“அரசமைப்புச் சட்டமா? மனுஸ்மிருதியா?” – நூல் அறிமுகம்
மனுஸ்மிருதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது!
இந்திய நாடு எத்தகைய விழுமியங்களின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதில் இரு வேறுபட்ட துருவச் சிந்தனைகள் நிலவுகின்றன. ஒன்று பழமைவாதப் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ‘மனுஸ்மிருதி’, மற்றொன்று சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உருவாக்கிய ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச. சிவகுமார் சட்டரீதியிலான அணுகுமுறையோடும் வரலாற்றுச் சான்றுகளோடும் இந்த இரு கருத்துநிலைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளை இந்நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
ஒரு நாட்டை வழிநடத்த வேண்டியது சமத்துவத்தை உறுதிசெய்யும் அரசமைப்புச் சட்டமா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் மனுஸ்மிருதியா? இந்த அடிப்படையான கேள்வியை வாசகர்களின் முன் எழுப்புகிறது ச. சிவக்குமார் எழுதியுள்ள “அரசமைப்புச் சட்டமா? மனுஸ்மிருதியா?”.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவுகளின் தொகுப்பு அல்ல. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகிய விழுமியங்களை முன்னிறுத்தும் ஓர் அடிப்படை ஆவணம். குறிப்பாக, சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கான ஜனநாயக வழிமுறைகளை அது வழங்குகிறது.
மறுபுறம், மனுஸ்மிருதி என்பது பண்டைய இந்தியாவின் தர்மசாஸ்திர மரபைச் சேர்ந்த நூல். அதில் வர்ண அடிப்படையிலான சமூகப் படிநிலைகள், வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கான கடமைகள், பெண்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல, நவீன சமத்துவம் மற்றும் மனித உரிமைக் கொள்கைகளுடன் முரண்படுகின்றன.
இந்தியச் சமூகத்தின் எதிர்காலம் எத்தகைய விழுமியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற விவாதத்தை இந்த நூல் தூண்டுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் சமத்துவத்தையும், 15-வது பிரிவு குறிப்பிட்ட அடிப்படைகளிலான பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பையும், 17-வது பிரிவு தீண்டாமை ஒழிப்பையும் வலியுறுத்துகின்றன. இவை பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரிக்கும் சமூக அணுகுமுறைக்கு எதிரான ஜனநாயக அடித்தளங்களாகும். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனைகளைத் தவிர்க்க முடியாது.
சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், தனிமனித உரிமைகள் ஆகியவற்றுக்காக அவர் நடத்திய அறிவார்ந்த போராட்டம் இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருப்பது மட்டுமே சமூக நீதியை உறுதிப்படுத்திவிடாது. அதன் விழுமியங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், பெண்களின் உரிமைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் என அனைத்துத் தளங்களிலும் நடைமுறைக்கு வர வேண்டும்.
இன்று அரசியலைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம் நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவம், சமூகநீதி, கூட்டாட்சி ஆகியற்றை மதிப்பதே இல்லை.
இந்தப் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு ஆவணத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல; அதன் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளையும் மனித மாண்பையும் உறுதி செய்வது நமது கடமையாகும்.
இந்நூல் அரசமைப்புச் சட்டத்தையும் மனுஸ்மிருதியையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
சமூக நீதியை மையப்படுத்துதல். சாதி, அதிகாரம், சமத்துவம், ஒடுக்குமுறை போன்ற அடிப்படையான சமூகப் பிரச்சினைகள் குறித்த உரையாடலுக்கு வாய்ப்பளிக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மாண்பையும் அதன் ஜனநாயகத்தின் அடிப்படையையும் பாதுகாப்பது நீதித்துறைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இந்நூலில் …
அனைவரும் அணுகும் தொலைவில் உச்ச நீதிமன்றம் அமையட்டும்,
நீதித்துறையிலும் பாலின சமத்துவம் கடைபிடிக்க வேண்டும்,
ஆளுனர்களின் எதேச்சாதிகாரத்திற்கு கடிவாளம் போட்ட தீர்ப்பு,
தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள்,
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தும்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ்?
இது போன்ற 10 முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூலை வாசிப்பதன் மூலம் மனிதர்களின் உரிமைகளும் வாய்ப்புகளும் பிறப்பால் தீர்மானிக்கப்பட வேண்டுமா? அல்லது ஒவ்வொரு மனிதருக்கும் சம உரிமையும் கண்ணியமும் வழங்கப்பட வேண்டுமா? என்ற விவாதத்தின் நம் முன் வைக்கிறது.
அரசமைப்புச் சட்டம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆவணம் அல்ல. அது காலத்திற்கேற்ப ஜனநாயக வழிமுறைகளில் விவாதிக்கப்படவும் திருத்தப்படவும் கூடியது. ஆனால் அதன் அடிப்படை உரிமைகள், சமத்துவம், சமூக நீதி ஆகிய விழுமியங்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயகச் சமூகத்தின் முக்கியமான கடமையாகும்.
சட்டத்தின் முன் சமத்துவம், சமூகத்தில் சமத்துவம், வாழ்வில் மனித மாண்பு — இவை வெறும் அரசமைப்புச் சொற்களாக அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வின் உண்மைகளாக மாற வேண்டும்.
தற்போதைய இந்திய சூழலில் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் காலத்தின் தேவையாக இந்நூல் திகழ்கிறது.
அரசமைப்பு சட்டமா? மனுஸ்மிருதியா?” என்ற இந்நூல், நவீன ஜனநாயக இந்தியாவை வழிகாட்டும் வெளிச்சமாக இருப்பது ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’ மட்டுமே என்பதை உரக்கச் சொல்கிறது. சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பு குறித்து ஆர்வமுள்ளவர்கள், அம்பேத்கரியச் சிந்தனையைப் பயில விரும்பும் வாசகர்கள், அரசியல் அறிவியல் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், பெண்களின் சமத்துவம் குறித்து விவாதிப்பவர்கள், இன்றைய இந்தியாவில் அரசமைப்பின் பங்கு குறித்து ஆழமாகச் சிந்திக்க விரும்பும் பொதுவாசகர்கள், சட்ட மாணவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் இந்திய சமூக அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பயனுள்ள நூல் இதுவாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அரசமைப்புச் சட்டமா? மனுஸ்மிருதியா? |
| தொகுப்பாசிரியர்: | வழக்கறிஞர் ச. சிவகுமார் |
| வெளியீடு: | மாற்றுக்களம் புத்தக நிலையம் திருவெற்றியூர்-600019 தொடர்பு எண்: 8300010311 |
| விலை: | ₹.120 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ. பிரபாகர் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

