கி. ரா : கரிசல் மண்ணின் நாயகன் – ஆதித் சக்திவேல்கி. ரா.
கரிசல் மண்
கண்டெடுத்த கதைக் கருவூலம்

கி. ரா.
இவ்விரு எழுத்துக்களில்
மலர்ந்தன கொத்துக் கொத்தான பூக்களாய்
கரிசல் காட்டு இலக்கியங்கள்

ஏழாம் வகுப்பு வரை கல்வி
பணியோ
பேராசிரியர் பணி

வரலாற்றினை நிறுவிக் கொண்டிருப்போர்
வரிசையில் இன்று நீ
கரிசல் இலக்கிய பீஷ்மர்

இன்று அக்கரிசல் மண்
ஈரமாக இருக்கும்
அது ஓயாது சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீரால்

ஆங்காங்கே
பாளம் பாளமாய் வெடித்துப்
பிளவுண்டிருக்கும்
அது வெடித்து வாய்விட்டு
அழுது கொண்டிருப்பதால்

அம்மண்ணின் காட்டில்
பருத்தி வெடித்திருக்கும் சோகத்தில்
கருப்பு நிறத்துடன் இன்று

அக்காட்டின் குயில்கள் கூட
மௌனமாய் இருந்து
உரக்கப் பாடும் தம் வேதனையை

நூறாண்டுக்கு ஒரு முறை
கரிசல் காட்டில் பூக்கும்
பூ ஒன்று உதிர்ந்தாலும்
பிரபஞ்சத்து உணர்வுகளைச் சுமந்திருந்த
அதன் மணம் மறைவதேது?

அரசு மட்டுமல்ல
அன்னைத் தமிழே
அருகிருந்து அணைத்து
அழைத்துச் செல்கிறது.

உனது புதையலில்
மண்ணின் ஆன்மா மகிழட்டும்.

கி. ரா.
இதைத் தவிர என்ன சொல்லி
அழும் உன் கரிசல் மண்ணை
நான் தேற்ற?