விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள் – ஆதித் சக்திவேல் கவிதைப் பின்புலம்

அமெரிக்காவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி மருத்துவமனையில் இறந்து விடுகிறாள்.  அவளை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்புகிறான் பேரன். ஒரு இரவில் நடந்து முடிந்துவிடும் நிகழ்வுகளைக்  கவிதையாக்கி இருக்கிறேன். அந்த  பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே நிலவிய  பாசத்தைப்  படம்பிடித்துக்  காட்டும் கவிதைதான் “விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள்”.

கொரோனாவால் உலகெங்கும்  மரணம் அடைந்தோர்க்கு இக்கவிதையை அர்ப்பணிக்கிறேன். 

விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள் 

ஆதித் சக்திவேல் 

நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம் 

மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் 

நாற்பத்தி ஐந்து மாடிகளும்  

நிரம்பி வழிந்தன 

கதறி அழக்கூட நேரமின்றி 

கால்மணி நேரத்துக்கு ஒரு மரணம் கொரோனாவின் கோர நாக்கு 

சுவைத்துக் கொண்டிருந்தது    

 

நகரில்

பகலை இரவாக்கி இருந்த கொரோனா 

இரவைப் பகலாக்கி இருந்தது 

அம்மருத்துவ மனையில்   

 

எதிரில் இருந்த புல் தரையில் 

வரிசையாய்க் கொட்டகைகள் 

காத்திருப்போர் அவற்றில் ஏராளமாய் 

 

ஏதோ ஒன்று நொறுங்கி விழும் சத்தம் எனக்குக் கேட்டது

கனவு பூமியென 

கற்பனை தேசமென

கலியின் சொர்க்கமென 

காட்சி தரும் அமெரிக்காவின்  

போலிச்  சொர்க்க பிம்பம் தான் அது   

அந்தக் கொட்டகைகளின்  மீது 

விழுந்து நொறுங்கியது எந்த சொர்க்கத்தில் 

அதன் குடிமக்கள் காத்திருப்பர் மருத்துவமனை 

வாசல்களில், வளாகங்களில்

வாரக்கணக்கில்? 

 

ஒரு வாரம்  முன்பு

சாதாரண நோயாளியாய் 

இருமல் சளி என சேர்த்திருந்தேன் 

என் பாட்டியை அங்கு – பின்  

பெரும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்  முளைத்தன அவளது  உடல்நிலையில் 

தொண்டையையும் நுரையீரலையும்  

ஆக்ரமித்துக் குதறியிருந்தது    

கொலைகாரக் கொரோனா 

 

அடையாளம் தெரியாத அளவுக்கு 

ஒவ்வொருவரும் பாதுகாப்பு உடையில் 

மரண பரபரப்பில்

மருத்துவமனை வளாகம் எங்கும்

 

யார் யாரிடமோ பேசி அனுமதி பெற்று

தீவிர சிகிச்சைப் பிரிவில்

என் பாட்டியைப் பார்த்தேன்   இருவருக்குமிடையில்

தடிமனான கண்ணாடிச் சுவர் ஒன்று 

பாட்டி என்னைப் பார்க்கவில்லை

பாட்டியால் எதையும் பார்க்க முடியவில்லை  

 

பாட்டியின் நெற்றியைப்  பார்த்தேன்  

வழக்கமான குங்குமப் பொட்டு……. அங்கே காணோம் 

விட்டு வைத்திருப்பரா 

இவ்வூர் மருத்துவர்கள்? 

 

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 

எனக்கு ஆராய்ச்சியோடு இணைந்த பேராசிரியர் பணி 

நியூயார்க் – ப்ரூக்ளின் மிக அருகருகே 

தினமும் போய் வரமுடியும் 

பாட்டி தான் என்னை

பல்கலைக்கழகம் தந்த வீட்டிலேயே

தங்கிக் கொள்ளச் சொன்னாள்  

வார இறுதி நாட்களில் 

விடுமுறை நாட்களில் 

புரூக்ளின் வந்துவிடவேண்டும் எனும் நிபந்தனையோடு 

 

அவள்  ஏன் அப்படி சொன்னாள் 

யோசித்திருக்கிறேன் பலமுறை 

 

வார இறுதியின்  மாலைகளில் 

அரைமணி நேரம் முன்பே வாசலில் 

அமர்ந்து விடுவாள் நாற்காலி போட்டு

என்னை எதிர்பார்த்து 

என் கார் சத்தம் கூட அத்துபடி அவளுக்கு

தெரு முனையில் கார் திரும்புகையில் 

எழுந்து தயாராக நின்றிருப்பாள் 

காரிலிருந்து நான்  

காலெடுத்து வைப்பதும்  

உச்சந்தலையில் அவள் 

ஆழ்ந்த முத்தம் ஒன்று தருவதும்  

ஒரே நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகள் 

வாரந்தோறும் வெள்ளி மாலைகளில் அய்ந்து நாட்களே கடந்திருப்பினும் 

அய்ந்து வருடங்கள் காணாதது போல் 

வாடி இருக்கும் அவள் முகம் 

முத்தம் தந்த பின் அவளது பார்வையில்  

இருவரும் சொர்க்கத்தைப்  

பகிர்ந்து கொள்வோம் அந்நேரம்  

 

திங்கள் காலைகளில் 

“பார்த்துப்போ “

அவளது ஒட்டு மொத்த  பாசத்தையும் 

இந்த ஒற்றை வார்த்தையில் திணித்திடுவாள் பாட்டி 

 

என் இளம் வயதில் 

அப்பா அம்மா பணிக்குச் சென்றதால் 

எனக்கு எல்லாமே என் பாட்டிதான் 

என்னைப்  பெற்றது அவர்கள் 

பார்த்துப் பார்த்து  செதுக்கியதெல்லாம் 

என் பாட்டிதான்  

 

பாட்டியின் நெற்றியில் குங்குமப்பொட்டு அது இன்றி   

அதன் அளவும்  இடமும் மாறி

நான் பார்த்ததில்லை ஒரு நாளும் 

அவ்வளவு உணர்வு கலந்த ஈடுபாடு 

அந்தப் பொட்டின் மீது அவளுக்கு  

 

 “தாத்தாதான் இல்லையே 

தமிழ்நாட்ல யாரும் பொட்டு 

வெச்சுக்க மாட்டாங்களே பாட்டி  “

“போடா இங்கே இருக்கிறார்”

 என நெஞ்சைத் தொட்டுக்  காண்பித்து

” இந்த பொட்டு விவகாரம் எல்லாம் வெளிவேஷம்டா

எனக்கு நல்லா இருக்கு,  

பிடிச்சிருக்கு, ஆசையா இருக்கு

வெச்சுக்கிறேன் ” என்பாள்

 

“மகிழ்ச்சி இலக்கல்ல, அது ஒரு பயணம்

முழுமையான பகுத்தறிவு எல்லாம் சாத்தியமில்லை 

அதை எவ்வளவு முடியுமோ 

அவ்வளவு நெருங்கலாம் தட் ஈஸ் இட்”

எனக்குக் கிடைத்த ஞானங்களுக்கு 

என் பாட்டி தான்  குரு 

 

சிரிப்பின்  கடைசிக் கணம் 

கண்ணீரின் கடைசித்  துளி  எதுவெனினும்  

ஒவ்வொரு செயலிலும் 

லேசரின் கூர்மை இருக்கும் அவளிடம்

 

குடும்பத்தின் நங்கூரம் என்  பாட்டி 

கப்பலிலிருந்து கழற்றி  விடப்பட்டு 

கடலின் ஆழம் நோக்கி 

வீழ்ந்து  கொண்டிருந்தாள் இப்போது 

 

அடுத்த அரை மணி நேரத்தில் 

பாட்டி இறந்து விட்டதாகக் 

குறுஞ்செய்தி வந்ததுஎதிர்பாராது  நிகழும் துக்கத்தை விட  

எதிர்பார்த்து  நிகழும்  துக்கத்தின் செறிவு பல மடங்கு அதிகம் இருக்கும் 

புரிந்தது அப்போது  எனக்கு

 

காற்று கூட புகாது 

வரிசை வரிசையாக இருந்த

குளிர்சாதனப் பெட்டிகளில்  

வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு  

வெறும் மூட்டைகளாய்  

பெயர் எழுதப்பட்ட அட்டைகள்  

அவற்றில் தொங்கியபடி 

உறவினரின் வருகைக்கு காத்திருந்தன 

உயிருக்கு உயிரான உறவுகள்  

அன்புக்கு உரியவர்கள் என 

எல்லோரும் வெறும் எண்களாய் 

மாறிப் போயிருந்த கொடுமை  

 

உடலைப் பதப்படுத்தும் 

மருத்துவ உதவியாளரைச் சந்தித்து 

சிறு பொட்டலத்தில் மடித்த

குங்குமத்தைக்  கொடுத்து 

பாட்டியின் பெயரைச் சொல்லி

நெற்றியில் வைத்து விட வேண்டி 

என் செல்போன் எண்ணையும்

அதில் எழுதிக்கொடுத்தேன் 

என் பாட்டி 

அந்தப்  பொட்டோடு வாழ்ந்தது   

எனக்குத் தானே  தெரியும் 

 

சன்செட் பார்க்கில் அமைந்த 

இறந்தோரை அடக்கம் செய்யும் 

டி ரிசோஇறுதிச் சடங்கு மனையினருக்கு  

தகவல் கொடுத்தேன் உடனே 

 

பரந்து விரிந்த கால்பந்து மைதானமாய்  

இறுதிச் சடங்கு  மனையின் வளாகம் 

வானளவு உயர்ந்த கோபுரங்கள் போல்   ஆங்காங்கே விளக்குக் கம்பங்கள்

அடுக்கு அடுக்காக  எரிந்த 

உயர் சக்தி மின் விளக்குகளின்  

பிரகாசத்தில் மைதானம்  பகலானது 

பனியின் திரைப் போர்வையில்

 

சிறிதும் பெரிதுமான கார்களும் வேன்களும் தம்முள் துக்கத்தை அடைத்துக்கொண்டு

மைதானம் முழுக்க காத்திருந்தன 

அழுவதற்கும் அழுது வெடிப்பதற்கும்

 

யாரும் கீழே இறங்க அனுமதியின்றி  

காரில் இருந்த படியே

அஞ்சலி செலுத்தினர் 

அவரவரின் சடலங்களுக்கு 

 

பத்து அடிக்கு ஒன்று என 

பத்து எரியூட்டிகள் 

முன் கூட்டியே 

எந்த எண் எரியூட்டியில் எந்த  சடலம் எனச்  சொல்லி விடுகின்றனர் 

ஒவ்வொரு சடலத்தை எரியூட்டிக்குள் நுழைப்பதற்கு முன்பாக 

பெயரையும் எரியூட்டியின் எண்ணையும் 

ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றனர் 

காரிலிருந்து பார்க்கையில் 

ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரிந்தது  

அவ்வளவு அழுகைக்கு இடையிலும்

எல்லாம் தெளிவாகக் கேட்டது 

 

ஒவ்வொரு முறையும் 

எரியூட்டியின்  எண்ணோடு  

பெயரையும் சொல்லுகையில் 

உரியோரின் வாகனங்களிருந்து   

அழுகைச் சத்தம் 

அது அந்த மைதானம் முழுக்க எதிரொலித்தது

 

இன்று மட்டும் 

நூற்றி நாற்பத்தி மூன்று சடலங்களாம் 

அருகில் இருந்த காரில் 

பேசிக் கொண்டனர் பாட்டியின் இறுதிச் சடங்கில் 

நான் ஒருவன் மட்டும் 

அழுது கொண்டிருந்தேன்

காரில் 

 

பின்னிரவு 

சுற்றிலும் பனி 

காரின் முன்பக்க கண்ணாடியில் ஜன்னல்களில் விழுந்த பனி 

தாரை தாரையாய் 

நீராய் வழிந்து கொண்டிருந்ததைப்போல் 

என் கண்களில் 

பாட்டியின் பாசம் பனி என உருகி கன்னங்களில் ஓடிக் கொண்டிருந்தது 

 

பாட்டியின் பெயரோடு 

அடுப்பின் எண்ணையும் அறிவித்தனர் 

  

வீட்டில் தனித்தனி அறைகளில் இருந்த

அப்பாவையும் அம்மாவையும்  

காணொலி  கூட்டு உரையாடலுக்கு  

செல்போனில்  அழைத்து 

காமிராவை ஜூம் செய்தேன்

 

திரையில் 

இடது புறம் அம்மா,  வலது புறம் அப்பா நடுவில் பாட்டியின் உடல் 

கனன்று எரிந்துகொண்டிருந்த எரியூட்டியில் அது தள்ளப்பட்ட படி  

அப்பாவும் அம்மாவும் கதறிக் கதறி 

அழுது கொண்டிருந்தனர் 

பாட்டி எரிந்து கொண்டிருந்தாள் 

மூடப்பட்ட எரியூட்டிக்குள் 

காணொலியில்

 

அந்நேரம் என் செல்பேசி அழுதது 

வாட்ஸ்அப் செயலியில்  

செய்தி ஒன்று போட்டோவுடன் 

செயலியைத் தொட்டேன் 

நடுங்கிய விரலால்   

“நீங்கள்  கொடுத்த சிவப்பு நிறத்தூளை  

எனக்கு தெரிந்த வகையில்  

பாட்டியின் நெற்றியில் வைத்தேன் 

அவள் மேல் உங்கள் பாசம் புரிந்து 

போட்டோ ஒன்று  அனுப்பியுள்ளேன் 

ஆழ்ந்த வருத்தங்களுடன்” 

மருத்துவ உதவியாளரின் செய்தி 

புரிந்து கொள்ள முடிந்தது எளிதில் 

 

பாட்டியின் போட்டோவைப்  பார்த்தேன் சிரித்துக்கொண்டிருந்தாள் பாட்டி

ஜொலித்துக் கொண்டிருந்தது

பாட்டியின் நெற்றியின்  நடுவில் 

செந்நிறக்  குங்குமப்பொட்டு 

ஏறத்தாழ பாட்டி  வைப்பது  போலவே 

எப்படி இருந்தாளோ 

அப்படியே போய்ச் சேர்ந்தாள் 

 

அப்பா அம்மாவிற்கு 

அதை அனுப்பி வைத்தேன் உடனே

 

பாட்டியின் உடைமைகளப் பெற மருத்துவமனை சென்ற போது  

பாட்டி அணிந்திருந்த 

மோதிரம் சங்கிலி இவற்றுடன் 

அவளிடம் இருந்ததென  

புத்தகம் ஒன்றையும் தந்தனர் என்னிடம் 

கலீல் ஜிப்ரானின் “தீர்க்கதரிசி”

தத்துவக்  கவிதைத்  தொகுப்பு அது

கைக்கு அடக்கமான சிறு புத்தகம்

 

நான் பிறக்க  மூன்று மாதம் முன்பு வரை          

சென்னை மகளிர்  கல்லூரி ஒன்றில் 

ஆங்கிலப் பேராசிரியை என் பாட்டி 

 

“பூரண அன்பின் முழுப் பொருளும்

முதல் பேரக்குழந்தைக்குப் 

பிறகு தான்  புரியும்”என ஆங்கிலத்தில்  

புத்தகத்தின் முதல் பக்கத்தில் 

பாட்டியின் முத்து முத்தான கையெழுத்தில் 

 

புரட்டிப் பார்த்தேன் புத்தகத்தை 

” உங்கள் குழந்தைகள்

 உங்களுடன் இருந்தாலும் 

அவர்கள் உங்களுக்கு உரியவர் அல்ல 

அவர்களே வாழ்வும் 

வாழ்வின் அர்த்தங்களும் ஆவர் 

அவர்களுக்கு உங்கள் அன்பைத்  தரலாம் எண்ணங்களை அல்ல “

தீர்க்கதரிசியின் இவ்வரிகளை 

அடிக்கோடு இட்டிருந்தாள்  பாட்டி 

 

ஓராயிரம் நினைவுகள் ஒரு நொடியில்

அன்பைத்  திணித்த பாட்டி 

தன்  எண்ணங்களை,  ஆசைகளை 

ஒரு போதும் திணித்ததில்லை என் மீது 

 

தன்னுள் என்னை 

எடுத்துச் சென்று விட்ட பாட்டி

என்னுள் இப்போது

 

என் கார் சோகம் சுமந்து

மெதுவாக ஊர்ந்தது 

என் வீட்டை நோக்கி 

 

காரிலிருந்து இறங்கினேன் 

உச்சந்தலையில் முத்தம் ஒன்று

கொடுத்து வரவேற்றாள் பாட்டி 

எல்லாம் என் நினைவில் 

பாதி சொர்க்கத்தைப்

பகிர்ந்துகொள்ள பாட்டி இருக்கவில்லை 

மீதி சொர்க்கத்தை

அப்பாட்டியை இழந்த நான் 

எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? உண்மைச் சொர்க்கமும் 

இப்போது கீழே விழுந்து நொறுங்கியது  

 

ஏன் பல்கலைக் கழகத்தில் 

தங்கச் சொன்னாள் பாட்டி என்பது இப்போது புரிந்தது எனக்கு 

வீட்டில் தங்கியிருந்தால் 

அப்பா அம்மாவோடு நானும் 

தனிமைப் படுத்தப்பட்டிருப்பேன் 

பாட்டியை ஹார்ட் தீவில் 

உறவில்லாப் பிணங்களில் 

ஒன்றாய்ப்  புதைத்திருப்பர்

 

எளிதில்  முடிச்சுப்  போடும் வண்ணமும்  

முடிச்சை அவிழ்க்கும் படியுமே 

நிகழ்வுகளை நிகழ்த்திச் செல்கிறது 

எப்போதும்  இயற்கை

எனக்குப் புரிந்தது 

 

“இதற்கெல்லாம் பாட்டிக்கு 

என்ன செய்யப் போகிறேனோ?” 

எனக்கு  விடை கிடைத்தது

 

வாழ்க்கைக் குமிழி உடைகையில் 

அதில் அடைபட்ட வாசம் 

கலந்திடும் நம்மைச்சுற்றி காற்றில்

பாட்டியின் பாசம் வாசமென

கலந்தது அக்காற்றில் இப்போது 

 

அப்பா அம்மா நான்  மூவரும் 

மீண்டும் காணொலியில் 

எதுவும் உரையாடிக் கொள்ளாது 

அழுதோம் அழுதோம்

அழுது கொண்டிருந்தோம் 

 

வீட்டைச் சுற்றி மரண தேவதைகள் 

கும்மி அடித்துக் 

கொண்டாடிக் கொண்டிருந்தன

என் பாட்டியின் மரணத்தை  

 

எங்கள் அழுகையும் 

கும்மிக் கொண்டாட்டமும் 

வீட்டின் பின்புறம்  

ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த 

ஓக் மரங்களில் பட்டு எதிரொலித்தன 

 

என் பாட்டி 

கொண்டாடப்பட வேண்டியவள்-  இன்று அழுது கொண்டாடப்பட வேண்டியவள் 

 

கலீல் ஜிப்ரானின் “தீர்க்கதரிசியை 

பாட்டியின்  நினைவாய் 

என் மேஜையில் பத்திரப்படுத்தி விட்டு 

வெளியில் பார்த்தேன்

இன்னும் விடியவே இல்லை

 

தூரத்தில் எங்கோ ஒரு தேவாலயத்தில்

அதிகாலை மணி அடித்துக்கொண்டிருந்தது

நம்பிக்கையைத்  தட்டி எழுப்ப