ஜீனெட் ஜோ எப்ஸ் (Jeanette Jo Epps) என்பவர் ஒரு அமெரிக்க விண்வெளி பொறியாளர் மற்றும் ஓய்வு பெற்ற நாசா விண்வெளி வீரர் ஆவார். இவர் நிலத்தடி குகைகளில் நடத்தப்பட்ட ஒரு அனலாக் விண்வெளிப் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த கேவ்ஸ் 19 பயிற்சியில் பங்கேற்ற இரண்டாவது பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்மணி ஆவார். இவர் விண்வெளி நிலையத்தில் அதிக காலம் தங்கிய ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி
இவர் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று நியூயார்க்கின் சைராகுஸி என்ற இடத்தில் பிறந்தார். இவர் மிஸ்சிசிப்பியைச் சேர்ந்த ஹென்றி மற்றும் லுபெர்டா எப்ஸ் ஆகியோருக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். அவர்கள் பெரும் இடம்பெயர்வின் ஒரு பகுதியாக சைராகுஸுக்கு குடி பெயர்ந்தனர். இவர் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கினார்.
இவர் சைராகுஸில் உள்ள கோர்கோரான் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். லு மோய்ன் கல்லூரியில் இயற்பியலில் பிஎஸ் பட்டம் பெற்றார். பிறகு மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். அதன்பின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அவர் பல ஆராய்ச்சி கட்டுரைகளையும், பல கல்விப் படைப்புகளையும் வெளியிட்டார்.
தொழில்

அவர் பொருட்கள் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ரோட்டார் கைவினை ஆராய்ச்சிக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் ஆராய்ச்சியில் பணியாற்றினார். பின்னர் மத்திய புலனாய்வு நிறுவனத்தில் தொழில்நுட்ப புலனாய்வு அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சிஐஏ இல் ஒரு தொழில்நுட்ப புலனாய்வு அதிகாரியாக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.
நாசா
இவர் 2009 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி, விண்வெளி நடைப் பயிற்சி, ரோபாட்டிக்ஸ், T- 38 ஜெட் பயிற்சியையும் முடித்தார். நாசாவின் கடலுக்கடியில் உள்ள நீமோ 18 என்ற ஆய்வு நிலையத்தில் ஒன்பது நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் ஹவாயில் புவியியல் ஆய்வுகளிலும் பங்கேற்றார்.
இவர் ரஷ்யாவின் ஸ்டார் சிட்டியில் குளிர்காலம் மற்றும் நீர் உயிர்வாழ்வு குறித்த பயிற்சியையும் முடித்தார். இவர் 2019 ஆம் ஆண்டில் கேவ்ஸ் 19 (CAVES) என்ற பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டார். இது கிரக ஆராய்ச்சி நிலைமைகளை உருவகப்படுத்திய ஒரு நிலத்தடிக் குகைகளில் நடத்தப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சியாகும். இது சவால் நிறைந்த மூன்று வார பயிற்சி. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற இரண்டாவது பெண் மற்றும் முதல் கருப்பு பெண்மணி ஜோ எப்ஸ் ஆவார்.
விண்வெளிப் பயணம்
இவர் 2024 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ – 8 என்ற பயணத்தின் ஒரு வீரராக இருந்தார். அவர் மிஷன் ஸ்பெஷலிஸ்டாக பறப்பார் என நாசா அறிவித்தது. இவர் அறிவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரோபோடிக் கைகளை இயக்கினார். ஜப்பானிய பரிசோதனை தொகுதிகளையும் நிர்வகித்தார்.
இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 235 நாட்கள் இருந்தார். இதன் மூலம் விண்வெளியில் நீண்ட காலம் தங்கி இருந்த முதல் ஆப்பிரிக்க – அமெரிக்கப் பெண்மணி என்ற தகுதியைப் பெற்றார். இவர் விண்வெளியில் நடப்பதற்கான பயிற்சியைப் பெற்றிருந்தபோதிலும் விண்வெளி நடைப் பயணத்தில் ஈடுபடவில்லை. இவர் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பூமிக்குத் திரும்பினார்.
பேச்சாளர்
இவர் ஒரு சிறந்த பேச்சாளர். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பலமுறை உரையாற்றியுள்ளார். அயர்லாந்து நாட்டின் டப்ளினில் நடந்த 77 ஆவது உலக அறிவியல் புனைக்கதை மாநாட்டில் இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார். இவர் அமெரிக்க வானூர்தி மற்றும் விண்வெளி சார்ந்த அமைப்பு மற்றும் அறிவியல் மற்றும் பொதுமக்களுக்கான சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
