உலகையே உலுக்கிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நெடிய சட்டப் போராட்டத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஏறத்தாழ 27 வருடங்களை சிறையில் கழித்து விட்டு தற்போது விடுதலையாகி இருக்கும் இரவிச்சந்திரன் அவர்களால் சொல்லப்பட்டு, பா ஏகலைவன் அவர்களால் தொகுக்கப்பட்ட, ஒரு சுவாரசியமான புத்தகம்.
முகமறியாத கொலைக் குற்றங்களையே ஆர்வத்தோடு படிக்கும் வாசகர்களுக்கு உலகமறிந்த ராஜிவ் படுகொலையும், அது சம்மந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதில் கூடுதல் ஆர்வம் ஏற்படுவது இயல்பானதொன்றுதான். அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டதால்தான் ஏற்கனவே புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் அவர்கள் எழுதிய ராஜீவ் காந்தி படுகொலை புத்தகத்தை வாசித்திருந்த போதிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரே எழுதிய புத்தகம் என்பதால், இரவிச்சந்திரன் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள வாசிக்கத் துவங்கினேன்.
அணிந்துரையாக ஏறத்தாழ 12 தமிழ்நாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கிரைம் நாவலை வாசிப்பது போன்று எளிய நடையில் கதை போல் சம்பவங்களை கோர்த்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய தலைவர்களால் இனவெறி ஊட்டப்பட்ட 17 வயது சிறுவன். அருமையான குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்டவன், தன்னந்தனியே இலங்கையை நோக்கி ஒடுகிறான் என்றால் தவறாக வழிகாட்டப்படுகிற எவரின் வாழ்வும், முற்றாக சிதைந்து, வாழ்வின் பெரும் பகுதி சிறைக் கம்பிகளுக்குள் கம்பியாக உருக்குலைந்து போய்விடுகிறது, என்பதற்கு இரவிச்சந்திரன் அவர்களே உதாரணமாக திகழ்கிறார்.
கடைசி வரைக்கும் ராஜிவ் படுகொலைக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்று நிறுவ முயற்சிக்கிறார். அவை பலகீனமான பகுதிகளாக திகழ்கிறது. வெளிநாட்டுச் சதி என்கிறார், ஆனால் வழக்கில் சிக்கிய யாவரும் விடுதலைப்புலிகளாக இருக்கும் யதார்த்தத்தை புரிய மறுக்கிறார். சிவராசன் விடுதலைப்புலி என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் அமெரிக்காவின் கைக்கூலியாக மாறிவிட்டார் என்கிறார்.
விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களே சர்வதேச ஊடகங்கள் முன் தோன்றி இராஜீவ் படுகொலை ஒரு துன்பவியல் சம்பவம் என்று ஒரு வார்த்தையில் கூறி கடந்து விட்டார். இயக்கத்திற்கும் படுகொலைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறவே இல்லை. ஆனால் ரவிச்சந்திரன் இயக்கத்தை காப்பாற்ற சொல்ல வந்த செய்திகள் யாவும் அவரைப் பார்த்தே சிரிக்கின்றது. சொல்ல வந்த செய்திகளில் புனைவு நிரம்பி வழிவதை வாசிக்கும் யாவரும் எளிதில் கண்டு உணரலாம். உண்மைகளை மறைத்து எழுத வருபவர் தன்னையறியாமலே பல உண்மைகளை சொல்லி விடுகிறார். இந்தப் புத்தகமே அவருக்கு எதிராக திரும்பி விடும் அளவிற்கு ஒரு நீண்ட ஒப்புதல் வாக்குமூலமே கொடுக்கிறார்.சக போராளி குழுக்களின் படுகொலைகளை எளிதாக நியாயப்படுத்துகிறார். போன வழியாவும் தவறென்பதை இன்று வரை ஒத்துக்கொள்ளவேயில்லை.
பிரபாகரனை சொல்லும்போது ஏற்படுகிற பெருமிதமும், ராஜிவை சொல்லும்போது ஏற்படுகிற இகழ்ச்சியும், அவரின் குரூர மனதை காட்டுகிறது. தமிழ் தேசியவாதிகளுக்கு இலங்கை என்பது இன்னொரு நாடு என்பதே மறந்து போகிறது. அதை தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமாக கருதிக்கொண்டு செயல்பட்டதில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், இளைஞர்களும், கொன்று குவிக்கப்பட்டதை உணர்ந்து இனியாவது இன,மொழி,சாதி,மத வெறிகளை புகுத்துவதை தவிர்த்து அறிவு வழி நடப்பார்கள் என்று நம்புவோம். ஒரு கேள்வியோடு விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். ராஜிவை கொன்ற புலிகள் விடுதலையாகி நிற்கிறீர்கள். பிரபாகரனை சிங்களர்கள் படுகொலை செய்திருந்தால் சிங்களர்களை அன்றிருந்த புலிகள் என்ன செய்திருப்பார்கள்.
நூலின் தகவல்கள்
நூல் : இராஜிவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்
சிறை வாசி இரா.பொ. இரவிச்சந்திரன்
தொகுப்பாசிரியர் : பா.ஏகலைவன்
பக்கம் : 480
விலை : ரூ.480
வெளியீடு : செஞ்சோலை பதிப்பகம்
நூலறிமுகம் எழுதியவர்
செ. தமிழ்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.