பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் சுற்றுச்சூழல் கல்வி என்ன பங்காற்ற வேண்டும்? – சஞ்சனா செவலம் மற்றும் மனசி ஆனந்த் (தமிழில்: தாரை இராகுலன்)கடந்த ஒன்பது மாதங்களில், உலகம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் நிகழ்வாக அமைந்துவிட்ட கோவிட்-19 பெருந்தொற்று ஒவ்வொரு மனித வாழ்விலும் நோய், இன்னல், நிச்சயமற்ற தன்மை என்று ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் வீடுகள், வேலைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். நாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், அரசு இரண்டு மாதப் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது, நாட்டை அசைவற்ற நிலைக்குக் கொண்டு வந்தது. பலர் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதே நேரம், 100 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அறிமுகமில்லாத நகரங்களில் ஊதியம், போதுமான உணவுப் பொருள்கள் அல்லது மருத்துவப் பொருள்கள் இல்லாமல் தவித்தனர்.

கோவிட்-19 போன்ற விலங்கு வழி நோய்கள், நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற மானுடவியல் சுற்றுச்சூழல் தாக்கங்களுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச சமூகம் நாடுகளின் சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மறுசீரமைக்க ஊக்குவிக்கிறது. கெடுவாய்ப்பாக, இந்த முயற்சிகள் இந்தியாவில் பலன் தரவில்லை.

பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களில், இந்திய அரசு சுற்றுச்சூழல் கொள்கை வடிவமைப்பில் பல தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அவை பின்வருமாறு:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையில் பிற்போக்கான திருத்தங்கள்

திபாங் பள்ளத்தாக்கு, பகவான் மகாவீர் வனவிலங்குச் சரணாலயம் மற்றும் தேசியப் பூங்கா, திப்ரு சைகோவா தேசியப் பூங்கா போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பல
‘வளர்ச்சி’ நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தல்

நிலக்கரித் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தல்

ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான நடப்பு கல்வியாண்டிற்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பாடத்திட்டத்தில் 30% ஐ நீக்கியிருப்பது மேற்கண்டவைகளுக்குச் சமமான ஆபத்தான வளர்ச்சியாகும். சூழலியல், ஆற்றல், விவசாயம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான அத்தியாயங்கள் உட்பட சுற்றுச்சூழல் பிரச்சனைகளுடன் தொடர்புடைய பல முக்கியமான தலைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. நிபுணர்களும் செயல்பாட்டாளர்களும் இந்தத் தலையீடுகளைக் கடுமையாக எதிர்த்தாலும், இத்தகைய கருத்துகள் இந்தியச் சமுதாயத்தில் பொதுவாகப் பெரிய அளவில் இல்லை. இது துரதிர்ஷ்டவசமானது: பெருந்தொற்றுக்குப் பிறகான இந்தியாவில் பல்-தலைமுறைக் கல்வியால் (multi-generational education) உள்ளடங்கிய மற்றும் நிலையான சுற்றுச்சூழல் நிர்வாகத்தை உருவாக்க முடியும்.கற்றுணர்ந்த மக்களின் பங்கு:

தகவல்களைப் பெறுவதில் உள்ள குறைபாட்டால், சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் குடிமக்கள் ஈடுபட இயலாமை, அழிவுக்கு இட்டுச்செல்லும். எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவது மட்டும் போதாது. தொழில்துறை மாசுபாடு குறைந்த வருமானம் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களை பெருமளவில் பாதிக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் – பெரும்பாலும் அதைச் சமாளிக்கும் திறனற்றவர்கள். இதேபோல், காலநிலை மாற்றம் உண்மையானது என்பதை அறிவது மட்டும் போதாது. இந்த நாட்டில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தனிநபர்கள் கண்டுணர வேண்டும். மிக முக்கியமாக, மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகளை உருவாக்க வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பலர் நீல வானத்தையும் தூய்மையான காற்றையும் அனுபவித்தனர், இந்த முன்னேற்றத்திற்கு பெருந்தொற்றுக்கு எதிரான பொதுமுடக்கமே காரணம் என அவர்கள் கருதினர். ஆனால் அவ்வாறு செய்யும்போது, அதே மக்கள் இந்திய அரசு அமுல்படுத்திய பெரிய அளவிளான சுற்றுச்சூழல் கட்டமைப்பு மாற்றங்களைப் புறக்கணித்தனர், அதாவது முறைப்படுத்தப்படாத வளர்ச்சி. இதேபோல், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரமாகக் கருதப்படுகிறது – ஆனால் தொற்று நோயை ஏற்படுத்திய பரவலான மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்குச் சுற்றுச்சூழல் கல்வி முக்கியப் பங்காற்றமுடியும் என்பதைப் பலர் அங்கீகரிக்கவில்லை.

சுருக்கமாக, போதுமான தகவல்களை அறிந்திராத மக்காளால் ஏற்படும் வளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி மோசமானதாகும். ஒரு முன்னுதாரண மாற்றத்தை எளிதாக்குவதற்கு, ஈடுபாடு முக்கியமானது – தகவலறிந்த சமூகங்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக முடிவெடுத்தல் மற்றும் நிர்வாகத்தில் தீவிரமாகப் பங்கேற்கின்றன.முன்னேறும் வழி:

பல மக்கள் தொகுதிகளிலிருந்தும் பல்வேறு பங்கேற்பாளர்களை ஈடுபடுத்த நாம் பல்வகை அணுகுமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இதன் பொருள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள், விவரிப்புகள் மற்றும் முன்னோக்குகள் குறித்து கல்வி கற்பித்தல்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, பல்துறைகளையும் உள்ளடக்கியதாக மாறுவதுடன், அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும். இயற்கை, பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்வதும், ஒட்டுமொத்தமாக அவர்களின் சவால்களை எதிர்கொள்ள உத்திகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். இந்தக் கல்வி நிறுவனங்களிலுள்ள தற்போதைய பாடத்திட்டங்கள் சுற்றுச்சூழல் துறையில் தற்போது நிலவும் விவரங்களைக் கொண்டதாகவும் விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கக் கூடியதாகவும் மறுசீரமைக்கப்பட வேண்டும். மாணவர்களைக் களப்பணிக்கு உள்ளாக்க வேண்டும், உள்ளூர் சுற்றுச்சூழல் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

பெரியவர்களுக்குக் கல்வி கற்பிப்பது நிச்சயமாகப் பெரிய சவாலாக இருக்கும். பிரபலமான ஊடகங்கள் இந்த விசயம் தொடர்பாக இருக்கும் சொற்பொழிவுகளையும் சிந்தனைச் செயல்முறைகளையும் மறுகட்டமைக்க வேண்டும். அதே நேரத்தில் இணையவழிப் படிப்புகளை மேற்கொள்ளவும், இணையவழி நூலகங்களை அணுகவும், குறிப்பாக வட்டார மொழிகளில் புத்தகங்களைக் கொண்டிருப்பவை, மற்றும் குடிமக்கள் அறிவியலில் பங்கேற்கவும் மக்களை ஊக்குவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் முடிவெடுப்பு மக்கள் அதிகம் பொறுப்பெடுக்கும் வகையில் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும். கொள்கையைத் தெரிவிப்பதற்காக சமூகங்களின் அரசியல் சக்தியை ஒருங்கிணைக்க அரசு பொது மன்றங்களையும் ஆலோசனைகளையும் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பெருந்தொற்றின் போதான சுற்றுச்சூழல் சுரண்டல் பலரிடம் நியாயமான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது – அவர்கள் தனிப்பட்ட நெருக்கடிகளுடனும் போராட வேண்டியிருக்கிறது. பெருகிவரும் உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றம் இந்தப் போரை எளிதாக்க விடாது. எதிர்காலத்தில் தொற்று நோய்களைத் தடுக்க, தற்போதைய இந்தியக் கொள்கை வரைவை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவை (சந்தேகத்திற்கிடமின்றி) நமக்குள்ளது. இன்று நம் நாட்டில் அதிகம் இல்லாதது பங்கேற்பு நடவடிக்கைக்குத் தயாரான தகவலறிந்த குடிமகன். சுற்றுச்சூழல் கல்விக்கான பல்-தலைமுறை (multi-generational) அணுகுமுறை இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

( சஞ்சனா செவலம் சுற்றுச்சூழல் கல்வி, சமூக ஈடுபாடு மற்றும் பங்கேற்புச் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் ஆர்வமுள்ள ஒரு சமூகச் சூழலியல் நிபுணர்.

மனசி ஆனந்த் வன ஆளுமை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட காலநிலைத் தீர்வுகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஒரு பல்துறை ஆய்வாளர். )

நன்றி: ‘Science The Wire’ இணைய இதழ் 24.12.2020
https://science.thewire.in/education/post-pandemic-india-environmental-education-public-participation/