கு. மணி எழுதிய "ஐவகை நிலங்கள்" புதுக்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“ஐவகை நிலங்கள்” புதுக்கவிதை – கு. மணி

“ஐவகை நிலங்கள்” புதுக்கவிதை – கு. மணி

***********************************************

குறிஞ்சி
—————–
மேகங்கள் தழுவிச் செல்லும்
மென்மையான மலைச்சாரல்
குளிரின் வாட்டம்
காந்தள் மலரின் நறுமணமோ
உன் நினைவைச் சுமந்து வர
மூங்கிலின் துளைவழியே
மூச்சுக்காற்றாய் நீ வந்தாய்
மயில்கள் அகவிட
கிளிகள் காதல் மொழி பேசிட
மந்திகள் மாங்கனியைப் பந்தடிக்க
நான் மட்டும்
தனிமையில் தவிக்கின்றேன்
நீ வராத நாட்களில் மௌனமாய்….

முல்லை
—————–
வானவில்லின்
வர்ணஜாலத்துடன்
மாலை நேரத்துத் தூறல்
நனைந்தபடியே நினைக்கின்றேன்
காடெங்கும்
ஆயிரம் ஆயிரம் பூக்கள்
அத்தனையும் உன் அழகல்ல
உன் கூந்தலில் சூடிய
முல்லைச்சரத்தின் வாசம்
காடெங்கும் மணம் பரவ
கானக மலர்கள் எல்லாம்
வெட்கியே தலை குனிந்தன…..

மருதம்
————–
வாழைத்தோப்பில்
வாஞ்சையுடன் நிற்பவளே
பொன்னிறமாய் விளைந்துள்ள
நெற்கதிராய் தலை குனிந்தவளே
யான் நோக்கையில்
நிலம் பார்க்கிறாய்–நான்
வான் பார்க்கையில்
எனைப் பார்க்கிறாய்
செங்கழுநீராய் மலருதடி
உன் கொவ்வை இதழ்கள்
உன் மீன் விழிகள்
என் மனக்குளத்தில் துள்ளுதடி
வாய்க்கால் நீரில்
உன் முகம் பார்த்தேன்
வட்ட நிலவாய் ஒளிருதடி
என் மருத நிலமே
கொன்றை மர நிழலில்
நீ பகிர்ந்த மௌனம்
உழவர் உழத்தியருக்கும்
புரியவில்லை
மருதயாழ் மீட்டி
மருதப் பண்பாடுகிறேன்
வயல் வரப்பு காற்றின்
வாசனையே வந்துவிடு….

நெய்தல்
——————
அலைமகள் கரைக்கு வந்து
அப்படியே செல்கின்றாள்
உன் நினைவலை போலவே
வர்ணனின் தயவால்
உன்னை வாரி அணைத்த நாட்கள்
தாழை மடலாய் விரியுதடி
உப்புக்காற்றில் கரையும்
என் தனிமை
உவர்கழியாய் வழிந்தோடுதடி
விளரியாழ் மீட்டி
விளம்பினேன் என் காதலை
வார்த்தைகள் இல்லை
கரையில் ஒதுங்கிய
சிப்பியாய் என் வாழ்வு.

பாலை
————–
நிழல் தேடும்
நிற்கதிப்பயணம்
குறும்புஊர் சென்றாயோ
சூரியன் சுட்டெரிக்கும்
மணல் வெளியில்
பரிதி மலர் சூடி
கானல் நீராய் நீ….
இலுப்பை மரத்தின்
நிழல் தேடும் நெஞ்சமே
வற்றிய சுனை நீரில்
வட்டமாய் தெரியுதடி உன் முகம்
புறா விடு தூது அனுப்பினேன்
புரியவில்லையோ என் மனது
வழிப்பறி நிரைகவர்தல்
செய்பவன் என்று எண்ணி
என்னை விட்டுச் சென்றாயோ
என் எயினியே….

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *