யாழ்ப்பாணத்தில்:
நினைவுத் தூண் தந்த
சோக நினைவுகள் – பெரும்
தூணாய் நினைவில் நிற்க – அத்
தூண் இடித்துத் துடிக்க வைத்தனர்
துரோகிகள் – தமிழின
விரோதிகள்
எங்கள்
நினைவினை நிரப்பி
உணர்வினை அடுக்கி
உயிரினை ஊற்றிச் செய்த
உருவமன்றோ அது?
மடிந்தவரின் மடியா நினைவுகள்
மடிந்து விடுவதில்லை – நீங்கள்
இடித்த அத்தூணோடு
எங்கள்
சதையுடன் ரத்தம் வார்த்து
சாம்பலைச் சேர்த்து பிசைந்து
எலும்புகளால் உருவம் தந்து
உயிருக்கு உயிராய்
உயர்ந்து நின்ற அதை
தண்ணீராய் ஓடிய – எங்கள்
கண்ணீரால் கழுவினோமே
காலமெல்லாம்
எங்கள்
சோகத்தின் சாரத்தை
அத்தூணில் தானே
ஒளித்து வைத்து
நடமாடித் திரிந்தோம்
நடைப் பிணங்களாய்
நாளெல்லாம் நாங்கள்
கொடியதொரு நீண்ட இரவில்
ஓடிய ரத்தம் உறைந்த தடத்தை
சதையுடன் எலும்பு எரிந்த வாடையை
ஓயாது ஒலித்த மரண ஓலத்தை
முகவரியின்றி மூச்சிழந்த முகங்களை
அத்தூணில் தானே புதைத்துவைத்தோம்
இன்னும் ஒரு நள்ளிரவில்
“இன்னும் எதற்கு இதுவென”
இடித்தனர் அதை எனும் செய்தி
இடியென – பெரும்
இடியென இறங்கியதே இதயத்தில்
என்றாவது ஒரு நாள்
நினைவு பெற்றிடும் – இந்
நினைவுத் தூண் என
நினைத்தா இடித்தீர் – எங்கள்
நினைவுச் சின்னத்தை?
பல்கலைக் கழகத்தில் நின்ற அது
‘பழையதை’ நினைவூட்டிடுமோ
‘பலதையும்’ கற்றுத் தந்திடுமோ எனப்
பதறிப் போயா இடித்தீர்
அச்சமூக சோகத்தின் சுவடுகளை?
தமிழகத்தில்:
எப்படியும் ஒரு நாள் இப்படி
நஞ்சை வார்த்திடுவர் நயவஞ்சகர் என
எண்ணித் தான்
முற்றமொன்று எழுப்பினோம்
தஞ்சையிலே
முள்ளி வாய்க்காலின் நினைவாய்
– அங்கே
மடிந்த உயிர்களின் நினைவாய் – அதை
இழந்து வாடும் உங்களின் நினைவாய்
இன உணர்வு இம்மியும் குறையாது
தொப்புள் கொடியில்
தொங்கிடும் உறவுகளே
எப்படி நீங்கிடும்
எங்கள் மனதில் அவ்விரவுகள்
நாடு வேறு
நிலம் வேறு
நிஜம் தான் என்றிடுவேன்
மனம் வேறில்லையே
இனம் ஒன்றானதாலே
மதம் மாறலாம் – வாழும்
இடம் மாறலாம்
தாயின் இனம் மாறுமா? – அவளது
பாலின் குணம் மாறுமா?
மொழியின் மணம் தான் மாறிடுமா?
வாருங்கள்
உணவுக்கும் – இன
உணர்வுக்கும்
கொஞ்சமும் பஞ்சமில்லாத்
தஞ்சைக்கு
கரம் நீட்டிக்
கண்ணீரைத் துடைத்திடுவோம்
சிரம் வருடிச்
சோகத்தைப் பகிர்ந்திடுவோம்