படங்களிலும் ரசிகர் நெஞ்சங்களிலும் நடிப்பால் குடியேறிய நடிகர் டெல்லி கணேஷ் (Indian Cinema Actor Delhi Ganesh Passed Away)

ரசிகர் நெஞ்சங்களில் நடிப்பால் குடியேறிய டெல்லி கணேஷ், ஆனால்…

தமிழ் சினிமா வயலில் விளைந்த அரும் பயிராகத் திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். 1977 தொடங்கி 2012 வரையில் 35 ஆண்டுகள் திரைப்படங்களிலும், அண்மை நாட்கள் வரையில் தொலைக்காட்சித் தொடர்களிலும் வலைத் தொடர்களிலும் நடித்தவர். ஓரிரண்டு படங்களில் கதாநாயகன், ஒரு படத்தில் வில்லன், மற்ற படங்களிலும் தொடர்களிலும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தே, அந்தக் கதாபாத்திரங்களை மறக்க முடியாதவையாகக் கண் முன் நிறுத்தி, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவராக இருந்தார். அந்த ஈர்ப்புதான், அவரது மறைவுச் செய்தி கேட்டவர்கள் எல்லோரையும் எப்பேர்ப்பட்ட கலைஞரை இழந்துவிட்டோம் என்று உருக வைத்திருக்கிறது.

1944 ஆகஸ்ட் 9 அன்று தூத்துக்குடி மாவட்டம் வல்லைநாடு கிராமத்தில் பிறந்தவர் கணேசன். சிறு வயதில் பள்ளி நாடகங்களில் நடித்தார். நண்பர்களோடு சேர்ந்து உள்ளூர் நாடகங்களில் மேடையேறினார்.

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!!

படிப்பு முடிந்தபின் இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார் கணேசன். அந்தப் பணிக்காலத்தில், போரில் காயம்பட்ட வீரர்களை மகிழ்விப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில், வசனத்தை மறந்துவிட்டு சக நடிகரிடம் மேடையிலேயே அடி வாங்கினாராம். வலியோடு அவர் வெளிப்படுத்திய உடல்மொழி கைத்தட்டல் பெறவே, அந்த சக நடிகர் தொடர்ந்து அடித்தாராம். அந்த அடிகள் அடுத்தடுத்துக் கலைக் கோபுரத்தில் ஏறுவதற்கான படிகளாக அமைந்தன போலும். டெல்லியில் தொடர்ந்து சில நாடக மேடைகளில் ஏறினார். தட்சிண பாரத நாடக சபா என்ற அமைப்பில் இணைந்து நடித்தார்.

விமானப் படைப் பணிக் காலம் முடிந்து, இந்திய உணவுக் கழக ஊழியராக வேலையில் சேர்ந்த கணேசன் சென்னைக்கு வந்தார். இங்கே செயல்பட்டுக்கொண்டிருந்த நாடகக் குழுக்கள் அவரது நடிப்புப் பசிக்கு உணவு பரிமாறின. மேஜர் சுந்தரராஜன், விசு, சோ, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோருடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. விசு கதை உரையாடல் எழுதிய ‘பட்டினப் பிரவேசம்’ என்ற நாடகத்தைக் காண வந்திருந்தார் இயக்குநர் கே. பாலச்சந்தர். நாடகத்தின் கதை பிடித்துப்போய் அதைப் படமாக்க முன்வந்த அவர், அதில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டிருக்கிறார். நாடகத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்த கணேசனையே படத்திலும் நடிக்க வைக்கலாமே என்று விசு சொல்ல, அதை ஏற்றுக்கொண்ட இயக்குநர், டெல்லி கணேசன் என்று பெயர் சூட்டி நடிக்க வைத்தார். 1977ல் அதே பெயரில் வெளியான அந்தப் படத்தில் கிராமத்திலிருந்து கனவுகளோடு நகரத்திற்கு வந்து அல்லல்படும் குடும்பத்தில் ஒருவராக முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார் கணேசன்.

தொடர்ந்து அத்தகைய பாத்திரங்களில் நடிக்க சினிமா அழைத்தது. இதனிடையே ‘ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி தொடர்ந்து பல நாடகங்களை வழங்கினார்.

இயக்குநர் துரை இயக்கிய ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தில் (1978) படத்தில் கோவில் குருக்களாக நடித்தார். அந்தப் படத்தில்தான் டெல்லி கணேசன் என்ற பெயர் டெல்லி கணேஷ் என்று மாறியது. அதற்கடுத்து துரை இயக்கிய ‘பசி’ படத்தில் (1979) ஒரு ரிக்‘ஷாக்காரராக அவர் ஏற்ற பாத்திரம், சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றுத் தந்தது.

‘எங்கம்மா மகாராணி’ (1981), ‘தணியாத தாகம்’ (1982) என்ற இரண்டு படங்களில் கதாநாயகனாகக் கதாநாயகியரோடு சேர்ந்து ஆடிப் பாடி நடித்தார். அந்தப் படங்கள் அவற்றின் வேறு பல குறைபாடுகளுக்காகவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறின. ஆனால், தனக்குப் பொருத்தமானது துணைப்பாத்திரங்கள்தான் என்ற புரிதலையும், அவற்றை நன்றாகச் செய்ய வேண்டும் என்ற ஈடுபாட்டையும் ஏற்படுத்தத் தவறவில்லை. அதற்குப் பிறகு, குழப்பமோ தயக்கமோ இல்லாமல், இந்தக் கதாபாத்திரத்தில் தான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தேடி வந்த படங்களில் எல்லாம் அதே அக்கறையுடன் நடித்தார். அந்தப் புரிதலும் ஈடுபாடும் அக்கறையும் அவருக்கு ரசிகர் மனங்களில் அவருக்கான இடத்தை உறுதிப்படுத்தின.

நாயக நடிகர்கள் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடிப்பது வேறு. ஆனால், அந்தத் துணைக் கதாபாத்திரங்களில், இவரை விட்டால் வேறு யாரும் இப்படிச் செய்திருக்க முடியாது என்று ரசித்துப் பாராட்ட வைத்தவர் கணேஷ்.

“தான் நடிப்பதற்கு என்ன பாத்திரம் தரப்படுகிறதோ, அதை நன்கு உள்வாங்கிக் கொண்டு நியாயம் செய்யக்கூடிய ஒரு நடிகர் கிடைத்து விட்டால் இயக்குனர்களுக்கும் கொண்டாட்டம் தானே. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட படங்களைக் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு இயக்குனரும் டெல்லி கணேஷைத் தம் படங்களில் இணைத்துக் கொண்டார்கள்,“ என்று தனது புகழஞ்சலிக் கட்டுரையில் தெரிவிக்கிறார் எழுத்தாளர் முத்துக்குமார் (‘அறம்’ இணைய இதழில் வந்துள்ள ‘உயிர்ப்பான நடிப்பாற்றலுக்கோர் உன்னதக் கலைஞன்’ கட்டுரை).

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான ஆளுமைகளின் சபை நடிகராக அடையாளம் பெற்றார் கணேஷ். ஒருவர் கே. பாலச்சந்தர். அவருடைய ‘சிந்துபைரவி’ (1985) படத்தில், பாடகராக நடித்த சிவகுமாருடன் வாக்குவாதம் செய்யும் மிருதங்கக் கலைஞராக கணேஷ் வழங்கிய நடிப்பை மறக்க இயலாது. அது போலப் பல படங்கள்.

Delhi Ganesh sathabhishekam: நடிகர் டெல்லி கணேஷுக்கு நடந்த சதாபிஷேகம் வைரலாகும் போட்டோஸ்!

மற்றொரு ஆளுமை கமல்ஹாசன். அவருடன் மணிரத்னத்தின் ‘நாயகன்’ (1987)படத்தில், பம்பாய் நிழலுகத் தலைவனான வேலு நாயக்கரின் கணக்காளராக நடித்த கணேஷ், அதையும் மறக்க முடியாத பாத்திரமாக்கினார். தொடர்ந்து கமல்ஹாசன் தயாரித்த அநேகமாக எல்லாப் படங்களிலும் சுவையான பாத்திரங்களில் பங்கேற்றார். ‘அவ்வை சண்முகி’ (1996) படத்தில் பணக்காரர் வீட்டுச் செயலாளராகக் காதில் பூ வைத்துக்கொண்டு திருட்டு வேலைகளில் இறங்கி மாட்டிக்கொள்ளும் பாத்திரம் திரையரங்குளைச் சிரிப்பில் தள்ளியது. ‘தெனாலி’ (2001) படத்தில் தொழில் பொறாமையுடன் சதிகள் தீட்டி தானே சிக்கிக்கொள்ளும் உளவியல் மருத்துவராக சிரிப்பு மருத்துவம் அளித்தார். வில்லத்தனமான சிரிப்பு வேடங்களில் நடித்தவர், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்தார். ‘ஹே ராம்’, ‘மைக்கேல் மதன காமராஜன்,’ போன்ற படங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் செய்தார்.

விசு இயக்கிய ‘சிதம்பர ரகசியம்’ படத்திலும் வில்லனாக வந்திருப்பார் கணேஷ். கோமல் சுவாமிநாதன் இயக்கிய அனல் காற்று படத்தில் முக்கியமான பாத்திரத்தில் வந்து அந்தப படத்தின் செய்தியைக் கடத்துவதில் பங்களித்தார். கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வந்த ‘எதிரி’ படத்தில் ஒரு போலி ரவுடியிடம் மாட்டிக்கொள்ளும் தகப்பனாக அசத்தியிருப்பார். ‘மூன்று முகம்’, ‘நிஜங்கள்’, ‘புதுக்கவிதை’, ‘சிவப்பு சூரியன்‘, ‘கல்யாண அகதிர்கள்’, ‘மனிதனின் மறுபக்கம்’, ‘அவதாரம்’, ‘சிவப்பு நிலா’, ‘தமிழன்’, ’அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘தமிழ் படம்’, ‘கருவறை’ ‘இப்படியாகத் தமிழில் 254 படங்கள் அவரது நடிப்புப் பங்களிப்போடு வந்திருக்கின்றன.

மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘இப்படிக்கு தென்றல்’, ‘கோட்டைப்புறத்து வீடு’, ‘மர்ம தேசம்’, ‘குங்குமம்’, ‘கல்கி’, ‘வாடகை வீடு’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘இலக்கியா’ உள்ளிட்ட 38 தொலைக்காட்சித் தொடர்கள், ‘அமெரிக்க மாப்பிள்ளை’, ‘நவரசா’ ஆகிய வலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் தனது நடிப்பைக் கவனிக்க வைத்தவர் கணேஷ். இளைய தலைமுறையினர் உருவாக்கிய பல குறும்படங்களிலும் நடித்துக் கொடுத்து அவர்களுக்குத் துணையாக இருந்தவர்.

பிற்காலத்தில் தன் மகனைக் கதாநாயனாக நடிக்க வைப்பதற்காக ஒரு படம் எடுக்க முயன்று நிதி நெருக்கடியில் சிக்கிய சோகக் கதையும் இருக்கிறது. என்ன செய்யக்கூடாது என்றும் வழிகாட்டியிருக்கிறார் எனலாம்.

நடிகர் என்ற முறையில் பாராட்டுகளுக்கு உரியவரான டெல்லி கணேஷ் பற்றிப் பெரிய அளவுக்குத் தெரிய வராத அவரது இன்னொரு முகம் பற்றிய தகவல்கள் பாராட்டத் தக்கவையாக இல்லை, கடும் எதிர்ப்புக்கு உரியராகவே இருந்திருக்கிறார் என்ற உண்மையையும் இங்கே கூறியாக வேண்டும். நேரடியாக அரசியல் களத்துக்கு வரவில்லை என்றாலும், தனது சாதி சார்ந்த அமைப்பில் தீவிரமாகவே செயல்பட்டிருக்கிறார். தொடக்கத்தில் சோ உள்ளிட்டோருடன் சேர்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார். சங்கக் கூட்டங்களில் மேடையேறிப் பேசியிருக்கிறார். எல்லோருடனும் பழகியவர் மதவாத அரசியல் பிழைப்போருடன்தான் நெருக்கமாக இருந்திருக்கிறார். சமூக ஊடகங்களில் அவரது மறைவு பற்றிப் பதிவு செய்துள்ள பலர் இந்தத் தகவல்களையும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

தனது கலைத் திறனால் ரசிகர்கள் நெஞ்சங்களில் குடியேறியவர், தனது சாதிய, மதவாத, சித்தாந்தச் சார்பினால் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கிற தகுதியை இழந்திருக்கிறார். நடிப்புக் கலை நாட்டத்தோடு வருவோருக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர், மக்கள் நல்லிணக்க நாட்டத்தோடு வருவோருக்கும் நல்ல வழிகாட்டியாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளவில்லை. இதுதான் உண்மையான சோகம்.

கட்டுரையாளர்:

அ. குமரேசன்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *