வாவுப் பறவை
ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம்: புக் ஃபார் சில்ரன்
(பாரதி புத்தகாலயம்)
மொத்த பக்கங்கள்: 63
விலை: ₹ 160/-
புத்தகம் வாங்க: http://thamizhbooks.com/
மனிதரைத் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று உருவானால் உடனே நமது ஊடகங்கள் ஒரு வவ்வால் படத்தைப் போட்டு அதைச் செய்தியாக்குகின்றன. அந்தளவுக்கு நமது ஊடக அறிவு மழுங்கிக் கிடக்கிறது. மனிதர்களின் தவறை எந்த உயிரினத்தின் மீது சுமத்தலாம் என்று யோசித்தபோது வசமாகச் சிக்கியதுதான் இந்த வவ்வால். அதிலும் கொரோனா வந்த பிறகு சொல்லவே வேண்டாம். இந்நிலையில் வவ்வால் மீதான பழியை நீக்குவதோடு மட்டுமல்லாது அதுகுறித்த பல அறிவியல் உண்மைகளையும் விளக்குவதற்கு வந்துள்ள நூலே, ‘வாவுப் பறவை வௌவால்கள் – கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்’
வாவுப் பறவை வவ்வாலின் அழகான மற்றொரு தமிழ் பெயர். வவ்வுதல் என்றால் பற்றிக்கொள்ளுதல். அந்த அடிப்படையில் வவ்வும் உயிரினம் என்பதால் இது வவ்வால் ஆனது என்று சங்க இலக்கிய விளக்கம் தொடங்கி வவ்வால்கள் குறித்த அண்மை கால அறிவியல் செய்திகள் வரை விரித்துத் தருகிறது இந்நூல். மேற்குலகம் வவ்வாலை ‘இரத்தம் குடிக்கும் காட்டேரியாக’ அச்சுறுத்தும் வேளையில் வவ்வால்களின் இயல்பு குறித்துச் சங்கப் புலவர்கள் நேர்மறையாகப் பாடியிருப்பது நிறைவாக உள்ளது.
அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் ஒருவகை வவ்வால்களுக்குக் குருதியே உணவாகும்படி இயற்கை உருவாக்கியுள்ளது. அதிக அளவாக இரண்டு தேக்கரண்டி குருதி அவற்றுக்குத் தேவை. இரண்டு நாட்களுக்கு மேல் குருதியில்லாமல் அவைகளால் உயிர்வாழ முடியாது. அதுவும் விலங்குகளின் கழுத்தை எல்லாம் கடித்து உறிஞ்சாது. உடலில் கால் போன்ற பிற பகுதிகளில் துளையிட்டு அதில் வரும் குருதியை நக்கிக் கொள்கிறது. இதைதான் மனிதர்களின் கழுத்தைக் கடித்துக் குருதி உறிஞ்சும் ‘டிராகுலா’வாக மேற்குலகம் உருவகித்து வைத்துள்ளது. எந்த வவ்வாலும் மனிதர்களின் குருதியை உறிஞ்சுவதில்லை.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னரே கொரொனா நச்சிலால் (வைரசால்) பரவும் சார்ஸ் வந்தபோதே உலகம் விழித்துக் கொள்ளவில்லை. இன்று கோவிட் 19 உலகெங்கும் பெருகியபோது பழிப்போட அது வவ்வால்களைத் தேடுகிறது. வவ்வால்களில் உடலில் காணப்படும் நச்சிலில் 30% கொரானா நச்சிலே நிறைந்துள்ளன. அதுவும் விலங்குவழி தொற்றகூடிய 15 நச்சில் குடும்பங்கள் இருப்பதாக இந்நூல் தெரிவிக்கிறது. இன்றைக்கும் நோய் தொற்றைப் பரப்பக்கூடிய நச்சில் வகைகளின் ஓம்புயிரியாக வவ்வால்கள் திகழ்கின்றன. அந்த வகையில் அவை நமக்குப் பேருதவியே செய்கின்றன. இருப்பினும் கோவிட் 19 வவ்வால்களிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சான்றும் கிடைக்கவில்லை.
அந்த நச்சில் வகைகள் மனிதர்களைத் தம் ஓம்புயிரியாக இடம் மாற்றிக்கொண்டால் அங்குத் தொடர்ந்து வாழ விரும்புகிறது. எனவே காடுகளை அழிக்கும் மனிதசெயற்பாட்டை நிறுத்தினால்தான் புதிய நுண்மிகள் மனிதருக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் நாவல் கொரொனா வகை மனிதர்கள் வழியாக மட்டுமே பரவியது என்கிறனர் அவர்கள்.
நூலில் வவ்வால்களின் வகைகளைத் தெளிவாக அறிய வண்ணப்படங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இந்திய வவ்வால்கள் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் மேகமலையில் அமைந்துள்ள ஹைவேவி பகுதியிலுள்ள சலீம் அலி பழ வவ்வால் என்ற அரிய வகை வவ்வால் இந்தியாவின் சட்டபூர்வ பாதுகாப்பை பெற்ற ஒரே வவ்வால் என்பது போன்ற அரிய பல தகவல்களும் இந்நூலில் கிடைக்கின்றன.
இங்குள்ள பாலூட்டிகளிலேயே மிகக் குறைவான அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்ட பாலூட்டி வவ்வால்கள்தான் என்ற வகையில் தமிழில் இந்நூல் வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. காட்டுயிர் ஆர்வலர்களுக்கு வவ்வால்கள் குறித்த ஒரு கையேட்டினை, அதுவும் தமிழ் மொழியில் தந்தமைக்கு ஆதி. வள்ளியப்பன் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். காட்டுயிர் குறித்த நூல்கள் தமிழில் தொடர்ந்து வெளிவர வாசகர்கள் அவசியம் இதுபோன்ற நூல்களை வாங்கிப் படித்து ஆதரவளிக்க வேண்டும்.
நன்றி: http://www.writernakkeeran.com/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தற்போதயை சூழலுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் புத்தக அறிமுகத்திற்கு நன்றி