நமக்கென்று ஒரு மனம் உண்டு. எதையும் சுதந்திரமாக சிந்திக்க. அது போல் தானே நம் எதிரில் நிற்பவருக்கும் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. எதிரில் நிற்பதால் அவர் எதிரி அல்ல .அருகில் நிற்க இடமில்லாததால் கூட அவர் எதிரில் நிற்கலாம். தவிர கருத்துதான் அவருக்கும் நமக்கும் முரணே தவிர. நபருக்கும் நமக்கும் முரண் இல்லை.
கருத்து ஒருமித்தல் நலம் பயக்கும் என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு என்பதை பலரும் இங்கு புரிந்து கொள்வதில்லை. கருத்து மோதலுக்காக உறவை முறித்துக் கொள்பவரும் உயிரைப் பறிக்க எண்ணுபவரும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைக் கூறுகிறது
“அன்பே ஆசியா !
செல்லமே யாஸ்மின் !!”
பாசிசம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் முதலில் பறிக்கப்படுவது கருத்து சுதந்திரம் தான். அதில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் கவிஞர்களின் குரல்கள் முதலாவதாக ஒடுப்படுகிறது. குரலற்றவர்களுக்காக ஒலிக்கப்படும் இவர்களின் குரலே ஊமையாக்கப்படுகிறது .
வெள்ளைக்காரனுக்கு எதிராக குரல் எழுப்பிய பாரதி தேசியக் கவியாக கொண்டாடப்படும் இதே ஊரில் இன்று கொள்ளைக்காரர்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் தேசவிரோதியாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதையே “தேசிய விரோதியின் எஞ்சிய குறிப்புகள்” குறிப்பிடுகிறது எதிர்காலத்தில் அறிவாளிகளுக்கு இந்த தேசத்தில் இடமில்லாமல் போய்விடும் என்ற பயம் உண்டாகிறது “அதிகாலை நிசப்தம்” என்னும் சிறுகதையை வாசிக்கும் பொழுது. மேலும் ஆட்டுப் புழுக்கையிலிருந்து ஆக்சிஜன் எடுக்கும் திட்டம் போன்ற அறிவாளித்தனமான பல திட்டங்கள் வந்து விடுமோ என்றும் அச்சம் கொள்ளத்தான் செய்கிறது. அவ்வாறு தான் தற்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது தோழர் அ.கரீம் அவர்களின் எழுத்து .
குல்லா அணிந்திருப்பதாலேயே ஒருவன் குற்றவாளியாகிட முடியாது. எல்லோரும் பார்ப்பது போல் நாமும் பொதுப்புத்தியோடு ஒருவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை . நம்மோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்து வாழ்பவரை எப்படி நம்மால் அத்தனை எளிதாக சந்தேகிக்க முடிகிறது. இவர் குற்றவாளி தான் என்று உறுதிபடக் கூற முடிகிறது என நம்மிடம் வினா எழுப்புகிறது
“இன்று இன்று தஸ்தகீர் வீடு”. இம்மண்ணில் வாழும் தலித்துகளும் இசுலாமியர்களும் தினம் தினம் தனது உண்மைத்தன்மையையும் தேசப்பற்றையும் நிரூபித்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?
அவர்களுக்காக அநீதி இழைக்கப்படும் போதும் கூட அறவழியிலும் சட்டத்தின் வழியிலும் போராடுபவர்களிடம் இன்னும் என்ன தான் எதிர்பார்க்கப்படுகிறது இந்த பொதுச் சமூகம் ?
சாப விமோசனத்தில் இருந்து ராமன் காப்பாற்றிய அகல்யாவை ராமனின் பக்தர்கள் காப்பாற்றத் தவறிவிட்டனர். அல்லது அவர்களே அவள் தன் பச்சிளங்குழந்தைகளோடு தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் காரணமாகி விட்டனர்.மக்களின் மனதையும் உணர்வுகளையும் சிறிது கூட புரிந்திடாமல், சிறிதும் அதைப் பற்றி கவலையுறாது பாசிச சிந்தனையோடு தான் எண்ணுவதை, தனது உணர்வுகளை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கும் திட்டங்களை மக்களைப் பற்றி சிந்திக்காமல் பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது அரசு என்பதை படம் பிடித்து காட்டுகிறது “அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி”.
எத்தனை தான் பிரிவினையை தூண்டி சூழ்ச்சிகள் செய்தாலும் வெள்ளம், பூகம்பம், கொரோனா போன்ற பேரிடர்கள் வரும்பொழுது மனிதம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை அழகாக காட்சிப்படுத்துகிறது “கானல் நீர் உருவங்கள்”.
உயிர்களுக்குள் எளிதாக நோயை உண்டாக்கி, பரப்பி, உயிரை அழித்து விடும் கிருமிகளைப் போல் எப்போதும் தொற்று நோயாக நம்மிடையே உலாவி வருவோரும் உண்டு. அவர்களுக்குள் மனிதம் என்று துளிர்க்கும்? அவர்களுக்குள் இருக்கும் கசடை தூர்வாரத்தான் நாமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். கசடு நீங்கி அவரும் நலம் பெறட்டும் . எத்தனை கிருமிநாசினிகள் இருந்தாலும் சானிடைசரும் ஆன்டிபயாட்டிக்கும் நம்மோடு வாழ்ந்து வருவதை இங்கு அருமையாக கூறியிருக்கிறார் தோழர் அ.கரீம் “கிருமி நாசினிகள்” சிறுகதை வழியாக .
எம்ஜிஆரை பற்றி கதை வாயிலாக மட்டுமே கேட்டறிந்தவன் என்பதால் “எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு” என்பது என்னளவில் பெரிதாக பொருந்த முடியவில்லை. ஆனாலும் ஒரு மேடைக் கலைஞரின் வாழ்க்கை என்பது வறுமையோடு தான் கழிகிறது. அன்றாடத் தேவைகளுக்கும் அடுத்தவரின் கையை நாட வேண்டியுள்ளது என்னும் நிதர்சனத்தை கூறியுள்ளார் தோழர் அ.கரீம்.
எழுத்தாளர்களில் சிலர் யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்று புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள். விருதுகளும் பெறுகிறார்கள் . ஆனால் சிலர் தங்கள் அரசியலை நன்கு உணர்ந்து பெயருக்காகவும் புகழுக்காகவும் பணத்திற்காகவும் விருதுக்காகவும் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களது எழுத்து என்றும் ஆள்பவர்களை சிறிதும் தொந்தரவு செய்யாது. மாறாக ஆள்வோரின் புகழ் பாடும். குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்காது. அழகியலைக் கொண்டாடித் தீர்க்கும். அரசியல் என்றால் காத தூரம் ஓடும். அப்படிப்பட்ட எழுத்தாளர்களை அவர்களின் எழுத்து ஒருநாள் மனசாட்சியாக மாறி அவர்களின் பிழைகளைத் தட்டிக்கேட்டால் என்ன நிகழும் என்பதைக் கூறுகிறது “சாம்பல் பறவைகள்”
இஸ்லாமியர்கள் என்றாலே இறைச்சிக்கடை, ரம்ஜான் பிரியாணி, என்று பொதுப்புத்தியில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது தான் “பஷிரின் கடைசிக்கிடாய்”.
பஷிரின் மனைவி இறந்த பின்பு அவருக்கு துணையாக இருப்பது செங்கிடாய் மட்டுமே. பஷிர் அந்தக் கிடாயை ஒரு குழந்தையைப் போல வளர்த்து வருகிறார்.உறவுகளை இழந்ததை விட, அவர்களின் பிரிவை விட ,செங்கிடாயின் பிரிவு பஷிரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிப் போகிறது.காணாமல் போன கிடாய் மீண்டும் கிடைத்து விடுமா ?கிடைக்காதா என்று பஷிரோடு சேர்ந்து நமது உள்ளமும் ஏங்குகிறது இச்சிறுகதையை படிக்கும் போது.
பெரும்பாலான ஆண்கள் காலம் கடந்த பின் தான் புரிந்து கொள்கின்றனர் மனைவியையும் ,மக்களையும், ஏன் உலகையும் கூட . அதைத்தான் பெரியவர்கள் “கண்கட்ட பின்பு எதற்கு சூரிய நமஸ்காரம்” என்பார்கள் . நல்லவேளை கிருஷ்ணமூர்த்திக்கு கண் கெடும் முன்னே அவருக்காக தினமும் உழைத்த ஓய்வில்லாச் சூரியன் அவரது மனைவி கலையரசியை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டது. வறண்டு போன நிலமான அவர் மனைவியின் வாழ்வில் அதிசயமாய் அன்று ஒரு பூ பூத்து விட்டது . அது மல்லிகைப் பூவாக அவர் தலையிலும் புன்னகைப் பூவாக இருவரது உதடுகளிலும் அழகாய் இதழ் விரித்து செழித்தது.
நூலின் தகவல்கள்
நூல் : அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி
தமிழில் : அ.கரீம்
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ. 140/-
எழுதியவர்
ச.முகிலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி தோழர் மிகச் சிறப்பான அறிமுக உரை நன்றியும் அன்பும்…
அ. கரீம்