அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை கணேசகுமாரன்

அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை கணேசகுமாரன்

`அடுத்த கலாம் – விஞ்ஞானி ஆகும் வழிகள்’ என்ற புத்தகத்தின் தலைப்பே புத்தகம் சொல்லவரும் விஷயத்தை முழுமையாகச் சொல்லிவிடுகிறது. அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரியும் டில்லிபாபுவின் எழுத்தில் புத்தகம் விரிகிறது. அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்பு வசதிகள், வேலை வாய்ப்பு நிலவரம் பற்றி சின்னச் சின்னப் பத்திகளில் பெரிய அரிய தகவல்கள் கூறிப்போகும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
புதிது புதிதான விஞ்ஞானக் கருவிகள் குறித்த விவரங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலானவர்களுக்கும் தெரியாத அறியாத அறிவியல் பூர்வமான செய்திகளை வகுப்பறையில் ஒரு ஆசிரியர் போதிப்பது போன்ற எழுத்து நடை. ஆனாலும் இந்தப் பாடம் போரடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டின் விஞ்ஞானச் சாதனை செய்திகளை வாசிக்கும்போது நமக்கே பெரும் உற்சாகம் உண்டாவதை உணர முடிகிறது.

விஞ்ஞானிகளில் உள்ள பல வகைகளையும் அத்தியாய வாரியாகப் பிரித்து அற்புதமாகத் தரப்பட்டிருக்கிறது. எவ்விதச் சந்தேகமும் எழாமல் படிப்பை அணுகும் முறை, வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்தல், அதற்கான வழி முறைகள் என அத்தனையும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில் மட்டுமல்ல; வீட்டு நூலகத்திலும் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய புத்தகம் இது. இஸ்ரோவில் சாதனை செய்த அனைத்து விஞ்ஞானிகளும் சிற்றூர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் என்ற சுவாரசியத் தகவல்களும் பெட்டிச் செய்திகளாய் அங்கங்கே தரப்பட்டுள்ளன. தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரமணன் எதனால் புகழ்பெற்றார் என்பதையும் தகவல் களஞ்சியத்தோடு சொல்லிச் சென்றிருக்கும் திறமையையும் குறும்பு எழுத்தையும் பாராட்டியே ஆகவேண்டும்.

கண்கொள்ளா புத்தகக் காட்சி! | Book Fare ...

2019 மே மாதம் ஒடிசாவைத் தாக்கிய புயலின் சேதங்கள் மிகக் குறைவானதற்குக் காரணம் இப்புயலை முன் கூட்டியே கணித்த இந்திய வானிலை ஆய்வுத்துறை விஞ்ஞானிகள் என்னும்போது தனுஷ்கோடி புயலின் அழிவு குறித்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்போதைய வசதிகள் அப்போதே இருந்திருந்தால் ஒரு நகரம் அழிந்திருக்காது என்பது மனம் கனக்கும் உண்மை.

விஞ்ஞானி என்ற பொதுச் சொல்லுக்குப் பின் இருக்கும் பலப்பல விஞ்ஞானிகளை விஞ்ஞான முறைகளை அநாயாசமாக விளக்கிப் போகும் எழுத்து சபாஷ் சொல்ல வைக்கிறது. கண்களை உறுத்தாத அச்சு வடிவமைப்பு அமைத்த பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகச் சிறந்த கைடாக விளங்கக்கூடிய இந்நூல் வாசகனுக்கும் அதே அளவு ஆர்வத்தை வழங்கிப்போகிறது என்பது ஆச்சரியமூட்டும் ஒன்று.

அடுத்த கலாம் – விஞ்ஞானி ஆகும் வழிகள் : கட்டுரைத்தொகுப்பு
ஆசிரியர் – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
வெளியீடு: முரண்களரி படைப்பகம் சென்னை.
விலை – 150 ரூபாய்

– மதிப்புரை கணேசகுமாரன்
[email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *