நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – செ. விஜயராணிநூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி
ஆசிரியர்: அ. கரீம் 
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ. 140

ஒரு எழுத்தாளன் எதற்காக எழுதுகிறான் என்றால், அவனது எழுத்துக்கான வெற்றி என்பது தனக்காக எழுதத் தொடங்கி வாசகனைத் தன் படைப்பின்வசம் இழுத்துச் செல்லும் வல்லமையே எழுத்தாளனின் வெற்றி. ஆனால் சில எழுத்துகள் அதையும் தாண்டி களமிறங்கிச் செய்யவேண்டியவற்றை அந்தந்த வாசகனுக்கு அவரவர் சுயமே கட்டளையிடும் அளவுக்கு சக்திமிக்கவை. பாரதியின், பெரியாரின் எழுத்தும் அப்படித்தானே?

அந்தவகையில் நம்மைப் பண்படுத்த, கேள்விகேட்க, குற்றம் சாட்ட, சவுக்கடி கொடுக்க, இயலாமையை இடித்துரைக்கத் தவறவில்லை. இதில் நம்மை என்பது நாம் தேர்ந்தெடுத்தோ தேர்ந்தெடுக்காமலோ ஆட்சி செய்பவர்களையும் தான். சமகால அரசியலை பட்டவர்த்தனமாகவும் பகடியோடும் பந்தாடியிருக்கிறார் தோழர் கரீம்.

கடைசிக் கதை தவிர்த்து அத்தனை கதையும் அதிகாலை எத்தனை ரம்யமானது? ஆனால் அதனை ஒரு பதட்டத்தோடு அணுக வைக்கிறார்.

இன்றைய காலச்சூழல் இயலாமையை எழுதித் தீர்க்கும் கலையும் பெருங்குற்றமாக தேசவிரோதச் செயலாகப் பார்க்கப்படுகிறது. “அரசு சொல்லச் சொன்னதை அப்படியே நீதிமன்றம் சொல்லியது” – இந்த ஒரு வரி போதாதா வீரியம் உணர்த்த? இதை “தேசவிரோதியின் எஞ்சிய குறிப்புகளில்” குறிப்பிடுகிறார்.

அனைத்தையும் படைத்தது கடவுளென்றால் அதன் உள்ளடக்கம் அன்பைத்தவிர வேறில்லையே. ஆனால் தீவிர மதவெறி என்ன செய்யும் என்பதை “அன்பே ஆசீயா..”வில் வாசிக்கையில் எதற்கு இந்த ம(ட)தவாதம்? என்கிற கோபமே எஞ்சுகிறது.

“அதிகாலை நிசப்தம்” போன்றதொரு கதையை இனியாரும் தயைகூர்ந்து யோசிக்கக்கூடச் செய்யாதீர்கள். ஏனெனில் இதுபோல 80களில் எழுதப்பட்டு பெரும்வரவேற்பைப் பெற்ற சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வும் “மீண்டும் ஜீனோ”வும் தற்போது மெல்ல மெல்ல நிதர்சனமாகிக் கொண்டிருப்பதை நாற்பதுகளில் பயணிப்பவர்கள் அறிவார்கள்.

தலைப்புக் கதையாகிய அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி பற்றிச் சொல்லவேண்டுமெனில், “இதிகாசத்தில் ரிஷியால் சாபமிடப்பட்டு ராமபிரானால் மீட்டுக் காப்பாற்றப்பட்ட அகல்யா, ராமசீடர்களால் வதம்செய்யப்படுகிறாள்” என்ற ரன்வீர் சொன்ன வரிகள் வலிகளின் உச்சமென்றால் குழந்தைகளின் பசி தாங்காமல் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்றுசொல்லி ஆற்றில் குதித்த கொடூரம்…நோய்த்தொற்று காலம் ஊரடங்கு அறிவிக்குமுன் அன்றாடங்காய்ச்சிகள் இருப்பதை மறந்த மெத்தனம் எத்தனைபேர் சாபம் பெற்றதோ! ஆசிரியரின் உரையில் சொன்னதுபோல “அந்தக் காலத்தில் அப்படி என்னதான் எழுதிக் கிழிச்சே”? என்ற கேள்விக்கு இது கதையாக மட்டுமல்ல நிஜமாகவும் எத்தனை மனங்களைக் குத்திக் கிழித்தது? இன்னும் கிழிக்கவிருக்கிறது தெரியுமா? அதற்குள் இன்னுமொரு ஊரடங்காமே?

“சாம்பல் பறவைகள்” கதை எஸ்.ரா.வின் ‘காலாட்படை பற்றிய குற்றப்பத்திரிக்கை’ சிறுகதையை நினைவூட்டியது.

‘வறண்ட நிலத்தில் பூ’ இந்தக் கதை கிருஷ்ணமூர்த்தியின் விட்டேத்தியான ஆணாதிக்க மனநிலையோடு தொடர்கிறது. பெரும்பாலானவர்கள் வாழ்க்கையைக் கடத்துவதும் ஓடுவதுமாகச் சொல்வதே வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற அற்புதம் அறியாதவர்கள். இதை இந்தக் கதை சூசகமாகச் சொல்கிறதே…. இங்கே கிருஷ்ணமூர்த்தி மனைவி கலையரசியிடம் கடைசியாக எப்போது கொஞ்சினார் என்று கலையரசி நினைத்துப் பார்த்து நினைவே வராமல் போன அவலமெல்லாம் கொடுமை. இதில் பிள்ளைகள் நிமித்தம் அவர்களுக்கு ஒத்தாசைக்காகப் பிரிந்திருக்கிறார்கள். சேர்ந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் காட்சி ஒன்றே திரைதான் வேறு என்பதுபோல கலையரசியின் புலம்பல் “என்ன பொழப்புஇது, காலம் முழுக்க ஆக்கிப்போடவும் ஆய் கழுவவுமே வாழ்க்க போச்சு”, என்பதாக இருக்கிறது.
நடிகை ஷோபாவின் ரசிகரான இவர் ஷோபா போன்ற சாயலில் கலையரசியைத் தேடித் தேர்ந்தெடுத்துக் கட்டிக்கொண்டவர் தன் முதலிரவு அனுபவம் நினைவில் நிழலாட நாற்பதாண்டு பின்னோக்கிச் சென்றவர், மனைவிக்கு வாங்கிவந்த பூவை அதே பழைய தோரணையோடு வெட்கத்தை மறைத்து அவரை அழைத்துக் கொடுப்பதோடு அதுவரை தான் நடத்திய விதத்திற்கு மன்னிப்பு கோருவதில் அந்த ஒற்றை முத்தத்தில் காலமெல்லாம் பட்ட ரோதனை மறந்து மன்னித்து விடும் பேரழகு. இதுதான் பெண். இப்படித்தான் பெண் வறண்ட நிலத்திலும் பூப்பூக்க வைக்கும் வல்லமை கொண்டவளாய் வாழ்வை இனிப்பாக்குகிறாள்.