மீரான்மைதீன் (Meeran Mitheen) எழுதிய அஜ்னபி (Ajnabi) - நூல் அறிமுகம் - https://bookday.in/

அஜ்னபி – நூல் அறிமுகம்

அஜ்னபி – நூல் அறிமுகம்

இலக்கியங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. வாழ்க்கை தாங்க முடியாத நிஜங்களையும், கனவுகளையும், மனித உறவுகளின் அடுக்குகளை, சமூகத்தின் கூர்மையான வலிகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக நாவல்கள் விளங்குகின்றன. அந்த வகையில், ‘அஜ்னபி’ நாவல் ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூக அரசியல் நாவலாக திகழ்கிறது. இது தமிழிலக்கியத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தவிக்கின்ற மனிதர்களின் மனவெளிகளை மிகத் திறமையாக சித்தரிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கலாம்.

நாவலின் மையக் கதைக்களமாக வெளிநாட்டு வாழ்க்கையின் சீரழிவும், குடும்ப வாழ்க்கையின் பிணைப்புகளும் அமைந்துள்ளன. தென்தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மிகக் குறைந்தது வீட்டிற்கு ஒருவராவது வளைகுடாவில் காலம் தள்ளிக் கொண்டிருப்பர்.

எந்த சுவடும் இல்லாமல் பாலைவனத்தில் காற்று இடம் மாற்றி வைக்கும் மலர் குன்றுகள் போல அரபு தேசத்துக்கு பிழைக்க வரும் இந்த மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாவின் இடத்தில் மகன் வருகிறான், அண்ணன் இடத்தில் தம்பி வருகிறான். மணல் பக்கங்கள் புரண்டு கொண்டே இருக்கின்றன. பாலை வெளியில் காற்று எழுதிய மணல் வரிகளில் அஜ்னபிக்களின் தீராத கதைகள் ஏராளமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், மானுடகுலம் வாழ்க்கைக்கான வழிதேடி ஆதிகாலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். பொருள்வயின் பிரிந்திருக்கும் இவ்வாழ்க்கை, அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது அஜ்னபி.

கதையின் நாயகனாகத் தோன்றும் பைசல், வாழ்க்கையின் வேதனைகளை தாங்கி, மொத்த கதை பரப்பையும் இணைக்கிற கன்னியாக மட்டுமே இருக்கிறான் கதை அவனை சுற்றிலும் நிகழ்கிறது. இதுதான் என்றில்லாமல், இங்குதான் என்றில்லாமல், இப்படித்தான் என்றில்லாமல் மூன்று வருடத்தில் விதவிதமான வேலைகள் விதவிதமான இடங்களில் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு மனிதர்களுடன் இயங்குகிறான். பல்வேறு கதாபாத்திரங்கள் அவர்களின் தனித்துவ குணாதிசயங்கள் என நாவல் முழுவதும் பதிவாகி இருக்கும் யதார்த்தம் மனித வாழ்க்கையின் அவலத்தை, அநித்தியத்தை ஒரு தரிசனமாக மாற்றுகிறது.

ஐயாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் எல்லோரது நினைவும் சொந்த ஊரிலேயே இருக்கிறது. இங்கிருப்பது அவர்களின் நிழல்கள் தான். எனவே உடன் இருக்கிற நிஜ மனிதர்களை விடவும் பிம்பங்களே அவர்களுக்கு இணக்கமாக இருக்கின்றன. நிழற்படங்கள், வீடியோ கேசட்டுகள், கடிதங்கள் என அவர்களின் அழுகையும் சிரிப்பும், குழந்தைகளை கொஞ்சுதலும் நிழல்களின் வழியாகவே நிகழ்கின்றன. ஒருமுறை நாசரின் வாப்பா அப்துல் ரகுமான் இக்பாலிடம் இவ்வாறு கூறுகிறார் “*சொந்த குடும்பத்திலே ஒரு விருந்தாளி போல ஆகிட்டோம்… ஊரில் கூலி வேலை செய்றவன் பிள்ளைகள் எல்லாம் கூட நல்லா படிச்சு சிறப்பாக போயிடறாங்க. அவன் பிள்ளைகளை தினமும் பார்க்கிறான், கூடவே நடக்கிறான், ராத்திரி 8:00 மணிக்கு பிறகு காணவில்லை என்றால் தேடி போறான். நமக்கு இங்க கிடந்து எதுவும் முடியல பாத்தியா? கேட்பார் கேள்வி இல்லாம நம்ம பிள்ளைங்க போயிடறாங்க”* என்று அங்கலாய்த்து கொள்கிறார். வாழ்வின் வலி, துக்கம், சந்தோஷம் எல்லாவற்றையும் இந்த அரபு தேசம் கற்பனை காட்சிகளாகவே காட்டி விட்டுப் போய்விடுகிறது.

புதுமையாக, இஸ்லாம் மதம் பற்றிய விளக்கங்கள் மிக அழகாகவும், ஆழமாகவும் தரப்பட்டுள்ளன. இங்கு பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாம் மதத்தின் உண்மையான அடிப்படைகள் குறித்த தெளிவு இல்லாத சூழலில், இந்த நாவல் அந்தத் தேடலுக்கு ஒரு கதைவழி விளக்கத்தை அளிக்கிறது. *தொழுகை ஒரு அற்புதமான மனப் பயிற்சி. பறவையாக விலங்காக இயற்கையாக மாறி இறுதியில் கருவில் இருக்கும் குழந்தையாக மாறிக் கொள்கிற வித்தை தொழுகையில் உண்டு. ஆனாலும் இதை பலரும் அறிந்திருக்கவில்லை மனத்தை ஒருமுகப்படுத்தி நன்றாக தொழுதால் ஒவ்வொரு முறையும் நாம் புதிது புதிதாய் பிறந்து வர முடியும்* . இறைவனை நாடும் புனித மனநிலையும், தொழுகையின் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்தின் தூய்மையும், வாசிப்பவருக்கு ஒரு தெளிவான சிந்தனையையும் ஏற்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் தொடர்பான பிரச்சனைகளில் மட்டுமே ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லை பிரபலப்படுத்தியுள்ளன கலை, இசை, ஊடகம் போன்றவைகளை மத காரணங்களை முன்வைத்து இஸ்லாம் வசப்படுத்திக் கொள்ளவில்லை. கல்வியில் பின்தங்கி இருப்பதும் முக்கிய காரணம் என தீவிரவாதத்தோடு சேர்த்து எப்போதும் அறியப்படுகிறது. இஸ்லாம் குறித்த ஆதங்கம், இடையிடையே சுயவிமர்சனமும் இஸ்லாமின் நுண்ணரசியல் குறித்த நேர்மையான அரசியல் பார்வையும் கொண்ட இந்த நாவல் அயலகத்தில் நாம் அறியாத இஸ்லாமிய சமூகத்தின் ஆவணம் என்றும் சொல்லலாம். இழையோடும் அங்கதமும் , கேலியும் உருவாக்கும் நகைச்சுவையினால் இது சுவாரசியமான நாவலாகவும் இருக்கிறது.

அரபு நாடுகளில் எல்லோரோடும் அன்பு செலுத்துகிற மனிதர்களையும் அபூர்வமாகவே மோசமான மனிதர்களையும் காண முடிகிறது. மண்ணுக்கு கீழே பெருக்கெடுத்து ஓடும் எரிபொருட்களுக்காய் வளர்ந்த நாடுகள் தந்திரமாய் புகுந்து கொள்ளை கூடாரம் இட்டு தனது இருப்பை வலுவாக்கிக் கொண்டு ஆட்சியாளர்களை அடிவருடிகளாக மாற்றி இருக்கிறது. பயம், சொகுசான வாழ்க்கை இவைகளில் இருந்து விலக முடியாமல் ஆட்சியாளர்களும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். புரட்சி பயம், விஞ்ஞான தொழில்நுட்பத்தை சுவிகரித்து வைத்துக் கொண்டிருக்கும் ஆளுமை ரவுடிகளின் மீதான பயம், மத அடிப்படைவாதிகளின் மீதான பயம், இப்படி எல்லா பயங்களின் கூட்டுத் தொகுப்பு தான் அரபு தேசம்.

இங்கு மட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் இப்படியான அல்லது இன்னும் மாறுபட்ட பயங்களை உடையதான அரசு அச்சு சுழல்கிறது. அரசு தனது குடிமக்களின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதை போலவோ அல்லது அதன் இரு மடங்கு மேலாகவோ தொழில்நுட்பத்தில் வளர்ந்த ரவுடிகளின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். பெரும் முதலாளிகளும் விஞ்ஞானத்தில் வளர்ந்த ரவுடிகளும் சேர்ந்து தான் ஆளும் வர்க்கத்தை அதன் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக உலகெங்கிலும் வியாபித்து கிடக்கின்றனர். உலக மக்கள் அனைவருக்கும் உண்மை ஒருபோதும் தெரிவதில்லை எந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ அதையே உண்மை என மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

பைசல், இக்பால், மம்மலி, மொய்தீன், பிரபு, சௌகத் என ஆண்கள் நடுப்படையாகக் காணப்படுகின்ற இந்த நாவலில், பெண்களுக்கு வழங்கப்பட்ட பங்கு மிகக் குறைவாகவே தெரிகிறது. அரூஷா, ஜாஸ்மீன் போன்ற சில பெண்கள் கதையின் ஓரங்களில் தோன்றினாலும், அவர்கள் பாத்திரம் கதையின் உடலுக்கு உயிரூட்டும் அளவிற்கு விரிவாகப் பேசப்படவில்லை. பெண்களின் பார்வையில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் உணர்வுகள் எப்படி மாறுகின்றன என்பதைக் கதையின் ஒரு பக்கமாக சேர்த்திருந்தால், இது இன்னும் வலிமையான சமூக ஆவணமாக மாறியிருக்குமென்பது உறுதி.

‘அஜ்னபி’ என்பது வெறும் வெளிநாட்டு வாழ்க்கையை விவரிக்கும் ஒரு நாவலாக அல்ல; அது மனிதம், மதம், உறவுகள், நினைவுகள், வேதனைகள், தாய்நாட்டின் வாஞ்சை, இவையனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொள்ளும் ஒரு நுட்பமான புனைவாகவும் பரந்த அனுபவமாகவும் உள்ளது.  இலக்கியத்தின் முக்கிய செயல்பாடு வாசகரை உணர்வில் ஈடுபடுத்துவதாகும். இந்நாவல் அந்த செயல்பாட்டை முழுமையாக நிறைவேற்றுகிறது.

இது வெளிநாட்டில் வாழும் ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கதை. அது சுரண்டப்படும் வாழ்வியல் முறைமையின் எதிரொலி. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வலிகளை நோக்கச் செய்யும் கண்ணாடி.

சில சீரமைப்புகள், குறிப்பாக பெண்கள் தொடர்பான கதைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தால், இது இன்னும் மேம்பட்ட படைப்பாக இருந்திருக்கும். இருந்தாலும், இது ஒரு வாசகரை மனதளவில் தொட்டு சிந்திக்க வைத்து, சமூக நுண்ணரசியல் சார்ந்து மதிப்பிட வேண்டிய சிறந்த நாவல் என்பதில் சந்தேகமில்லை.

நூலின் தகவல்கள் : 

புத்தகம் : அஜ்னபி
ஆசிரியர் : மீரான்மைதீன்

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

P . ஆஷா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *