இது நாடுகள் ஒவ்வொரு நாடாக பொறாமையால் சிவக்கச் செய்ய வேண்டும். வியட்நாம் ஒரு நல்ல ‘நோய்த்தொற்றை’ பெற்று விட்டது. 97 மில்லியன் மக்கட்தொகையும், சீனாவுடன் செயல்படக்கூடிய ஒரு எல்லையையும் கொண்ட வியட்நாமில் வெறும் 355 பேர்தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு மரணம் கூடப் பதிவு செய்யப்படவில்லை.
எனவே கோவிட்டால் பெறக்கூடிய இலாபத்தைப் பெற அது சிறப்பான நிலையில் காத்திருக்கிறது. இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் தமது சப்ளை சங்கிலித்தொடர்களை மறுகட்டமைப்பு செய்யும் நிலையில், விரைவாக சகஜ நிலைக்குத் திரும்புவது பெருமளவு முதலீடுகளைப் பெற்றுத் தரும். இங்கு திட்டமிடல் மூலமாக ஊரடங்கால் தொழில்களுக்கு சிறிதளவே இடைஞ்சல்கள் ஏற்பட்டது. அரசாங்கம் ரீடெயில் அல்லாத நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் ஊரடங்கின் போது செயல்பட அனுமதித்தது.மேலும் ஊரடங்குக்கு முன்னால் வியட்நாம் இன்னொரு இனிப்பான செய்தியையும் பெற்றிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அது ஆசியாவிலேயே ஏற்றுமதி சந்தையில் மிக அதிகமான பங்கைப் பெற்று, சிறப்பான வகையில் 7% வளர்ச்சியையும் பெற்றிருந்தது.
பிற பொருளாதாரங்கள் இந்த ஆண்டு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்படும்பொது, ஆசியா டெவெலப்மண்ட் வங்கி இங்கு வளர்ச்சி 4.1% ஆக இருக்கும் என்று கணிக்கிறது. எச்.எஸ்.பி.சி. வங்கி நாட்டை “பொ’னொமெனல்’ வியட்நாம் என்று அழைக்கிறது. அதாவது அதன் அடையாளமாக விளங்கும் நூடில்ஸ் சூப்பைக் கொண்டு, அது கோவிட்டையும், பொருளாதாரத்தையும் எவ்வாறு ஒருசேர சிறப்பாக நிர்வகித்தது என்பதைக் கூறுகிறது. நல்ல நிர்வாகம்தான் இங்கு முக்கியமான அம்சம். வியட்நாமுக்குக் குறிப்பிடும்படியான பலவீனங்கள் இல்லாமலில்லை. அல்லது நல்லதிர்ஷ்டம் அதன் மடியில் வந்து விழவும் இல்லை. அது எவ்வாறு பலவீனங்களைக் குறைத்து பலங்களை அதிகரித்துக் கொண்டது என்பதுதான் கற்க வேண்டிய விஷயம். கையில் இருப்பதை சிறப்பாகப் பயன்படுத்தி அதை அடைந்தது வியட்நாம்.
கோவிட் போராட்டத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். பிரதேசத்திலிருக்கும் அதன் கூட்டாளி நாடுகளை விட அதன் மருத்துவ வசதிகள் குறைவான வளர்ச்சியே பெற்றுள்ளது. இங்கு கோவிட் பாதித்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக, லட்சக்கணக்காக அதிகரித்திருந்தால் அவர்களது மருத்துவ முறை திணறிப்போயிருக்கும். 10,000 பேருக்கு 8 மருத்துவர்கள் என்ற விகிதம் இந்தியாவுடையதை விட சற்று அதிகமானது என்றாலும், பிரேசிலின் 22க்கும், அமெரிக்காவின் 26க்கும் சற்றும் நெருக்கமாக இல்லை. எனினும் வியட்நாமிடம் இல்லாத ஆதாரங்களை அது ஆயத்தப்படுத்திக் கொள்வதிலும், தடுப்பு நடவடிக்கைகளாலும் ஈடுகட்டியது.
பிரதமர் நிகுயென் ஜூவான் புக் கொரோனா வைரஸ் மீது ஜனவரியிலே போர்ப் பிரகடனம் செய்தார். அப்போது சீனாவின் விவரிப்புக்களையே நம்பிக் கொண்டிருக்காமல் தொற்று மீது அதிகத் தகவல்கள் பெற வியட்நாம் அதன் மீது சைபர் தாக்குதல் (இணையவழித் தாக்குதல்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. மக்களுக்கு சோதனை நடத்த அதனிடம் தென்கொரியா அளவுக்கு செல்வம் கிடையாது. மாறாக அது கம்யூனிஸ்ட் கட்சி, இராணுவம், நாட்டுன் விரிவான கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து மிகக்கவனமாக அனைத்து நோய்த்தொற்றாளர்களையும், அவர்களிடமிருந்து இரண்டாவதாக, மூன்றாவதாக நோய்த் தொற்றுப் பெற்றிருக்கக் கூடியவர்களையும் கண்டு பிடித்து, அவர்களை அரசு நிறுவனக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. அது வெறும் அலங்காரமாக அல்ல, சிறப்பாக அணிதிரட்டப்பட்டு, கடுமையாக அமல்படுத்தப்பட்டது.
இந்தக் கட்டுரையை குறுக்குபுத்தியுடன் படித்தால் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் நாடு மற்றும் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஊடகம் ஆகியவற்றின் அதிசயம் என்று தோன்றக்கூடும். அதேபோல் எப்படி தேசபக்தி உணர்வு ஒட்டுமொத்த வியட்நாமிய சமூகத்தையும் அணிதிரட்டப் பயன்பட்டது என்றும் ஆச்சரியப்படுத்தலாம். இப்படி யோசிப்பது மரத்துக்காகக் காட்டை அழிப்பது போன்றது. தகுதியுடைய அரசாளும் முறை இல்லாமல் ஒத்த கருத்தை உருவாக்குவது நீண்டு நிலைக்காது. தமது நாடு கோவிட்டைக் கட்டுப்படுத்துவதில் எப்படி உலகையே மிஞ்சியது என்று வியட்நாம் மக்கள் தேசியப் பெருமை உணர்வுடன் பார்க்கின்றனர். பிற நாடுகளிலும் கூட போர்க்கால பிம்பமும், வார்த்தை ஜாலங்களும் தேசிய உணர்வைத் தூண்டப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றின் அரசாங்கங்கள் கையில் இருக்கும் பணியைக் கோட்டை விட்டதால் அந்த அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியற்ற இடத்தில் முடிகின்றன.
பொருளாதார நிர்வாகத்தைப் பொருத்த வரை ஹனோய் உள்நாட்டு நிறுவனங்கள் உலக மதிப்புடைய சங்கிலியில் இணைவதற்கு இருக்கும் கட்டமைப்புக் குறைபாடுகளைக் களைய இந்த ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறது. புதிய மெட்ரோ வழித்தடங்களிலிருந்து புதிய அதிவேகப்பாதைகள் வரை விரைவுபடுத்தப்படுகின்றன. நாடுகளுக்குள்ளும், வெளியேயும் எவ்வளவு வேகமாக சரக்குப் போக்குவரத்து நிகழ்கிறது என்பதன் அடிப்படையில் உலக வங்கி அளிக்கும் புள்ளி விவரத்தில் 2016-18க்குள் வியட்நாம் 64ஆம் இடத்திலிருந்து 39ஆவது இடத்துக்கு முன்னேறி விட்டது. ஆனால் அது பெற்ற சிறப்பான வெற்றி என்னவென்றால் கடந்த மாதம் அது ஐரோப்பிய யூனியனுடன் போட்டுக் கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். எப்படி வியட்நாம் பல்வேறு வாய்ப்புக்களை முயன்று கொண்டிருந்தது என்பதற்கு இது உதாரணம். நோய்த்தொற்றுக்குப் பிறகு உலகம் பார்க்கும் முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இதுவேயாகும்.
அமெரிக்காவுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் இந்தியா நீண்ட நாட்களாகப் போட விரும்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஆபத்துக்கள் பற்றிய கவலைகளால் நிறைவேறவில்லை. வியட்நாமுக்கும் அதற்கே உரிய அச்சங்கள் உண்டு. உதாரணமாக, இந்த ஒப்பந்தத்தின்படி ஒட்டுமொத்த சப்ளை சங்கிலியும் பூஜ்ய இறக்குமதி வரிக்குள் வரும் தகுதி பெற வேண்டிய தேவை உள்ளது என்று பொருளாதார நிபுணர் ட்ரின் நிகுயென் வலியுறுத்துகிறார். தனது இடுபொருட்களுக்குச் சீனாவையே பெரிய அளவில் சார்ந்திருக்கும் வியட்நாமுக்கு இது ஒரு சவால். எனினும் தற்காப்புக்காக விளையாடுவதில்லை என்று வியட்நாம் முடிவெடுத்து விட்டது. தன்னால் மேம்படுத்திக் கொள்ள முடியும், செய்வோம் என்ற சவாலை அது ஏற்றுக் கொண்டு விட்டது.
2014இல் நடந்த ஒரு பி.இ.டபிள்யூ ஆய்வு, 51% வியட்நாம் மக்கள் சீனாவுடன் ஒரு இராணுவ மோத, ஏற்படக் கூடுமென்ற கவலையை வெளிப்படுத்தியதைக் காட்டியது. அதன் பிறகு தென்சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்ததிலிருந்து, இந்த எண்ணிக்கை கூடியது. எனினும், சீனா தும்மினால் வியட்நாமில் சளி பிடிக்கும் என்னுமளவுக்கு அது சீனாவைச் சார்ந்துள்ளது என்று அவர்கள் இன்னும் கூறுகிறார்கள். வேறுபட்ட ஒரு எதிர்காலத்தைக் கட்டுவதில் சிறப்பான விதத்தில் என்ன கூறலாம் என்றால், ஹனோய் நீண்ட காலத்துக்கான ஒரு மாற்றத்துக்காகத் திட்டமிட்டு, கூட்டணிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே வெற்றிச் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலோ இது ஒரு கெட்ட செய்தி. 2018-19இல் சீனாவிலிருந்து தமது தளங்களை இடமாற்றிய 56 நிறுவனங்களில் வியட்நாம் 26ஐயும், தாய்லாந்து 8ஐயும், இந்தியா 3ஐயும் பெற்றதை நொமுரா கண்டது. இப்போது ”இடமாற்ற” உணர்வும் நமக்குக் குறைவாகவே சாதகமாக உள்ளது. நமது நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தளமமைப்பதில் ஓட்டப்பந்தயத்தில் முன்னணி வகிப்பதற்குப் பதில் நாம் பின்னால்தான் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதாரமும் மனித வளமும் மிகவும் அதிகமாக உள்ளது என்பது சரிதான். தகுந்த சீர்திருத்தங்களும், தலைமையும் கொண்டு இன்னும் அதிகமான வேகத்தை அவர்கள் அளிக்க முடியும். இதில் தோல்வியடைந்தால் இந்தியாவின் முந்தையத் தலைமுறைகள் சீனாவின் வாழ்க்கைத்தரம் தமக்கு முன்னால் பாய்ந்ததைக் கண்டது போல் இன்றைய தலைமுறையினர் வியட்நாம் பாய்ந்து செல்வதைக் காண்பார்கள்.
ஜூலை 2, 2020
ட்விங்கிள் ட்விங்கிள்
தமிழில்: கி.ரமேஷ்