அக்களூர் இரவி எழுதிய "ரதியின் மன்மதன்" சிறுகதைகள் புத்தகம் | Akkalur Ravi's Rathiyin Manmathan Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அக்களூர் இரவி எழுதிய “ரதியின் மன்மதன்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

“ரதியின் மன்மதன்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

விசித்திரமும் மகத்துவமும்

பாவண்ணன்

கடந்த பத்தாண்டுகளில் கனவில் தொலைந்தவன், காந்தியும் பகத்சிங்கும், இந்தியா என்கிற கருத்தாக்கம், மகாராஜாவின் பயணங்கள், சமத்துவ நோக்கிய இயக்கம், புத்த ஜாதகக்கதைகள் என பல்வேறு வகைமை சார்ந்த நூல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்த அக்களூர் இரவி சமீபத்தில் வெளிவந்த ரதியின் மன்மதன் என்னும் தொகுதியின் வழியாக சிறுகதையாசிரியராகவும் மலர்ந்திருக்கிறார். பசுமையான பள்ளிப்பருவ நினைவுகளும் கிராமத்து மனிதர்களைப்பற்றிய நினைவுகளும் அவரை சிறுகதை முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றன. 

ஒருமுறை படித்தால் மனத்தில் பதிந்துவிடக்கூடிய ஒரு விசித்திரமான அனுபவத்தை தொகுதியின் முதல் கதையில் படிக்கமுடிகிறது. கதையின் தலைப்பு விநியோகம். ஒரு கோயிலின் கருவறையிலிருந்து அந்தக் கதை தொடங்குகிறது. வழக்கமாக அபிஷேகம் செய்து தீபமேற்றி வழிபாடு நடத்தி பிரசாதத்தை விநியோகிக்கவேண்டிய குருக்கள் இரண்டு நாட்களாக கோவில் பக்கம் வரவில்லை. கருவறையில் வீற்றிருக்கும் பிள்ளையாரே அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார். அதனால் குருக்களின் வீட்டுக்கே சென்று  விசாரித்துவிட்டு வரலாம் என நினைத்து நிர்வாகிகள் புறப்பட்டுச் செல்கிறார்கள். 

தமக்கு அடிக்கடி உடல்நலம் சீர்குலைந்து விடுவதாலும் அதே ஊரில் வீட்டுக்கு அருகில் உள்ள வேறு இரு கோவில்களிலும் வழிபாடு செய்யவேண்டிய பொறுப்பில் இருப்பதாலும் தொலைவிலிருக்கும் அந்தக் கோவிலுக்கு வர இயலாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்  குருக்கள். மாற்று ஏற்பாடு செய்வதற்கும் வழியில்லை. குருக்கள் குடும்பத்தினர் வேறு யாரும் அந்த வட்டாரத்திலேயே இல்லை. தொடர்ச்சியாக வழிபாடு நின்றால் ஊர்க்காரர்களுக்குப் பதில் சொல்வது சிரமமாகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள் நிர்வாகிகள். அதனால் வெளியூரில் படிக்கும் மகன் அடுத்த நாள் காலையில் ஊருக்கு வருவான் என்றும் வந்ததும் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி அவர்களை அனுப்பிவைக்கிறார் குருக்கள். 

அடுத்தநாள் காலையில் நிர்வாகிகள் கோவிலில் காத்திருக்கிறார்கள். சற்றே குறிப்பிட்ட நேரத்தைவிட தாமதமாக மிதிவண்டியில் வந்து இறங்குகிறான் குருக்களுடைய மகன். நைவேத்திய வாளியோடு வேகமாக கோவிலுக்குள் நுழையும்போதே நைவேத்திய வாளிக்குப் பதிலாக வெற்று வாளியை வீட்டிலிருந்து எடுத்து வந்திருப்பதை அவன் உணர்கிறான். ஆயினும் திகைப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல்  பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து மாலை சாற்றி அர்ச்சனையைத் தொடங்குகிறான். கோவிலுக்கு வெளியே பிரசாதத்துக்காக காத்திருக்கும் கூட்டத்தினருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்னும் குழப்பத்தில் அவன் மனம் தவிக்கிறது.

அப்போது தற்செயலாக ஊர்த்தலைவரின் மனைவி சர்க்கரைப்பொங்கலையும் சுண்டலையும் வாளி நிறைய  கொண்டுவந்து நைவேத்தியம் செய்யுமாறு அவனிடம் கேட்டுக்கொள்கிறாள். அந்தத் திடீர் வேண்டுகோள் அவன் மனபாரத்தை இறக்கிவைத்துவிடுகிறது. வழிபாட்டைச் சிறப்பாகச் செய்து முடித்து பிரசாதத்தை காத்திருந்தோர் அனைவருக்கும் உற்சாகமாக வழங்கி முடிக்கிறான். அனைவரும் வெளியேற, அவனும் தன்னுடைய வெற்றுவாளியோடு மிதிவண்டியேறிப் புறப்பட்டுச் செல்கிறான். 

சங்கடமும் எதிர்பாராமல் ஏற்படுகிறது. அதற்கான தீர்வும் எதிர்பாராமல் ஏற்படுகிறது. இத்தகு தற்செயலான விசித்திரங்களே வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை. 

வாழும் கலை இத்தொகுதியின் குறிப்பிடத்தக்க  சிறுகதை.  ஒரு கோணத்தில் தமிழகச்சூழலில் கூத்துக்கலையின் இன்றைய அவலச்சூழலை  இந்தச் சிறுகதை வழியாக உணர்ந்துகொள்ளலாம். கூத்துக்கலை வழியாக ஒருவரும் பெரிய அளவில் பொருளீட்டிவிட முடியாது. ஓர் ஆண்டில் அம்மன் திருவிழாக்கள் நடைபெறும் ஆடி மாதத்தில் மட்டுமே கூத்துக்கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் ஈட்டும் வருமானம் அந்த ஒரு மாதத்துக்கே போதாது. அதனால் வாத்தியாராக இருப்பவர் தொடங்கி கோமாளியாக வேடம் கட்டுபவர் வரைக்கும் அனைவருமே ஏதேனும் ஒரு மாற்று வேலையில் ஈடுபட்டு பொருளீட்ட வேண்டியது அவசியமாகிறது. 

கூத்துக் கலையை மட்டும் நம்பி குடும்பம் நடத்த முடியாது என்பதுதான் எதார்த்தம். ஆயினும் வழிவழியாகக் கூத்தாடுவதைத் தன் நெஞ்சுக்குகந்த இனிய வேலையாகக் கருதி அதில் ஈடுபட்டு மனத்தை நிறைத்துக்கொள்ளும் ஒருசில கலைஞர்களும் இதே சூழலில்தான் வாழ்கிறார்கள். கூத்து வழியாக பொருளீட்ட முடிவதில்லை. பெரிய மதிப்பையும் அது சம்பாதித்துக் கொடுப்பதில்லை. ஆயினும் இன்றளவும்  பிடிவாதமாக அக்கலையோடு தம்மைப் பிணைத்துக்கொண்டவர்களாக அத்தகையோர் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

ஏன் அவர்கள் கூத்துக்கலையைத் தம் உயிரினும் மேலானதாக நினைக்கிறார்கள், ஏன் அவர்கள் அந்தப் பாதையிலிருந்து விலக மறுக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. பழைய கால கூத்துக்கலைஞர்களில் 95 சதவீதம் பேர் அதைத் துறந்து தமக்குகந்த பொருளீட்டும் வழிகளின் பாதையில் இன்று நடக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆயினும் எஞ்சியிருக்கும் 5 சதவீதம் பேர் எதைக் கண்டும் கரையாதவர்களாக அந்தக் கலையோடு ’கொட்டியும் ஆம்பலும் போல’ ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். கலையோடு அவர்கள் கொண்டிருக்கும் பிணைப்பு நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதிர். வாழும் கலை வழியாக கூத்துக்கலைஞர்களின் புதிர்நிறைந்த மனநிலையை நமக்கு உணர்த்துகிறார் அக்களூர் இரவி. 

அது ஒரு பெண்கலைஞரின் கதை. இளம்பருவத்தில் தன்னோடு இணைந்து ஆடிய ஓர் ஆண்கலைஞரிடம் மனம் பறிகொடுத்து சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர். இரு குழந்தைகளுக்கு அன்னையாக நின்றிருந்த சூழலில் அவரைவிட்டு வெளியேறி வேறு ஏதோ ஓர் ஊரில் வேறு யாரோ ஒரு பெண்ணோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார் அந்தக் கலைஞர். 

கணவனால் கைவிடப்பட்ட பெண்கலைஞர் அதிர்ச்சியுற்றாலும் சோர்வுறவில்லை. அந்தக் கலையோடு தன்னை மேன்மேலும் இறுக்கமாகப் பிணைத்துக்கொள்கிறார். தனக்குப் பிறந்த இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி அவர்களையும் கூத்துக்கலைஞர்களாக்குகிறார். அம்மா வழியில் மகனும் கூத்துமரபை ஆராதிக்கும் கலைஞனாக வளர்கிறான். 

அப்போதுதான் ஊர்த்திருவிழா வருகிறது. எதிர்பாராத விதமாக அவனை ஒரு கலைஞனாகவே வளர்த்த அவன் தாயார் மரணப்படுக்கையில் விழுந்துவிடுகிறார். அந்நிலையிலும் நிகழ்ச்சியிலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது என்னும் கோரிக்கையோடு மகனை கூத்துக்கு அனுப்பிவைக்கிறார் அந்த அம்மா. நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அம்மாவின் உயிர் பிரிந்துபோன செய்தி வருகிறது. அந்தத் துயரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி முடிக்கிறான் அவன்.

கலை மீது ஒருவர் கொண்டிருக்கும் இத்தகு பற்றுக்கு நம்மால் ஒரு புறமனிதனாக நின்று ஒரு காரணத்தை ஒருபோதும் வகுத்துவிடமுடியாது. அது ஒரு பிறவிப்பிணைப்பு. ஒரு செடி உயிர்த்திருக்க, தம் வேர்களை நிலத்துக்கடியில் கிளைபரப்பி தேவையான நீர்ச்சத்தைப் பெற்றுக்கொள்வதுபோல ஒரு கலை இந்த மண்ணில் உயிர்த்திருக்க தமக்குரிய வேர்களை அதுவே தேர்ந்தெடுத்து தக்கவைத்துக்கொள்கிறது. கலைஞர்கள் கலையைத் தேர்வு செய்வதில்லை. கலைதான் தமக்குரிய கலைஞர்களைத் தேர்வு செய்துகொள்கிறது. இப்படி பல கோணங்களில் நம் சிந்தனை பரவி விரியும்வகையில் அக்களூர் இரவி எழுதிய வாழும் கலை சிறுகதை அமைந்திருக்கிறது.

கூத்து சார்ந்த இன்னொரு கதையும் இத்தொகுதியில் உள்ளது. அதுதான் தலைப்புக்கதையான ரதியின் மன்மதன். கிராமங்களில் விழாக்காலங்களில் மட்டுமன்றி, ஒரு குடும்பத்தில் நிகழும் மரணத்தையொட்டியும் ஒருசில நேரங்களில் கூத்து நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுவதுண்டு. கிராமத்தில் எதிர்பாராமல் நிகழ்கிற ஒரு மரணம் தொடர்பான சில செய்திகளைச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு நேரிடையாக கூத்துக்குள் சென்றுவிடுகிறது கதை. 

மன்மதன் எரிக்கப்பட்ட பிறகு, அவனை இழந்த ரதி ஒப்பாரி வைக்கிறாள். ரதியின் ஒப்பாரி அனைவருடைய நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது. அவளை அமைதிப்படுத்தும் விதமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் கடவுள்களும் வருகிறார்கள். அவர்களுடைய சமாதானப் பேச்சை அவள் ஏற்கத் தயாராக இல்லை. தன் கணவனைக் காண வேண்டும், தன் கணவனோடு உரையாட வேண்டும், அவனோடு வாழவேண்டும் என்பதையே சொல்லிச்சொல்லி அழுகிறாள் ரதி. 

அவளுடைய மன்றாடும் குரல் தெய்வங்களின் நெஞ்சைக் கரைத்துவிடுகிறது. இறந்தவரை உயிர்ப்பிப்பது சாத்தியமில்லை என்பதால், இறந்துபோன மன்மதனை நீ விரும்பும் நேரத்தில் பார்க்கலாம், உன் கண்களுக்கு மட்டும் அவன் எப்போதும் தெரிவான்  என்று ஒரு வரம் கொடுத்து ரதியை அமைதிப்படுத்திவிட்டுச் செல்கிறார்கள். அதை ஏற்று மனநிறைவுகொண்டு ரதியும் அமைதியடைகிறாள். 

அப்படி ஒரு காட்சி கூத்தில் நிகழ்வதாக கதை விரிகிறது. அது கூத்தில் ஒப்பாரி வைத்துப் பாடும் ரதிக்கான சமாதானம் மட்டுமல்ல, எந்தக் குடும்பத்தில் மரணம் நிகழ்ந்திருக்கிறதோ, அந்தக் குடும்பத்தினருக்காக தெய்வங்களின் குரலால் சொல்லப்படும் சமாதானம் என விரிவுபடுத்தி நினைத்துக்கொள்ளும்போது கலையின் மகத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

அக்களூர் இரவி தம் முதல் தொகுதி வழியாக அளித்திருக்கும் நம்பிக்கை முக்கியமானது. சாதனையாளர்களின் சிறுகதைகளைத் தேடியெடுத்து தொடர்ந்து வாசிப்பதும் அவற்றில் தென்படும் பல்வேறு கோணங்களை முன்வைத்து சிந்திப்பதும் அனுபவங்களை அசைபோடுவதும் அவருக்கு நிச்சயம் பயன்படும். அந்த அனுபவமே அவருக்கு விசையூட்டி மேன்மேலும் எழுதவைக்கும். 

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “ரதியின் மன்மதன்” சிறுகதைகள்
ஆசிரியர்: அக்களூர் இரவி
வெளியீடு:
நாற்கரம் பதிப்பகம். 14/48, வெங்கடசாமி தெரு, சேலையூர், சென்னை-73
விலை: ₹.180
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பாவண்ணன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *