2023ல் பால புரஸ்கார் விருது பெற்ற ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலை இங்கு அறியத் தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதை ஆதாரமாக வைத்து புனையப்பட்ட நூல்.
இந்தத் 96 பக்க சிறிய புத்தகம் தனக்குள் பெரிய வரலாற்றையே புதைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். பள்ளி விடுமுறைக்கு கீழடியில் கந்தசாமி மாமா வீட்டுக்குச் சென்ற பாலு அங்கு தென்னந்தோப்பில் கண்டெடுத்த தாழியைக் கொண்டே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் கதையில் அழகாக காட்சிமைப்படுத்தப் பட்டுள்ளது. ஆதன், புருஷ் என்ற இரு முக்கிய கதாபாத்திரங்கள் மூலமாக பண்டைய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, மொழி, வாழ்க்கை முறைகள் என்று அத்தனையும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. மாணவச் செல்வங்கள் எவ்வாறு பள்ளிப் படிப்பைத் தவிர விளையாட்டு, இலக்கியம், வரலாறு என பிற கலைகளையும் வளரும் பருவத்தே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டும் நூல் ஆதனின் பொம்மை.

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்குச் செல்வதெல்லாம் ஒரு காலம். இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே உள்ளங்கைக்கு கொண்டு தருவதால் எதையும் நேரடியாகக் கண்டுணர்ந்து பெறும் இன்பத்தை விட காணொளியே போதுமானதாக இருக்கிறது. ஒரு பத்துக்குப் பத்து ஏசி அறை, ஒரு நாற்காலி, கையில் ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசி இம்மூன்றும் கிடைத்தாலே 30 நாள் விடுமுறையும் 30 நிமிடமாக கரைந்து விடும் காலத்தில் இருக்கிறோம். அப்படி ஒரு விடுமுறையில் மனசே இல்லாமல் மாமா வீட்டுக்கு சென்ற பாலு, அவன் கையில் கிடைத்த ஒரு பெரிய கிண்ணம் போன்று இருக்கும் உடைந்த மண்கலம், அதிலிருந்து தொடங்கும் சிந்து சமவெளிப் பயணம் என்று போகிறது கதை.

சிந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் ஆதனும் மற்ற இளைஞர்களும் குதித்து நீச்சல் அடிக்கும் பகுதி ஒன்று கதையில் வருகிறது. இதைப் படிக்கும் அதே நேரம் நிஜமாகவே தென் தமிழகத்தில் எங்கள் பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கதையோடு ஒன்றிப்போன காட்சி அது.
ஓட்டத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்து லாவகமாக நீந்தவேண்டியது ஆற்று வெள்ளத்தில் மட்டுமல்ல வாழ்க்கை வெள்ளத்திலும் கூடத்தான். புத்தகம் அப்படி ஒரு அனுபவத்தை நாகரிகத் தொட்டிலாகவும் கால ஊஞ்சலாகவும் மாறி கதை முழுக்க ஆதனின் கையைப் பற்றி கொண்டு சிந்து முதல் வைகை வரையிலான பயணத்தை மேற்கொள்ள வைத்தது.

உயர்ந்தவர்- தாழ்ந்தவர், ஆண் -பெண் பேதமற்ற வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், மதம் ,மொழி என்ற பாகுபாடின்மை, கல்வி, இலக்கியம், ஒற்றுமை என நம் அனைவரின் தாகத்தையும் கனவையும் பக்கம் பக்கமாக பறைசாற்றியுள்ளது கதை.
மொத்தத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை ஒரு சுட்ட மண் பொம்மையை வைத்தே ஆதனின் வாய்மொழி வார்த்தைகள் எல்லாம் கண் முன்னே காட்சியாக விரியும் விதத்தில் அருமையாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர் உதயசங்கர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்பதில் ஐயமில்லை.

நூலின் பெயர்:- ஆதனின் பொம்மை
நூலாசிரியர்:- திரு. உதயசங்கர் அவர்கள்
வெளியீடு: வானம் பதிப்பகம் வெளியீடு
ராமாபுரம், சென்னை.
[email protected]

பக்கங்கள் 96
விலை ரூ. 80

– தே.ச. மங்கை
ஸ்ரீவைகுண்டம் ,தூத்துக்குடி மாவட்டம்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *