எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

Image Credits: LiveMint.Comதில்லியில் செவ்வாய்க்கிழமையன்று செங்கோட்டைக் கோபுரங்களிலிருந்த தடுப்புகளை அகற்றி சீக்கியக் கொடியைப் பறக்க விட்ட விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி வெளியாகும் கருத்துகள் ஒரு​​பக்கச் சார்பாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணத்தை முழுமையாக ஆதரிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது தனியுரிமை மீதான கவலைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, குடியரசு தினத்தில் அரசு நடத்திய வன்முறைகளையே சுட்டிக் காட்டுவார்கள். வேளாண் சட்டங்களை அல்லது அரசாங்கத்தை ஆதரிப்பவர்களோ இது தலைநகரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வன்முறை என்ற முத்திரையைக் குத்தி அரசாங்கம் இதை மிகக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்து வருகின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Rohan Venkata Ramakrishnan Scroll\faremrs_protst_clash-101-26012020.jpg
Image Credits: PTI

எப்படி பார்த்தாலும் ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனையை முழுக்க முழுக்க குழப்பத்துடனே பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் கையாண்டிருக்கிறார்கள், .

விவசாயிகளுடன் ஆலோசனை?

பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்து தொடங்கலாம். வேளாண் சந்தைகளை ஒழுங்குபடுத்துவது, ஒப்பந்த விவசாயத்திற்கான அடிப்படையை உருவாக்குவது, வேளாண் ஒழுங்குமுறை அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்துக் கொள்வது என்று இந்த மூன்று வேளாண் சட்டங்களும், மற்ற பிற அறிவிப்புகளுடன் இணைந்து கோவிட்-19ஆல் ஏற்பட்டிருக்கும் புதைகுழியில் சிக்கியிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி உயர்த்த முயற்சிக்கின்ற ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே அறிவிக்கப்பட்டன.

அறிவிக்கப்பட்ட அந்த தொகுப்பில் தூண்டுதல் நடவடிக்கைகளாக எதுவுமே இருக்கவில்லை. அரசாங்கம் எந்த வகையிலும் பணத்தைச் செலவழிக்க விரும்பவில்லை என்பதாகவே விமர்சனங்கள் அதிக அளவில் வந்தன. அந்த அறிவிப்பு மக்களுக்கு உதவுவதற்கு மாறாக இந்திய விவசாயத்தை அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாற்றப் போகின்ற இது போன்று நகர்வுகளையே உள்ளடக்கியதாக இருந்தது.

இந்த வேளாண் திட்டங்களின் உள்ளடக்கம் குறித்து, அவை சட்டங்களாக மாற்றப்படுவதற்கு முன்பாக அதன் பங்குதாரர்களான விவசாயிகளுடன் அரசாங்கள் கலந்தாலோசித்தது என்பதற்கான எந்தவொரு பதிவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதைத் தகவல் அறியும் உரிமை மூலமாகப் பெறப்பட்ட பதில்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தைப் பாராளுமன்றம் எடுத்துக் கொள்ளக் கூட காத்திருக்காமல், 2020 ஜூன் மாதம் அவசரச் சட்டம் மூலமாகச் செய்யப்பட்டது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Rohan Venkata Ramakrishnan Scroll\Master.jpg
Image Credits: Times of India

அவசரச் சட்டங்கள் மூலமாக  

விவசாயிகள் அல்லது மாநிலங்கள் அல்லது பாராளுமன்றம் என்று யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்திய விவசாயத்தைச் சீர்குலைக்கும் வகையிலான அவசரச் சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் ஏன் முடிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தொற்றுநோய்கள் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பேரழிவு தன்னுடைய நகர்வுகளுக்கு எதிராக எந்தவொரு பொது அணிதிரட்டலுக்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்து விடும் என்று நம்பியே இந்த அரசாங்கம் இப்போது உருவாகியிருக்கும் நெருக்கடியை தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. அரசின் அத்தகைய கணக்கீடுகள் முற்றிலும் தவறாகவே இருந்தன.

மோடியின் அரசாங்கம் சட்டப்பூர்வமான செயல்முறைகளைத் தவிர்த்து  அவசரச் சட்டங்களையே தொடர்ந்து பலமுறை நம்பி செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்திலும்கூட பொதுவாக மேற்கொள்ளப்படும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ‘பைபாஸ் சீர்திருத்தம்’ என்று சிலரால் அழைக்கப்படுகின்ற வகையில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர்க்கவே மத்திய அரசு முயன்றது.

இந்த வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை இதுபோன்ற குறுக்குவழிகள் எப்படியாவது விரைவுபடுத்தித் தரும் என்று நம்பிய அரசாங்கம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி அதை எதிர்த்தவர்களைக் கட்டாயப்படுத்தியது என்றாலும் எதிர்ப்பு இன்னும் குறையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா முழுவதும் மற்றும் ஒரு சில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அணிதிரண்டிருந்த போது அந்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டன. பஞ்சாபிலிருந்து மட்டும் சீற்றம் எழுந்தது. சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பழைய கூட்டாளிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளம் ஆளும் கூட்டணியிலிருந்து விலகியது. அந்தக் கட்சியைச் சார்ந்த அமைச்சர் மோடியின் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

பாராளுமன்றத்தின் மூலம் திணிக்கப்பட்டது

அமைச்சரின் ராஜினாமாவால் முரட்டுத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தின் மூலம் சட்டங்களைத் திணிப்பதற்குப் பதிலாகக் கூடுதல் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும் என்று போதுமான சமிக்ஞையை அரசாங்கத்திற்கு அனுப்ப இயலவில்லை. மக்களவையில் அந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச விவாதத்துடன் விரைவாக நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சில மணிநேரங்களுக்கு மட்டுமே விவாதங்கள் நடத்தப்பட்டன. சட்டங்கள் குறித்து மேலும் ஆய்வு, ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக மசோதா நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற பல எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

அதைத் தொடர்ந்து நடந்தது மிகவும் கவலைக்குரியது. மாநிலங்களவையில் ஒவ்வொரு வாக்குகளையும் எண்ண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையை விடுத்த போதிலும், பாஜகவுக்கு அங்கே பெரும்பான்மை இல்லாததால், குரல் வாக்கைப் பயன்படுத்திய சபாநாயகர் ஒருதரப்பு அதிக சப்தம் எழுப்பியதாகக் கூறி சட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆதரவுடன் போதுமான வாக்குகள் உள்ளனவா என்று எண்ணப்படாமலேயே அந்த சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Rohan Venkata Ramakrishnan Scroll\Rajya-Sabha-TMCjpg.jpg
Image Credits: The Hindu Business Line

சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் இவ்வாறு வாக்குகளை எண்ணாமலேயே சட்டங்களை இயற்றிக் கொண்டது குறித்து செவ்வாயன்று செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றியதை ‘ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல்’ என்று கூக்குரலிடுபவர்களில் சிலர் பேசவே மறுக்கின்றனர்.

விரிவான போராட்டங்கள்

அதிக அளவில்  பஞ்சாபில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வட இந்தியா மற்றும் பிற இடங்களிலும் அடுத்த சில மாதங்களில் விவசாயிகளிடமிருந்து அதிக ஆதரவு உருவானது. தில்லியை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கும் வரை போராட்டக்காரர்களைப் புறக்கணிப்பது அல்லது அவர்களைப் புறந்தள்ளுவது என்பது மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கையாக இருந்தது. அதற்குப் பின்னர் அரசிடமிருந்து வெளியே வந்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள், நீர் பீரங்கிகள் என்ற ஆயுதங்களோ, நெடுஞ்சாலைகளைத் தோண்டுவது. மிகப் பெரிய அளவிலான தடுப்புகளை அமைப்பது போன்றவையோ தங்களுடைய எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடியவையாக இருக்கவில்லை.

நவம்பர் மாதம் தில்லிக்குள் போராட்டக்காரர்களை அனுமதிக்க அரசாங்கம் மறுத்த போது, தலைநகரின் எல்லைகளில் முகாம்களை அமைப்பதற்கான யோசனை விவசாயிகள் சங்கங்களிடம் பிறந்தது. அது பெரிய அணிதிரட்டலாக மாறியது. பல்லாயிரக்கணக்கானவர்களை அங்கே கொண்டு வந்து, சட்டங்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் டிராக்டர் நகரங்களைத் தில்லி எல்லைகளில் உருவாக்கியது.

விவசாயச் சங்கங்களுடன் நடந்த ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அரசாங்கம் சட்டங்களின் பல முக்கிய அம்சங்களைத் தளர்த்த முன்வந்தது. விஷயத்தை உச்சநீதிமன்றத்திற்கு நகர்த்த முயற்சித்தது. விவசாயிகளுக்குச் சாதகமான தீர்வை எட்டும் வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்குச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் பரிந்துரைத்தது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டு அப்போது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பல கருத்துகளை இப்போது அரசாங்கமே ஏற்றுக் கொள்ள முன்வந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் மனோஜ் விளக்கியிருந்தார். அரசாங்கம் அடுத்தடுத்து முன்வைத்த பரிந்துரைகள் ஒவ்வொன்றும் ஏற்பட்ட சேதங்களைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியாகவே இருந்தன. ஆனால் விவசாயிகளோ வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். பாரதிய ஜனதாவுக்கு அது ஆழ்ந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Rohan Venkata Ramakrishnan Scroll\prism-24-1-2021-942301-1611366727.jpg
Image Credits: DeccanHerald.com

குடியரசு தினம்

இவையனைத்தும் செவ்வாய்க்கிழமை குடியரசு தினத்தன்று நடைபெற்ற போராட்டங்கள், வன்முறைகளில் இறுதியாகச் சென்றடைந்தன. விவசாயிகள் சங்கங்களால் கண்டனம் செய்யப்பட்டுள்ள செங்கோட்டையில் கொடியை ஏற்றியது உட்படப் போராட்டக்காரர்களின் அத்துமீறல்கள் அவர்களுடைய எதிர்ப்பு இயக்கத்தை இன்னும் பாதிக்கவில்லை. அது நிச்சயமாக மக்கள் கருத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளது. விவசாயச் சங்கங்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடரப் போவதாக உறுதியளித்துள்ளன. இதுபோன்ற ஓரிடத்திற்கு வந்து சேர்ந்திருப்பது அரசியல் ரீதியாக, சட்டம் ஒழுங்கு நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும் போது இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் தோல்வியைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

மோடி அரசாங்கம் இரண்டு வருடங்களுக்குச் சட்டங்களை இடைநிறுத்தம் செய்ய முன்வந்தது விவசாயிகளின் இயக்கத்தை நியாயப்படுத்தவே செய்திருக்கிறது. அவ்வாறு செய்ய வேண்டும் என்று பலர் விரும்பினாலும்,  இனிமேல் ஒட்டுமொத்த போராட்டமும் வன்முறைக் கூறுகளால் நிரம்பியிருப்பதாக அறிவித்து, வெகுஜன ஒடுக்குமுறையைத் தொடங்கவே மோடி போராடுவார்.

இதற்கிடையில், சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பேற்க வேண்டியவராகவும், அரசு நடத்திய வன்முறைக்குப் பதிலளிக்க வேண்டியவராகவும் இருக்கின்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவிக் காலத்தில், இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் வருகை தந்தபோது தலைநகர் தில்லியில் வகுப்புவாத வன்முறை வெடித்து ஓராண்டு கழித்து மேலுமொரு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். .

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், கணக்கீடுகள் சிறப்பாக இருந்திருப்பதாகத் தெரியவில்லை. தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி இருக்கும் மோடி அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார்?

 

https://scroll.in/article/985169/whichever-way-you-look-at-it-modis-handling-of-the-farm-laws-has-been-a-complete-mess

நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ், 2020 ஜனவரி 27 

தமிழில்: தா.சந்திரகுரு