அரசியலும் பொருளாதாரமும் நெருங்கிய தொடர்புடையது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் பொருளாதார அடிப்படைக்கும் மேற்கட்டுமானம் (அரசியல் மற்றும் சட்டம்) ஆகியவற்றுக்கும் இடையே இயங்கியல் தொடர்புகளைப் பற்றி விளக்கினார்கள். அரசியல்-பொருளாதார அடிப்படையில் உற்பத்தியின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காணப்படுகிறது என்று குறிப்பிட்டனர். லெனின், அரசியலானது பொருளாதாரத்தைவிட முன்னுரிமை அளிக்கத்தக்கது என்றும் இது குறிப்பாக சமூக போராட்டத்திற்கானது என்கிறார். தொன்மை அரசியல்-பொருளியல் அறிஞர்களின் கருத்துப்படி, அரசியல்-பொருளாதாரமானது முதலாளித்துவப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான பொறுப்புகளை உடையதாகும் என்கின்றனர். நவீன அரசியல்-பொருளாதாரமானது சமுதாயத்தில் தலையீடு செய்வதாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய புத்தகமான “A Contribution to the Critique of Political Economy” என்பதில் அரசியல்-பொருளாதாரம் என்பது நாட்டின் மக்கள்தொகை, மக்களிடையே குழுக்களின் பகுப்பு, நகரம், நாடு, ஆண்டு உற்பத்தி, நுகர்வு, விலை போன்றவற்றுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். அரசியல் (மேற்கட்டுமானம்) மற்றும் பொருளாதாரம் (அடிப்படை) என்பது சூழ்நிலைக்கு ஏற்றதாக உள்ளது. மார்க்சிய நிலைப்பாடானது, நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய விவசாயக் கட்டமைப்பின் மாற்றம் விவசாயப் பிரச்சினையின் தீர்வு மூலம் நிகழ்கிறது என்கிறார். தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் விவசாயம் எந்த வெளிப்புறத் தூண்டுதலையும் பெறவில்லை விவசாயத்தில் தோன்றிய வெளிப்புறத் தூண்டுதல்களால் தூண்டுதல்கள் மற்றும் தொழில்துறையில் சார்பு தலைகீழாக மாறியது. மேற்கட்டுமானமும், அடிப்படையும் முரண்பாடு உடையது என்று மா சே துங் குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொருத்த அளவில் பிரதன் என்பவர் அரசியல்-பொருளாதாரம் என்பது சமுதாயத்திற்கு ஆற்றலைப் பகிர்ந்தளிப்பது என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் வாணிப நோக்கிற்காக நுழைந்து பின்னால் அது அரசியல் சார்ந்த நிலைப்பாட்டில் பயணித்து பொருளாதார வளத்தைச் சுரண்டியது. இதில் வேளாண்மைத்துறையானது முதன்மை பாதிப்பை எதிர்கொண்டது. இடைத்தரகர்களை உருவாக்கி உழவர்களிடமிருந்து கட்டாய வரிவசூல் செய்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு விவசாயிகளின் எழுச்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பொருளாதார உத்திகளைப் பின்பற்றுவதில் அரசியல் முக்கியப் பங்கினை ஆற்றியது. நேருவின் ஆட்சிக் காலம் தொடங்கி இந்திரா காந்தியின் முதல் கட்ட ஆட்சிக் காலம் முடிய மூடிய பொருளாதார முறை பின்பற்றப்பட்டது. இந்திரா காந்தியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலம் தொடங்கி மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் முடியச் சந்தைப் பொருளாதார முறைப் பின்பற்றப்பட்டது. மோடியின் ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனம் சார்ந்த பொருளாதார உத்திகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மூடிய பொருளாதார முறையில் உள்நாட்டு அளவில் பல்வேறு சீர்திருத்தங்கள் இந்தியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலை போக்கப்பட்டு தற்சார்பினை அடைய முடிந்தது. நாட்டை பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்காகப் பொதுத்துறைச் சார்பு உத்திகள் முன்னெடுக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் நடவடிக்கையினால் இந்தியாவின் வர்த்தக நிலை, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது. இதனால் நுகர்வோர் பெரும் பயனை அடைந்தனர், பொருளாதார வளர்ச்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. ஆனால் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது. பெருநிறுவனச் சார்பு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள், குறு, சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், கிராமப்புற மக்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1949ல் வேளாண்மைக்கான ஜெ.சி.குமரப்பா குழுவானது இடைத்தரகர்களை ஒழிப்பது, குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, கூட்டுறவு வேளாண்மை போன்றவற்றைப் பரிந்துரை செய்தது. இதில் இடைத்தரகர்கள் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிற்று அரசியல் காரணங்களால் நிலஉச்சவரம்பு, குத்தகைச் சீர்திருத்தம் போன்றவை இன்றுவரை முழுமைக்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பஞ்சம், பட்டினி, வறுமை, அதிக இறப்பு போன்றவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த நிலை சுதந்திரம் அடைந்த பிறகும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு உடனடித் தீர்வாக உணவு இறக்குமதி செய்தார். நீண்ட கால அடிப்படையில் உணவுப் பற்றாக் குறையைப் போக்க பல்வேறு செயல் திட்டங்களைச் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை எட்டியது. ஆனால் இது வேளாண்மையில் ஏற்றத் தாழ்வுகளை (வட்டாரம் மற்றும் விவசாயிகளிடையே) அதிகரித்தது.

நில உச்சவரம்பு சட்டத்தின்படி (நில உச்சவரம்புச் சட்டம் 1961) உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அவற்றை நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் விளைவு நிலமற்ற கிராமப்புறக் குடும்பங்கள் மொத்த அளவில் 1953-54ல் 23.09 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 7.41 விழுக்காடாகக் குறைந்தது. ஆனால் உபரி நிலங்கள் கையகப்படுத்துவது மிகவும் குறைவாகவே இருந்தது. இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யாதா நில உடைமையாளர்கள் மொத்தத்தில் 4.99 விழுக்காடாக இருந்தது 24.36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குத்தகை சீர்திருத்தம் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றும், வாடகையின் அளவும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் நடைமுறைப் படுத்தியது. இதனால் 1953-54ல் மொத்த சாகுபடிப் பரப்பில் குத்தகைச் சாகுபடிப் பரப்பானது 20.34 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 11.30 விழுக்காடாகக் குறைந்தது. நில உச்சவரம்பும், குத்தகை சீர்திருத்தமும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டு நாட்டின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றத் தொடங்கியது. இது தொடர்ந்து அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. மக்கள் தொகை 1951 முதல் 1981வரை அதிகமாக அதிகரித்தது இதனால் பல்வேறு பயன்பாட்டுக்காக நிலத்தின் தேவையும் அதிகரித்தது. 1991க்குப்பின் புதியப் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறையினால் உள்கட்டமைப்பினை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் நிலம் மாற்றுப் பயன்பாட்டிற்குப் (குடியிருப்பு, பல்வேறு உள்கட்டமைப்புகள்) பயன்படுத்தப்பட்டது இதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது தொடர் நிகழ்வாகிப் போனது. சாகுபடி செய்யத் தகுதி வாய்ந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றியது. நிகர சாகுபடி பரப்பு குறையத் தொடங்கியது. இதனால் 1953-54ல் சராசரி நிலக் கையிருப்பு 1.95 ஹெக்டேராக இருந்தது 2013-14ல் 0.59 ஹெக்டேராகக் குறைந்ததுள்ளது.

உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், கடன் பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தருதல் ஆகியன பசுமைப் புரட்சியின் முக்கிய உத்திகளாக இருந்தன. இவற்றை 1980-90வரையில் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தியது (முதல் கட்ட காலத்தில் உணவு தானியத்திற்கானதாகவும், இரண்டாவது கட்ட காலத்தில் பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்திக்கானதாவும் மூன்றாவது கட்ட காலத்தில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்திக்கானதாகவும் இருந்தது) இதன் விளைவு உணவுப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்தது. பசுமைப் புரட்சியினால் வேளாண்மை மீதான பொதுச் செலவுகள் துவக்கத்தில் அதிகரித்தது, விவசாயிகளுக்கு இடுபொருட்களுக்கான மானியம் வழங்கப்பட்டது, வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேளாண்மை மூலம் பெரும் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது. எதிர் விளைவுகளாக மண்வளம் குறைந்தது, புதிய வகைப் பூச்சிகள் உருவாகி வேளாண் பயிர்களைத் தாக்கியது, நீர் இறைப்பிற்கு மின் மோட்டார்களின் பயன்பாடு அதிகரித்ததால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டது, பசுமைப் புரட்சி உத்திகளைப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளால் அணுக முடியாமல் இருந்தது, வோளண்மையில் முதலாளித்துவம் பெருக்கமடைந்தது, வேளாண் இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து, வேளாண் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் முறைசார நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் பெற்று கடன் பொறியில் வீழ்ந்தனர், இதனால் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்தது.

1980களில் இரண்டாவது பாதியில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உணவல்லா வேளாண் விளைபொருட்களின் தேவை பன்னாட்டு அளவில் அதிகமானதால் வருமான நோக்கின் அடிப்படையில்; உணவல்லா சாகுபடியை நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் பாரம்பரிய வேளாண்மை சாகுபடி குறையத் தொடங்கி நவீன வேளாண்மை அதிகரித்தது. வேளாண் வர்த்தக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வேளாண் பொருட்கள் தங்குதடையின்றி வரத் தொடங்கியது. தொழில்நுட்ப இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பிற்கு இது உறுதுணையாக இருந்தது. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தியும் அதிகரித்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலங்களில் பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்கெடுப்பினை உறுதிசெய்யவும் அயல் நாட்டு வர்த்தக நிலையை மேம்படுத்தவும் வேளாண்மைத் துறையில் பலவேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். ஆனால் பன்னாட்டு அளவில் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்தங்கிய நிலையில் இருந்ததால், வளர்ந்த மற்றும் இந்தியா போன்றே சில வளரும் நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையே இருந்தது. மேலும் அரசானது வேளாண் துறைக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டும் தொழில்துறை, சேவைத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடுகள் குறைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பானது தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது வந்தது.

1995ல் இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தபின் அதன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய அங்கமாக இருந்தது. வேளாண் மானியம் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்கவேண்டும், வேளாண் வர்த்தகத் தடைகளைக் களைவது, நாட்டின் மொத்த நுகர்வில் 3 – 5 விழுக்காடு பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, பொதுவிநியோகம் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தித்தது. பச்சை அறை (Green Box) மற்றும் நீல அறை (Blue Box) போன்றவற்றில் வளர்ந்த நாடுகள் மட்டுமே இடம்பெற்று, சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய நிலையினை அளவுகோலாக்க வைத்து வர்த்தக பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தியதால் இந்தியாவின் துணி, தோல் போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளது. மிகவும் வேண்டிய நாடு (Most Favoured Nation) என்ற அடிப்படையில் பாகுபாடு, இந்தியப் பாரம்பரிய வேளாண் மற்றும் தாவர உற்பத்தி பொருட்கள் பன்னாட்டு பெருநிறுவனங்களால் காப்புரிமையைப் பெற முயன்றது போன்றவை உலக வர்த்தக அமைப்பினால் இந்தியா எதிர்கொண்ட முக்கியச் சவால்களாக இருந்தது. அதேசமயம் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்குப் பின் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் உணவு நுகர்வுப் பழக்கத்தில் பெரும் மாறுதலுக்குள்ளானது. இதனால் பருப்பு மற்றும் தாவர எண்ணெய்யின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்காததால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்து. வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலாளர்கள் வோளண் சாரத் தொழிலில் ஒப்பீட்டு அளவில் அதிக கூலி அல்லது ஊதியம் கிடைத்ததால் பெருமளவிற்கு அதிலிருந்து விடுபட்டு மாற்று வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் அரசு கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இது பெருமளவிற்குக் கிராமப்புறப் பருவகால வேலையின்மையைக் குறைப்பதற்கு உதவியது. இவ் வேலைவாய்ப்பினால் கிராமப்புற மக்களின் வேளாண் சாரா வருமானம் அதிகரித்து, உணவல்லா நுகர்வுத் தேவையானது உயர்ந்தது. மொத்த நுகர்ச்சி செலவில் உணவல்லாச் செலவினத்தின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மை இந்தியப் பொருளாதாரத்திற்கு அளித்து வந்த பங்களிப்பு வெகுவாகக் குறைந்தது அதேசமயம் பெருமளவிற்கு ஆண் விவசாயிகள் வோளண்சாரத் தொழிலை நோக்கிச் சென்ற அளவிற்குப் பெண் விவசாயிகள் செல்லாததால் வேளாண் தொழிலில் ஈடுபட்ட பட்டவர்கள் பெருமளவிற்குக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தியா உலக வர்த்தக அமைப்பினால் பெற்ற நன்மையைவிட எதிர்மறையே ஓங்கி இருக்கிறது. 2005ல் உலகமயமாக்கலின் நீட்சியாக இந்தியா ஏற்றுமதியைப் பெருக்கும் நோக்கில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இதற்காகப் பெருமளவிற்கான வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு விவசாயிகள் நிலமற்றவர்களாக மாற்றமடைந்தனர்.

மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாதல், தொழில் மயமாதல், உள்கட்டமைப்பு உருவாக்கப்படுதல் போன்ற காரணங்களினால் இந்தியாவில் நீர்நிலைகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வேளாண்மைச் சாகுபடிக்குப் பயன்பாட்டிலிருந்த பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகமாக நீர் (பயன்படுத்துவது) செறிவுடைய பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்வதாலும், மின்மோட்டார் பயன்பாடு அதிகமாக உள்ளதாலும், குழாய்க் கிணற்றுப் பாசனம் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இந்தியா உலகிலேயே அதிக வறண்ட நிலப்பரப்பை உடைய நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனவே தொழில்நுட்பப் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு விவசாயிகள் பயிர்செய்ய மானிய அடிப்படையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இம் முறை இந்தியாவில் பாரம்பரிய சாகுபடி முறையிலிருந்து எளிதாக விவசாயிகள் விடுபட முடியாதல் இது தகுந்த வெற்றியடையவில்லை. தற்போது இந்தியா வறட்சியை தாக்குப்பிடிக்கும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது 2023ஆம் ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கது. இந்தியா உலக அளவில் குறைஊட்டசத்துடன் வாழும் மக்களில் முதன்மை இடத்தில் உள்ளது. சிறுதானியங்கள் வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். இந்தியாவின் அதிக சாகுபடி பரப்பானது ஆண்டில் பெரும் பகுதி வறண்ட நிலையை உடையது. உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 12 மில்லியன் மெட்டிரிக் டன் சிறுதானிய உற்பத்தி நடைபெறுகிறது. இந்திய சுற்றுச் சூழல், நீர்வள ஆதாரம் குறைதல், நுகர்வு மாற்றமடைந்திருப்பது போன்ற நிலைகளை முன்னிறுத்தி அரசு சிறுதானிய உற்பத்திக்காக மேலும் முன்னுரிமையை அளிக்க வேண்டும்.

இந்தியா பசுமைப் புரட்சி மற்றும் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டபின் அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றைச் சாகுபடி செய்ய ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவு சுற்றுப்புறச் சூழல் மற்றும் நுகர்வோர் நலன் பாதிப்படைந்துள்ளது. எனவே அரசு இயற்கை வேளாண்மையினை நோக்கிய பார்வையை முன்னெடுத்துள்ளது. ஆனால் அரசு இதற்கான ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவிற்கு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரங்கள் வேளாண்மையில் அதிக அளவிற்குப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஒருபுறம் நேர்மறையாக நோக்க முடியும் காரணம் வேளாண்மை தகுந்த நேரத்தில் பயிர் சாகுபடிசெய்யத் துவங்குவது முதல் அறுவடை செய்வது வரை இதற்கான முக்கியத்துவம் காணப்படுகிறது. அதே சமயம் இதனால் இந்தியாவில் அதிக அளவில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்து வரும் விவசாயக் கூலிகளின் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண் சாரா வேலைகளுக்கு அதிகமாகச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்நிலையைப் பொறுத்தவரையில் வேளாண் சார்புத் தொழிலில் தேவைக்கு அதிகமான விவசாயிகள் வேலைக்கான பங்கேற்பு வீணாகுவது குறைக்கப்படுகிறது. அதே சமயம் வேளாண் சாராத் தொழிலை நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போதுமான வாய்ப்புக்கள் உள்ளுரில் கிடைக்காததால் நகரங்களை நோக்கிச் செல்லுகின்றனர். இதனால் நகரமயமாக்கல் ஏற்பட்டு விளைநிலங்கள் மனைத் தொழிலுக்காகவும், தொழிற்சாலைகளுக்கும், உள்கட்டமைப்பிற்கும், மடைமாற்றம் ஏற்பட்டு நிகர பயிரிடும் பரப்பு குறையத் தொடங்குகிறது.

வேளாண்மையின் முக்கிய இடுபொருட்களாக இயந்திரங்கள் பயன்பாடு உள்ளதால் சிறு குறு விவசாயிகளால் இதனைச் சொந்தமாகப் பெற இயலாத நிலை காணப்படுகிறது. தனியார் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வேளாண் இடுபொருட்களின் செலவு அதிகரிக்கிறது. இது போன்றே இதர இடுபொருட்களின் விலைகள் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதைகள்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ் அதிகரிக்கின்ற இடுபொருட்களின் செலவிற்கு ஏற்பத் திரும்பு வீதம் விளைபொருட்களுக்குக் கிடைக்கப் பெறாததால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். இதன் எதிரொலியாக விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்த அரசு விவசாயிகளை ஊக்குவித்துவந்தாலும் கடந்த காலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்துள்ளதால் இதன் மூலம் பெறப்படும் எருவின் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இது போல் மரங்கள் வழியாகப் பெறப்படும் தழை உரம், பசுந்தாள் உரம் போன்றவற்றிலும் பல்வேறு காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அரசு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை முன்னெடுப்பது அவசியமாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் இரண்டு பத்தாண்டுகளில் தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் வேளாண்மைக்கான கடன் வழங்கப்பட்டது. ஆனாலும் நிதி நிறுவனங்கள் வேளாண்மைக்கான கடன் மொத்தக் கடனில் சிறிய அளவே பங்கினைப் பெற்றிருந்தது. நிறுவனம்;சாராக் கடன் வழியாக விவசாயிகள் பெருமளவிற்கு அதிக வட்டியில் கடன்பெற்று வந்ததால் விவசாயிகளைக் கடன் பொறியில் சிக்கவைத்தது. இதன் அடிப்படையில் இந்திரா காந்தி இரண்டு கட்டங்களாக வங்கிகளைத் தேசிய மயமாக்கி வேளாண்மைக்கானக் கடன் வழங்குவதை முன்னுரிமை என்று அறிவித்தார். இத்துடன் கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கி, கூட்டுறவு வங்கி போன்றவற்றின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. 1991க்குப்பின் நரசிமம் குழுவின் பரிந்துரையின்படி வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1988ல் தாராளக் கடன் முறையும், 2009-10ல் மிகக் குறைவாக 4 விழுக்காடு வட்டிக்கு வேளாண் கடனும் வழங்கப்பட்டது. தகுந்த காலத்தில் பெறப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயக் கடனின் வட்டி பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு நடைமுறையில் வந்தபின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை ரகங்கள் பயிரிடுவதன் வழியாக வேளாண் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை எதிர்கொள்ள விவசாயிகள் அதிக கடன் பெற வேண்டிய நிலை உருவானது. 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகள் அதிக அளவில் காணப்படுகிறது இதற்கு முக்கியக் காரணங்களில் முதன்மையானதாக வேளாண் கடன் பளு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019க்குப்பின் விவசாயிகள் வேளாண் பணிகளைத் துவக்குவதற்காகக் கடனாக இல்லாமல் மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் சிறு, குறு விவசாயிகளுக்குப் பணமாக வழங்கி வருகிறது. இவ்வாறு பல்வேறு வேளாண்மைக்கான கடன் அளிப்பு முறைகளில் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்டாலும் தற்போதும் வேளாண்மைக்கான கடனானது நிறுவனம் சாரா வழியாக மூன்றில் ஒரு பங்கு பெறப்படுகிறது இது 1951ல் 7.2 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையினைப் போக்க அரசு வேளாண்மையைத் தொழிலை லாபகரமானதாக உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

வேளாண்மை உற்பத்தியில் உபரியை விவசாயிகள் விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர். வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்துதலின் வழியாகப் பெறப்படும் வருமானமானது விவசாயக் குடும்ப வருமானத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக வேளாண் உற்பத்தியை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. இதனால் இடைத் தரகர்களின் சுரண்டல்கள் கட்டுப்படுத்தவும், உரிய விலை கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் பெருமளவிற்கு முறைப்படுத்தா விற்பனை அமைப்புகள் வழியாகவே அதிகமாக விளைபொருட்களைத் தற்போதும் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் இடைத்தரகர்கள், வணிகர்கள், முகவர்கள், உள்ளிட்டோர் பயனடைகின்றனர். ஆனால் விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறது. வேளாண் மண்டிகள் போதுமான அளவில் இல்லாததும், கிராமங்களுக்கானப் போக்குவரத்து இன்மையாலும், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முன்பணமாக வணிகர்களிடம் பெறுவதாலும், சேமிப்பு கிடங்கு வசதியின்மையாலும், விவசாயிகளுக்குச் சந்தைகளைப் பற்றிய தெளிவின்மையாலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைப் போக்க அடுத்த தலைமுறைக்கான சந்தை சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC மாதிரிச் சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவது, ஒப்பந்தச் சாகுபடி முறையை மேற்கொள்வது, தனியார் மற்றும் கூட்டுறவுச் சந்தைகளை நிறுவுதல், சிறப்புச் சந்தைகளை உருவாக்குவது, தனியார்-பொது பங்கேற்புடன் சந்தைகளை மேம்படுத்துவது, தரம் பிரித்தல் மற்றும் தரப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. 2016ல் நிதி அயோக்கினால் மாதிரிச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து ந- e-NAM 2016ல் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC கள் இத்துடன் இணைக்கப்பட்டு விவசாயிகள் தங்களின் பொருட்களை நாடுமுழுவதும் அதிக விலைக்கு விற்பனைச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2020ல் இந்திய அரசானது மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அதன்வழியாக விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அதிக விலைக்கு இந்தியாவின் எப்பகுதியிலும் விற்பனை செய்ய வழி வகுத்தது. ஆனால் இச்சட்டத்தால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயனடைவது சாத்தியமற்றது என்ற அடிப்படையில் இச்சட்டங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இக் கடுமையான எதிர்ப்பினால் அரசு இச் சட்டங்களை விலக்கிக்கொண்டது. இந்திய விவசாயிகள் பெருமளவிற்கு APMC மண்டிகளில் தங்களின் விளைபொருட்களை விற்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே அரசு அதிக அளவிற்கான மண்டிகளை உருவாக்கித் தருவதும், அம் மண்டிகளில் அனைத்துவிதமான கட்டமைப்பினை உறுதி செய்வதும், இதில் ஏறப்படும் ஊழல்களைத் தடுப்பதும், வேளாண் பொருட்களுக்கு அரசு அறிவிக்கின்ற விலையினைக் கிடைக்க வழிவகை செய்வதும், கிடங்குகளை உருவாக்குவதும் முக்கியத் தீர்வாக அமையும். இத்துடன் அறுவடைக் காலங்களில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை உருவாக்கித் தருவதுடன் உடனுக்கு உடன் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்வதும் தலையாயக் கடமையாக இருக்கும்.

அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது என்ற அறிவிப்பை 2016ல் வெளியிட்டு 2022ல் இதனை அடைய காலநிருணயம் செய்தது ஆனால் 2016ல் ரூ.8000 ஆக இருந்த வருமானம் 2022ல் ரூ.12400 என்ற அளவை மட்டுமே அடைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படைக் காரணம் விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சந்தையில் தகுந்த விலை கிடைக்காததாகும். குறைந்த பட்ச ஆதார விலையானது 23 விளைபொருட்களுக்கு மட்டுமே தகுதி உடையதாக உள்ளது. இதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. குறைந்த பட்ச ஆதார விலை நிருணயம் செய்வதிலும் தேசிய விவசாயிகள் குழு அறிக்கையின் அடிப்படையில் பின்பற்றவில்லை. இதற்கு மாற்றாக அரசு பன்னாட்டுப் பெரிய நிறுவனங்களைக் களம் இறக்கி விவசாயத்தை ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்ய முயற்சி செய்கிறது. அரசு குறைந்த பட்ச ஆதார விலைக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க முயல்கிறது. இதனால் இந்தியாவில் பெருமளவிற்குச் சாகுபடி செய்யும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்க அரசு குறைந்த பட்ச ஆதார விலையை அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளும் பயனடையவும் சட்டப்பூர்வமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனைச் சாக்குப் போக்கு காட்டி காலம் தாழ்த்துவது என்பது விவசாயிகளுக்கான சமூகநீதியைப் புறந்தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசி, பட்டினி அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் வறுமையின் தாக்கம் பெரும் எண்ணிக்கையில் இருந்தது (1951-51ல் 47.4 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வறுமையில் இருந்தனர் இது 1966-67ல் 64.30 விழுக்காடாக அதிகரித்தது). உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டது. உணவு தானியத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. எனவே ஒரு நிரந்தரத் தீர்வாகப் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. 1980களின் இரண்டாம் காலகட்டத்தில் இந்த நிலையிலிருந்து இந்தியா மீளத் தொடங்கியது, 1990களில் உணவு உற்பத்தியில் தன்நிறைவு என்ற நிலையினை அடைந்தது. இதனால் வறுமை பெருமளவிற்குக் குறைந்தது (1993-94ல் கிராமப்புற வறுமை 36.66 விழுக்காடாக இருந்தது 2011-12ல் 25.7 விழுக்காடாகக் குறைந்தது). 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெருமளவிற்கு தொழில்துறையினையும், சேவைத் துறையினையும் நோக்கியதாக இருந்ததால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது. 1995ல் உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலை பன்னாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. பொது விநியோக முறையில் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே சமயம் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் மாற்றமடைந்தது. இதனால் இந்திய விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்த பெருமளவிற்கான மக்களிடையே வறுமை அதிகமாக இருந்தது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் (2013ல்) கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக அனைவருக்குமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதியளிப்பாக இருந்தது. இந்த அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்கள் தங்களின் உணவு தானியப் பொருட்களின் இருப்பினை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உணவுக் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் முக்கியமானது இக்கொள்முதல் வியாபாரிகள் வழியாக முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது பின்னால் இது நேரடியாகவே அரசு கொள்முதல் நிலையங்களை அறுவடைக் காலங்களில் திறந்து உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கியது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனைச் செய்வதால் அரசு கொள்முதல் விலை கிடைக்கப்பெற்று (இது குறைந்தபட்ச ஆதார விலையைவிடச் சற்றே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது) பயன் அடைந்தனர். ஆனால் இம்முறையில் மிகக் குறைவான விவசாயிகளே பயன் அடைந்து வருகின்றனர் (அதிலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் அதிகப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அரசுக் கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பதும், குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போது முதன்மையான நடவடிக்கையாக இருத்தல் அவசியமாகிறது.

நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் நிலைத் துறையானது (தொழில் துறை உள்ளிட்டவை) 1950-51ல் 16.59 விழுக்காடுப் பங்களிப்பினை அளித்து வந்தது 2020-21ல் 26.98 விழுக்காடாகவும், சேவைத்துறையானது இவ்வாண்டுகளில் 25.74 விழுக்காடாக இருந்தது 54.27 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது ஆனால் முதன்மைத் துறையானது (வேளாண்மை உள்ளிட்டவை) இவ்வாண்டுகளில் 57.67 விழுக்காட்டிலிருந்து 21.82 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண்மைத் துறையில் வேலை பங்கேற்பு ஆற்றலானது 1961ல் 72.50 விழுக்காடாக இருந்தது 2011ல் 57.41 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத்துறை பங்களிப்பு பெருமளவிற்குக் குறைந்திருந்தாலும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக தற்போதும் வேளாண் துறை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பருவகால வேலையின்மை, குறைவான வருமானம், வறுமை போன்ற அறைகூவல்களைத் தற்போது இத் துறையினைச் சார்ந்து வாழ்பவர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே அரசு ஆண்டு முழுவதும் விவசாயிகள் வேலைவாய்ப்பினை பெறும்வகையில் வேளாண் வழியாகவே அந்தந்தப் பகுதிகளில் பெறக்கூடிய விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண் சார் தொழில்களை வட்டார அளவில் உருவாக்கித் தொடர் வேலைவாய்ப்பை அளிப்பது முக்கியமானதாகும். இதனால் வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை மேம்படும் விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.

சமனற்ற நிலப் பகிர்வு, நிலம் துண்டாடப்படுதல், சிறிய அளவிலான நிலக் கைப்பற்று, வேறுபட்ட குத்தகை முறை, என்ற பிரச்சனைகள் வேளாண்மையில் பெருமளவிற்குக் காணப்படுகிறது. உழுபவருக்கு நிலம் சொந்தம் என்ற முயற்சி முழுமை பெறவில்லை. கூட்டுறவு வேளாண்மை முயற்சியும் தோல்வியினை தழுவியுள்ளது. அன்மைக் காலமாக விவசாயிகள் காலநிலை மாற்றத்தினால் பருவம் தவறி மழை பொழிவு, கடுமையான வெப்பக் காற்று, புயல், வெள்ளம், போன்றவற்றால் பெரிதும் பாதிக்கின்றனர். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்புப்படி (International Food Policy Resarch Institute) காலநிலை மாற்றத்தின் விளைவால் இந்தியாவில் உணவு உற்பத்தியானது 2030ல் 16 விழுக்காடு குறையும் இதனால் பசித்திருப்போர் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது. எனவே அரசு இவற்றை எதிர்கொள்ளக் காலநிலைக்கு ஏற்றப் பயிர்களைச் சாகுபடி செய்யவும், வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்க உலர் இயந்திரங்கள், உடனடியாக விளைபொருட்களை விளைநிலங்களின் பகுதிகளிலே கொள்முதல் செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடியில் ஏற்படும் தோல்விகளுக்குத் தகுந்த இழப்பீடு, நீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தல், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது இதனால் வேளாண்மை உணவு தானியப் பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவும், அதனைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் மாற்றமடைந்தது. தற்போதைய நிலையில் பன்னாட்டு அளவில் உணவு தானிய விளைபொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதும், வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்த அதிகரிப்பதும், உலகளாவிய அரசியல் சூழல் நிர்ப்பந்தங்கள் போன்ற நிலையினால் இந்திய வேளாண்மை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் விளைபொருட்களுக்கான சட்டப்பூர்வமான விலை உறுதியும், வேளாண்மைக்கான மானியங்கள் தொடர்ந்து அளிப்பது. வேளாண் சாகுபடியில் தேவைக்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்குவதும் தற்போது முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இச் செயல்பாட்டிற் கு அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கியமானதாக இருக்கிறது. இந்திய வேளாண்மை என்பது வாணிபம் சார்ந்தது மட்டுமல்ல வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாட்டுச் சார்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

(முற்றும்)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 என்ற தொடரை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் வாசகர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி – முனைவர் பு.அன்பழகன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *