பேச்சு மட்டுமே
மண்வளம் காப்போம்
விழிப்புணர்வு
அரங்கில்
எல்லோருக்கும்
தரப்பட்டது
தண்ணீர்
பிளாஸ்டிக் பாட்டிலில்!
தெய்வத் தாய்
புத்தகமே
இப்போதும் என்னை
குழந்தையாகவே நினைக்கிறது
போலும்…
செல்லமாய்
சொல்லித்தருவதிலும்
தாயாக
தூங்க வைப்பதிலும்!
தீராக் காதலி
முன் காதலர்கள்
எதிர்பாராமல்
தாங்கள் குடும்பத்துடன்
எங்கோ மூலையிலிருந்து
பார்த்தும் பாரா
தருணம்
தீர்ந்துப் போன
தித்திப்பு நினைவு எட்டிப்பார்க்கும்
ஆனால்
மனைவியின்
மாறா பேரன்பும்
தீரா தியாகமும் கட்டிப்போடும்
கூடவே கூட்டிப் போகும்
பெருங்காதலை…
மேக மோகம்
அதற்காகத்தான்
பதற்றத்துடன்
வேகமாக
தாகத்துடன்
மேகங்கள்
ஓடிடுதோ?
கூடி முத்த
மழையில் நனைய!
வியர்வை
காற்றும் வீசி
விட்டுத்தான் மரங்களிடம்
போகிறது…
வெயிலும் வெப்பத்தை
கொட்டியதும்
ஓய்வெடுக்கிறது…
மேகமும் மழையைப்
பொழிந்ததும்
காயப் போய்விடுகிறது
ஆனால்
குறையவுமில்லை
காயவுமில்லை
கலக்கவுமில்லை
விவசாயிகளின்
வியர்வை மட்டும்…
அழைப்பு
வழக்கொழிந்துதான்
போகிறது…
வந்தாரை கை கூப்பி
வரவேற்காமல்
வரவேற்பறையில்
காக்க வைத்து
காலிங் பெல்
அழுத்த வைத்ததில் இருந்து…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

