ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அடையாற்றுக்கரை (நாவல்) – கௌதமன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அடையாற்றுக்கரை (நாவல்) – கௌதமன்

 

 

 

என்னைப் போன்று சென்னையில் வந்து குடியேறிய அனைவருக்கும் கடல் தெரியும். அதைவிட நன்றாகக் கடற்கரை தெரியும். ஏனென்றால் அது அவர்களுக்கு இதம் தரும் காற்று வீசும் சொர்க்கம். குடும்பத்தோடு பொழுது போக்கும் ‘தீம் பார்க்’.

அதேபோல் அனைவருக்கும் கூவம் எனும் நதியும் தெரியும். ஆனால் அதன் இருபுறமும் அணைந்திருக்கும் கரையைத் தெரியாது.

அவர்களுக்கு மற்றுமொரு நதியான அடையாறு தெரியும். ஆனால் அதன் இருபக்கமும் நீண்டு கிடக்கும் கரை தெரியாது.

ஏன்?
அசுத்தம்! அழுக்கு! துர்நாற்றம்!
ஆம்.

அவர்களால் வெளியேற்றப்பட்ட அனைத்துக் கழிவுகளும் அந்த ஆற்றங்கரைகளில்தான் காலங்காலமாக அடைக்கலமாகின்றன. அதனால் அந்தக் கரை, தெரியும் தூரத்தில் இருந்தாலும், அவர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். முகம் சுளிக்கும் அவர்களது மூக்கு தானாக மூடிக் கொள்ளும்.

ஆனால் அந்தக் கரைகளில் நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள்.

அசுத்தம், அழுக்கு, துர்நாற்றம் என்று எந்த இடங்களை திரும்பிப் பார்க்கவும் கூசி, இவர்கள் விலகிச் செல்கிறார்களோ, அந்த இடங்களில்தான் இவர்களுடைய சகோதர மனிதர்களான அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடற்கரை காற்று வாங்கும் சுத்தமானவர்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து, அதை சிங்கார நகரமாக்கியவர்கள்தான் அந்த அழுக்கும், துர்நாற்றமும் கோலோச்சும் கரைகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். அவர்கள் வீடுகளையும் கூட தூரத்திலிருந்து பார்த்திருப்போம்.

ஆனால் அவர்களின் வீட்டின் உள்ளே, அவர்கள் உள்ளத்தின் உள்ளே சென்று பார்ப்பதற்கும், அவர்களை முழுமையாக அறிந்து கொள்வதற்கும், இவர்களுக்கு நாம் என்னென்ன கொடுமைகள் செய்து வந்தோம், அவற்றிலிருந்து நாமும் அவர்களும் எவ்வாறு விடுபடுவது என்ற சிந்தனைகளையும், விவாதங்களையும் முன்னெடுக்கத் தூண்டுவதே இந்த ‘அடையாற்றுக்கரை’ நாவலின் முதன்மையான நோக்கம்.

மனிதகுல மேன்மையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மேலெழும் படைப்புகளே சிறந்த இலக்கியமாகின்றன.

அடையாற்றுக்கரை இதுவரை அதிகம் பேசப்படாத மனிதர்களைப் பேசுகிறது. அவர்களது வாழ்வை முன்வைக்கிறது. புதிதான பொருளைப் பேசுகிறது. நாவல் ஒரு தெளிவான நோக்கத்தோடு தன் பயணத்தைத் தொடர்ந்து, நோக்கத்தை செறிவாக நிறைவு செய்கிறது.

ஆழமும் அழுத்தமும் நிறைந்த இந்தக் கதை உயர்ந்த இலக்கியமாகவும், அதே நேரம் எளிமையான திரைப்படமாகவும் நம் நெஞ்சத்தைக் கவர்கிறது.

பாத்திரங்கள் நம்மை நாவல் முழுதும், அவர்களோடு பயணிக்க வைக்கின்றன. அவர்களின் பிரச்சினைகள் நமது பிரச்சினைகளாகின்றன. அந்த மனிதர்களின் வாடை நம் நாசியில் நுழைந்து நெஞ்சில் நிறைகிறது.

அவர்களுக்கு நம்மை பஞ்சாயத்து பண்ணச் சொல்கின்றன.

நான் படிக்கும்போதே சிரித்தேன்; நெகிழ்ந்தேன்; அழுதேன்.

பல இடங்களில் கண்களைத் துடைத்துக் கொண்டு, பிறகுதான் படிக்க முடிந்தது.

நான் சிலகாலம் வாழ்ந்த இடமான சைதாப்பேட்டையில், கருப்பு நதியின் கரையோரம் வாழும், நான் பலமுறைப் பார்த்துப் பரிச்சயமான மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை எனக்கு நேர்மையோடு படம் பிடித்துக் காட்டியது அடையாற்றுக்கரை நாவல்.

நம் சமூகத்தால் கொடுக்கப்படும் நேரடியான அழுத்தங்களை, அவர்களது ஒடுங்கிய மனநிலையை, அதிலிருந்து மீளத்துடிக்கும் தவிப்புகளை, அழுக்கும், நாற்றமும், வறுமையும் சூழ்ந்த நிலையிலும் அவர்களிடம் உயர்ந்து நிற்கும் அன்பும், நேர்மையும் பொங்கும் நெறிமுறைகளை, கொஞ்சமும் பக்கச்சார்பின்றி, எழுத்து நேர்மை மிளிர ‘அடையாற்றுக்கரை’, அணுஅணுவாய் எடுத்துக்காட்டுகிறது.

இந்நாவலில் என்னை மிகவும் கவர்ந்தவை:

• கிளியிடமும், கோழியிடமும் கதை சொல்லும் முறை.

• ஃபிரேமிட்ட ஃபோட்டோவில் இருப்பவர் நேரடியாக வாழ்வதைப் போன்ற வியத்தகு கற்பனை.

• இதுவரை நான் கேட்டறியாத உவமைகள்.

• இதுவரை எவரும் பயன்படுத்தாத எழுத்து நடை.

• பாத்திரங்களைக் கட்டமைக்காமல் இயல்பாக வாழ அனுமதித்த பான்மை.

• பாத்திரங்களின் சுதந்திரம்.

• சிறப்பாகப் பொருந்திய பாத்திரங்களின் பெயர்கள்.

• ஒடுக்கி, ஒதுக்கித் தள்ளும் சமூகத்தின் முன் இவர்களை கம்பீரமாக வாழ வைத்துக் காண்பித்த எழுத்தாளரின் பண்பு.

இவை தவிர இந்த நாவல், என் வாழ்வின் அனுபவங்களோடு ஒன்றி வெளிப்படுத்திய, பல நிகழ்வுகளைக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியத்தில் தள்ளியது.

அதே போல் விவாதங்களைத் தூண்டும் பல்வேறு வாதங்களும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கதையைப் பற்றி எழுதுவதோ, பாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விவரிப்பதோ தவறான எதிர்பார்ப்புகளுக்குத் தூண்டுகோலாகவே அமையும் என்று நான் கருதுகிறேன்.

ஆனால், தமிழர்கள் அனைவரும், முக்கியமாக சென்னைவாசிகள் அனைவரும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு சிறந்த நாவல்.

தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல; உலக இலக்கியத்துக்கு மு.து. பிரபாகரன் அவர்களின் மிகச்சிறந்த கொடை ‘அடையாற்றுக்கரை’.

– கௌதமன்.

நூலின்  பெயர் :அடையாற்றுக்கரை’ – நாவல்
பக்கங்கள் – 340
ஆசிரியர் – மு.து. பிரபாகரன்
வெளியீடு – டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை – 600078.
விலை – ₹ 400.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Show 2 Comments

2 Comments

  1. R.S.Velu

    This may probably be an intellectual gymnastics of all socioeconomic concepts.And an extension of literary gossip! What else then?But a novel and good attempt!

  2. ராமச்சந்திர வைத்தியநாத்

    ஆணவக் கொலைக்கு தமிழ்நாடு அரசு சட்டமியற்றுவதை சற்றே தள்ளி வைத்து தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய மதிப்புரையை அதுவும் தமிழ்நாட்டு வாசகர்களுக்கென்று தமிழ் ஊடகங்களில் எழுதுவதை லத்தீன் அல்லது ஸ்பானிஷ் மொழியில்தான் எழுத வேண்டும் என்று உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

    பாரதி புத்தகாலயமும் இதை பரிவுடன் பரிசீலித்து பரிந்துரைக்க வேண்டுகிறேன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *