கவிதை: *போர்ச் சாலைகளான தார்ச் சாலைகள்* – ஆதித் சக்திவேல்  

தலை நகரின்

தார்ச் சாலைகள்

போர்ச் சாலைகளாய் மாறியுள்ளன

 

அறுவடை செய்வோரை

அறுவடை செய்யத் துடிக்கிறது அரசு

சட்டம் இயற்றி – அவருக்குச் 

சாமரம் வீசுவதாய்ச் சொல்லி 

 

ஆள வந்த அரசு  

ஆட்டிப் படைக்க

மாட்டி விழி பிதுங்கிய விவசாயிகள்  

 

ஆவென வாய் பிளந்து நிற்கும் 

பெரு நிறுவனங்கள்

விளைச்சலையும் விளைவித்தோரையும்

விழுங்கி ஏப்பம் விட்டிட

 

சந்திரனில் சாய்ந்து கால் நீட்டிப் படுக்க

சொர்க்கத்தில் சொகுசாய்க் காலம் தள்ள

வழி கேட்டு வரவில்லை – வாழ

வழி கேட்டு வந்த அவர்கள்

வழி நெடுக – தலைநகரின்

வழி நெடுக 

 

விளைந்ததைக் கடனுக்கு அடைத்து-தூற்றிய 

பதரில் பசியாற்றியவர்- அதுவும்

சிதறிப் போமோ எனப்

பதறிப் போய் வந்துள்ளனர் 

வீதிக்கு

 

சட்டங்களை 

அரசின் வேளாண் சட்டங்களை

சட்டக்களை அவையெனப் பறித்து  

அரசு வளர்த்த வஞ்சகப் பயிர் அறுத்து 

நியாயம் விதைக்க வந்துள்ளனர் 

தார்ச் சாலைகளில்

 

உண்டி தந்து  உயிர் தருவோரைத்

தண்டிக்கும் சட்டம்  இதுவெனக்

கண்டிக்க வந்துள்ளனர்

 

உத்திரவாதம் கேட்க

உயர்வுக்கு அல்ல 

உயிருக்கு – தம் 

பயிருக்கு ஆதார விலை கேட்க  

படையெடுத்து வந்துள்ளனர்

 

குறைந்த பட்ச ஆதார விலை என 

குறைந்த பட்சம் ஓரிடத்திலாவது – அரசு

வரைந்த சட்டத்தில் உள்ளதா எனத்

திறந்து பாருங்கள்

திறந்த மனதுடன் எனச்

சுட்டிக் காட்ட வந்துள்ளனர்  

 

வான் பொய்த்து

மழை பொய்த்து

நிலம் பொய்த்து – தம்

வாழ்வும் பொய்த்த உழவரை 

அரசும் பொய்க்கலாமா எனத்

தம் கோபத்தைக் கொட்டித் தீர்க்க வந்துள்ளனர்

 

படித்துப் பாருங்கள் இன்னொரு முறை

உழவரின் வயிற்றில் அடித்து

முதலாளிகளின்  கருவூலம் நிரப்ப

எந்த அர்த்த சாஸ்திரம் சொல்கிறது  என  

அந்த சாணக்கியனைத் 

தட்டிக் கேட்டுத் 

தீட்டித் தீர்க்க  வந்துள்ளனர்  

 

உழுதுண்டு வாழ்வோர்

தொழுதுண்டு வாழ வகை செய்யும்

கறுப்புச் சட்டங்களை

எரித்துச் சாம்பலாக்கி

விளை நிலங்களில் தூவக் 

கனல் கக்கும் செங்கண்களுடன் 

களம் காண வந்துள்ளனர்  

 

நெற்றியில் ஒட்டிய

வெற்றியைப் பறிக்க விடாது

எட்டு நாட்களாய்க் கைகளைக்

கட்டிப் போட்டுச்

சுற்றிச் சுற்றி ஓட வைக்கும் அரசை

 

சோற்றுப் பானை நிரப்ப

மாற்றுப் பாதை வேறில்லை

எனத் தெரிந்தும்  

மாறுவேடம் போடும்  அரசை

 

வேரில் வெந்நீர் கொட்டி

வேடிக்கை பார்க்கும்  அரசை

மக்கள் நல அரசு என

எப்படி நான் அழைத்திடுவேன்?