AI-இன் எதிர்காலம் என்னவாகும்?
செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆய்வுகள் மிக நீண்ட காலமாகவே நடந்து வந்துள்ளன. ஆனால், 2022 நவம்பரில் ChatGPT வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் மிக வேகமானவை. சாதாரண மக்களைப் பொருத்தவரை, பருத்தி புடவையாகவே காய்த்ததைப் போல, அவர்களின் தேவை என்னவோ அதையே உருவாக்கிக் கொடுத்தன அடுத்தடுத்து வந்த செயற்கை நுண்ணறிவுகள். ‘திடீர் திடீர்னு சாயுதாம், உருளுதாம்…’ என்றதைப் போல, கவிதை எழுதுதாம், code எழுதுதாம் என்றெல்லாம் வியப்புகளைத் தொடர்ந்து, இனி அடிப்படை Coding பணிகளுக்கு மனிதர்கள் தேவையில்லை என்பதான பதற்றங்களும் வெளிப்படத் தொடங்கின. அதை உண்மையாக்கும் வகையில், தொடக்கநிலைப் பணிகளிலிருந்த லட்சக் கணக்கானவர்கள் இதுவரை பணியை இழந்திருக்கிறார்கள். இந்த ஆண்டும், ஏராளமான வேலையிழப்புகள் இருக்கும் என்று கணிப்புகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்தச் சூழ்நிலையில் இரண்டு நாட்களாக வெளிவரும் செய்திகள் சற்றே மாறுபட்டவையாக இருக்கின்றன. Microsoft, Uber, Nvidia உள்ளிட்ட நிறுவனங்கள், மனிதத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தைவிட, செயற்கை நுண்ணறிவுகளுக்குச் செலவு அதிகமாக ஆவதாகக் கவலை தெரிவித்துள்ளன. Uber நிறுவனம் ஆண்டு முழுவதற்கும் செயற்கை நுண்ணறிவுக்காக ஒதுக்கியிருந்த தொகை ஏற்கெனவே செலவாகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது. (அமெரிக்காவில் நிதியாண்டு என்பது ஜனவரி-டிசம்பர் என்பதால், மே மாதத்தின் இடைப் பகுதியில், அதாவது 12 மாத பட்ஜெட் நான்கரை மாதங்களில் தீர்ந்துவிட்டது!) குறிப்பாக டோக்கன் அடிப்படையிலான கட்டணத்தை Claude அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நெருக்கடி வெளிப்பட்டிருக்கிறது. Claude Code licenceகளை ரத்து செய்துவிட்டு, அவர்களது சொந்தத் தயாரிப்பான GitHub Copilot CLI பயன்படுத்துமாறு Microsoft சொல்லிவிட்டது. இன்னும் Meta, Amazon, Couldflare உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவால் செலவு உயர்ந்துவிட்டதை வெளிப்படுத்தியிருக்கின்றன.
‘ரூம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முடிஞ்சிடுச்சே…’ என்று வசூல் ராஜா படத்தில் சொல்வதைப் போல, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் அவ்வளவுதான என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை நிறுத்திவிடவில்லை என்பதைத்தான். அப்படியானால் என்னதான் நடக்கிறது?
ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். ஒருவரிடம் ஓர் இருசக்கர வாகனமும், ஒரு சிறிய சரக்கு வாகனமும் இருக்கின்றன. புதிதாக ஒரு லாரி வாங்குகிறார். அதுதான் இருப்பதிலேயே மேம்பட்டது என்பதற்காக அரை மூட்டை அரிசியை லாரியில் எடுத்துச் செல்வது சரியாக இருக்குமா? அரை மூட்டையை எடுத்துச் செல்ல இருசக்கர வாகனத்தையும், 5 மூட்டையைச் செல்ல சிறிய சரக்கு வாகனத்தையும், 50 மூட்டைக்கு லாரியையும் பயன்படுத்துவதுதானே சரியாக இருக்க முடியும்? அப்படி அல்லாமல், இருப்பதிலேயே மேம்பட்டது வந்துவிட்டது என்று லாரியை அனைத்திற்கும் பயன்படுத்துவதைப்போல இந்நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திவிட்டு, செலவு கூடுதல் என்று தாமதமாக உணர்ந்திருக்கின்றன, அவ்வளவுதான்.
லாபத்தை அதிகரிக்க மூலதனம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும். அவற்றால் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்ல, தொழிலாளியின் தனிச்சிறப்பான திறன்களும் மதிப்பிழந்து போகும் என்பார் மார்க்ஸ். ஸ்பானரைக் கொண்டு முடுக்குகிற வேலையை மட்டுமே செய்யுமாறு தொழிலாளி மாற்றப்பட்டிருப்பதாகத்தான் மாடர்ன் டைம்ஸ் படத்தில் சார்லி சாப்ளினும் காட்டியிருப்பார். இன்று எந்தத் துறையிலும், ஒரு தொழிலாளி முழுமையாக எந்தப் பொருளையும் உற்பத்தி செய்கிற நிலை இல்லை. அப்படிச் செய்வதும் உற்பத்தியை அதிகரிக்க உதவாது.
அப்படியான பின்னணியில், செயற்கை நுண்ணறிவின் வரவுக்குப்பின் IT துறையில் வந்த மாற்றம் மட்டும் தலைகீழானது. மற்ற துறைகளில் தொழில்நுட்பம் வந்தபோது, ஒரேயொரு கைப்பிடியை உற்பத்தி செய்வது, கண்ணாடி மட்டும் உற்பத்தி செய்வது என்று கீழ்நிலைப் பணிகள்தான் தொழிலாளிக்குத் தரப்பட்டன. இந்தத் துறையும் மற்ற துறைகள் போலவே, பலரும் தனித்தனியான பகுதிகளுக்குக் Code எழுதி, பின்னர் இணைத்துக்கொள்வதாகவே செயல்படுகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் வரவுக்குப்பின் IT துறையில் மட்டும் கீழ்நிலைப் பணிகளுக்கு மனிதர்கள் தேவையில்லை என்று கூறப்பட்டதுதான் தலைகீழானது என்கிறேன்.
“எந்திர சாதனங்களை (இங்கு தொழில்நுட்பத்தை!) பயன்படுத்துவது என்பது உழைப்பின் உற்பத்தித்திறனை அதிகரிக்க மேற்கொள்ளும் பல வழிமுறைகளுள் ஒன்றாகும். தேர்ச்சியற்ற பொதுவான உழைப்பை ஒப்பீட்டளவில் தேவைக்குமேல் மிகையாக்கும் இதே வளர்ச்சிப் போக்குதான் மறுபுறம் தேர்ச்சியுள்ள உழைப்பை எளிதாக்கி அதன் மதிப்பைக் குறைக்கிறது” -கார்ல் மார்க்ஸ், நூல்: கூலி, விலை, லாபம்.
அப்படித் தலைகீழாக நடைமுறைப்படுத்தியதன் விளைவுகள்தான் இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதனால், இதுவரை எச்சரிக்கப்பட்ட அளவுக்கான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடராமல் குறைய வாய்ப்புகள் தென்படுகின்றன. செயற்கை நுண்ணறிவின் வரவால் ஆட்குறைப்பு செய்த நிறுவனங்களில் 55 சதவீத நிறுவனங்கள், அப்படி ஆட்குறைப்பு செய்ததற்காக வருத்தப்படுவதாக Forrester நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி ஆட்குறைப்பு செய்த நிறுவனங்களில் பாதி, 2027க்குள் அதே போன்ற பணிகளுக்கு புதிய நியமனங்களைச் செய்யும் என்று Gartner நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. Klarna, Duolingo உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே அவ்வாறு நியமிக்கத் தொடங்கிவிட்டன.
அப்படியானால் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்? செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லை. உண்மையில் அதுதான் நம் எதிர்காலம் என்பதிலும் மாற்றமில்லை. புதிதாக வாங்கப்பட்ட ஒரு கருவியை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறாகப் பயன்படுத்தியதைப் போன்ற ஒரு தவறைத்தான் இந்த நிறுவனங்கள் செய்திருக்கின்றன.
மூலதனத்தைப் பொருத்தவரை, லாபத்தை அதிகரிப்பதுதான் நோக்கம். அதற்கு உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். செலவைக் குறைக்க அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு புதிய தொழில்நுட்பம் கிடைத்தால் உதவியாக இருக்கும். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை எப்படியாவது பயன்படுத்தி செலவைக் குறைப்பது என்ற அவசரமான முயற்சிக்குக் கிடைத்ததுதான் இந்தப் பலன். அதாவது, அதிக எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்களைக் குறைத்தால் அதிகப் பணம் மிச்சமாகும் என்று எதிர்பார்த்தார்களே தவிர, அந்தத் தொழிலாளர்கள் செய்கிற வேலையைவிட பெரிய வேலையைச் செய்யக்கூடியது இந்தத் தொழில்நுட்பம் என்று நிதானிக்கிற பொறுமை மூலதனத்திற்கு இல்லை, அவ்வளவுதான்! அரை மூட்டைக்கு லாரியைப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவசரப்பட்டு இருசக்கர வாகனத்தையும் விற்று விட்டன இந்த நிறுவனங்கள். இப்போது நடப்பது, எந்தப் பணிக்கு எதைப் பயன்படுத்துவது என்ற திருத்தம் (correction) மட்டும்தான்!
செயற்கை நுண்ணறிவே இனி பயன்படாது என்பதைப்போல சமூக ஊடகங்களில் பதிவுகளைக் காண முடிகிறது. அப்படியெல்லாம் இல்லை. இதுவரை அச்சப்பட்ட அளவிற்கு ஆட்குறைப்பு இல்லாமல் குறைய வாய்ப்பு இருக்கிறது. புதிய நியமனங்களும் நடக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அதே நேரத்தில், இந்தப் பணிகளுக்கு இதற்கு முந்தைய காலங்களில் இருந்த அளவுக்கு பணி நியமனங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன் இதுவரை ஆபத்தில்லாதவையாகக் கருதப்பட்ட மேல்நிலைப் பணிகளுக்கு இனி ஆபத்துகள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுவரை அவசரக் கோலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இனி மெதுவாக வரும் என்பதுதான் மாற்றம்!
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

