வாவுப் பறவை
ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம்: புக் ஃபார் சில்ரன்
(பாரதி புத்தகாலயம்)
மொத்த பக்கங்கள்: 63
விலை: ₹ 160/-
புத்தகம் வாங்க: http://thamizhbooks.com/
கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடுவதாலேயே நிஃபா வைரஸ் பரவுகிறதென்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். எபோலா, சார்ஸும்கூட வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் கிராமப்புற வீடுகளின் பழைமையான பரண்களில் அங்குமிங்கும் ஓடித் திரிந்து கொண்டிருக்கின்றன வௌவால்கள். அமைதி குலைந்துவிடும் என்பதற்காக பட்டாசே வெடிக்காமல் வௌவால்களைப் பாதுகாக்கும் கிராமங்களும் இங்கே இருக்கின்றன. நிறைய கற்பிதங்களும் நம்பிக்கைகளும் வௌவால்கள் குறித்து இருக்கின்றன. வாவுப் பறவை என்பது சங்க இலக்கியங்களில் வௌவாலைக் குறிக்கும் சொல்.
இந்த நூல், வௌவால்கள் குறித்த அப்படியான கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், இனப்பெருக்கம் என அவற்றின் முழு வாழ்க்கைமுறையையும் சொல்லித்தருகிறது இந்த நூல். விதைப் பரவலுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் வௌவால்கள் பெருமளவு உதவுகின்றன.
மா, கொய்யா, பேரீச்சை, வாழை போன்ற பழத் தாவரங்களுக்கு வௌவால் பெரும் சேவை புரிகிறது. பழ வௌவால்களின் எச்சத்திலிருக்கும் விதைகள் மூலம் வெப்பமண்டலக் காடுகள் செழிக்கின்றன. உலகெங்கும் 300 வகைத் தாவரங்களை வௌவால்கள் பரப்புகின்றன. அதேநேரம் ரத்தத்தை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வௌவால்களும் இருக்கின்றன. மெக்ஸிகோ, தென் அமெரிக்க நாடுகளில் மூன்றுவகையான குருதியுண்ணி வௌவால்கள் வாழ்கின்றன… இப்படி வௌவால்களைப் பற்றி வியப்பூட்டும் ஏராளமான செய்திகள் இந்த நூலில் உள்ளன.
வைரஸுக்கும் வௌவால்களுக்குமான தொடர்பு குறித்தும் இந்த நூலில் விரிவாகப் பேசுகிறார் வள்ளியப்பன். விலங்குவழி தொற்றக்கூடிய 15 வைரஸ் குடும்பங்கள் வௌவால்களில் வாழ்கின்றன. அவற்றில் 30 சதவிகிதம் கொரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் மனிதர்களைத் தாக்குவதற்கான காரணங்களையும் விவரிக்கிறது நூல், வௌவால்கள் பற்றிய புரிதலுக்கு இடையிடையே தரப்பட்டுள்ள கட்டச் செய்திகள் உதவுகின்றன.
நன்றி: விகடன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.