நூல் அறிமுகம்: இலா வின்சென்ட் ‘அக்கானி’ நாவல் – கருப்பு அன்பரசன்




நூல் : அக்கானி 
ஆசிரியர் : இலா வின்சென்ட்
விலை : ரூ.₹340/-
பக்கங்கள்: 329
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மூத்த மகள் கிளாராவை அழைத்துக் கொண்டு அவரின் அப்பா தங்கையா கருங்கல் சந்தையின் ஹோட்டலில் ஆப்பம் கிழங்கு சாம்பார் வாங்கிக் கொடுத்தபொழுது அவளின் மனசுக்குள் நூறு நூறு மத்தாப்பு பல வண்ணங்களில் ஒளிப் பூக்களை தூவிக் கொண்டிருந்தது.. வண்ணத்துப்பூச்சிகள் அவளை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது. அத்தனை சந்தோஷம் அவளுக்குள். நாவலை வாசிக்கும் பொழுதில் கிழங்கு சாம்பார் கலந்த ஆப்பத்தின் ருசி மண்டைக்குள் ஏறி தொண்டைக்குழி வழியாக உள்ளுக்குள் இறங்கும் உணர்வு நாவல் ஆசிரியரின் எழுத்துக்களில். வாசித்த எனக்குள் அப்போதுதான் சிறகு முளைத்த பட்டாம்பூச்சி ஒன்று நினைவுப் பூக்களின் மகரந்தம் நோக்கி பறக்கத் தொடங்கியது..

கருத்துக்கிடக்கும் கால்கள் இரண்டும் செம்மண் புழுதி படர்ந்துகிடக்கத் தெருவெங்கும் ஓடித்திரிந்த காலமது.
வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் சட்டை.. சட்டையை அரைக்கால் சட்டைக்குள் உள் இழுத்து இறுக்கமாக அணிந்து கொண்டு காக்கி நிறத்தில் தைத்துக் கொடுக்கப்பட்ட துணிப் பையில் ஆறாம் வகுப்பு புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்துக் கொண்டு இனி வாரத்துக்கு ஒரு முறை ஸ்லேட் உடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற சந்தோஷத்தில் கீழ்பெண்ணாத்தூர் ஆச்சாரி தெருவில் இருந்து அம்மாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பிய நான் வேக வேகமாக நடந்து அவலூர்பேட்டை திண்டிவனம் சாலை சந்திப்பில் இருக்கக்கூடிய கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தை தாண்டியவுடன் வேகம் கொண்ட கால்கள் மெது மெதுவாக நடக்கும். காவல் நிலையத்தின் அருகில் செல்லும் பொழுதே சீனிவாசன் டீ கடையிலிருந்து காற்றில் கலந்து வரும் மசால்வடையின் வாசம் மூக்கில் நுழைந்து வடையின் ருசியினை நாவிற்குள் உமிழ் நீராக்கி தொண்டைக்குள் இறங்க வைக்கும்.. சீனிவாசன் டீக்கடையை நெருங்க நெருங்க கண்களிரண்டும் கடைக்குள் தேடும் என் அப்பாவை. பல நேரங்களில் அப்பா அவருடைய நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பார்.

என்னை பார்த்து விட்டால் “டேய் அன்பு, என்ன வேடிக்கை பாக்குற, ஓரமா ஸ்கூலுக்கு போ.. பத்திரம்டா” என்று மட்டும் சொல்லி அனுப்பி வைப்பார். மசால்வடையில் மயங்கிய மனசு அப்பாவின் அறிவுரையை காதில் வாங்காது ஏமாற்றத்தோடு பள்ளி நோக்கி கால்களை இழுத்துப் போகும்.

இப்படி நிறைய நாட்கள் நடந்தாலும்..
அந்த ஒரு நாள் மட்டும் இன்னும் என் கண்களுக்குள் அப்படியே.! எப்போதும் போல் சீனிவாசன் கடையை நோட்டம் பார்த்தபடி போய்க் கொண்டிருக்கிறேன். “டேய் அன்பு உள்ளவாடா” என்றார் அப்பா. தயங்கி தயங்கியே கால்கள் டீக்கடை நோக்கி சென்றாலும் மனசு என்னவோ மசால் வடையை நோக்கி வேகமாக உள்ளே ஓடியது. டீக்கடை உள்ளிருக்கும் மேசை மீது கண்ணாடி பெட்டிக்குள் பொன் நிறத்தில் வழவழவென்றிருக்கும் பன் கோபுரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.. பெரிய பெரிய கண்ணாடி பாட்டிலுக்குள் நெய் பிஸ்கட், வரிக்கி இப்படியாக. பக்கத்தில் இருக்கும் டேபிளில் அலுமினிய தட்டு ஒன்று. அதில் விரித்து வைக்கப்பட்ட தினத்தந்தியில் எண்ணெய் ஊறி இருக்கும். தினத்தந்திக்கு மேலாக மசால் வடை சூடாகவும் ஆறியும் கொட்டிக் கிடக்கிறது.

‘என்ன வேணுமோ எடுத்துக்கடா”
என்று அப்பா சொல்லியதும் வேண்டாம் என்று வாய் சொன்னாலும் மசால் வடையையும் பன்னையும் கண்கள் பார்த்தது. புரிந்து கொண்ட அப்பா மசால் வடையோடு பன் ஒன்றையும் எடுத்துக் கொடுத்து, ” யோவ்.. சீனிவாசா பையனுக்கு ஒரு டீ போடு, லைட்டாக இருக்கட்டும்” என்று சொல்ல சிறிது நேரத்தில் டீயும் வந்தது. அதற்குள் மசால் வடையை சாப்பிட்ட நான் டீயில் பன்னை தொட்டு வேக வேகமாக சாப்பிட.. மெதுவா சாப்பிடுற அன்பு என்று அப்பா சொல்ல, சாப்பிட்டதும் “நான் ஸ்கூலுக்கு போறன்பா” என்று சொல்லி எழுந்திட, அப்பா என்னை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்து “கவனமாக ஸ்கூலுக்கு போ” என்று அனுப்பி வைத்தார் சிரித்துக் கொண்டே. மனசுக்குள் ஏத்தனை எத்தனை சந்தோஷம் அவரின் நண்பர்கள் கூட்டம் இருக்கும் பொழுது என்னை அன்போடு அழைத்து என்னுடைய மனதின் ஆசையை புரிந்து கொண்டு டீயும் பன்னும் மசால் வடையும் வாங்கி கொடுத்தது.. வரைமுறை அறியாத தெரியாத பிள்ளைப் பருவம் அது.. குதூகலமும் கும்மாளமுமாக அந்த நினைவுகள். நினைவுகளை அப்படியே கிளாராவின் சந்தோஷம் இழுத்து வந்தது எனக்குள்.

படைப்பின் வெற்றி என்பது படைப்பிற்குள் வரும் கதாபாத்திரங்களின் ஏதேனும் ஒன்றுக்குள் எங்கேயாவது ஏதாவது ஏதோ ஒரு இடத்தில் வாசகனை தன்னை பொருத்திப் பார்க்கச் செய்வது அதுவே எதார்த்தத்தின் அடையாளமாக இருக்கும் படைப்பாளிக்கு. நாவலை நீங்கள் வாசிக்கும் பொழுதும் உங்களோடு பழகியவர்களை பேசியவர்களை அல்லது உங்களையே நீங்கள் பார்க்கலாம்.

முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தின் பனையேறி மக்களின் வாழ்வினை எளிய மக்களின் துன்பம் நிறைந்த வாழ்வியலை அப்படியே வாசகனுக்குள் கடத்தி இருக்கிறது அக்கானி நாவல்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பனைமரத்தின் உச்சியேறி கீழே இறங்கி நிற்கும் வரை உயிர் என்பது பனையேறிக்கும் பார்ப்பவர்களுக்கும் நிலை இல்லாதது என்பதனை வலியோடு நாவல் முழுவதிலும் தங்கையா கதாபாத்திரத்தின் தோளில் சுமத்தி நாவலை நகர்த்திக் கொண்டு செல்கிறார் நாவலாசிரியர். பனையேறி மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்ததற்குப் பிறகு அவனது குடும்பம் சந்தித்திடும் சவால் மிகுந்த துயரங்களை எதிர்கொண்ட எளிய மக்கள் எவ்வாறு கடந்து நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை, ஞானமுத்துவின் மரணத்திற்குப் பிறகு தெரேசம்மாவின் உழைப்பின், நேர்மையின் சக்தியை அர்த்தம் பொதிந்ததாக நாவலுக்குள் கொடுத்திருக்கிறார். எளிய மக்கள் எவ்வளவு துயரம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் வலிகளை சந்தித்தாலும் நேர்மையின் அடையாளமாக உழைப்பின் மேன்மையாக இருந்து தங்கள் வாழ்வினை நேர் கொள்கிறார்கள் என்பதற்கு தெரேசம்மா குடும்பம் ஒரு உதாரணமாகும்.

நாவலை வாசிக்க தொடங்கியதும் நாவலாசிரியரின் விவரணையில் குமரி மாவட்டத்தின் இயற்கையின் படைப்புகள் அனைத்திற்குள்ளும் வாசகனின் விரல் பிடித்து நடந்து செல்கிறார். செல்லும் பாதைகள் எங்கும் பற்பல நிறங்களில் பூத்துக் கிடக்கும் மலர்களின் வாசமும் மாலைக் காற்றின் தழுவலும் மழைத் தூறலின் சாரலும் மண்வாசமும் இளம் வெயிலுக்கு ஊடான வெக்கையும் பதநீரின் சுவையும் அறிய முடியும். அழகியலும் இலக்கியமும் கொண்ட தமிழ்ச் சொற்களால் நம் உள்ளத்தை கிளர்ச்சியுறச் செய்திருக்கிறார். குமரி மக்களின் பேச்சு மொழியில் தமிழோடு மலையாளமும் கலந்து கொட்டிக் கிடப்பது நாவலுக்கு உயிராக நிற்கிறது.

மைக்கேலும் அமலாவும் மைக்கேலின் மாமாவும் ஜீரேனியாபுரம் பள்ளிக்கு நடந்து போகும் அத்தியாயத்தில்
இயற்கையின் பேரழகை எல்லாம் வார்த்தைகளாக பதியமிட்டு வாசிப்பவரின் மனசுக்குள் விதவிதமான அருவிகளை சிறு மலைகளில் இருந்து குதிக்க வைத்திருப்பார். கேட்டிராத பார்த்திராத பூக்களை மலரச் செய்து வாசங்கள் பலதை ஒன்றோடு ஒன்று காதலுறச் செய்வார்.. பல பச்சை மரங்களை வானுயிரத்திற்கு முளைக்க செய்து கிளைகளில் வகை நிறைந்த பறவைக்கூட்டங்களை சிறகடிக்க செய்வார். இப்படி நாவலுக்குள் பல இடங்களில் இயற்கையின்
அதிசயங்களை நிறைய நிறைய நிகழ்த்தி காட்டியிருக்கிறார் தனது எழுத்து ஜாலங்களால் நாவலாசிரியர்.

ஏழ்மைக்கும் வறுமைக்கும் பஞ்சமில்லாத அந்த எளிய மக்களின் மனங்களுக்குள் சாதிக்கட்டுமானம் என்பது எப்படி வளர்ந்து இருக்கிறது, வளர்க்கப்பட்டு இருக்கிறது என்பதையும்.. தனக்கு கீழ் இருக்கும் சாதியின்மேல் ஆதிக்க சாதிவெறி வளர்த்திருக்கும் வன்மங்களையும் குரோதங்களையும் தன்னுடைய நாவலுக்குள் ஆழமாக வரைந்து காட்டி இருக்கும் ஆசிரியர்; இறுகிப் போயிருக்கும் ஆதிக்க சாதி என்கிற பெரும் பாறையை கீறிப் பிளந்து விரிசலை நிகழ்த்தி முளைத்தெழும் பேரன்பை, துணி வெளுக்கும் இலியாஸின் தங்கை பிலோமினாளுக்கும் வில்சனுக்கும் இடையேயான நேசம் மிகுந்த காதலை சொல்லி சாதி வெறிக்கு எதிராக சமர் புரியும் ஆகப்பெரும் சக்தி சாதிமறுப்பு காதலுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை ஆசிரியர் காத்திரமாக பதிவு செய்கிறார் தன் நாவலில்.

அருவெறுப்பு நிறைந்த, அசிங்கம் பிடித்த சனாதனம் குமரி மாவட்டம் முழுவதிலும் வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் மண்ணில் வாழும் மக்கள் அனைவரின் மூளைக்குள்ளும் மனசுக்குள்ளும் சாதிக்கட்டுமானமாக இருந்து நிகழ்த்தி வைத்திருக்கிற, வளர்த்து வைத்திருக்கிற, கட்டிஎழுப்பி இருக்கிற குயுக்த்தி மிகுந்த வஞ்சகத்தை அதன் வன்மத்தை பேசி இருக்கிறார் ஆசிரியர்.

குடும்ப உறவுகளில் சரிபாதியாக.. சமூகத்தின் சரி பாதியாக இருந்து வரும் பெண்களின் பங்களிப்பை; குடும்பத்தின் பொருளாதாரத் தேவை தொடங்கி, சமூகத்தில் விரிந்து கிடக்கும் அநீதிகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்திக் காட்டுவதிலும் பெண்கள் சக்தியானவர்கள் என்பதை தன்னுடைய புதினத்திற்குள் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

பிரதான பெண் பாத்திரங்களான கிளாரா, அவரின் அம்மா செந்தாரையா என்கிற நேசம்மாள்.. பனை மரத்தில் ஏறி கீழே விழுந்து செத்துப்போன ஞானமுத்துவின் மனைவி ஆப்பியோட்டா என்கிற தெராசம்மாள் ஆசிரியர் ஜோசப் அவர்களின் மனைவி டெய்சி.. மைக்கேலின் காதலி சசிகலா, குடிகாரத் தகப்பன் செபாஸ்டியனின் மகள்கள் ரஞ்சிதம் உள்ளிட்ட இரு பெண்கள்.. இவர்கள் அனைவருமே புதினத்துக்குள் உயிரானவர்களாகவும் கொண்டாடப்படக் கூடியவர்களாகவும் நாவலுக்குள். இப்படியான பெண்கள்தான் சமூகத்தில் பெரும் பகுதி நிறைந்து கிடந்தாலும் எவர் ஒருவராலும் பேசப்படாமேலே மறைக்கப்பட்டே வந்து கொண்டிருக்கிறார்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்தால். போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணாக, குடும்பம் தொடங்கி சமூகத்தில் நடந்திடும் பலராலும் நடத்தப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக எப்படி தன்னை வலுவாக வடிவமைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார் என்பதை எதார்த்த நிலையில் இருந்து கிளாரா கதாபாத்திரத்தை நேர்த்தியாக தன்னுடைய நாவலுக்குள் சீரமைத்து கொடுத்து இருக்கிறார் ஆசிரியர்.

கோவில் திருவிழாவிற்காக ஊர் கூட்டம் கூட்டப்பட்டு கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கும் பொழுது தனது ஆட்டுக்குட்டியை தேடி வரும் கிளாராவின் குறுக்குப் பேச்சும்; பொருளாதார தேவைகளுக்காக குடும்பத்தில் அவரின் தன்னலம் இல்லாத பொறுப்பு மிகுந்த மதிப்பிற்குரிய உழைப்பும்.. நாள் முழுவதும் கடும் உழைப்பை செலுத்திய உழைப்பாளி மக்கள் மாலைப் பொழுதினில் சாராயம் குடித்து வீட்டில் கிடந்த பொழுது அத்துமீறிய காவல்துறை அவர்களை வெளியே வர வைத்து கைது செய்து கொண்டு செல்ல, காவல்துறையின் அடாவடித்தனத்தை எதிர்த்து வீதியில் இறங்கி ஓங்கி எதிர்ப்பு குரல் கொடுத்து உழைப்பாளிகளை மீட்டு வந்த அசாத்திய துணிச்சலும், தன்னுடைய சுயமரியாதை, நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் பொழுது குடும்பத்தை விடுத்து தனியொரு பெண்ணாக இருந்து வாழ்வினை துவக்கிடும் தைரியமும் அநீதிகளுக்கு எதிரான குரலும் இன்றைய பெண்களின் தேவையாக இருக்கிறது என்பதை கிளாரா கதாபாத்திரம் சமூகத்திற்குச் சொல்லிச் செல்கிறது அக்கானி.

தான் பிறந்து வளர்ந்து வந்த சமூகச் சூழலை அதன் எதார்த்தத்தை மறைத்து தனது மேலாதிக்க கௌரவத்திற்காக வளர்ச்சிக்காக உடன் பிறந்தவர்கள், தான் வளர்ந்து வந்த சமூகம், வளர்த்தெடுத்த உறவுகள் இப்படி எல்லாவற்றையும் உதாசீனப்படுத்தி தன் சுயநலத்திற்காக எதையும் செய்ய துணியும் கீழான மனிதர்களும் நம்மோடு சேர்ந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாக நாவலுக்குள் அமலா என்கிற கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது.

நாவல் முழுவதிலும் குமரி மாவட்ட எளிய பனையேறி மக்களின் துயரம் மிகுந்த வாழ்வினை அதே வலியோடு அவர்கள் பேசும் மொழியிலேயே இலக்கிய தரம் வாய்ந்ததாக கொடுத்திருக்கிறார் தமிழ் சமூகத்திற்கு நாவல் ஆசிரியர் இல.வின்சென்ட் அவர்கள்.

தம் மக்களுக்கான பாதுகாப்பு என்பது தன்னலம் பார்க்காத ஒரு வலுவான அமைப்பு. எளியவர்களின் துயரம் உணர்ந்து அவர்களின் நியாயம் மிகுந்த வாழ்வியல் சார்ந்த போராட்டங்களை நேரம் அறிந்து முன்னெடுப்பது. போராட்டங்களின் வழியாக மக்களின் தேவைகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்து முனைப்பு காட்டுவது. இதுவே இன்றைய தேவையாக இருக்கிறது என்பதை வீதியில் தன்னுடைய குழந்தையையும் சுமந்து கொண்டு முஷ்டி உயர்த்தி செங்கொடி பிடித்து போராடும் கிளாராவின் தைரியமும் துணிச்சலும் மிகுந்த போராட்டத்தோடு நாவலை முடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்கிற எண்ணம் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

பிரச்சனைகளின் அடிப்படையில் மக்களை அணி திரட்டி போராட்டங்களை நிகழ்த்துவது தலைமை தாங்குவது என்பது வேறு.. அதே மக்களை அமைப்பாகத் திரட்டி அரசியல் உணர்வூட்டி அவர்களை செங்கொடி அரசியல் கட்சிக்கு ஆதரவாக களத்தில் நிற்க வைத்து தேர்தல் போராட்டத்தில் முதலாளித்துவ அரசியல் கட்சிகளை எதிர் நின்று அரசியல் செய்வது, தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது வேறு. இரண்டாவது என்பது மிக நீண்ட நெடிய போராட்டம்.
அத்தகைய ஒரு போராட்டம் அதில் கிடைக்கும் வெற்றி என்பது எளிதாக நடந்து விடுவது கிடையாது. இந்த நாவலுக்குள் அதை வெகு எளிதாக நடத்திக் காட்டி இருப்பது எதார்த்தத்திற்கு உகந்ததாக இல்லை என்பது என்னுடைய ஆழமான கருத்து.

தேர்தல் அரசியல் போராட்டம் இன்றைக்கு தேவைதான் என்றாலும்கூட நாவலுக்குள் கடைசி பகுதி என்பது நாவலின் சக்தியை, நாவலாசிரியரின் எழுத்து முதல் பகுதிகளில் நிகழ்த்தி காட்டிய வீரியத்தை, ஆழத்தை தேவையான விவாதங்களை குறைத்து விடுகிறதோ! போராட்டத்தின் எண்ணங்களை சிதைத்து விடுகிறதோ?! என்கிற நினைப்பு எனக்குள் மேலோங்கி நிற்கிறது.

இலக்கியத் தரம் மிக்க உழைக்கும் மக்களின் அரசியல் பேசக்கூடிய மிக முக்கியமான அரசியல் நாவலாக இந்த காலத்தில் இல. வின்சென்ட் அவர்கள் எழுதிய அக்கானி. பலரால் கவனிக்கப்படுவது என்பது யாராலும் தவிர்க்க முடியாது.

அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல் இது. அவசியம் வாசியுங்கள் குமரி மாவட்டத்தின் வழியாக கேரள எல்லையோர எளிய மக்களோடு கொஞ்சம் பொழுது வாழ்ந்து வருவோம்.

akkani

சிறப்பான முறையில் அட்டை படத்தை வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் பாரதி புத்தகாலயம்.
இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்கள்.

– கருப்பு அன்பரசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.