அகில உலக பகாசுரன்- Akila Ulaka Pagasuran (The Global Minotaur in Tamil) Book Review by Vijayan S. Book Day, Bharathi Puthakalayam.



அகில உலக பகாசுரன் (The Global Minotaur)
யானிஸ் வருஃபாக்கிஸ் | தமிழில்: கி. இலக்குவன் 
பாரதி புத்தகாலயம் 
₹350.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

இப்படியொரு தலைப்பில் ஒரு புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகமானது “The Global Minotaur” என்று ஆங்கிலத்தில் வெளியான அதன் இரண்டாம் பதிப்பின் தமிழாக்கம்.

இப்புத்தகத்தை எழுதியவர் கிரேக்க நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும் பொருளாதார நிபுணருமான யானிஸ் வருஃபாக்கிஸ். தமிழில் மொழி பெயர்த்தவர் கி.இலக்குவன். ஏதென்ஸில் பிறந்த யானிஸ் வருஃபாக்கிஸ் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் கணிதப் புள்ளியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற பின் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்திற்கான முனைவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் பொருளாதார ஆசிரியராக 2000ம் ஆண்டுவரை பணிபுரிந்தார். 2005ம் ஆண்டில் ஏதென்ஸ் பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியராக இடம் பெயர்ந்தார். பிறகு அமெரிக்காவின் ஆஸ்டின் நகர டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்திற்கு இடம் பெயர்ந்தார். பொருளாதாரத்தில் புத்தகங்கள் சில எழுதியுள்ளார் 2015ம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய கிரேக்கத்திற்கு திரும்பி அந்நாட்டின் நிதியமைச்சரானார். ஓராண்டுகாலம் மட்டுமே நிதியமைச்சராக பதவி வகிக்க முடிந்தது.

தற்கால உலக முதலாளித்துவத்தின் இயக்கப் போக்கை மார்ச்சியப் பார்வையில் அலசும் இந்நூலானது, மார்க்ஸிற்குப் பின்னால் வந்த மார்க்ஸிய பொருளாதார அறிஞர்களின் படைப்புகளில் ஒன்றாக கருத வேண்டும். மார்க்சியம் என்பதே ஒரு தொடர்ச்சிதான். வளர்ந்து வரும் ஒருஅறிவுப் புலம். எனவே அதன் தொடர்ச்சியானது மார்ஸால் நிறுவப்பட்ட வலுவான அடித்தளத்தின் மீது கட்டப்படும் ஒரு சமூகவியல் அறிவுப் புலம். இந்த அறிவுப் புலத்திற்குள் அடங்குவதற்கு இந்நூலுக்கு எல்லாத் தகுதியும் இருக்கின்றன.

முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை நுணுக்கமான பகுப்பாய்வு செய்து, அப்பகுப்பாய்வை 1867ம் ஆண்டு மூலதனம் என்ற நூலில் மார்க்ஸ் வெளியிட்டார். அவர் காலத்தில் முதலாளித்துவத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும் அதன் தோற்றத்தைப் பற்றியும் அதில் ஆய்வு செய்திருந்தார். மூலதனமானது திரட்டல், குவிதல், மையப்படுத்தப்படல் என்ற போக்கில் திரள்கிறது என்று ஆய்ந்தறிந்து வெளியிட்டார். அதன் தோற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்கையில் அது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைகளை அழித்தொழித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை அவர்களின் வாழ்வாதாரமான நிலத்திலிருந்து அடித்து விரட்டி திரட்டப்பட்டது என்கிறார். இதை ஆதிதிரட்டல் என்று அழைத்தார். அவருடைய ஆய்வுக்குப் பின் முதலாளித்துவம் பல்வேறு கட்டங்களை கடந்து வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு கட்டத்தையும் மார்க்சியப் பார்வையில் ஆய்வு செய்து படைப்புகள் வந்துவிட்டன. இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் மூலதனமானது நிதிமூலதன வடிவமெடுத்து உலகைச் சுரண்டி வருகிறது. இவ்வடிவத்தின் தோற்றத்தை 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ஆய்வு செய்கிறது இந்நூல்.

இந்நூல் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது. ஒன்பதாவது அத்தியாயம் “பகாசுரன் இல்லாத ஒரு உலகு“ முதல் பதிப்பு வெளியாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டு இரண்டாம் பதிப்பில் இணைக்கப்பட்டது.

அத்தியாயம் 1: அறிமுகம்

PDF] The Global Minotaur: America, Europe and the Future of the Global Economy Book by Yanis Varoufakis (2011) Read Online or Free Downlaodசிக்கலான முதலாளித்துவ இயங்குவிதிகள் பற்றிய ஆய்வை எதிலிருந்து துவங்குவது என்ற கேள்வியை எழுப்பி “சரக்கு“லிருந்து துவங்குவதே அதை விளக்குவதற்கு எளிதாக இருக்க முடியும் என்று மார்க்ஸ் மூலதன நூலைத் துவங்கியதைப் போலவே, சிக்கலான நிதிமூலதன இயக்கவிதிகளை அறிந்து கொள்ள 2008ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து யானிஸ் துவங்குகிறார். முதலாளித்துவம் அதன் தோற்ற காலத்திலிருந்து ஏராளமான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அதில் 2008ம் ஆண்டின் நெருக்கடியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். “..2008ம் ஆண்டுப் பெருவீழ்ச்சியானது உலக அளவிலும் நவீன தாராளமயத்தின் இதயப் பகுதியிலும் பேராழிவை ஏற்படுத்தியது “ என்று குறிப்பிடுகிறார். அதற்கு முந்தைய முக்கியமான நெருக்கடி 1930களில் ஏற்பட்ட “பெரும்பின்னடைவு“. 2008ம் ஆண்டின் நெருக்கடிக்கு முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் என்ன விளக்கம் தருகின்றனர் என்பதை ஆய்வு செய்து அதில் முக்கியமான ஆறு விளக்கங்களை பட்டியலிட்டு அதன் போதாமையை விளக்குவதே இவ்வத்தியாயத்தின் தலையாயப் பணி. ஆக, முன்மொழியப்பட்ட கோட்பாடுகளை எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட பின் 2008ஐ விளக்க புதிய கோட்பாடு தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தி, “உலக பகாசுரன்“ என்ற உருவகத்தை அறிமுகப்படுத்துகிறார். நம்ம ஊர் புராணக் கதையான மகிஷாசுரன் கிட்டத்தட்ட கிரேக்க நாட்டில் மினோட்டர் என்ற கதையாகியிருக்கிறது. இங்கே எருமைத்தலையுடைய மனிதன் அங்கே எருது தலையுடன் கூடி மனிதன். இங்கே மகிஷாசுரனைக் கொல்லும் கடவுள் சாமுண்டி அங்கே மினோட்டரைக் கொல்லும் தீசியஸ்.

அத்தியாயம் 2: எதிர்காலத்திற்கான ஆய்வுக் கூடங்கள்

2008ம் ஆண்டு நெருக்கடியை விளக்கத் துவங்குமுன், மானுடத்திற்கு இதுவரை ஏற்பட்ட நெருக்கடிளின் வரலாற்றிலிருந்து துவங்குகிறார். வேட்டையாடி உணவுசேகரித்து வாழ்ந்த மானுடம் விவசாயத்தை நாடிச் சென்றதே ஒரு நெருக்கடியின் விளைவு என்கிறார். அத்துடன் தொழிற்புரட்சியும் இன்னொரு நெருக்கடியின் விளைவாகும் என்கிறார் இயற்கை ஏற்படுத்தும் நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் மனிதன் தனக்குத்தானே தேடிக்கொண்ட நெருக்கடிகளும் மானுடம் சந்தித்த சந்தித்துவரும் நெருக்கடிகளில் அடங்கும். நெருக்கடியே மானுடத்தின் ஆய்வுக் கூடம் என்றால் மானுடத்தின் ஒப்புதலே நெருக்கடியை இயக்கும் சக்தி என்கிறார். கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரம், தனியார்மயமாக்குவதற்கான அதிகாரம் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களும் ஒப்புதல் இல்லாமல் பலாத்காரத்தின் முலம் நீண்டகாலம் பராமரிக்க முடியாது என்பது கண்டோர் சென்ட் என்ற பிரஞ்சு சிந்தனையாளரின் கருத்து. இதை விரிவாக்கி உண்மையான அதிகாரம் ஒடுக்குபவர்களிடம் உறைவதில்லை அது ஒடுக்கப்படுபவர்களிடம்தான் உறைகிறது என்று விளக்குகிறார்.

நெருக்கடிகள் பொதுவான இயற்கைவிதிதான். குறிப்பிட்ட விலங்கினத்தின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கமும் அந்த விலங்கினத்தை இரையாகக் கொண்ட இன்னொரு விலங்கினத்தின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றன. தொழில்துறையில் நடக்கும் ஏற்ற இறக்க சகடம் விலங்கினங்களில் ஏற்படும் ஏற்ற இறக்க சகடத்தைப் போன்று இயற்கையானதுதான் என்று விளக்கமளித்தாலும் கூட இந்த ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் சில நெருக்கடிகள் முதலாளித்துவத்தை புதிய கட்டத்திற்கு இழுத்துச் செல்கின்றன என்கிறார். 1929, 2008ம் ஆண்டு நெருக்கடிகள் இந்த வகையைச் சேர்ந்தவை என்கிறார்.

சந்தைமயமாக்கப்பட்ட சமூகமாக முதலாளித்துவ சமூகம் பரிணமித்ததையும் இதனை இயக்கும் விதிகள் மேல்மட்டத்தில் செயல்படுகையில் அது விளையாட்டியல் கோட்பாடு (Game Theory) வடிவில் அமலாவதாக கூறுகிறார். மதிப்பு என்பதே சரக்குமயமாக்கப்பட்ட சமுகத்தில் செல்லுபடியாகக்கூடிய ஒரு சொல்லாடல். எனவே மனித உழைப்பானது சரக்குமயமாக்கலுக்கு முடிவு கட்டும்வரை ‘மதிப்பு‘க்கும் மதிப்பு இருக்கும் மதிப்புஉற்பத்தி நெருக்கடிகளை உற்பத்தி செய்யும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஆதிக்கம் பெறும் நிதிமூலதனத்தின் விளைவாக முதலாளித்துவத்தை ஆட்டிப்படைக்கும் தேவதையான கூலி உழைப்புடன் சேர்ந்து கொள்ளும் இன்னொரு தேவதையாக நிதி இருக்கிறது.

மூலதனத்தின் சகாப்தம் குறித்தும் அதில் நிதிமூலதனம் உருவாவதும் அது ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றியும் ஒரு சுருக்கமான ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு 1929ம் ஆண்டு ஏற்பட்ட நீண்டகால பெரு நெருக்கடி மீதான ஒரு ஆழமான பரிசீலனையை முன்வைக்கிறார். 1929 பெரு நெருக்கடியானது ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் நாணயம்-தங்கம் பரிவர்த்தனை நியமத்தை உடைத்தெறிந்ததை குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போர் ஏற்படாவிட்டால் இந்நெருக்கடியானது 1940களிலும் தொடர்ந்திருக்கும் என்று மதிப்பிடுகிறார். எனவேதான் யுத்தம் முடிந்தவுடன் நெருக்கடி தொடரும் என்ற பீதியால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க அதிகாரிகள் ஒரு உலகளாவிய திட்டத்தை தயாரித்தனர்

The Global Minotaur - Yanis Varoufakis

அத்தியாயம் 3: உலகளாவிய திட்டம்

1946லிருந்து 1971வரையிலான உலகப் பொருளாதாரப் போக்கின் வரலாற்றை ஒரு நாற்பது பக்கங்களில் அடக்கிய அத்தியாயம் இது. 1930களில் ஏற்பட்ட உலகப் பெரு நெருக்கடியானது முதலாளித்துவ அமைப்புமுறையே தகர்ந்து போவதற்கு இட்டுச் சென்றது. இதில் முதலாளித்துவம் கற்றுக்கொண்ட பாடம் ஏராளம். ஒருபுறம் பெருநெருக்கடி இரண்டாம் உலகப்போருக்கு அடிகோலியது என்றாலும் மறுபுறத்தில் இரண்டாம் உலகப்போரானது பெரு நெருக்கடியை முடிக்கு கொண்டுவர உதவியது. இனிமேல் இதுபோன்ற பெரு நெருக்கடிகள் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் அனைத்து முதலாளித்துவ சிந்தனையாளர்களிடம் எழுந்தது. எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக பிரட்டன்வுட் என்ற இடத்தில் அவர்கள் கூடி முடிவெடுத்தார்கள். அதில் உருவானதுதான் உலகளாவிய திட்டம் என்று இந்நூலாசிரியர் வர்ணிக்கும் திட்டமாகும்.

போரின் முடிவில் அமெரிக்கா ஒரு வர்த்தக உபரி நாடாக பரிணமித்தது எனவே முடிவை எடுப்பதில் அதிக செல்வாக்கு செலுத்தும் நாடாக இருந்தது ஆச்சரியமில்லை. எனவே அது தன்னுடைய நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு ஒரு நிரந்தர உலகப் பொருளாதார பொறியமைவை உண்டாக்க முயற்சித்தது. எனினும் உலக வர்த்தகத்தில் எப்பொழுது பார்த்தாலும் சில நாடுகள் உபரி நாடுகளாகவும் சில நாடுகள் பற்றாக்குறை நாடுகளாகவும் இருக்கவே செய்யும். எனவே உபரியை மறுசுழற்சி செய்யும் ஏற்பாடுடைய திட்டமே நீண்டகாலத்தில் இயங்க முடியும். இந்த உண்மையை அன்றைய தினம் பிரிட்டன் நாட்டை பிரதிநிதித்துவப் படுத்திய பொருளியல் அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் அறிந்து அதற்கேற்றாற்போல் திட்டத்தை வடிவமைக்க ஆலோசனை கூறினார். எனினும் அமெரிக்க நலன் என்பது அதனுடைய உற்பத்திக்கான சந்தையை நீண்டகாலத்திற்கு உத்தரவாதப்படுத்த போரில் தோல்வியுற்ற நாடுகளை மறுகட்டமைப்பு செய்தால் நடக்கும் என்று ஜெர்மனியையும் ஜப்பானையும் மையமாக வைத்து இரண்டு பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்து அமலுக்கு கொண்டு வந்துவிட்டது. பிரட்டன் வுட் அமைப்புகள் இந்த உலகளாவிய திட்டத்தை செயல்படுத்தும் உறுப்புகளாக உருவெடுத்தன. எனினும் அறிவியல் பூர்வமாக உபரியை மறுசுழற்சி செய்யும் ஏற்பாடு இல்லாத இத்திட்டம் தோல்வியில் முடியும் என்று கீன்ஸ் தெரிவித்த அச்சம் உண்மையானது.

இது எப்படி நடைபெற்றது என்பதையும் அமெரிக்காவின் மனநிலை எப்படி மாறிவந்தது என்பதையும் நுணுக்கமாக அறிய இந்த நாற்பது பக்கங்களையும் ஒருவர் வாசிக்க வேண்டும்,

அத்தியாயம் 4: அகில உலக பகாசுரன்

The Global Minotaur: America, the True Origins of the Financial Crisis and the Future of the World Economy by Yanis Varoufakisஅமெரிக்கா வர்த்தக உபரி நாடாக இருந்தபொழுது தயாரிக்கப்பட்ட உலகளாவிய திட்டம் அமெரிக்கா பற்றாக்குறை நாடாக மாறியபின் குலைந்து போனது. ஆம் அமெரிக்கா ஒரு பற்றாக்குறை நாடாக 25 ஆண்டுகளில் மாறிவிட்டது. வியட்நாம் யுத்தமானது அமெரிக்க அரசாங்கத்திற்கு 11,300 கோடி டாலரையும் அதன் வர்த்தக உபரியில் 22,000 கோடியையும் விழுங்கிவிட்டது. அத்துடன் இப்போரின் விளைவாக அமெரிக்க தொழிலகங்களின் வருவாயும் லாபமும் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக அங்கே வேலையின்மை உயர்ந்தது. இதை சமாளிக்க அரசு கொண்டுவந்த திட்டமான கிரேட் சொஸைட்டி என்ற சமூகநலத் திட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் செலவை அதிகரித்தது. இப்பொழுது அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறை நாடு அதன் அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அரசாங்கமாக மாறிவிட்டது. இதை சமாளிக்க அரசாங்கம் டாலர் நோட்டுகளை அச்சடிக்க வேண்டியதாயிற்று. எனினும், பிரிட்டன்வுட் ஒப்பந்தப்படி டாலரை உலகப்பணமாக ஏற்றுக் கொள்ள அமெரிக்காவானது, 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்று பராமரிக்க வேண்டும். பற்றாக்குறையான பிறகு எங்கே பராமரிப்பது? எனவே டாலருக்கும் தங்கத்துக்கும் உள்ள விகிதம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசானது பிரிட்டன்வுட் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. எனினும் டாலர் உலகப்பணமாக நீடித்தது. இது எப்படி சாத்தியப்பட்டது என்பதை விவரிப்பதே இந்த அத்தியாயம். அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையும் பட்ஜெட் பற்றாக்குறையும் ஏற்படுத்திய பகாசுரப்பசியை அகில உலக பகாசுரன் என்று இந்நுலாசிரியர் வர்ணிக்கிறார். அமெரிக்காவின் உலகளாவிய திட்டத்தை இப்பொழுது அகில உலக பகாசுரன் மாற்றீடு செய்துவிட்டான். உலகளாவிய திட்டம் அமலில் இருந்த பொழுது நிலைநாட்டப்பட்ட உலக மேலாதிக்கத்தையும், கம்யூனிஸ அச்சுறுத்தல் என்பதையும் பயன்படுத்தி உலக முதலீட்டை கவர்ந்திழுக்கும் நாடாக தொடர்ந்து பராமரித்து வந்தது. அந்நாட்டுக்கு வரும் முதலீடும், அந்நாட்டு அரசு கடன்பத்திரங்களை வாங்க வெளிநாடுகளிலிருந்து வரும் டாலரும் இரட்டைப் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவி செய்து வருகிறது.

அகில உலக பகாசுரன் தோன்றியவுடன் அது ஏற்படுத்திய உலக அதிர்வு என்பது துயரமானது. ஆம் அது கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் உலக மக்களை வாட்டியது. உலகளாவிய திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை தன்னுடைய மேலாதிக்கத்தை பயன்படுத்தி கொண்டு வந்துவிட்டது. டாலர் மதிப்பு வீழும் போது எண்ணெய் விலை உயர்வு இயல்பானது. 1971ல் பீப்பாய்க்கு 3 டாலராக இருந்து கச்சா எண்ணெய் 1980ல் 30 டாலராக எகிறிவிட்டது. எனினும் இந்த அதிர்ச்சிகர உயர்வானது அமெரிக்காவை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏனென்றால், விலைஉயர்வின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது அமெரிக்காவை நோக்கி முதலீட்டு வடிவத்தில் பாய்ந்தது.

நான்கு கவர்ச்சிகர அம்சங்களுடன் அகில உலக பகாசுரன் நிலைபெற்று விட்டது. தன்னுடைய உலக மேலாதிக்கத்தின் மூலம் டாலரில் செல்வத்தை சேர்ப்பது என்பது பாதுகாப்பான செல்வம் என்று உலக நாடுகளை நம்பவைத்ததன் மூலம் டாலர் உலகப்பணம் என்ற அந்தஸ்த்து காப்பாற்றப்பட்டது. முதலீட்டை கவர்ந்திழுக்க வட்டிவீதத்தை உயர்த்துதல், உள்நாட்டில் தொழிலாளர்களை சுரண்டப்படுவதை அதிகரித்தன் மூலம் உருஞ்சப்பட்ட உபரியானது அமெரிக்க உற்பத்திப்பொருட்கள் வர்த்தகப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடிந்தது. உலகப்பணமாகவும் உலகச் செல்வத்தின் சேமிப்பகமாகவும் மாற்றப்பட்ட டாலரை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு உலகநாடுகளுக்கு ஏற்பட்டதால் வளர்ந்துவரும் பற்றாக்குறையால் அமெரிக்கா நிலைகுலையாமல் இருக்க அதை நோக்கிய மூலதன ஓட்டம் உத்தரவாதப்படுத்தப்பட்டது.

அத்தியாயம் 5: அந்த ராட்சசனின் பணிப்பெண்கள்

உலக உபரி மறுசுழற்சிக்காக உருவாக்கப்பட்ட அறிவியலுக்கு புறம்பான உலகளாவிய திட்டம் தோல்வியடைந்து அதனிடத்தில் ஒரு புதிய மறுசுழற்சி பொறியமைவு ஏற்பட்டுவிட்டது. அதுதான் அகில உலக பகாசுரன். இதுவும் அறிவியலுக்கு புறம்பான மறுசுழற்சி பொறியமைவே. இது நீண்டகாலம் நீடிக்க முடியாது. எனினும் இது இன்றுவரை நீடித்து வருவதற்கு உதவிகரமாக இருக்கும் நான்கு முக்கிய அம்சங்களை இந்நூலாசிரியர் “அந்த ராட்சசனின் பணிப்பெண்கள்“ என்று வர்ணிக்கிறார். அந்த அம்சங்கள் யாவை? 1. உள்நோக்கி பாய்ந்துவரும் அந்நிய முதலீட்டை கவர்ச்சிகரமான வழியில் உள்ளிழுத்துக்கொள்ளும் அமெரிக்க நிதிமூலதனச் சந்தையான வால்ஸ்டிரீட். 2. தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டுவதற்காக வால்மார்ட் என்ற நிறுவனம் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட மாதிரித் தொழில்முனைவு. 3. பணக்காரர்களிடம் செல்வம் குவிந்தால் அது கசிந்து ஏழைகளுக்கு பாயும் என்ற கோட்பாடு. 4. அறிவியலுக்கு புறம்பான, எந்த கேள்விக்கும் உட்படுத்தப்படாத பொருளாதாரச் சித்தாந்தமான – சந்தையில் அதிகரித்துவரும் வழங்கல்-வேண்டல் இடைவெளியைக் குறைக்க மேலும் வழங்கல் பக்கமே அரசு தலையிட்டு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோட்பாடு.

அமெரிக்க நிதிமூலதனச் சந்தையான வால்ஸ்டிரீட் புதிய புதிய நிதிப்பத்திரங்களை உருவாக்கி அவற்றை சுற்றுக்குவிட்டன. உதாரணம் இழப்பு காப்பரண் (Hedge Fund) தருவிக்கப்பட்ட ஆவணம் (Derivatives), பிணையுறுதிக்குட்பட்ட கடன்பொறுப்பு ஆவணம் (Collateralized Debit Obligations CDO). சுற்றுக்குவிடப்பட்ட இதுபோன்ற நிதிப்பத்திரங்கள் பணத்தின் பாத்திரத்தை வகிப்பதால் அவற்றை தனியார் பணம் என்று நூலாசிரியர் அழைக்கிறார். ஒட்டுமொத்த பணச் சுழற்சியில் இப்படிப்பட்ட தனியார் பணம் அரசுப் பணத்தைவிட பன்மடங்கு இருந்து வருகிறது. அத்துடன் தர்க்க-காரணங்களுக்கு அப்பாற்பட்ட வால்ஸ்டிரீட் தோற்றுவித்த தொழில் சொத்துக்களை மதிப்பீடும் முறை போன்றவற்றால் மூலதனச் சந்தையானது இணைத்தல், கவர்தல், இறுகுதல் (Merger, Acquisition, Consolidation) ஆகிய நடவடிக்கைகள் மூலம் குடிவெறியுடன் இயங்கி வந்தது என்கிறார். இந்த குடிவெறி இயக்கமானது பாய்ந்துவரும் அந்நிய முதலீட்டை விழுங்கி சீரணிக்கும் தன்மை வாய்ந்தது. இந்தப் பணிப்பெண்ணின் குணாம்சங்களையும் இதரப் பணிப்பெண்களின் குணாம்சங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள நூலை வாசிக்க வேண்டும்.

அத்தியாயம் 6: பெருவீழ்ச்சி

The Global Minotaur Book by Yanis Varoufakis

“அடுக்குகளின் இயங்கியல் (Dynamics of Piles) குறித்து குழந்தைகள் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். சிறிய கனசதுர விளையாட்டு கட்டைகளை அவர்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார்கள். சிறிய கோபுரத்தை போல் அடுக்கி வைக்கும் போது அவை ஒரு கட்டத்தில் கலைந்து விழுகின்றன, அவர்கள் அதைப் பார்த்து குதூகலம் அடைந்து கைதட்டி மகிழ்கிறார்கள். பின்னர் இதே விளையாட்டை துவங்குகிறார்கள். இது 2008ம் ஆண்டில் நிகழ்ந்ததிலிருந்து மாறுபட்டதல்ல“. இப்படித்தான் 2008ம் ஆண்டின் பெருவீழ்ச்சியைப் பற்றி எழுதுவதற்கான அறிமுகத்துடன் இந்த அத்தியாயத்தை துவங்குகிறார். 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற உலகப் பெரும் நிதிநிறுவனங்களின் சரிவுகளையும் அவற்றை முட்டுக் கொடுக்க “சுதந்திரச் சந்தை“ கோட்பாட்டையும் மீறி வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகள் தலையிட்டதையும் வரிசையாக விளக்குகிறார். 2008க்கு பிறகு நிதிச்சந்தை நெருக்கடியானது தொழிற்சந்தைக்கு பரவியதையும் அதன்விளைவாக செயல்பட்டுக் கொண்டிருந்த வங்கிகள் வட்டிவீதத்தை குறைத்தும் எந்த சாதகமான விளைவும் ஏற்படாமல் தொழில் மந்தம் குடிகொண்டதையும் விளக்குகிறார். தொழில் மந்தம் ஏற்படுத்திய விளைவுகளை இப்படிச் சுட்டிக்காட்டுகிறார். “அநேகமாக 40 லட்சம் அமெரிக்கர்கள் தங்கள் பணிகளை இழந்தனர். அமெரிக்க அடமானக் கடன் வங்கிகளின் அமைப்பின் மதிப்பீட்டின்படி 200 வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவில் வீடுகள் வங்கிகளால் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் 2.5 லட்சம் குடும்பங்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் தலைகுனிவோடு வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்தது“

2008ம் ஆண்டின் பெருவீழ்ச்சியை முதலாளித்துவ வரலாற்றின் ஒரு முக்கிய கட்டமாக நூலாசிரியர் சித்தரிக்கிறார். இக்கட்டத்தை திவாலாகிப்போன வங்கிகளின் ஆட்சி என்றும் அதை கிரேக்க மொழியில் டோச்சோ ரபீசோக்ரசி என்று வர்ணிக்கிறார். 2008க்கு முன்பு கட்டப்பட்ட உலகத்தின் நாயகனாக இருந்த அகில உலக பகாசுரனே 2008ன் பெருவீழ்ச்சிக்கு காரணமாகிறான். இப்பெருவீழ்ச்சியானது, உலகின் முதல் ஒருசதவீத பணக்காரர்களை மட்டும் பாதிக்கவில்லை கடைசி மனிதன் வரை அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விளக்கி. அகில உலக பகாரசுரன் ஒரு மரண அடிவாங்கி நிற்கிறான் என்று எழுதுகிறார்.

அத்தியாயம் 7: எனது நண்பர்களின் சிறிதளவு உதவியுடன்

அகில உலக பகாசுரன் மரணஅடி வாங்கி மரணப்படுக்கைக்கு சென்றபின் என்ற நடந்தது என்பதை விளக்கும் அத்தியாயம் இது. அதாவது, பகாசுரனின் முதன்மைப் பணிப்பெண்ணான வால்ட்ஸ்டிரீட்டால் உருவாக்கப்பட்ட தனியார் பணம், உலகச் செல்வங்களை கவர்ந்திழுத்து செரித்து கழிவாக வாராக்கடன் பத்திரங்களாக வெளியேற்றிய பின்பு என்ன நடந்தது? வால்ட்ஸ்டிரீட்டின் அரசியல் செல்வாக்கானது அதை மீண்டும் புத்துயிரூட்ட முனைந்தது. அதற்கான கொள்கை வழித்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அமெரிக்காவில் அது கெய்த்னர்-சம்மர்ஸ் திட்டத்தின் வாயிலாகவும் ஐரோப்பாவில் அது ஐரோப்பிய நிதி ஸ்திர அமைப்பு வாயிலாகவும் நடைபெற்றது. இக்கொள்கைகளை திவாலாட்சி என்று வர்ணிக்கிறார் நூலாசிரியர். திவாலாட்சியின் அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த அத்தியாயத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். நம்ம ஊர்ப் பழமொழியில் கூறினால் நாய்வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு வைத்த கதைதான் இக்கொள்கை முடிவுகள்.

மதிப்பற்ற கடன்பத்திரங்களின் (பிணையுறுதி கடன் பொறுப்பு ஆவணங்கள்) வாயிலாக வீழ்ச்சியடைந்த வங்கிகளின் நிதிநிலைமையை சீராக்க அவற்றை புத்தகத்திலிருந்து அப்புறப்படுத்த உதவும் திட்டம்தான் கெய்த்னர்-சம்மர்ஸ் திட்டம். ஆனால் அதே மதிப்பற்ற கடன் பத்திரங்கள் புதிய உருவில் அதே வங்கிகளுக்கு புதிய நிதியாண்டில் வந்து சேரும் ஏற்பாடும் இத்திட்டத்தின் உள்ளடக்கமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதினைந்து நாடுகள் கூட்டாக இணைந்து திவாலாகிவரும் நாட்டை புத்துயிரளிக்க நிதிதிரட்டி, அதே குப்பைப் பிணைப்பத்திரங்களை வங்கிகள் மீண்டும் சுற்றுக்குவிட உதவிடும் திட்டமே ஐரோப்பிய திட்டம். இதில் முதலில் திவாலான அயர்லாந்து நிதியளிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது, அடுத்தது கிரீஸ், அடுத்தது போர்ச்சுக்கல் இப்படியே போனால் எல்லாநாடுகளும் விலக்கி வைக்கப்படும் நிலைதான் ஏற்படும்.

இவ்வாறு தனியார் நச்சுப்பணத்தை உருவாக்கும் தங்களுடைய ஊழலுக்கு மீண்டும் திரும்புமாறு வங்கிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டது. அவை அரசாங்கத்திடமிருந்து வாங்கிய கடன்களின் சிறு பகுதியை திருப்பிச் செலுத்தின. பெருமந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஊடகங்கள் அறிவிக்கத் துவங்கின. ஆனாலும், வேலையின்மை விகிதம் எப்போதும் போல் அதிகமாகவே இருந்தது, அடமானக்கடன் வீடுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அல்லது உடமை மாற்றம் செய்யப்படுவதும் தடையின்றி தொடர்ந்தது. உண்மை ஊதியம் தேங்கிக் கிடந்தது. அரசியல் அடிப்படையில் பரிசீலித்தால் அரசாங்கங்கள் தோல்வியடைந்த வங்கிகளிடம் அடிபணிந்தன. இவ்வாறு அப்பணிப்பெண் மீட்சிபெற்றாள். ஆனால் பகாசுரன் மரணப்படுக்கையில்.

இரண்டாவதாக, மற்றொரு பணிப்பெண்ணான சுதந்திர சந்தை அடிப்படைவாதம் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாததைப் போன்று தனது சித்தாந்த வலையை பலமாக வீசிக்கொண்டுதானிருந்தது. மார்க்சிய சிந்ததாந்தத்தின் அடிப்படையில் மாஸ்கோவில் அமைக்கப்பட்ட சோவியத் ஒன்றியமானது எப்படி அதே மார்க்சியத்தை தாக்கியதோ, அதேபோல் சுதந்திரச் சந்தை அடிப்படைவாதமானது பொருளாதாரத்தில் அரசு தலையிடாமை என்ற அதன் அடிப்படைக் கோட்பாட்டை தாக்கி அழித்தது என்கிறார் நூலாசிரியர்.

அத்தியாயம் 8: அகில உலக பகாசுரனின் உலகளாவிய மரபுவழி

இந்த அத்தியாயம் அமெரிக்காவிற்கு வெளியே இருந்த பொருளாதார மண்டலங்களைப் பற்றியும் அதன் மையநாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைப் பற்றியும் கூறுகிறது. ஜப்பான், கிழக்காசியா, ஜெர்மனி, ஜெர்மனியின் டச்மார்க், ஐரோப்பிய நாணய ஒன்றியம், ஜெர்மனியின் மறு இணைப்பு, ஐரோப்பிய வங்கிகள், கிரேக்க நெருக்கடி, தடுமாறும் ஐரோப்பா, சீனா என்று உலகப்பொருளாதாரத்தில் தாக்கம் செய்த அனைத்து அம்சங்களையும் 2008ம் ஆண்டு வீழ்ச்சியின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது.

போருக்குப்பின் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாடு ஜப்பான். இது அவர்களின் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். அது உபரி உற்பத்தி செய்யக்கூடிய நாடாகும் ஆனால் உபரி மறுசுழற்சிப் பொறியமைவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பானின் வளர்ச்சிப் பாதையானது அங்கு பெருநிறுவனங்களின் கெய்ரட்சு உத்தியின் மூலம் மூலதனக் குவியலுக்காக செயல்பட்டது. கெய்ரட்சு உத்தி என்பது பஞ்சு உற்பத்தியிலிருந்து ஆயத்த ஆடைவரை எல்லாத்தொழிலும் ஒரே குடையின் கீழ் நடத்தப்படும் ஏற்பாடு. (வெர்ட்டிக்கல் இன்டகரேசன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். நம்ம ஊர் உதாரணம் அம்பானி நிறுவனங்கள்) உற்பத்தித்திறன் வளர்ச்சி அதன்வேகத்திற்கு வளராத ஊதியம், ஆகவே தங்குதடையற்ற மூலதனத்திரட்சி ஒருபுறம். இன்னொருபுறம் அரசு கட்டுப்பாட்டு வங்கிகள் எனவே அவை ஊகவணிக நடவடிக்கைகளுக்குள் இறங்குவதற்கான கட்டுப்பாடுகள் என்று வளர்ச்சிவேகம் அமைந்திருந்தது.

ஜப்பானுக்கு சந்தை கிழக்காசிய நாடுகள். அமெரிக்கச் சந்தையின் ஒரு பகுதி ஜப்பான் என்று உலகளாவிய திட்டம் இயங்கியது. 1971ல் அது நொறுங்கிப் போய் அந்த இடத்திற்கு பகாசுரன் வந்தவுடன் உள்நாட்டில் கெய்ட்ரசு வடிவில் முதலீடு செய்யப்பட்ட உபரியானது அமெரிக்காவை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதேநேரத்தில் உள்நாட்டுத் தொழிலானது குறைவான எரிசக்தி பயன்படுத்தும் துறைகளில் கவனம் செலுத்தியது. ஜப்பான் முதலீடு அமெரிக்காவை நோக்கிச் சென்றதற்கு பதிலுதவியாக அவர்களுக்கு அந்நாட்டுச் சந்தை மேலும் திறந்துவிடப்பட்டது.

உயர்ந்துவரும் அமெரிக்க ஜப்பான் வர்த்தக இடைவெளியை குறைக்க அமெரிக்க டாலரின் மதிப்பு பிளாசா ஒப்பந்தத்தின் மூலம் 1985ல் குறைக்கப்பட்டது. இது ஜப்பானில் தொழில் மந்தத்தை ஏற்படுத்தியது. இதை சமாளிக்க ஜப்பான் நாட்டு வங்கிகள் பணப்புழக்கத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்தன. இது பணவீக்கத்தை தோற்றுவித்தது. இதனைக் கட்டுப்படுத்த வட்டிவீதங்கள் உயர்த்தப்பட்டன, இதன் காரணமாக வீடுகள் அலுவலகங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இது திரும்பச் செலுத்தமுடியாத பிரம்மாண்டமான கடன்கள் வங்கிகளுக்கு அதிகரித்தன. வங்கிகள் செயல்பாட்டின் தேக்கமானது தொழில்துறைக்கு பரவியது. அரசாங்கம் தலையிட்டு அதன் வங்கிகள் வாயிலாக பணம் உட்செலுத்தல் செய்தது. இது தொழில்களுக்கு பயன்படுவதற்க பதிலாக வங்கிகளின் கடன்கள் உட்கிரகித்துக் கொண்டன. வங்கிகள் நடைபிணங்களாயின. இதன் பிறகு என்ன நடந்தது? 2008 நெருக்கடி அங்கே எப்படி குடிகொண்டது? 2008க்குப் பிறகு என்ன நடந்தது? இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டுமானால் இந்த அத்தியாயத்தை வாசிக்க வேண்டும்.

The Global Minotaur” sets his eyes on South America - United World International

தென்கிழக்காசிய நாடுகளான தென்கொரியா, இந்தோனேஷியா, மலேஷியா, தைவான் ஜப்பானின் ஏற்றுமதிச் சந்தை நாடுகளாக வளர்க்கப்பட்டு ‘ஆசியப்புலி‘களாகின. உலகளாவியத் திட்டத்தின் படி சீனாதான் ‘புலி‘யாகியிருக்க வேண்டும் ஆனால் சீனாவில் மாவோவின் புரட்சியானது அவர்கள் கவனத்தை இந்த நான்கு நாடுகளுக்கு திருப்பிவிட்டது. ஹாங்காங்கையும், சிங்கப்பூரையும் இதனுடன் சேர்ந்து ஆறு ஆசியப்புலிகள் என்று முதலாளித்துவ பொருளாதார வரலாற்றாசிரியர்கள் அழைப்பது வழக்கம். நாம் குறிப்பிட்ட நான்கு புலிகள் எப்பொழுதுமே வர்த்தகப் பற்றாக்குறை நாடுகள்தான். எனவே இவற்றுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நெருக்கடி எப்பொழுதுமே இருந்தது. ஏற்றுமதிக்கான சந்தையை அமெரிக்காவும் ஜப்பானும் வழங்கின. உலகளாவிய திட்டம் நொறுங்கி அதனிடத்தில் பகாசுரன் வந்தவுடன் ஜப்பானின் உபரி முதலீடு இப்புலிகளுக்கு சென்றது. 1985 பிளாசா ஒப்பந்தப்படி அமெரிக்கா ஜப்பானுக்கு இப்புலிகளின் சந்தையை ஓரளவுக்கு விட்டுக்கொடுத்தது. முதலீட்டுச் சந்தையை திறந்து விடுவதற்கு இப்புலிகளை மேற்குலகு வற்புறுத்தி வந்தது. புலிகள் அடிபணிந்தன. அன்னிய நேரடி முதலீடு பாயத் தொடங்கியது. ஜப்பான் முதலீடானது அதன் உற்பத்திப் பொருளுக்கான சந்தையில்லாமல்தான் புலிகளிடம் வந்தது. அங்கும் இதேபிரச்சனைதான். உள்ளூர்ச் சந்தை ஓரளவுதான் புலிகளிடம் முதலீடு செய்து உற்பத்தி செய்தவையை உட்கிரகிக்க முடிந்தது. இதற்கும் அமெரிக்காதான் கைகொடுக்க வேண்டியதிருந்தது. பகாசுரன் எல்லாவற்றையும் விழுங்கும் தன்மையுடைவன்தானே. அமெரிக்காவின் நிகர ஏற்றுமதிகளின்பால் தொடர்ந்து அதிகரித்துவரும் வருமானத்துக்கு மேலாக புலிப் பொருளாதாரத்தில் மூலதன ஓட்டம் அதிகரித்தது. அவை சீக்கிரமாக அசையாச் சொத்துக்கள் குமிழியை உருவாக்கியது 1990களின் இறுதியில் அக்குமிழி வெடித்துச் சிதறியது. சீரமைக்க சர்வதேச நிதியம் புகுந்தது. வட்டிச்சுமை புலிகளை அழுத்தியது. இதன் பிறகு என்ன நடந்தது? 2008 நெருக்கடி அங்கே எப்படி குடிகொண்டது? 2008க்குப் பிறகு என்ன நடந்தது? இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டுமானால் இந்த அத்தியாயத்தை வாசிக்க வேண்டும்.

ஆசியாவுக்கு ஒரு ஜப்பான் என்றால் ஐரோப்பாவிற்கு ஒரு ஜெர்மனி என்பதே அமெரிக்காவின் உலகளாவிய திட்டத்தின் உள்ளடக்கம். இரண்டுக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. ஜெர்மனிக்கென்று ஒரு பொது வெளி உண்டு. அது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய பொதுச்சந்தை. இன்று அது ஐரோப்பிய ஒன்றியம். எனவே அது தனது சந்தைக்கு பகாசுரனை அதிகம் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் பற்றாக்குறை நாடுகள், உபரி நாடுகள், தனிவகை நாடுகள் என்ற வகையானவை இருந்தன. ஆனால் இங்கும் அறிவியலற்ற உபரி மறுசுழற்சி பொறியமைவு பிரச்சனைதான். ஐரோப்பிய வெளிக்குள் உபரியைக் குவிப்பது அதை பகாசுரனுக்கு தீனியாக்குவது என்று 1971க்குப் பிறகு செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் ஜெர்மனியானது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எற்றுமதி செய்யும் நாடாகியது.

ஐரோப்பிய நாணயப் பரிவர்த்தனை விகித பொறியமைவானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணய மதிப்புகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்குள் மட்டுமே ஏறி இறங்க வடிவமைக்கப் பட்டிருந்தது. இதில் ஜெர்மன் நாணயம் உபரி நாடு என்ற முறையில் ஆதிக்கம் செலுத்தியது. ஆகவே, ஜெர்மனியின் ஒப்புதலில்லாமல் பொதுநாணயமுறை சாத்தியமில்லை என்ற நிலைதான். 1990களில் நிகழ்ந்த ஊகவணிகத் தாக்குதல் விளைவாக ஜெர்மனி பொதுநாணயமுறைக்கு இணங்கியது. இதேபோல் பொதுநாணய முறைக்கு இணங்க ஃபிரான்ஸிற்கும் அதற்கேயுரித்தான பிரத்யேக காரணங்கள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையும் நாடுகள் தங்கள் நாட்டு பணவீக்கத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும், கடனுக்கும் உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 60 சதவீதம் என்ற நிபந்தனையுடன் யூரோ நாணயம் உருவானது. ஆனால் ஒவ்வொரு நாடும் சுயேட்சையாக பொருளாதாரத்தை பராமரிக்கும் அதிகாரம் பெற்றிருந்தன. எனவே ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீடு கிடையாது. 2008 நெருக்கடி பகாசுரனைக் காயப்படுத்தியபோது யூரோ உடைந்து நொறுங்கியது என்கிறார் நூலசிரியர்.

இதற்கு சில அடிகள் பின்னோக்கிச் சென்று ஜெர்மனி மறுஇணைப்பின் தாக்கம் ஜெர்மனியின் மீது என்ன விளைவை ஏற்படுத்தியது என்பதைப் பார்க்க வேண்டும். கிழக்கு ஜெர்மனி மறு இணைப்புக்காக ஜெர்மனி ஏராளமான பொருட்செலவைச் செய்தது. அதற்கு கிடைத்த பலன் மலிவான கூலிஉழைப்பாளர் சந்தை. பழைய ஜெர்மனி தொழிலாளர்கள் தங்கள் கூட்டுபேரத்தினை இழந்தார்கள். ஜெர்மனி நிறுவனங்களின் லாபம் 37 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக நூலாசிரியர் கூறுகிறார். இது அங்கே மூலதனத் திரட்சிக்கு பெரிதும் உதவியது.

ஐரோப்பிய வங்கிகளின் நிலை அமெரிக்க வங்கிகளின் நிலை போன்றுதான். மெல்ல மெல்ல நிதிமயப்படுத்தப்பட்ட பொருளாதாரம், அது அதிகரித்து வந்த ஊகவணிக நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. அத்துடன் அமெரிக்கா போன்றே ஐரோப்பாவிலும் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்தது. அமெரிக்க நிர்வாகம் என்ன செய்ததோ அதேதான் வேறு வடிவில் ஐரோப்பாவில் செய்யப்பட்டது. 2008-2009ம் ஆண்டுகளின் வங்கிகளின் வீழ்ச்சியானது உற்பத்தி வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைள் உற்பத்திக்கு நிதியளிப்பதற்கு பதிலாக வீழ்ச்சியடைந்த வங்கிகள் உருஞ்சிக்கொள்ளும் ஏற்பாடாகவே இருந்தது. மீண்டும் தனியார் பணம் உருவாவதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஐரோப்பிய மீட்பு நடவடிக்கை வழங்கியது என்கிறார் நூலாசிரியர்.

கிரேக்க நெருக்கடியைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறார். மார்ஸ்ட்ரிச் உடன்படிக்கை குறிப்பிட்ட அளவை மீறி கிரேக்கம் கடன் வாங்கியதை கிரேக்க நெருக்கடி மூலம் என்கிறார் நூலசிரியர். அவை பெரும்பாலும் இப்போது கடன்பொறுப்பு ஆவணப்பண்டமாற்று வடிவத்தில் இருக்கும் குப்பைகளாக கிடக்கின்றன. எனவே கடன்கள் மூலதன வடிவில் இல்லை மாறாக ஓட்டாண்டியாகும் நம்ம ஊர் விவசாயிபோல் நிலைமை ஆகிவிட்டது. அதையொட்டி ஐரோப்பிய வங்கிகள் மறுநிதியாக்கத்திற்காக குதிப்பதும், அதற்கான வட்டிவீதத்தை அதிகரித்ததும், நெருக்கடியை மேலும் முன்னகர்த்திச் சென்றது. இறுதியில் உதவியை எதிர்பார்த்த ஜெர்மனி கைவிரித்துவிட்டது. சிக்கன நடவடிக்கை மூலமாக மக்கள் தங்கள் வயிற்றைக்கட்டி சேமித்து கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர். கிரேக்க நெருக்கடி யூரோ நெருக்கடியின் ஓர் அங்கம் என்கிறார் நூலாசிரியர்.

அப்படியென்றால் யூரோ நெருக்கடிக்கு தீர்வுதான் என்ன? ஐரோப்பிய மக்கள் வயிற்றைக் கட்டி சேமித்துதான் வராக்கடன்களை செலுத்த வேண்டுமா? இல்லையென்கிறார் இந்நூலாசிரியர். நெருக்கடிக்குத் தீர்வாக மூன்று வழிமுறைகளை முன்வைக்கிறார். அவையென்ன என்பதை அறிந்து கொள்ள இந்த அத்தியாத்தை வாசகர்கள் படிக்க வேண்டும்.

அத்தியாயத்தை முடிக்கும் முன் பூதாகரமாக எழுந்துவரும் சீனப் பொருளாதாரம் பற்றி அலசுகிறார். டெங்சியோபிங் கொண்டு வந்த சீர்திருத்தத்திலிருந்து சீனாவின் பொருளாதார எழுச்சியை ஆய்வு செய்கிறார். அகில உலக பகாசுரனின் எழுச்சியை புரிந்து கொண்டு அதன் முக்கியப் பணிப்பெண்ணான புதிய உற்பத்தி மாதிரி அதாவது அதிகரித்து வந்த உழைப்புச்சுரண்டல் வாயிலாக சரக்குகளை மலிவாக்கி மூலதனக்குவியலை தோற்றுவித்த அம்சத்தில் சீனாவும் இணைந்து கொண்டு பகாசுரனுக்கு தீனி போட்ட விளையாட்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து. அது அமெரிக்காவுடன் வர்த்தக உபரி நாடு என்ற நிலையை எட்டிவிட்டது. அமெரிக்கா தன்னுடைய வலிமையைப் பயன்படுத்தி சீனநாணயமான ரென்மின்பி-யின் மதிப்பைக் உயர்த்த வலியுறுத்தி வந்தது. ஏற்கனவே பிளாசா ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய உபரியை கட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா சீனாவின் மீது இதே யுத்தியை கையாண்டது. இதற்கு சீனா போக்குக் காட்டி வருகிறது. 2008 நெருக்கடிக்குப் பிறகு பகாசுரன் காயமடைந்ததால் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் இன்னமும் பற்றாக்குறையிலே நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. ரென்மின்பி மதிப்பு உயர்த்தப்பட்டால் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் போட்டியிடும் தன்மையை இழக்கும். அதே நேரத்தில் அமெரிக்காவுடனான உபரி என்ற பாதையில் சீனாவானது தொடர்ந்து பயணிக்க முடியாது என்ற நிலையில் சீனா தனது கவனத்தை தென்னமெரிக்க நாடுகள் மீது திருப்பி தன்னுடைய முதலீட்டை அங்கு திருப்பிவிட்டுள்ளது. ஆக, சீனா, அமெரிக்கா, பிற உலகநாடுகள் என்ற முக்கோண விளையாட்டில் சீனா இறங்கியுள்ளது. இது எப்படிப் போகும் என்று பொறுத்திருந்துதான் பதில் கூறமுடியும் என்கிறார் நூலாசிரியர்,

அத்தியாயம் 9: பகாசுரன் இல்லாத ஒரு உலகு

இந்த அத்தியாயம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டது. அதாவது முதல் பதிப்பு வந்து இரண்டாண்டுகள் கழித்து சேர்க்கப்பட்டது. இதன் நோக்கம், முதல் பதிப்பில் கூறப்பட்ட வரையறுப்புகளை இரண்டாண்டு காலத்தில் உரசிப்பார்த்து அவை செல்லுபடியாகத்தக்கனவா என்பதை ஒரு சுயஆய்வு செய்யும் முயற்சியில் எழுதப்பட்டது. முதலில் உலக உற்பத்தி மறுசுழற்சி பொறியமைவாக பரிணமித்த (அல்லது வேறு வழியில்லாமல் உண்டாகிய அல்லது இட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட) அகில உலக பகாசுரன் படுகாயமடைந்த பின்னணியில் மறுசுழற்சி எந்த திசைவழியில் செல்கிறது என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் அகில உலக பகாசுரன் என்ற கருத்தமைவின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிபடுத்தும் அத்தியாயம் இது. இதற்காக அவர் மூன்று அரங்கங்களை எடுத்துக் கையாள்கிறார். அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகியவை இரண்டாண்டுகளில் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் பகாசுரனில்லா உலகில் மறுசுழற்சியை எப்படி தீர்மானித்து வருகின்றன என்பதையும் பகாசுரனை உண்டாக்கிய சூழலையும் தற்போது காயமடைந்த பகாசுரனின் இடத்தில் சீனா வந்தமர்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் இங்கே கூறப்பட்டுள்ளன.

Zed Books on Twitter: "Excited to unveil cover for 'The Global Minotaur' - also with colour picture section of #Varoufakis action shots http://t.co/06aOwM2qkQ"பகாசுரன் தோன்றியதற்கான அடிப்படைக் காரணமான அமெரிக்க இருபற்றாக்குறை (சம்மேளன அரசின் பற்றாக்குறை, அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை) அப்படியே நீடிக்கிறது. அமெரிக்காவை நோக்கிப் பாயும் மூலதனத்தின் வேகமும் அளவும் குறைந்து போய்விட்டது. எனினும் வால்ஸ்டிரீட் என்ற அமெரிக்க நிதிச் சந்தைக்கு பாய்வதற்கு பதில் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் வடிவில் மூலதனப் பாய்ச்சல் நடந்து கொண்டுதானிருக்கிறது. அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீது வால்ஸ்டிரீட் ஏற்படுத்திய காயத்திலிருந்து படிப்பினைகள் ஏதும் பெற்றுக் கொண்டதாக தெரியவல்லை. அமெரிக்க கொள்கைகள் மீண்டும் வால்ஸ்டிரீட்டை புத்துயரூட்டவே முயற்சிக்கிறது. அதன் ஒரு அங்கமே அளவு அடிப்படையில் எளிதாக்குவது (Quantitative Easing) என்ற திட்டம். இத்திட்டத்தின் பொருளியல் அம்சங்களை புரிந்து கொள்ள இவ்வத்தியாயத்தை வாசிக்க வேண்டும். பகாசுரனுக்கு பிந்தைய ஐரோப்பாவில் முன்னெழுந்து வந்தது சிக்கண நடவடிக்கை. இது பற்றாக்குறை நாடுகளை போட்டு கசக்கிவருகிறது. அத்துடன் ஜெர்மனி தன்னுடைய மேலாதிக்கத்தை நீடிக்க இக்கொள்கையை வற்புறுத்தி வருகிறது. இன்னொருபுறம் வங்கித்துறையில் நிதிமூலதனக்குமிழிகளை தோற்றுவிக்கும் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சீனப்பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில அது வெளிநாட்டு வேண்டலுக்கான உற்பத்தி என்றே இன்னும் நடந்து வருகிறது. அங்கே எதாவதொரு குமிழி வெடித்தால் உள்நாட்டில் வேலையின்மையும் அதையொட்டிய வேண்டல் வீழ்ச்சியும் ஏற்படும். பகாசுரன் மரணத்திற்குப் பிறகு உள்நாட்டில் வேண்டலைத் தூண்டல் என்ற கொள்கையில் போதிய பலன் இதுவரை எட்டவில்லை. இன்னொரு புறம் உள்நாட்டு வேண்டல் தூண்டல் நடவடிக்கைகளை (உதாரணம் வீட்டுவசதிக்கடனை எளிமையாக்குதல்) அங்கே நிதிமூலதன ஆதிக்கத்தை வலுப்படுத்தி ஆங்காங்கே குமிழிகளை உண்டாக்கி வருகிறது. இது வெடித்துச் சிதறினால் என்ன நடக்கும் என்று கூறமுடியாது. சீனத் தலைமைக்கு இவ்விளைவு தெரிந்திருந்தும் குமிழி உருவாக்கத்தை தடுக்கும் கோட்பாட்டை கண்டுபிடித்து கொள்கையாக அமல்படுத்த முடியவில்லை. இதுவே பகாசுரனுக்குப் பிந்தைய உலகின் கோட்டுச் சித்திரமாகும்.

பிற்சேர்க்கை

இறுதியாக பிற்சேர்க்கையாக இந்நூலை முடித்து வைத்ததுதான் யானிஸின் அற்புதமான செயலாகும். ஆம், உலக மறுசுழற்சி பொறியமைவு என்ற கருத்தமைவின் அடிப்படையில் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தை ஒரு ஒற்றை பொருளாதார மண்டலமாக பார்க்கும் அவரது பார்வை, அதற்கு தேவைப்படும் ஒரு உலகப் பொதுப்பணம், உலக உற்பத்தியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் உறவுகள், உலகச் சரக்குகளின் ஓட்டத்திற்கும் உலக மூலதனத்தின் ஓட்டத்திற்கும் உள்ள உறவு ஆகியவை பற்றிய யானிஸின் பார்வை ஆகியவற்றையே நான் யானிஸின் அற்புதமான செயல் என்கிறேன். இதை அவர் இயங்கியல் நோக்கில் ஆய்வு செய்திருக்கிறார். ஒரு உண்மையான மார்க்சிஸ்ட் என்ற வகையில் அவர் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நிலைமைகளை பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறியிருக்கிறார். நூலை முழுவதுமாக படிக்காமல் பிற்சேர்க்கையை மட்டும் படிப்பவர்களுக்கு பிற்சேர்க்கையின் சாரம் புரியாது. இந்நூலே மேற்கூறிய அம்சங்களை ஆய்வு செய்வதன் சாரமாக இருப்பதை பிற்சேர்க்கையைப் படித்தபின்புதான் புரிந்து கொள்ள முடியும்.
இந்நூலைப் படித்தபின்பு ஜான் மைநாடு கீன்ஸ் என்ற பொருளாதார அறிஞரைப் பற்றி மதிப்பீடு ஒருவருக்கு செழுமையடையும் என்று நம்புகிறேன். கீன்ஸின் கோட்பாடுகள் அமலாவதற்கு முதலாளித்துவம் அதன் உள்முரண்பாடுகள் காரணமாகவும் அதற்கேயுரித்தான இயங்குவிதிகள் காரணமாகவும் ஒருபோதும் அனுமதிக்காது. அதே நேரத்தில் அதே உள்முரண்பாடுகளும் இயங்குவிதிகளும் கீனீஸியத்தை தோற்றுவிப்பதும் தவிர்க்கவியலாதது. 1930களில் தூக்கியெறியப்பட்ட கீன்ஸ் 1940களின் பிற்பகுதியில் தேவைப்படுகிறார். மீண்டும் 1971ல் தூக்கியெறிப்பட்டார் இப்பொழுது தேவைப்படுகிறார். எனவே உலக உற்பத்தியமைப்பு மாறிச்செல்லும் கட்டத்தின் பிரதிநிதியாக கீன்ஸ் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இன்றைய உலகப் பொருளாதாரத்தை எப்படி ஆழமாக பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் நூல் இது என்பதால் இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *