நூல்: ஓய்ந்திருக்கலாகாது
ஆசிரியர்: அரசி – ஆதி வள்ளியப்பன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹100.00 INR*·
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/oyinthirukkalaagathu-2971/
தோழி ஒருவரின் பிறந்த நாள் பரிசாக தான் அந்த புத்தகத்தை வாங்கினேன். என்னதான் இருக்கிறது என்று பிரித்து படித்துவிடலாம் என்று ஒரு ஆர்வம். தூர தேசத்திற்க்கு செல்லும் நண்பனை கட்டி தழுவுவது போல பிரித்த புத்தகத்தை மூடாமல் இரு இரவு கடந்துவிட்டேன்.
13 கல்வி சார்ந்த சிறுகதைகளை தாங்கி நின்ற அந்த புத்தகத்தின் பெயர் “ஓய்ந்திருக்கலாகாது”
ஆரம்பமே ச.பாலமுருகனின் “பள்ளித் தளம்” சிறுகதை மிக நெருக்கத்தை ஏற்படுத்திய கதை. இதுவே என்னை புத்தகத்தை முழுவதும் முடித்தாகவேண்டும் என்று என்னை தூண்டியது. கதை ஆரம்பிக்கும் இடமும் கதையின் சூழலும் தான் இதற்கு காரணம், சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை, பர்கூர் மலை கிராமங்களை கடந்து ஒன்னகரை கிராமத்தில் கதை நிகழ்கிறது. இந்த பகுதிகளில் கதை சொல்லுறோம் வாங்க குழுவில் நானும் ஒருவனாக மூன்று முறை சென்று வந்த அனுபவம். மறக்க முடியாத அனுபவங்களுடன் கிடைத்த பல விளையாட்டு தோழர்கள் எனக்கு அங்கு உண்டு.
அடுத்த கதை அடுத்த கதை என ஒவ்வொரு கதையும் எனக்கு அந்த புத்தகத்திற்க்குமான நெருக்கத்தை மேலும் கூட்டிக்கொண்டே சென்றது. இதில் 13 சிறுகதைகள் வெவ்வெறு காலக்கட்டங்களில் வாழ்ந்த 13 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. ஆனால் அரசி –ஆதி வள்ளியப்பனின் கதையின் தேர்வு மிகவும் நேர்த்தியானது
ஒரு சிறுகதையின் முடிவில் இருந்து அடுத்த சிறுகதையின் ஆரம்பம் இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் ஒரு நாவலை படித்து முடித்த திருப்தியை தருகிறது.
கதைகளில் சில இடங்களில் சிரித்த முகத்தோடும் பல இடங்களில் கணத்த கண்களுடனும் கடந்து சென்றுள்ளேன். ஒவ்வொரு கதையும் பள்ளிகுள் நடக்கும் அன்பு, அலட்சியம், அவமானம், அழுகை, சிரிப்பு, வெற்றி, தோல்வி, அடி, உதை, வலி, ஏக்கம், அதிகாரம், அரசியல், ஏற்ற தாழ்வு, ஓழுக்கமின்மை, சாதி, ஆநிதி, மறுப்பு, ஓதுக்குதல் என எல்லாவற்றையும் நம்முடன் கதையாடி உணர்ந்திவிட்டு செல்கிறது. ஒவ்வொரு கதைக்கும் தனிசிறப்பும் அதில் இந்த கல்வி முறை குறித்தும் சமூகம் குறித்தும் ஒரு அழுத்தமான கேள்வி இருக்கிறது.
கண்டிப்பாக இந்த கேள்விகளை நாம் உதசினப்படுத்திவிட்டு நகரந்து செல்ல முடியாது. இந்த கதைகளை கதைகளாக படித்து கிரகித்துக் கொள்ளுவதோடு அல்லாமல் ஒவ்வொரு கதைகளையும் விவாதத்திற்க்குள் உட்படுத்தி விடைகாண முயல வேண்டும்.
என்னை கவர்ந்த புத்தகத்தில் நீங்காத இடம் பிடித்த புத்தகங்கள் “ஆயிஷா” மற்றும் “எனக்குரிய இடம் எங்கே” அந்த வரிசையில் இன்று “ஓய்ந்திருக்கலாகாது”-ம் சேர்ந்துக் கொண்டது. ஒவ்வொரு ஆசிரியாரும், கல்வியாளரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
– நவீன் கிருஷ்ணன்

