Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம் – அடைக்கும் தாழ் | பெ.விஜயகுமார்

 

நூல் அறிமுகம், சல்மாவின் நாவல் ‘அடைக்கும் தாழ்’

அடைக்கும் தாழ்– சாதி,மத வேறுபாடுகளை மீறிய காதல் திருமணங்களுக்கு எதிரான, வன்முறையான இந்தியச் சூழலைச் சித்தரிக்கும் சல்மாவின் நாவல்!

                                                                                                       பெ.விஜயகுமார்

தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’, ‘அடைக்கும் தாழ்’ ஆகிய நாவல்களும் ’சாபம்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் சல்மாவின் வெற்றிக்குச் சாட்சியமளிக்கின்றன. அவர் எழுதி ’கனவுவெளிப் பயணம்’ எனும் சிறந்த பயணக் கட்டுரை நூலும், ’பச்சை தேவதை’, ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘தானுமானவள்’ கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சல்மாவின் ‘இழப்பு’ சிறுகதை ‘கதா- காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றுள்ளது. சேனல்-4 தயாரிப்பில் சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சல்மா’ எனும் ஆவணப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் படவிழாக்களில் திரையிடப்பட்டு பதினான்கு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. ஃபிராங்பர்ட், லண்டன், பெய்ஜிங் புத்தகக் கண்காட்சிகளில் சல்மா பங்கேற்றுள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து ‘நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு’ நடைபெற்றுள்ளது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்தில் வெளிவந்துள்ளது. ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடலான் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் இஸ்லாமியர் வாழ்வியலைச் சித்தரித்துள்ள தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா, அர்ஷியா, கரீம் ஆகியோர் வரிசையில் இடம்பெறும் சல்மா இஸ்லாமியப் பெண்களின் சமகால வாழ்வைப் படம்பிடித்துக்காட்டி அவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார்.

சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’ (கனவுகள்) நாவல்கள் இரண்டும் வெளியுலகை அதிகம் அறிந்திராத இஸ்லாமியப் பெண்களின் அக உலகை விவரிக்கும் நாவல்களாகத் திகழ்கின்றன. சல்மாவின் முதல் இரண்டு நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக ‘அடைக்கும் தாழ்’ நாவல் இருக்கிறது.

பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான கணவர்களை அடைந்திடாமல் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவதை ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் காண்கிறோம். பொருத்தமற்ற தாம்பத்தியம் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பதையும் அந்த நாவல் காட்டிச் செல்கிறது. இதுதான் வாழ்வின் நியதியோ என்று நினைக்கச் செய்கிறது. ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டியின் நாவல்களிலும் இது போன்ற பொருத்தமற்ற இணைகளைப் பார்க்கலாம். சல்மாவின் கதை மாந்தர்கள் ஹார்டியின் ”தி ரிடர்ன் ஆப் தி நேட்டிவ்”, ”ஜுட் தி அப்ஸ்கியூர்”, ”டெஸ் ஆப் தி டர்பவிய்” போன்ற நாவல்களின் கதை மாந்தர்களை ஒத்தவர்களாக இருக்கின்றனர். ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் வஹிதாவின் பங்கு மிகவும் காத்திரமானது. நாவல் முழுவதும் ஒரு காவிய நாயகியைப்போல் அவள் வலம் வருகிறாள்.

’மனாமியங்கள்’ நாவல் கனவிலும், நனவிலும் பயமும், துயரமும் துரத்திட சாஜிதா எனும் சிறுமி சந்திக்கும் சொல்லொண்ணா சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. சாஜிதா மட்டுமல்ல அவளின் தாய் மெஹர், நன்னி (பாட்டி) ஆசியா, நன்னி சுபைதா, குப்பி (அத்தை) பர்வீன் என்று அனைத்துப் பெண்களும் ஆணாதிக்க அடக்குமுறை மற்றும் மதவொழுக்கத்தின் பெயரால் சுமத்தப்படுகின்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்க வேண்டியிருக்கும் அவலத்தை அந்த நாவல் சித்தரிக்கிறது.

இயல்பானதும், இயற்கையானதுமான காதல் அவ்வளவு எளிதில் வெற்றி அடையமுடியாத அளவிற்கு இந்தியச் சமூகம் இறுக்கமாக இருப்பதை சல்மா ’அடைக்கும் தாழ்’ நாவலில் சித்தரித்துள்ளார். மதங்கள் கடந்த காதல் உறவு விளைவிக்கும் பிரச்சனைகள் சொல்லித் தீராதவை. சாதிவெறி, மதவெறி பிடித்து அலையும் சமூகத்தில் காதல் பறவைகள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்கொள்கிறார்கள். காதலர்களைக் கொடூரமாகப் பிரித்துவைப்பதுடன் அவர்களைக் கொன்றுவிடவும் தயாராக இருக்கும் சமூகத்தை என்னென்று சொல்வது! இத்தகு கொலையை ‘கௌரவக் கொலை’ என்றழைப்பது என்னவொரு வக்கிரமம்!! சங்க இலக்கியங்களில் காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம் காதலுக்கு எதிராக இன்றைக்குப் போர்க்கொடி பிடித்திருக்கிறது. ’அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்’ என்று வள்ளுவர் ஐயமறக் கூறினார். ஆனால் இன்று அன்பில் பிறக்கும் காதலை வலுவான தாழ்கொண்டு பூட்டி அடைக்கின்றனர்.

’அடைக்கும் தாழ்’ நாவலில் அனிபா, ராசாங்கம், அஜ்மல் மூவரும் பாசமிகு சகோதரர்களாக வலம் வருகிறார்கள். அதிலும் அண்ணன் அனிபா மீது தம்பி ராசாங்கம் கொண்டுள்ள பாசம் அளவிடற்கரியது, மூன்று சகோதரர்களும் தங்களின் இரு சகோதரிகள் ஆபிதா, பாத்திமா மீது அன்பைப் பொழிகின்றனர். அவர்கள் ஐவரும் பாசமலர்களாக ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாகஇருக்கின்றனர்.

பாத்திமாவிற்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளுடைய கணவன் வாழாவெட்டி என்ற அவச் சொல்லுக்கு அவளை ஆளாக்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான். குடும்பம் பாத்திமாவை அரவணைத்துப் பாதுகாக்கிறது. ஆபிதா பக்கத்து ஊரில் பணக்கார வணிகன் ஆசிக்குக்கு வாக்கப்பட்டு பெருஞ் செல்வத்தில் திளைத்தாலும் பிள்ளை இல்லை என்ற குறையுடனே தன்னுடைய வாழ்நாளைக் கழித்து வருகிறாள். பிறந்த வீட்டுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டுபவளாக இருக்கிறாள்.

ஆசிக்ஆபிதா தம்பதிகள் குடும்ப வறுமை காரணமாகப் படிக்கமுடியாமல் பரிதவித்த ராசாங்கத்தை தங்கள் குடும்ப வணிகத்தைக் கவனித்துக் கொள்வதற்காக தங்களுடன் இணைத்துக் கொள்கின்றனர். அந்த தம்பதிகளின் ஆசிர்வாதத்துடன் ஆசிக்கின் தங்கை பானுவுடன் ராசாங்கத்தின் திருமணம் நடக்கிறது. தான் வசதியான வீட்டுப் பெண் என்ற பெருமிதம் இருந்தாலும், ராசாங்கத்திடம் மதிப்பும், மரியாதையும் கொண்டவளாகவே பானு இருக்கிறாள். கடையைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கும் ராசாங்கம் வணிகத்தைப் பல மடங்கு பெருக்குகிறான். ஆசிக்கின் பேரன்பைப் பெறுகிறான்.

அனிபா-சித்ரா இடையில் உருவான காதல் அவர்களுடைய குடும்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. குடும்பத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அனிபாவின் தாய் மகமூதாவும், சித்தி சைனம்புவும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்துப் பெண்ணுடன் கல்யாணத்திற்குச் சாத்தியமில்லை என்கிறார்கள். சித்ரா குடும்பத்தினரோ சித்ராவை வேறொருவனுக்கு மணமுடித்துக் கொடுத்து விடுகின்றனர். சித்ரா தற்கொலை செய்துகொள்கிறாள்.

ரசியா என்ற அழகுப் பெண்ணை அனிபாவுக்கு மணம் முடித்துவைக்கின்றனர். ஆனால் காதலில் தோல்விகண்ட அனிபாவின் மனம் பிறழ்கிறது. குடும்பத்தில் சோகம் இடியென இறங்குகிறது. அனிபாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க ராசாங்கம் திட்டமிடுகிறான். அதற்குள் அவசரப்பட்டு ஏர்வாடி தர்காவுக்கு அவனை அழைத்துச் சென்றதால் நோய் முற்றுகிறது. ராசாங்கத்தின் முயற்சியில் மதுரையில் உள்ள மனநல மருத்துவ மனையில் அனிபாவைச் சேர்க்கின்றனர். அங்கிருந்து தப்பிச் சென்றுவிடும் அனிபாவைக் கடைசிவரையிலும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ராசாங்கம்-பானு தம்பதியினரின் ஒரே மகன் இம்ரான் கல்லூரிப் படிப்புக்குப் பின் சென்னையில் வேலைக்குச் சேருகிறான். அவனை அனிதா என்ற இந்துப் பெண் காதலிக்கிறாள். இஸ்லாமிய மார்க்கத்தில் தோய்ந்துள்ள தன் குடும்பம் இந்தக் காதலை ஒரு போதும் ஏற்காது என்று அவளிடம் இம்ரான் தெளிவாக விளக்குகிறான். இஸ்லாமுக்கு மாறி அவனைக் கரம் பிடிப்பேன் என்று அனிதா சொல்கிறாள். ஆனால் காவல்துறை அதிகாரியாகும் வாய்ப்பு வந்ததும் அவள் மனம் மாறுகிறாள். இம்ரான் அவளுக்குச் செய்த உதவிகள் அனைத்தையும் துச்சமெனமதித்து அவனை விட்டுவிலகுகிறாள். அனிதாவின் இந்தச் செயல் இம்ரானைவிட அவனுடைய நண்பர்களிடம் அதிக கோபத்தையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அனிதாவின் தங்கை காவியாவும் பைசல் என்ற இஸ்லாமிய இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் அவள் அனிதாபோல் அல்லாமல் தன்னுடைய காதலில் உறுதியாக நிற்கிறாள். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறாள்.

அனிதா செய்த துரோகத்தால் இம்ரான் மிகுந்த கவலையடைகிறான். அவனுடன் பணியாற்றும் வினுதா அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். இம்ரான் குடும்பத்தினரைத் திருப்திப்படுத்துவதற்காக மதம்மாறிக் கொள்ளவும் அவள் தயாராக இருக்கிறாள். இம்ரான்-வினுதா காதல் நிறைவேறிடும் என்ற நம்பிக்கையுடன் நாவல் முற்றுப்பெறுகிறது.

இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த காதல் எந்த அளவிற்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்பதே நாவலின் மையப்புள்ளியாக உள்ளது. இந்து-இஸ்லாம் இணையர்களின் காதல் வெற்றி அடைவதில் உள்ள சிரமத்தை நாவல் விவாதிக்கிறது. இஸ்லாமிய இளைஞன் ஒருவன் இந்துப் பெண்ணைக் காதலிப்பது என்பது திட்டமிட்டு நடத்தப்படும் சதி (லவ்ஜிஹாத்) என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பரப்புரைக்கு இந்துச் சமூகம் பலியாகிருப்பது பெருத்த அவலம்தானே. அன்பைப் போதிக்கின்ற மதங்களின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலில் இருந்து நாம் என்றைக்கு வெளிவரப்போகிறோம்? ”நாங்கள்-மற்றவர்கள்” என்று திட்டமிட்டு மனிதர்களைப் பிரித்து வைக்கின்ற சூழ்ச்சியை எவ்வாறு ஒழிக்கப் போகிறோம்? இந்து-முஸ்லீம் ஒற்றுமை உருவாகிட மீண்டுமொரு முறை மகாத்மா காந்தி தோன்ற வேண்டுமோ?

–பெ.விஜயகுமார்

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” கவிதை தொகுப்பின் தலைப்பே பார்த்த மாத்திரத்தில் நமக்குள் பல்வேறு வினாக்களை எழுப்பிவிடுகிறது. ஒரு தலைப்பு நம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு சிறுமி ஒரு நாயுடன் இருக்கும், வளர்ப்பு பிராணி மீது ஈர்ப்புடையவர் எனது மகன், குறிப்பாக நாய் என்றால் மிகவும் பிடிக்கும்....

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே என்றே சொல்கிறது. உனக்கும் எனக்குமான காதலைப்போல.... 5) உன் பிறந்தநாளைத்தான் ரோஜாக்கள் தினமென அழைக்கிறார்கள். ஆம் அவையும் உன் இனம்தானே!   மு.அழகர்சாமி கடமலைக்குண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here