற்கு ஜின்னாவிடமிருந்த அந்த அக்கறையே வழிவகுத்துக் கொடுத்தது. அதுபோன்ற குற்றச்சாட்டு நியாயமற்றது என்றாலும் முஸ்லீம்கள் மீது உருவான கோபத்திற்கு அதுவே குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை வரையறுத்த அம்சமாக தேசப் பிரிவினை இருந்தது. அப்போதைய நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி, மகாத்மா காந்தியின் படுகொலை காரணமாக ஆரம்பத்தில் உடனடியாக வகுப்புவாத வன்முறைகள் நிகழவில்லை – உண்மையில் அவை நிகழ சிறிது காலம் ஆனது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் பிரச்சனையில் 1948ஆம் ஆண்டு ஹைதராபாத் மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1948க்குப் பிறகே வகுப்புவாதக் கலவரங்கள் குறிப்பாக 1960களின் முற்பகுதியில் அதிக முக்கியத்துவம் பெற்றன.

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் பங்கேற்பு கவலையளிப்பதாக இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதி வரையில் இந்தியாவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து அதிகாரபூர்வமான இந்திய ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை பால் ப்ராஸ் என்ற அமெரிக்க அறிஞர் தொகுத்துக் கொடுத்துள்ளார். அந்த தரவுகள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பதின்மூன்று முதல் பதினான்கு சதவிகிதம் என்ற அளவில் மட்டுமே இருக்கின்ற முஸ்லீம்கள் வகுப்புவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களாக இருப்பதை வெளிப்படுத்திக் காட்டின.

வகுப்புவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் மதரீதியான புள்ளிவிவரங்களைப் பெறுவது அதற்குப் பிறகு மிகவும் கடினமாகிப் போனது என்றாலும் வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்பதை உறுதியுடன் சொல்ல முடியும். ஆனாலும் ஹிந்துக்கள் கணிசமான எண்ணிக்கையில் இறந்து போன வகுப்புவாதச் சம்பவங்கள், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் நிகழ்வுகள் எதையும் மறுப்பதற்கில்லை.

ஹிந்து வலதுசாரிகளைப் பொருத்தவரை வகுப்புவாத வன்முறையின் அரசியல் செயல்பாடு எவ்வாறாக இருக்கிறது? மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்ற கலவரங்களைப் பற்றி சிந்திக்கும்போது அவை ஒரு வகையான அரசியல் செயல்பாட்டுடன் இருப்பதாகவே கருதுகிறோம். அந்த வன்முறைகள் தன்னிச்சையாக, ஏறக்குறைய அரசியல் சார்பு அல்லது கூடுதல் அரசியல் தன்மையுடனே உள்ளன. ஆனால் இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் அதுபோன்று இருப்பதில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.

எப்போதும் அப்படி இருப்பதில்லை. வகுப்புவாத வன்முறைகளுக்கு தயாரிப்பு வேலைகள் நிச்சயம் தேவைப்படும். அவசியம் அதற்கென்று ஒரு தூண்டுதல், பின்தொடர்வு தேவைப்படும். பதற்றம், பயம் நிறைந்த சூழல் வேண்டுமென்று திட்டமிட்டே உருவாக்கப்படும். தூண்டுதல்கள் உருவாக்கப்படலாம் அல்லது சிறிய சம்பவங்களிலிருந்து அவை தாங்களாகத் தோன்றலாம். அந்த தூண்டுதல்கள் தீப்பொறிகளாகச் செயல்படும். அதனைத் தொடர்ந்து சில குழுக்களால் அணிதிரட்டல் வேலைகள் மேற்கொள்ளப்படும். வன்முறைகள் தன்னிச்சையாக நிகழ்வது, திட்டமிட்டு கட்டமைக்கப்படுவது என்பது போன்ற கருத்துகள் நம்மை உண்மையில் தவறாகவே வழிநடத்துகின்றன. ஏனெனில் வெளித்தோற்றத்தில் தன்னிச்சையாக நிகழ்வதாகத் தோன்றுகின்ற நிகழ்வுகள்கூட ஓரளவிற்குக் கட்டமைக்கப்பட்டவையாகவே இருக்கும். பெரிய அளவிலே நிகழ்த்தப்படும் வகுப்புவாதக் கலவரங்கள் ஒருபோதும் தன்னிச்சையாக நடைபெறுவதில்லை. அவை பெரும்பாலும் அரசியல் ஆதாயத்திற்காக ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அரசியல் அமைப்புகளால் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

ஆக நடத்தப்படும் வன்முறைகளுக்குப் பின்னால் மிகப் பெரிய அரசியல் செயல்திட்டம் இருக்கிறது. முஸ்லீம்களைக் குறிவைக்கும் பெரும்பாலான வகுப்புவாதக் கலவரங்கள் மிகச் சிறிய அளவில் அல்லது மிகப் பெரிய அளவில் இல்லாமல் மிதமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட இடங்களிலேயே நிகழ்வதாக ஸ்டீபன் வில்கின்சன் போன்ற ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

வகுப்புவாதக் கலவரங்கள் சமீபத்தில் வரவிருக்கும் தேர்தல்களுடனே பெரும்பாலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுரீதியாக அந்தக் கலவரங்கள் பொதுவாக சிறுநகரங்களிலேயே நிகழ்கின்றன. போட்டியாளர்களை அகற்றுவதற்கு, தனிப்பட்ட லாபத்திற்காக வன்முறை மூலமாகச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளாகவே அவை பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வகுப்புவாதக் கலவரங்கள் மூலமாக வெற்றி பெறும் தரப்பில் உள்ளவர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன.

முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 2002ஆம் ஆண்டில் அரசியல் ஆதாயத்திற்காக நரேந்திர மோடி வகுப்புவாதப் பதற்றங்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தோன்றிய சம்பவத்தை விசாரணை செய்த உண்மை கண்டறியும் குழுவில் நானும் இருந்தேன். ஹிந்துக்களை ஏற்றிச் சென்ற ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. கடுமையான ஆத்திரமூட்டலை ஏற்படுத்த அது போதுமானதாக இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளை நியாயப்படுத்தும் வகையிலான அறிக்கைகளை மோடி வெளியிட்டார். கோபத்தைத் தூண்டி விடுவதற்காக வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் வேண்டுமென்றே குஜராத் தலைநகருக்குக் கொண்டு வரப்பட்டன. அப்போது துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் நாங்கள் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பணியின் போது எங்களிடம் ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை மோடி ஊக்குவித்தார் என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கண்டுபிடிப்புகள் எங்கள் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டு பின்னர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நடந்த படுகொலைகளுக்கு ஒரு விதத்தில் நியாயம் கற்பிக்கும் வகையில் ‘ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை இருக்கிறது’ என்பது போன்ற அறிக்கைகளை மோடி வெளியிட்டார். ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி அந்த வன்முறையின் போது பல இடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

அந்தக் கும்பல்கள் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் முகாம்களில் அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த நிலையில், முகாம்களுக்குச் சென்ற மோடி மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்டார். அதிக முறை கருவுறுதல், பல மனைவிகள் போன்ற காரணங்களால் முஸ்லீம்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்ற கருத்துகளைக் கொண்டு முஸ்லீம்களைத் தாக்கிய மோடி அந்த முகாம்களை ‘குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்கள்’ எனக் குறிப்பிட்டார். அவையனைத்தும் முட்டாள்தனமான பேச்சுக்களாகவே இருந்தன. எல்லாவற்றிலிருந்தும் அவரால் எவ்விதப் பாதிப்புமின்றி விடைபெற்றுக் கொள்ள முடிந்தது.

மூலதனம் தங்கள் வணிகத்திற்கான இடையூறுகளை விரும்பாத காரணத்தால் அந்தக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரிய வகுப்புவாத கலவரங்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஆனாலும் முஸ்லீம்கள் மீது நுண்ணிய அளவில் நடத்தப்படும் தாக்குதல்களை இயல்பாக்குவது, சாதாரணமாக்குவது போன்ற மாற்றங்கள் நடந்தேறின. முஸ்லீம்கள் மீது இங்கு, அங்கு என்று எங்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எதிரிகளாகக் கருதப்படும் மற்றவர்கள் – எடுத்துக்காட்டாக பகுத்தறிவுவாதிகள் மீதான தாக்குதல்கள் பெருமளவில் நடத்தப்பட்டன. தாக்குதலை நடத்துபவர்களால் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. அந்த வழக்குகளில் காவல்துறை, உள்ளூர் நீதித்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பொதுவானதாக இருந்தது.

2002ஆம் ஆண்டு பாஜக மற்றும் மோடி அடைந்த வெற்றிக்குப் பிறகும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். சர்வதேச உறவுகளின் நடைமுறைத் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஜனநாயக நிலையைப் பொருட்படுத்தாமல், நாடுகள் தங்கள் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக இருப்பதால் அதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை. அதைப் பற்றி நான் அதிகம் ஆராயப் போவதில்லை. ஆனாலும் அதிகரித்து வரும் பாஜகவின் பிரபலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ள மூன்று முக்கியமான நிகழ்வுகளை இங்கே நான் முன்னிலைப்படுத்தப் போகிறேன்.

பல்வேறு வழிகளில் அரசியல் வன்முறைக்கான அடையாளமாக இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் இருப்பதை நினைவில் கொள்ளவும். இவை பாஜக, சங்பரிவாரின் ஆதரவு தளத்தை அவர்களைப் பாரம்பரியமாகப் பின்பற்றுபவர்களுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
முதலாவதாக 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவதாக பொக்ரான் அணு ஆயுத சோதனை வெடிப்புகள் மூலம் இந்தியாவை 1998ஆம் ஆண்டு அணு ஆயுத நாடாக அறிவித்தது. மூன்றாவதாக மோடி மீதான புகழை குஜராத் மற்றும் ஆர்எஸ்எஸ்சிடம் அதிகமாகத் தூண்டிய 2002ஆம் ஆண்டு குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம். அந்தக் கலவரமே சங் பரிவாருக்குள் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அவர் இறுதியில் வருவதற்கான வழியை வகுத்தது. அதற்கு அப்பால் – ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா அகராதியில் அதிக வலிமையை நோக்கிய பாதையின் வெளிப்பாடுகளாக இந்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அது மிகவும் அசாதாரண நிலையாகும்.

அணிசேராது இருப்பதான தோற்றம் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. அது 1962ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிராகத் தோல்வியுற்ற போர், பாகிஸ்தானுடனான தொடர்ச்சியான மோதல்கள், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றங்கள், கிழக்குப் பிராந்தியங்களில் நக்சலைட் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் வெற்றிகரமான வளர்ச்சி, தெற்காசியாவில் அணு ஆயுதங்களைக் களைவதற்கான பாகிஸ்தானின் முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பு, விண்வெளி ஆய்வில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

காந்தியாலும் அவரது அகிம்சை எதிர்ப்பின் தத்துவத்தாலும் அடையாளப்படுத்தப்பட்ட – குறிப்பாக மேற்குலகால் உணரப்பட்ட – இந்தியாவின் பிம்பத்திற்கு மாறாக சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியா ஒரு வலுவான, ஆண்மைமிக்க தேசமாக இருக்க வேண்டியதன் பின்னணி என்ன?

நேருவை, அவரது வாரிசுகளை வழிநடத்திய நோக்கம் காந்தியிடமிருந்து வேறுபட்டது என நீங்கள் சொல்வது சரிதான். தன்னை ஒரு முன்மாதிரி என்று கருதுவதைத் தவிர சர்வதேச விவகாரங்கள் அல்லது வெளியுறவுக் கொள்கை பற்றி காந்தி அதிகம் சிந்திக்கவில்லை. ஒட்டோமான் பேரரசு தூக்கியெறியப்பட்ட பின்னர் துருக்கியில் கலீஃபாவை மீட்டெடுக்க முயன்ற கிலாபத் இயக்கத்தின் போது இந்தியாவில் சில முஸ்லீம் பிரிவுகளுக்கு ஆதரவளித்ததைப் போல ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக வாதிடுவதை உள்ளடக்கி கலப்பு தேசியவாதத்தை வளர்த்தெடுக்கும் வகையிலேயே காந்தியின் அணுகுமுறை இருந்தது.
அந்த அணுகுமுறை இப்போது வித்தியாசமானதாகவே இருக்கும். மதச்சார்பற்று இல்லாமல் தற்போதுள்ள மத அடையாளங்களின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையை உருவாக்குவதே காந்தியைப் பொருத்தவரை முக்கியமானதாக இருந்தது என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியா போராடிக் கொண்டிருந்தாலும் அரபு நாடுகளில் இருந்த பல நாடுகள் ஒட்டோமான் பேரரசின் தளையிடமிருந்து விடுபட விரும்பியதைப் பற்றி அவர்

நிச்சயம் கவலை கொள்ளவில்லை. கலீஃபாவை நிறுவுவதையே அவர் ஆதரித்தார்.
சர்வதேச விவகாரங்களில் அவரது பார்வை மட்டுப்படுத்தப்பட்டு, பாரபட்சமாக இருந்தது என்றாலும் பிற்காலத்தில் தோன்றிய தீவிரமான, அதிக அளவிற்கு ராணுவமயமாக்கப்பட்ட இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக அவர் ஒருபோதும் இருக்கவில்லை. மறுபுறத்தில் நேரு அணிசேரா இயக்கத்தின் ஆதரவாளராக, அதற்கான முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

மூன்றாம் உலக அணிசேரா இயக்கத்தைப் பொருத்தவரை உண்மையில் மூன்றாம் உலகம் என்ற ஒன்றே கிடையாது என்பதே அந்த இயக்கம் குறித்து புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். ஏனென்றால் கணிசமான அளவில் முன்னேறிய, ‘மூன்றாம் உலகம்’ என்று உண்மையில் அழைக்கப்பட முடியாத பல நாடுகளும் மூன்றாம் உலக அணிசேரா இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தன.

உண்மையில் ‘அணிசேரா நாடுகள்’ என்று எதுவுமே இல்லை. அவ்வாறான இயக்கமும் இருக்கவில்லை. அடிப்படையில் அணிசேராமை என்ற கருத்தே பல வழிகளில் மிகவும் பாசாங்குத்தனமானதாக இருக்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்த புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் தேசிய முதலாளித்துவவாதிகள் – அந்த நாடுகளில் பெரும்பாலானவை மேற்கு அல்லது கிழக்கு நாடுகளுடன் இணைந்திருந்தாலும் கூட- தங்களுக்கான இடங்களை அதிகரிப்பதற்காகவே அதனை ஏற்றுக்கொண்டனர். அந்த அணிசேர்க்கையில் இந்தியா முழுமையாக இடம் பெறவில்லை – அதனாலேயே அணிசேரா நாடுகளுக்குள் அதிகம் அணிசேராத நாடு போல் தன்னைக் காட்டிக் கொள்ள அதனால் முடிந்தது!

அணிசேரா சகாப்தத்தில் குறிப்பாக காஷ்மீர் அல்லது பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஐ.நா மற்றும் பிற இடங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட போது இந்தியா பெரும்பாலும் சோவியத் யூனியனையே அதிகம் நம்பியிருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் அடுத்தடுத்து வந்த தலைமைகளின் கீழ் ஒன்றுபட்டு இருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது. பிரிட்டிஷ் இந்தியாவால் நிறுவப்பட்ட பிரதேசங்களில் இருந்து நாகாலாந்து, காஷ்மீர் போன்றவை சுதந்திர இந்தியாவில் பிரிந்து செல்வதைத் தடுக்க வன்முறை, அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்வாறு செய்வதற்கு இந்தியா தயாராகவே இருந்தது.

ஓர் அண்டை நாட்டை முழுவதுமாக விழுங்கி, மற்றொரு நாட்டைப் பிரித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். காப்பாட்சியுடன் தனி நாடாக இருந்த சிக்கிமை 1975ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக தனக்குள் விழுங்கிக் கொண்டது.
வங்கதேச தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தானைப் பலவீனப்படுத்தும் உத்திகளுடானான உந்துதலே இந்தியாவிடம் இருந்தது. ஓராண்டிற்குள் தானாக வங்கதேசம் விடுதலை பெற்று விடும் என்று நம்பிய வங்கதேசத் தலைவர்கள் இந்திய ஆதரவு குறித்து திருப்தியுடன் இல்லை என்றாலும் இந்தியா அந்த விவகாரத்தில் தலையிட்டது. லாரி லிஃப்சுல்ட்ஸ் எழுதிய ‘வங்கதேசம்: முடிவடையாத புரட்சி’ என்ற புத்தகம் அது குறித்து எழுதப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். .

அப்போதிருந்து இந்திய அரசு – குறிப்பாக நேருவுக்குப் பிந்தைய காலத்தில் – அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் தலையிட்டது. மாலத்தீவில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, தனது தலையீடு தேவைப்படாத நிலைமையிலும் தனது படைகளை இந்தியா அங்கே அனுப்பி வைத்தது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் மாறியதைத் தொடர்ந்து மலைத்தொடர் அரசுகளிடம் இந்தியா தந்தைவழி அணுகுமுறையுடனே நடந்து கொண்டது. அதன் விளைவாக சிக்கிமை இந்தியா விழுங்கியது. பூட்டான் மற்றும் நேபாளம் மிக மோசமாக நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட காலனித்துவ கால சிந்தனை, கொள்கைகளை இந்தியா ஏற்காமல் இருந்திருந்தால் சீன எல்லைப் பிரச்சனையில்கூட தீர்வுகள் சாத்தியமாகியிருக்கும். பிராந்திய எல்லைகள் மீதான இத்தகைய முன்னோக்கு இந்திய நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
திபெத்தில் சீனர்கள் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததைப் போல நாகாலாந்தின் சுதந்திரத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள மறுத்ததையும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன். நாகாலாந்து தலைவர் சுதந்திரத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, ஆரம்பத்தில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடி சுயநிர்ணயத்தை ஆதரிப்பதை முன்னிறுத்தி காந்தி எதிர்வினையாற்றினார். ஆனால் இந்திய நிர்வாகங்கள் அதுபோன்ற உணர்வைத் தொடர்ந்து ஆதரிக்கவில்லை.

அந்த விஷயத்தில் காந்தியே முற்றிலும் முரண்பட்டவராக இருந்தார் – அகிம்சையின் ஆதரவாளராக அறியப்பட்ட காந்தி 1948ஆம் ஆண்டு காஷ்மீரில் படைகளைப் பயன்படுத்துவதை ஆதரித்தார். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை, சாத்தியமான சுதந்திரத்திற்கான ஆர்வங்களைப் புறக்கணித்து அதனை இருதரப்பு விஷயம் என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கருதியதால் காஷ்மீர் பிரச்சனை மிக நீண்ட காலச் சிக்கலுக்குள்ளானது.

அணுசக்தி குறித்த பதற்றம்  காஷ்மீருக்கும் பாலஸ்தீனத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் இதுவும் ஒன்றாகும். நீண்ட காலமாக இஸ்ரேல், அரபு நாடுகளுக்கு இடையிலான மோதலாகவே பாலஸ்தீனம் கருதப்பட்டது. பாலஸ்தீனியர்களுக்கான தேசிய விடுதலை இயக்கம் என்பதை வலியுறுத்துவதுடன் அது போட்டி நாடுகளுக்கு இடையே பேசுவதற்கான ராஜதந்திர பேரம் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பாலஸ்தீனியர்கள் முன்வர வேண்டும்

பாலஸ்தீனியர்களைப் பொருத்தவரை மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கின்ற காரணத்தால் உங்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. முதலாம் உலகப் போருக்குப் பிறகு மத்திய கிழக்கு என்றழைக்கப்படும் பிரதேசங்களில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு 1922ஆம் ஆண்டு பன்னாட்டுக் கழகம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) கட்டளையொன்றை வழங்கியது. அந்தக் கட்டளை பாலஸ்தீனம் உள்ளிட்ட இந்தப் பிரதேசங்களுக்கு சுதந்திரம் என்ற இறுதி வாக்குறுதியைக் கொண்ட மறைமுக ஆணை வடிவிலே இருந்தது. லெபனான், சிரியா, ஜோர்டான் போன்ற பிற நாடுகள் சுதந்திரம் பெற்ற போதிலும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் அது மறுக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் இடம்பெயர்வதற்கும், அதற்குப் பிறகு அவர்கள் ஆற்றிய பங்கை எளிதாக்குவதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வலுவான ஒத்துழைப்பு இருந்தது. எனவே அவற்றிற்கிடையே ஒற்றுமை அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் என்று அவற்றை வலியுறுத்த முயல்வீர்கள் என்றால், ஆம் – அவை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள்தான். இருப்பினும் பாலஸ்தீனத்தின் தனித்துவமான வரலாற்றின் காரணமாக அது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் என்று ஏற்றுக் கொள்பவர்களை மேற்குலகு மற்றும் பிற இடங்களில் அதிகமாக உங்களால் காண முடியும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் என்று பாலஸ்தீனத்தைப் பரவலாக அங்கீகரிப்பதைப் போல காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று மற்ற நாடுகள் அங்கீகரிப்பதைக் காண முடிவதில்லை. அது மற்றுமொரு முக்கியமான வேறுபாடாகும். அடக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனத்தைப் பொருத்தவரை பாலஸ்தீனிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் அல்லது உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைக் காட்டிலும் பொதுமக்களுடன் ஒப்பிடும் போது ஆயுதம் ஏந்தியவர்களின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவை மோசமாகப் பிரதிபலிகின்ற வகையிலே காஷ்மீரில் மிக அதிகமாக இருப்பது பாலஸ்தீனத்திற்கும், காஷ்மீருக்கும் இடையிலான மற்றுமொரு வித்தியாசமாகும். .

பாகிஸ்தான், இந்தியா இரண்டு நாடுகளுமே அணுகுண்டு முதல் தாக்குதல் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்கிடையிலான மரபுவழி மோதலின் ஆபத்து அணுசக்தி யுத்தமாக விரிவடையும் அபாயம் இருந்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளும் எவ்வாறு அமெரிக்க நட்பு நாடுகளாக இருக்கின்றன? அது நிலைத்த நிலைமையாக உள்ளதா?

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ள போதிலும் அந்த நாட்டை நிலையான கூட்டாளி என்று பார்ப்பதில் அமெரிக்கர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இருப்பதில்லை. அணுசக்தி அல்லாத நாடுகளுக்கு எதிராக தன்னுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அருகே குறிப்பாக 1973ஆம் ஆண்டு மோதலின் போது இஸ்ரேல் நெருங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நட்பு நாடாக அதன் ஸ்திரத்தன்மையைப் பற்றி கவலைப்படாமல் பிரிட்டனும் தனக்கென்று அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ளது. புவிசார் அரசியல் நலன்கள், கூட்டணிகளின் அடிப்படையில் ‘நல்ல’, ‘கெட்ட’ அணுசக்தி நாடுகள் என்ற வேறுபாடு அமெரிக்கர்களின் பார்வையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
அறிவியல் மற்றும் போர் யுக்தியுடனான பணியாளர்கள் உலகில் எந்த இஸ்லாமிய நாட்டில் இருக்கிறார்கள்? எந்த இஸ்லாமிய நாடு தொழில்முறையான ஆயுதப்படைகளைக் கொண்டிருக்கிறது? எந்த இஸ்லாமிய நாடு அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடாக இருந்து வருகிறது? அது நிச்சயம் எகிப்து கிடையாது; சவூதி அரேபியாவும் இல்லை. பாகிஸ்தான் மட்டுமே அவ்வாறு இருந்து வருகிறது. பாகிஸ்தானிடம் உள்ள இந்த மூலோபாய இருப்புகளை முன்னிலைப்படுத்துவது குறிப்பாக புவிசார் அரசியல் எதிர்வினை மற்றும் பெரும்பாலும் இரட்டைத் தரங்களை உள்ளடக்கிய அமெரிக்காவின் அணுகுமுறையின் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளும்போது மிகவும் அவசியமாகும்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படக்கூடிய அணுசக்தி மோதலைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். இந்த இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களுடன் இருந்தாலும், முதல் தாக்குதல் தொடர்பான அவர்களின் கொள்கைகள் வேறுபடுவதைத் தெளிவுபடுத்துவது முக்கியம். ‘முதலில் பயன்படுத்தக்கூடாது’ என்ற கோட்பாட்டை இந்தியா அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கிறது என்றாலும் அந்த நிலைப்பாடு சீனாவின் சமமான கொள்கையைக் காட்டிலும் குறைவான கண்டிப்புடன் உள்ள சில தகுதிகள், விளக்கங்களுக்கு உட்பட்டே இருக்கிறது.

ஆனால் சீனா தான் மோசமானது, இந்தியா அல்ல என்று கருதுகின்ற இந்திய வல்லுநர்கள் யாரும் இதனை ஒருபோதும் சுட்டிக்காட்ட மாட்டார்கள். ஆனால் அவர்கள் இருவருமே நிச்சயமாக மோசமானவர்கள்தான்.

அச்சுறுத்தல் உணர்வு  இந்தியாவின் மிகப் பெரிய மரபுவழிப் படைகளுக்கு எதிராக தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதே பாகிஸ்தானின் கொள்கை எனக் கருதுகிறேன்.

அது சரிதான். ஆனால் இந்தியாவை மையமாகக் கொண்டே பாகிஸ்தான் அணு ஆயுதங்களை முக்கியத்துவம் தந்து வாங்குவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான தர்க்கம் மிகவும் எளிமையானது: ‘அவை இந்தியாவிடம் இருக்குமென்றால் பாகிஸ்தானிடமும் இருக்க வேண்டும்’. இந்தக் கணிப்பை நான் பொதுவெளியில் செய்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவ்வாறு நான் செய்த சில கணிப்புகளில் இதுவும் ஒன்றாகும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அணு ஆயுதங்களைத் தேடி அலைவார்கள் என்றே அப்போது நான் கூறியிருந்தேன். அவ்வாறு நான் கூறியதற்கு சீனா, பாகிஸ்தானுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அவ்வாறு நான் கூறியது முற்றிலும் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகும். வலிமையான, ஆண்மைமிக்க இந்தியா அவர்களுடைய கற்பனையில் இருந்தது. அதுபோன்ற அவர்களது பார்வையுடன் அணு ஆயுதங்கள் நன்கு பொருந்திப் போயின.

அவர்களுடைய அந்த தேர்வு ஒன்றும் புதியதல்ல; தங்களுடைய வழிகாட்டியாக இருந்த வீர்சாவர்க்கரின் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஜனதா கட்சியின் முந்தைய அவதாரம்கூட இந்தியா அணுசக்தி திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றே ஐம்பதுகளின் பிற்பகுதியில் வாதிட்டு வந்தது. 1974ஆம் ஆண்டு தன்னுடைய முதல் அணு ஆயுத சோதனையை நடத்தி, தன்னை அணுசக்தி கொண்ட நாடாக நிலைநிறுத்திக் கொண்டபோது அணுசக்தி தேர்வை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடனான சமிக்ஞையை இந்தியா வெளிப்படுத்தியது.

பிரதான இடதுசாரிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தியா அணுசக்தி தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை வைத்துக் கொள்வதற்கு மட்டுமே ஆதரவளித்தன. இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருந்தது.

தங்கள் சுய-உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அல்லது உணரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நாடுகள் பெரும்பாலும் அணு ஆயுதங்களைப் பின்தொடர்கின்றன. அமெரிக்கா முதன்முதலில் அணுசக்தி திறன்களை உருவாக்கியது உடனடி அச்சுறுத்தல் குறித்து உருவான கவலைகளால் அல்ல. மாறாக தன்னுடைய ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே அமெரிக்கா அதைச் செய்தது. 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு அணு ஆயுதங்களை ஜெர்மனி தொடரவில்லை என்பதை அறிந்திருந்தும் அமெரிக்கா அவற்றை உருவாக்கியது. தன்னை ஒரு வலிமைமிக்க நாடாக நிலைநிறுத்தவும், சோவியத் யூனியனுக்கும் மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் ஒரு செய்தியை அனுப்பி வைக்கவுமே அமெரிக்கா அவ்வாறு செய்தது.

பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் அச்சுறுத்தல் உணர்வின் காரணமாக அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை. வீழ்ச்சியடைந்து வரும் காலனித்துவ நாடுகளாக இருந்த காரணத்தால் உலக வல்லரசுகளின் உயர் மட்டத்தில் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் அதைச் செய்தனர்.
‘அவர்களிடம் இருந்தால் நம்மிடமும் இருக்க வேண்டும்’ என்ற மனநிலையில் சீனாவும், சோவியத் யூனியனும் அச்சுறுத்தல் உணர்வுகளின் காரணமாகவே அணு ஆயுதங்களைத் தொடர்ந்தன. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடனான உறவுகளில் குறிப்பாக 1964ஆம் ஆண்டில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சீனா அணுசக்தித் திறன்களைத் தொடர்ந்தது.

சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக் கொண்ட இந்தியா 1998ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸைப் போல மாறி வருகின்ற சுயஉணர்வுகளின் பிரதிபலிப்பாகவே அணுசக்தி சோதனைகளை நடத்தியது. பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் அதற்கு மாறாக குறிப்பாக இந்தியா மீதான அச்சுறுத்தல் உணர்வுகளாலேயே மேற்கொள்ளப்பட்டது. 1974ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனைக்கு இணையான சோதனையை 1987 மற்றும் 1998ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தான் மேற்கொள்ளவே இல்லை.

அணு ஆயுத நீக்கலை இந்தியாவிடம் தொடர்ந்து முன்மொழிந்து வந்த பாகிஸ்தான், சீனா மீதிருந்த கவலைகளை மேற்கோள்காட்டி இந்தியா கொடுத்த மறுப்புகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரிய ராணுவ மேன்மை குறித்து அதிகம் அச்சமடைந்த பாகிஸ்தானும் அணுசக்தி சோதனைகளை மேற்கொண்டது.

பாரம்பரிய ஆயுதங்களில் இந்தியா அடைந்த முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் குறிப்பாக தன்னுடைய எல்லையில் உள்ள இந்திய வீரர்களைக் குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நோக்கத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்டீர்கள். தங்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடியாக முழு அளவிலான அணுகுண்டு வீச்சு நிகழ்த்தப்படும் என இந்தியா அதையொட்டி எச்சரிக்கை செய்தது.

இறுதியில் இரண்டு நாடுகளுமே வஞ்சகர்களாக, வெட்கக்கேடானவர்களாக இருந்தன. ‘பொறுப்புடனான அணுசக்தி’ என்ற ஒன்று இருப்பதாக நம்புகின்ற சிந்தனையே கேலிக்குரியதாகும். உண்மையான ஆபத்து என்பது அந்த ஆபத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளில் உள்ளதே தவிர, முதல் தாக்குதலைத் தொடங்குவது குறித்து இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவில் அல்ல. அதிகரிப்பு குறித்த எதிர்வினை அந்த ஆபத்தை அதிகரிக்கவே செய்யும்.

சுதந்திரம் பெற்றதில் இருந்தே உலகின் இந்தப் பகுதி தொடர்ந்து பதற்றமான நிலையில்தான் இருந்து வருகிறது. அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு இடையிலான பனிப்போர் காலத்தில் அமைதியான காலகட்டங்கள் இருந்தன. ஆனால் இங்கே நிலைமை அது போலல்லாமல் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது. மோதல் வரலாறு கொண்ட அண்டை நாடுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரையிலும் நான்கு கடுமையான போர்களில் ஈடுபட்டுள்ளன.

ஆபத்து மிகத் தெளிவாக உள்ளது: வழக்கமான சாதாரண மோதல் மிக எளிதில் பேரழிவுகரமானதாக மாறலாம். ஆரம்பத்தில் இரு தரப்பினருமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்க மாட்டார்கள். ஆனால் மறுபுறத்தில் அவ்வாறு செய்வது குறித்த பயம் பதற்றங்களை, அணுசக்தி போர் குறித்த அச்சுறுத்தலை உடனடியாக அதிகரிக்கவே செய்யும்.

1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு இரு தரப்பினரும் தயார் செய்தனர். எனவே அப்போது ஆபத்து அதிகரிக்கும் அபாயம் உண்மையாகவே இருந்தது. அந்த ஆபத்து இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்களின் அதீத ஆணவத்தாலேயே அதிகரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நிராகரிக்கின்ற கோபத்தால் உந்தப்பட்டு பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து அதன் காரணமாக எழுகிறது.

‘நாம் ஒரு மிகப் பெரிய உலக வல்லரசு என்பதைக் காட்ட வேண்டும். ஆனால் மிகப் பெரிய உலக வல்லரசு என்று காட்டுவதற்கு முதலில் நாம் மிகப் பெரிய பிராந்திய சக்தியாக இருக்க வேண்டும். பாகிஸ்தானியர்கள் நமக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றனர்’ என்ற உணர்வு ஆர்எஸ்எஸ்சிடம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள தாராளவாத வட்டங்களிலும் பரவியிருக்கிறது. அந்த உணர்வு இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான எந்தவொரு தொடர்பு குறித்தும் வெறுப்பையே தூண்டுகிறது. அதனால் என்ன நடக்கும்?

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோடியின் மறுதேர்தல் முயற்சிக்கு சற்று முன்பாக குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பாலக்கோட்டைக் குறிவைத்து பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியது. 1945க்குப் பிறகு ஒரு அணுசக்தி நாடு மற்றொரு அணுசக்தி நாட்டின் மீது அந்த அளவிற்கு குறிப்பிடத்தக்க தாக்குதலை மேற்கொண்டது அதுவே முதல் முறையாகும்.

அந்தத் தாக்குதல் இந்தியப் படைகள் மீது காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டது.

காஷ்மீரில் ஆமாம். அது உள்ளூர் காஷ்மீரி இளைஞர் ஒருவரால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலாகவே இருந்தது. மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது குழுவுடன் இணைந்த உள்ளூர் காஷ்மீரி இளைஞர் ஒருவர் காஷ்மீரில் முதல் தாக்குதலை நிகழ்த்தினார். தாக்கியவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருந்து, காஷ்மீரிகளிடம் அடிப்படை விரக்தி இருந்த நிலையிலும் அரசியல்ரீதியான எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுக்க அதை ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதியது. அதுவே பாலக்கோட்டில் ஊடுருவி வான்வழித் தாக்குதலை நிகழ்த்துவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.

எதிர்வினையை வடிவமைக்கும் செல்வாக்குள்ள சக்திகள் இந்தியாவில் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. ராணுவம் கணிசமான அதிகாரத்துடன் இருக்கின்ற அதே வேளையில் அரசின் சித்தாந்தத்திற்குள்ளும், வெளிநாட்டு சக்திகள் மத்தியிலும் மிகப்பெரிய அளவிற்கு மத தீவிரவாதம் செல்வாக்குடன் இருந்து வருகிறது.
பரஸ்பர அணுமுண்டு வீச்சுக்கான சாத்தியக்கூறுகளுடன் மிகத் தீவிரமான மோதலாக விரிவடையக் கூடும் என்ற கவலையை வழக்கமான இந்த மோதல்கள் எழுப்புகின்றன. தவிர்க்க முடிவதாக இருந்தாலும் அத்தகைய பேரழிவு விளைவுகளைத் தடுப்பதற்கு பின்வாங்குதல், ராஜதந்திரம் போன்றவை நமக்குத் தேவை என்பதையே அதிகரிக்கும் அபாயங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்

போர்கள், அணு ஆயுதங்கள், காஷ்மீர் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான அடக்குமுறை ஆகியவற்றின் நீண்டநெடிய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது – காங்கிரஸின் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளில் இருந்த ஹிந்து தேசியவாதமே பாஜகவின் எழுச்சிக்கு இறுதியில் உறுதுணையாக இருந்ததா? காங்கிரஸ் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகக் காட்டிக்கொண்டாலும் அதன் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகள் உண்மையில் ஹிந்துத்துவக் கொள்கைகளாகவே இருந்தனவா?

வலிமையான நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது குறித்த நிதர்சனமான, உண்மையான அரசியல் சிந்தனைகளின் திசையிலேயே காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கைகள் அதிக அளவிற்கு இருந்தன என்றே நான் கூறுவேன். அதன் விளைவாகவே இந்தியா அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மை, இஸ்ரேலுடன் மூலோபாய உறவை உறுதிப்படுத்துவதை நோக்கி நகர்ந்துள்ளது.

பாஜகவும் அந்தப் போக்கையே பயன்படுத்திக் கொண்டது என்றாலும் அது ஹிந்துத்துவா சித்தாந்தத்தால் மட்டும் இயக்கப்படுவதாக இருக்கவில்லை. மாறாக உள்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஹிந்துத்துவ சார்பு கொள்கைகள்தான் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பாஜகவை ஏற்றுக் கொள்வதற்கான வழியை வகுத்துக் கொடுத்தன. தன்னுடைய சித்தாந்தத்தின் அடிப்படையாக முஸ்லீம்-விரோத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பாஜகவைப் போல காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் முஸ்லீம்களுக்கு எதிரானவையாக இருக்கவில்லை. இருப்பினும் அதுபோன்ற உணர்வுகள் அவர்களுடைய உள்நாட்டுத் திட்டங்களில் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன.

வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை இஸ்ரேலுடனான இந்தியாவின் தொடர்பு அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. மூலோபாய ரீதியாக அது அர்த்தமுள்ளதாகவே இருந்தது. ஆயினும் பாஜக அந்த உறவில் முஸ்லீம்களுக்கு எதிரான திருப்பத்தைச் சேர்த்தது. ஆர்எஸ்எஸ் எழுதியுள்ளவற்றை ஆராய்ந்து பார்த்தால், இஸ்ரேல் உருவானது குறித்த வலுவான போற்றுதல் அவர்களிடம் இருப்பதைக் காண முடியும்.
மேற்கு ஐரோப்பாவில் இனவெறி தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இப்போது அது கலாச்சார ரீதியாக இஸ்லாமிய வெறுப்பாக வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய அரசுகளைப் பொருத்தவரை ‘நல்ல’ மற்றும் ‘கெட்ட’ முஸ்லீம்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. தீவிரமான, பிற்போக்குத்தனமான இஸ்லாம் வடிவத்தையும் மீறி சவூதி அரேபியா பெரும்பாலும் முந்தைய வகைக்குள்ளே இடம் பிடித்துக் கொள்கிறது. இருப்பினும் ஐரோப்பாவில் இல்லாத வகையில் ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடித்தளம் முஸ்லீம் எதிர்ப்பு உணர்வுடனே உள்ளது.

காங்கிரஸைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. மென்மையான ஹிந்துத்துவ அரசியலில் அது ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஒரேயொரு அரசியல் சக்தி மட்டுமே ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவதில் உறுதியாக உள்ளது – அது பாஜக தான். மற்றவர்களிடமிருந்து சங்பரிவாரும், பாஜகவும் தங்களுடைய நோக்கத்தில் தனித்து நிற்கின்றன.

எப்போதாவது பாஜகவுடன் கூட்டணி வைக்கின்ற அல்லது மென்மையான ஹிந்துத்துவா அரசியலில் ஈடுபடுகின்ற இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள்கூட, பாஜகவைப் போல இடைவிடாத உந்துதலுடன் இருக்கவில்லை. முக்கிய இடதுசாரிகளுக்கு அது நிச்சயமாகப் பொருந்தாது. தீவிர இடதுசாரி சக்திகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

‘தன்னுடைய முரண்பாடான நலன்களை மறைத்துக் கொள்ளும் அதே வேளையில் பெரும்பான்மையினருக்குச் சொந்தமானது என்ற ஒருங்கிணைந்த உணர்வை வெற்றிகரமான மேலாதிக்க சித்தாந்தம் வழங்குகிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். மேலும் லும்பன்களின் ஆர்வம், ஓபிசி, சமூக அடித்தளம் – ஓபிசி என்பது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் – ஆகியவற்றை பாஜக தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதாகவும் எழுதியுள்ளீர்கள்… நன்கு அறியப்பட்ட தலித் தலைவரான அம்பேத்கரையும் அவர்கள் கையகப்படுத்திக் கொண்டுள்ளனர். ஹிந்து மதத்தில் தலித்துகளுக்கு சுதந்திரம் கிடைக்க வழி இல்லை என்று நம்பிய அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்ற உண்மை சற்று வினோதமானதாகவே தோன்றுகிறது.

பாஜக எப்படி இதுபோன்ற சாதியக் கூட்டணியை உருவாக்கியது? பாஜக மீது இடதுசாரிகளின் எதிர்ப்பு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய முரண்பாடுகளை அந்தக் கூட்டணி கொண்டிருக்கிறதா?

இரண்டு விஷயங்கள் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.  முதலில் தலித்துகளின் தலைசிறந்த தலைவரான அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு திரும்பிய போதிலும் அந்த சாதனையை பாஜக எவ்வாறு சாதித்துக் கொண்டது? சாதி எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்படுத்தும் பின்னடைவு பற்றி என்ன சொல்வது? நீங்கள் சொல்வதை என்னால் இப்படித்தான் விளக்க முடியும். அதைவிட ஆச்சரியம் என்ன தெரியுமா? பகத்சிங்கையும் தனது ஹீரோக்களில் ஒருவராக பாஜக அரவணைத்துக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவரிடமிருந்த எதிர்ப்பிற்காக அறியப்பட்டு மிகவும் பிரபலமானவராக பகத்சிங் இருந்தார். ஆனால் காந்தியைப் போல அவர் அகிம்சையைப் போதிக்கவில்லை. சட்டப்பேரவையில் அவர் வெடிகுண்டை வீசினார். ஆனாலும் அது யாரையும் கொல்லவில்லை.

தான் வெளிப்படுத்திய எதிர்ப்பால் சிறந்த நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்கான புகழ் இளம் எதிர்ப்பாளர், புரட்சியாளர் என்றிருக்கிறது. தன்னை ஒரு நாத்திகராக, மார்க்சிஸ்ட்டாகப் பார்த்த பகத்சிங் இந்தியாவில் இன்னும் பலருக்கும் மிக முக்கியமானவராக இருந்து வருகின்ற காரணத்தாலேயே பாஜக அவரை அபகரித்துக் கொண்டது. காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர் மறுப்பாளர், துடிப்பான புரட்சிகரச் செயற்பாட்டாளருக்கான முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

தேசிய இயக்கத்தில் பாஜகவிற்கு எந்தவொரு பங்கும் இருக்கவில்லை. அது உறுதியான தேசியவாத சக்தி என்ற தனது பிம்பத்தை உயர்த்திக் கொள்வதற்காக தேசியவாதக் குறியீடுகளை ஏற்றுக் கொண்டது அம்பேத்கர் மற்றும் ஹிந்து மதம் பற்றிச் சொல்லும்போது, பிராமண ஹிந்து மதத்தின் மீது அதிக ஏமாற்றத்துடனிருந்த அம்பேத்கர் ஹிந்து மதத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து பௌத்தத்தைத் தழுவுவதே அடக்குமுறை சாதி அமைப்பைத் தகர்க்க ஒரே வழியாகும் என நம்பினார் என்பதையே குறிப்பிட முடியும்.

இந்தியாவின் பூர்வீக மதமாக பௌத்தம் கருதப்படுவதால் ஹிந்துத்துவா சித்தாந்தம் பௌத்தத்தை எதிர்க்கவில்லை. எனவே அவர்களுக்கு பௌத்தத்திடம் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. சாதி அமைப்பை எதிர்த்து பௌத்த மதத்திற்கு மாறுவது என்ற வாதத்தின் மூலம் அம்பேத்கராலும் பரவலான வெற்றியை அடைய முடியவில்லை.

அம்பேத்கர் மதம் மாறிய காலம் முதல் இன்று வரையிலும் இந்தியாவில் பௌத்தர்களின் எண்ணிக்கை விகிதம் தோராயமாக ஒரே மாதிரியாக மாற்றமின்றியே இருந்து வருகிறது. பெரும்பாலும் ஹிந்து மதத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வெளிப்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் பலரும் ஹிந்து மதத்திற்குள் தங்களுக்கான கண்ணியம், அடையாள உணர்வைக் கண்டறிந்துள்ளதன் காரணமாக ஹிந்துத்துவா செய்திகளுக்கு அவர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

அம்பேத்கரை மட்டுமல்லாது உள்ளூர், பிராந்திய அளவில் உள்ள பல்வேறு தாழ்த்தப்பட்டவர்களையும் மிகத் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களாக ஹிந்துத்துவாவால் சித்தரிக்க முடிந்துள்ளது. அதுபோன்ற விவரிப்பே பல்வேறு சாதி குழுக்களிடையே சொந்த, ஒற்றுமை உணர்வை வளர்த்து ஹிந்துத்துவா சித்தாந்தத்துடன் அவர்கள் அனைவரையும் இணைத்து வைத்திருக்கிறது.

இணைந்த போராட்டம் எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்ததால் உருவான பிராந்திய, தாழ்த்தப்பட்ட சாதி அரசியலின் எழுச்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது. புதிய அரசியல் புவியீர்ப்பு மையத்தை அந்த எழுச்சி உருவாக்கியிருக்கும் என்று ஒருவர் கருதலாம். உண்மையில் அந்தப் புதிய அரசியல் சக்திகளை பாஜகவே கையகப்படுத்திக் கொண்டது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்களுடைய கண்ணோட்டத்தில் என்ன செய்து வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினேன். இப்போது தாழ்த்தப்பட்ட சாதி இயக்கங்கள் அவர்கள் தரப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
அந்த இயக்கங்களின் உறுதிப்பாடு மூன்று விஷயங்களைச் செய்து கொடுத்துள்ளது.

முதலாவதாக அது அதிக கண்ணியம், சுயமரியாதை உணர்வை அவர்களுக்கு வழங்கியுள்ளது. நன்று. அது செய்திருக்கும் இரண்டாவது விஷயம் – இடஒதுக்கீடு என்ற கொள்கையின் மூலம் அரசு கல்வி மற்றும் வேலைகளில் பொருள்ரீதியான பலன்களை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. நன்று. மூன்றாவதாக மாநில அளவில் மற்றும் தங்களால் முடிந்த அளவிற்கு மத்திய அளவில் என்று அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தின் நெம்புகோல்களில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டுமென்று தாழ்த்தப்பட்ட சாதியினர் விரும்புகின்றனர். அதற்காக உயர்சாதிகள் உட்பட சாதிகளுக்கு அப்பாற்பட்டு சாதியக் கூட்டணிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் சாதி அமைப்பை – அல்லது சாதி அமைப்பின் கட்டமைப்புகளை – ஒழிக்க முற்படுவதைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்ற நிலையைப் பயன்படுத்தி வர்க்கம் மற்றும் அதிகார ஏணியில் மேலேறிச் செல்வதற்கு முற்பட்டதுதான் நடந்தேறியுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பின அரசியலுக்கு நடந்ததற்கு இணையான விஷயங்கள் இங்கேயும் நடந்திருக்கிறது என்றே நான் சொல்வேன். பெருமை, சுயமரியாதை, இனவெறி அமைப்புகளுக்கு எதிரான விரோதம் போன்ற கறுப்பின தேசியவாதத்தின் முந்தைய வடிவங்கள் இறுதியில் கிளின்டன் ஜனநாயகக் கட்சி இயந்திரத்தின் பிரதான பகுதிக்குள் இருக்கும் ஒரு வகையான கறுப்பு அரசியலுக்கே சென்று முடிந்துள்ளன. பெரும்பாலும் அது கறுப்பின மக்கள் வர்க்க ஏணியில் ஏறிச் செல்வதாகவே உள்ளது. ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள வெள்ளையர்களுக்கு இணையான சம்பளத்தில் அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு சதவிகித வேறுபாட்டுடன் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தில் இடம் பெற்றுள்ள கறுப்பர்களின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

முந்தைய அமெரிக்க அதிபர்களிடமிருந்த கொள்கைகளைப் போல அதிபர் பாரக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையும், அவரது பெரும்பாலான உள்நாட்டுக் கொள்கைகளும் மோசமாகவே இருந்தன. ஆயினும் அவருக்கு கல்வி அமைப்பில், சிறைச்சாலை மக்கள்தொகையில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் அமெரிக்க சமுதாயத்தில் உள்ளார்ந்து, அடிப்படையாக இனவெறி இருந்த நிலையில் இனத்திற்கு அப்பாற்பட்ட வேட்பாளராக தன்னைப் பார்க்கும் அசட்டுத் தைரியம் இருந்தது.

புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் தன்மைக்கு எதிரான போராட்டத்திடமிருந்து இனவெறிக்கு எதிரான போராட்டத்தைப் பிரிக்க முடியாது. அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கறுப்பின மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி போராட்டங்களைப் பொருத்தவரை அவை இணைவான தேர்வுடன் உள்ளன. தலித்துகள் மற்றும் பிறருக்கு ஹிந்து ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் சலுகைகளை அளித்துள்ள போதிலும் அவர்கள் செல்ல முடிகின்ற தூரம் வரம்புகளுடனே இருக்கிறது. பாஜகவால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் போராட்டங்களுடன் இணைந்து கொள்ள முடியும், அது அதற்காக தீவிரமான விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளலாம் என்றாலும் உயர்சாதி பிராமணியக் கொள்கைகளைக் கைவிட வேண்டிய நிலை வரைக்கும் அதனால் செல்ல முடியாது. அதனாலேயே அந்தப் பதற்றம் நீடிக்கிறது.

அந்த நிலைமையை அது எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது முற்றிலும் வேறு பிரச்சனையாகும். வெறுமனே தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பற்றி கவலைப்படாமல், மிகப் பரந்த வர்க்க அடிப்படையிலான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தங்களுடைய போராட்டங்களை மற்றவர்களுடைய போராட்டங்களுடன் இணைத்துக் கொள்கின்ற தலைமை தாழ்த்தப்பட்ட சாதியினரிடமிருந்து தேவைப்படுகிறது.
வித்தியாசமான தலைமை வேண்டும் என்பது அமெரிக்காவிலும் உண்மையாக இருப்பதாகவே நான் கூறுவேன். இனம் மற்றும் வர்க்கப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு அந்தத் தலைமை அமெரிக்க அரசியல், முதலாளித்துவ அமைப்புமுறையின் தன்மை மற்றும் அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் முன்னோக்குடன் தீவிரமாக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய இடதுசாரிகள்

இந்தியாவில் அதுபோன்ற போராட்டத்திற்கு எந்த மாதிரியான வாய்ப்பு இருக்கிறது? இடதுசாரிகளைப் பற்றி நாம் அதிகம் பேசவில்லை. 1960களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) ஆகியவை காங்கிரஸ் கட்சியைப் போல தங்களுடைய முந்தைய சுயத்தின் நிழல்களாக மட்டுமே இருந்தன. ஆனால் ஒரு காலத்தில் அவை அதிக ஆற்றல்மிக்க சக்திகளாக இருந்தன.

உண்மைதான். ஒரு காலத்தில் வலுவாக இருந்த ​​அவர்கள் தங்கள் அடித்தளத்தை இழந்து நிற்கின்றனர். இன்றைக்கு பிரதான இடதுசாரிகள் எதிர்கொள்கின்ற நெருக்கடி காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கலாம். கருத்தியல் ரீதியான ஒழுக்கத்துடன், மனவுறுதி கொண்ட, பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வெகுஜன அணிதிரட்டல், போராட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையான அர்ப்பணிப்புடன் உள்ள தொண்டர்கள் இல்லாமல் அவை தேர்தல் சக்திகளாக மட்டுமே மாறிவிட்டதே மிக அழுத்தமான பிரச்சனையாகும். .

தேர்தல் களத்திற்கு வெளியே ஈடுபடுவதைச் சார்ந்தே அவர்களுடைய வெற்றி இருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற தீவிர வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகளுக்கு – தீவிர இடதுசாரிகள் மட்டுமல்லாது பொதுவாக அனைத்து இடதுசாரிகளுக்கு – இடையே பொதுவானதாக இருக்கிறது. தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு அணிதிரட்டுவதில் அவர்கள் பெறும் வெற்றியே அவர்களுடைய வலுவான தேர்தல் பிரசன்னத்திற்குக் காரணமாக மாறுகிறது.

இந்த எதிர்வினை இந்திய அரசியலின் இரு முனைகளுக்கும் பொருந்துகிறது. தங்களுக்கென்று கணிசமான தேர்தல் தளத்தை நிறுவியவுடன் தீவிர வலதுசாரிகள் ஆளும் வர்க்கங்களால் அதிகம் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக மாறி விடுகின்றனர். அவர்களால் தங்களுடைய அரசிடமிருந்து பெறுகின்ற வளங்கள், அதிகாரத்தை பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் ஏணியில் மிகவும் எளிதாக ஏறிச்செல்ல முடிகிறது. அதேசமயத்தில் இடதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தேர்தல் களத்திற்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டியதாகிறது. ஆளும் வர்க்கம் தீவிர வலதுசாரிகளை வெறுப்பதைக் காட்டிலும் இடதுசாரிகளை, தீவிர இடதுசாரிகளைக் கூடுதலாக வெறுக்கிறது.
தன்னுடைய வலிமையைப் பொறுத்து தீவிர வலதுசாரிகளை சில சந்தர்ப்பங்களில் கோபப்படுத்தலாம் என்றாலும் ஆளும் வர்க்கம் இடதுசாரிகளை முற்றிலுமாக அழித்து ஒழித்திடவே விரும்புகிறது. இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகளைக் காட்டிலும் வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகளுடனே அதிகாரம் மிக்க சக்திகள் இணைகின்றன.

தேர்தல் களத்திற்கு அப்பால் அணிதிரட்டுவதில் வெற்றி பெறுவதற்கு தங்கள் நோக்கம் குறித்த முழுமையான நம்பிக்கையுடன் ஆழ்ந்த அர்ப்பணிப்பும், மனவுறுதியும் கொண்ட தொண்டர் படை இயக்கங்களுக்குத் தேவைப்படும். போருக்கு இடையிலான பாசிச சகாப்தம் மற்றும் இன்றைய காலத்திற்கு இடையிலான முக்கிய வேறுபாடாக நம்பிக்கையின் அளவே இருக்கிறது. நிலைமை இருண்டு கிடந்த அந்தக் காலகட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தலைவர்கள் ‘எதிர்காலம் நமதே’ என்ற நம்பிக்கையுடனே இருந்தனர்.

ஆனால் இன்றைக்கு அதுபோன்று எதிர்காலத்தைப் பற்றி வலியுறுத்துவது இடதுசாரிகளைப் பொருத்தவரை மிகவும் சவாலான காரியமாகும். சிபிஎம், சிபிஐ, இன்னும் நக்சலைட்டுகளைப் பொருத்தவரையிலும் ஸ்டாலினிசம், மாவோயிசம் போன்றவையே அவர்களுடைய முக்கிய கருத்தியல் தாக்கங்களாக இருக்கின்றன. மார்க்சியம், சோசலிசத்தின் விளக்கங்கள் மூலமாகப் பகுத்தறிந்து கொண்ட ஜனநாயகம் இல்லாததாலேயே மற்றவர்களை ஈர்க்கக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் ரஷ்யா, சீனாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாமல் போனது. அவர்களுடைய நிலைப்பாடு ஸ்டாலினிசம், மாவோயிசத்திற்கு அப்பால் ஜனநாயகத்தை அதிகம் வலியுறுத்துகின்ற ஜனநாயக சோசலிசம் போன்ற கருத்தாங்கங்களுக்கு முற்றிலும் முரணாகவே இருக்கிறது. தங்களுடைய அரசியலை, சித்தாந்தத்தை மறுபரிசீலனை செய்யாவிட்டால் தங்கள் கட்டுக்குள் மற்றவர்களை இழுக்கத் தேவையான கருத்தியல் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உற்சாகம் மற்றும் ஈர்ப்பை வளர்த்தெடுப்பது சிபிஎம், சிபிஐ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற கட்சிகளுக்கு சவாலான காரியமாகவே இருக்கும்.

இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இடதுசாரி அரசுகள் ஆட்சிக்கு வருவது இந்திய அரசியலின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய சாத்தியத்துடன் இருக்கும் என்ற பார்வை உங்களிடம் இருக்கிறது. அந்த நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் தீவிர இடதுசாரி இளைஞர்களின் செல்வாக்கு இந்தியா உட்பட உலக அளவில் ஓர் அலைச்சலை நிச்சயம் ஏற்படுத்தும். அதிகரித்து வரும் இந்தச் சக்திகள் மனித உரிமைகள், ஜனநாயகத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மற்ற இடங்களில் அரசியல் சக்திகள் மீது கூடுதல் ஆய்வு மற்றும் விமர்சனத்திற்கு அதன் காரணமாக வழி பிறக்கும். மாறிவரும் இந்த சர்வதேச சூழல் குறிப்பாக அணிசேரா தாராளவாதிகள் மத்தியில் மோடி போன்ற வலதுசாரி தலைவர்களுக்குள்ள ஆதரவின் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

https://jacobin.com/2024/03/bjp-far-right-modi-india

நன்றி

ஜேகப்பின் இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *