மருதன் (Marudhan) எழுதிய அகதிகள் (Agathigal) - நூல் அறிமுகம் - உள்நாட்டிலும் வாழ வழியில்லாமலும், உயிர் காக்க தப்பிப்புகும் வெளிநாடுகளிலும் - https://bookday.in/

அகதிகள் (Agathigal) – நூல் அறிமுகம்

அகதிகள் (Agathigal) – நூல் அறிமுகம்

எல்லோருக்குமான பூமி கோடுகளால், நாடுகளாய் வரையப்பட்ட பின்பு ஒரு மனிதன் நிர்க்கதியற்று இன்னொரு நாட்டின் எல்லையை மிதிக்கும் போது அகதியாக மாறுகிறான். நிலத்தின் திரிபாக மாறும் அவனை உளவியல் ரீதியாக குற்றவுணர்ச்சி பெறச் செய்து, தாய் மண்ணை மீண்டும் மிதிக்கும் வரை சன்னஞ் சன்னமாக செத்துப்பிழைக்கிறான். உள்நாட்டிலும் வாழ வழியில்லாமலும், உயிர் காக்க தப்பிப்புகும் வெளிநாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் அலை கழிகிறது அவனது வாழ்வு. பறவைகளும், கடல்வாழ் உயிரினங்களும் கூட எல்லையற்ற உலகப் பரப்பில் வான்வழியாகவும், நிலம் வழியாகவும் விரும்பிய நிலப்பரப்பிற்குள் எல்லாம் சென்று வருகையில், மனிதன் மட்டும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு நரக வேதனை அடைகிறான்.

உலகமெங்கும் உள்ள அகதிகளின் வாழ்க்கையை தொகுத்து மனம் பதைக்க வைக்கும் கட்டுரைகளாக்கி நமக்கு தந்துள்ளார் மருதன். மொத்தம் 26 கட்டுரைகள் வாசித்து கொண்டிருக்கும் நீங்கள் கூட ஒர் நாள் அகதிகளாக மாற்றப்படக்கூடும் என்ற எச்சரிக்கையோடு நூலை நிறைவு செய்கிறார். எங்கெல்லாம் போர்களும், கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உருவாகுகிறதோ அங்கெல்லாம், ஒரு புதிய வர்க்கமாக அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள். கனவிலும் நினையாத ஒரு கொடூரமான வாழ்வு நோக்கி வலிந்து தள்ளப்படுகிறார்கள். இலங்கை, பர்மா, ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீன், ஜெர்மனி, அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள் என அகதிகளின் வரைபடம் என்பது நீளமானது, நியாயமற்றது.

சமீப காலத்தில் ரோகிங்கியா முஸ்லீம்களின் துரத்தப்பட்ட வரலாறு விரிவாக பேசப்பட்டிருக்கிறது. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எங்கு அடைக்கலம் புகுந்தார்கள்? இப்போது என்னவாக இருக்கிறார்கள்? என்பது தீவிரமாக அலசி ஆராயப்பட்டிருக்கிறது. 5 கட்டுரைகளில் அவர்களைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் 60000 பேர் நாடு துரத்தப்பட்டு அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த வரலாறும் பேசப்படுகிறது. நாம் கண்கண்ட கண்ணீரின் சாட்சியமாக துயரத்துடன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் அவலக்காட்சிகளை அனுதினமும் காண்கிறோம் . ஆசைகளை துறக்கச் சொன்ன, சகமனிதர்கள் மேல் அன்பைச் செலுத்தச் சொன்ன, புத்தனின் சிந்தனையை சுமக்கும் பெளத்த நாடுகள் பலவும் சக மனிதனை துரத்தியடித்து அலை அலையாய் அடித்து அகதியாய் துவைத்தெடுத்திருக்கிறது. ஒரு தத்துவத்தின் திரிபாக பௌத்தத்தை அணுக வேண்டியிருக்கிறது.

1951 மற்றும் 1967 ஆண்டுகளில் அகதிகள் நிலை தொடர்பான ஐ.நாவின் உடன்படிக்கையில் 147 உலக நாடுகள் கையெழுத்திட்ட நிலையில் இன்று வரை இந்தியா கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. திபெத்தியர்கள், பாகிஸ்தான், பங்களா தேஷ், சோமாலியா, பாலஸ்தீன், பர்மா, பூடான் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 10 மில்லியன் அகதிகள் இந்தியா வந்து தங்கி திரும்பிச் சென்றுள்ள போதும் அகதிகள் குறித்தான சர்வதேசிய சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாமல், 1946 இல் உருவான அயல் நாட்டுக் காரர்கள் சட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இன்று வரை அனுமதித்து வருகிறது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் தரவின்படி 2015 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவில் தங்கி இருப்பதாக கூறுகிறார்கள். இந்தச் சூழலை வைத்துத் தான் இந்தியாவின் குடியுரிமை சட்டங்களை பார்க்க முடியும். எதற்காக இந்த சட்டங்களை அமுல்படுத்த கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்றால் அசாம், மணிப்பூர், நாகாலாந்து, மேகலாயா உள்ளிட்ட வடகிழக்கு எல்லையோர மாநிலங்களில் வாழும் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்படும் அபாயம் இருக்கிறது. இது உள்நாட்டில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தகூடியது. தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்ஆர் சி நிர்க்கதியாய் இந்திய மக்களை நிறுத்திவிடும் அபாயமிருப்பதால் கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. இதற்கு உதாரணங்களாய் இரண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறார்.

1991 இல் சோவியத் யூனியன் சிதறிய போது லட்சக்கணக்கான ரஷ்யர்கள் நாடற்றவர்களாக மாறிப்போனார்கள். சோவியத் யூனியன் கடவுட் சீட்டு இருந்தது, ஆனால் நாடில்லை. அதே போல் பங்காள தேஷ் பிரிந்த போது 3 லட்சம் உருது பேசும் பீகாரிகள் தேசமற்றவர்களாக தெருவில் நின்றார்கள். 1982 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தால் 8 லட்சம் ரோகிங்கியா முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்தின் அபாய உதாரணங்கள் இவை. உலகம் முழுக்க 68 மில்லியன் மக்கள் தங்கள் நாடுகளில் இருந்து விரட்டியடிக்கபட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சியான புள்ளி விபரம் தகவல் தருகிறது. அகதிகளை அதிகம் உருவாக்கும் ஐந்து நாடுகளை பட்டியலிட்டிருக்கிறார்.

1. சிரியா – 60 லட்சம்
2. ஆப்கானிஸ்தான் – 26 லட்சம்
3. தெற்கு சூடான் – 24 லட்சம்
4. மியான்மர் – 12 லட்சம்
5. சோமாலியா – 10 லட்சம்

புத்தகம் முழுவதும் அகதிகள் குறித்தான முழு விபரங்களையும் துல்லியமாக தொகுத்து தந்திருக்கிறார். மனம் பதைபதைக்க இந்த ஏதிலிகளின் கதை நாம் வாழும் இந்த வாழ்க்கையை சந்தேகப்பட வைக்கிறது. அசரடிக்கும் தகவல்களை வாசிப்புச் சுவாரசியத்தோடு நமக்கு அளித்த எழுத்தாளர் மருதன் அவர்கள் மிகுந்த பாராட்டிற்கு உரியவர்.

நூலின் தகவல்கள் 

நூல் : அகதிகள் (கட்டுரைகள்)
எழுத்தாளர் : மருதன்
பக்கம் : 208
விலை :  225
ஆண்டு :  2018
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

நூல் அறிமுகம் எழுதியவர் : 

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *