“லாயக்கு” சிறுகதை
“நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.”
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரின் குரல் வீட்டின் சுவர்களில் எதிரொலித்தது.
ஆனால் அந்த ஒரு வாக்கியம் மதனின் நெஞ்சுக்குள் இடியாய் இறங்கியது.
அவன் கையில் இருந்த தட்டு அப்படியே நின்றது. சக்கம்மா பாட்டி சூடான சோற்றைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“என்னடா? சாப்பிட ஆரம்பிச்சதும் நிறுத்திட்டே?”
மதன் பதில் சொல்லவில்லை. இரண்டு கைப்பிடிச் சோற்றை வாயில் போட்டான். தொண்டைக்குள் இறங்கவில்லை. தண்ணீர் குடித்தான். அதுவும் இறங்கவில்லை. சோற்றை அப்படியே தட்டில் வைத்துவிட்டு எழுந்தான்.
“ஒரு வேளைச் சோத்துக்கே கஷ்டப்படுறோம். அதையும் வீணாக்குறியே!”
சக்கம்மா பாட்டியின் கோபத்தில் உணவின் மதிப்பு இருந்தது. மதனின் மௌனத்தில் வாழ்க்கையின் பயம் இருந்தது.
அவன் தட்டைக் கீழே வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
கிராமத்தின் ஓரத்தில் இருந்த ஆலமரத்தடியில் எப்போதும் நண்பர்கள் கூடுவார்கள். அங்கே சுதாகர் அமர்ந்திருந்தான்.
வகுப்பின் முதல் மாணவன். எப்போதும் சுத்தமான சீருடை. புத்தகத்தை மார்போடு அணைத்தபடியே நடப்பான். கணிதத்தில் ஆசிரியர்களே அவனை எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள்.
“என்னடா இவ்வளவு டல்லா இருக்க?”
சுதாகர் கேட்டான்.
“நாளைக்கு ரிசல்ட்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
மதனின் குரல் நடுங்கியது.
சுதாகர் சிரித்தான்.
“நீ எல்லாப் பாடத்தையும் எழுதினியே? ஒன்னும் ஆகாது. நீ பாஸ் ஆகிடுவ.”
அது பெரிய ஆறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு சிறு மரக்கட்டை கிடைத்தது போல இருந்தது.
அன்றிரவு மதன் தூங்க முயன்றான். தூக்கம் வரவில்லை.
தந்தையின் முகம் நினைவுக்கு வந்தது.
பருத்திக் காட்டில் வேலை பார்த்துக்கொண்டே அவர் அடிக்கடி சொல்வார்:
“நல்லா படி… இல்லன்னா நீ பருத்தி எடுக்கத்தான்டா லாயக்கு!”
அந்தப் பகுதியில் கரும்பு, பருத்தி, மிளகாய், தக்காளி எனப் பல்வேறு பயிர்கள் விளைந்தன. குறிப்பாக புதன்கிழமையும் சனிக்கிழமையும் பருத்தி எடுக்கும் நாட்கள்.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள்கூட அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் பெற்றோருக்கு உதவுவார்கள். மதனும் அப்படித்தான் பருத்தி எடுத்திருக்கிறான்.
பருத்தி எடுப்பது இழிவான வேலை அல்ல.
ஆனால் தந்தையின் அந்த வார்த்தை மட்டும் அவனுக்குள் ஒரு மனக்கசப்பை விதைத்திருந்தது.
அது அறிவுரை அல்ல.
தீர்ப்பு.
மறுநாள் காலை.
மாணவர்கள் அனைவரும் பதற்றத்தில் இருந்தனர். சிலர் நகரத்துக்குச் சென்றனர். சிலர் மாலை நாளிதழுக்காகக் காத்திருந்தனர்.
மதன் மட்டும் எங்கும் செல்லவில்லை.
மாலை டீக்கடைக்கு நாளிதழ் வந்ததும் மாணவர்கள் கூட்டமாகச் சூழ்ந்தனர்.
“என் எண் வந்திருக்கு!”
“எனக்கும் வந்திருக்கு!”
மகிழ்ச்சிக் குரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.
கூட்டத்திற்குள் மதன் நடுங்கும் விரல்களால் தனது தேர்வெண்ணைத் தேடினான்.
ஒருமுறை பார்த்தான்.
மீண்டும் பார்த்தான்.
மூன்றாவது முறையும் பார்த்தான்.
அவனுடைய எண் இல்லை.
கண்களில் நீர் நிரம்பியது.
“பெயில்…”
அந்த ஒரு சொல் அவனுடைய உலகத்தையே உடைத்தது.
“எங்க அப்பாவிடம் என்ன சொல்லுவேன்?”
அவன் கதறி அழுதான்.
அன்றிரவு வீட்டுக்குச் சென்றாலும் தூக்கம் வரவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே டீக்கடைக்குச் சென்றான். வந்த ஒவ்வொரு நாளிதழையும் புரட்டிப் பார்த்தான். ஏதோ தவறுதலாகத் தனது எண் விடுபட்டிருக்கலாம் என்று நம்பினான்.
இல்லை.
எங்கும் இல்லை.
வீட்டுக்குப் போக அவனுக்கு மனம் வரவில்லை.
அப்பாவின் சாட்டையடி அவ்வளவு வலிக்காது.
ஆனால் அவர் சொல்லும் அந்த வார்த்தை…
“நீ பருத்தி எடுக்கத்தான்டா லாயக்கு.”
அந்த வார்த்தை அவன் மனதை ஒவ்வொரு நாளும் வெட்டிக் கொண்டிருந்தது.
“நான் உண்மையிலேயே அதுக்குத்தானா லாயக்கு?”
இந்தக் கேள்வி அவனைத் துரத்தியது.
ஊரின் எல்லையில் இருந்த புலிப்புதருக்குள் சென்று சுருண்டு உட்கார்ந்தான்.
வெயில் ஏறியது.
பசி எடுத்தது.
தாகம் வந்தது.
ஆனால் வீட்டுக்குத் திரும்பவில்லை.
மாலை நேரத்தில் நண்பர்கள் செந்திலும் சுதாகரும் அவனைத் தேடத் தொடங்கினர்.
தென்னந்தோப்பு
மந்தைக்கரடு
பள்ளிக்கூடம்…
பிள்ளையார் கோயில்…
என எல்லா இடத்திலும் தேடினாலும் மதன் இல்லை
இறுதியில் புலிகுண்டு புடவு எனச் சொல்வார்கள் அங்குதான் மதன் ஏதோ விரக்தியில். பதுங்கி இருந்தான்..
“ஏன்டா இப்படி இருக்கே?”
மதன் பதில் சொல்லவில்லை.
அவனது நண்பர் வாடா நாங்க உங்க அப்பா கிட்ட பேசிக்கிறோம். என ஆறுதல் சொல்லி அழைத்துக் கொண்டுநடந்தனர்.
அப்போது எதிரே பழைய சைக்கிளில் ஒருவர் வந்தார்.
ஜெயராம்.
அந்தக் கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்த இளைஞன். பலமுறை தேர்வில் தோல்வியடைந்தவன். பலமுறை கேலிக்கு ஆளானவன். ஆனால் படிப்பை மட்டும் கைவிடாதவன்.
அவன் சைக்கிளை நிறுத்தி மதனைப் பார்த்தான்.
“பெயிலா?”
மதன் தலைகுனிந்தான்.
“அதுக்காக ஒளிஞ்சுக்கிட்டு இருக்கியா?”
மதனின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.
ஜெயராம் அவன் தோளில் கை வைத்தான்.
“நாளைக்கு என்னோட வா.”
அவ்வளவுதான் சொன்னான்.
அடுத்த நாள் அவர்களுடைய ஊருக்கு அருகிலிருந்த சிறிய நகரத்திற்குச் சென்றனர்.
அங்கே பழைய கட்டிடம் ஒன்று இருந்தது.
வாசலில் எழுதப்பட்டிருந்தது:
“மனோகர் டுடோரியல் கல்லூரி.”
உள்ளே சில மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர். வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருந்த மனோகர் மாஸ்டர் மாணவர்களுக்கு நடுவே நின்றிருந்தார்.
ஜெயராமும் மதனும் உள்ளே வந்ததைப் பார்த்ததும்,
“என்னப்பா விஷயம்?” என்றார்.
ஜெயராம் நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.
மாஸ்டர் மதனைப் பார்த்தார்.
“பெயிலா?”
மதன் மெதுவாகத் தலை அசைத்தான்.
மாஸ்டர் சிரித்தார்.
“அதுதான் வாழ்க்கையின் முடிவுன்னு யார் சொன்னது?”
மதன் தலைநிமிர்ந்து பார்த்தான்.
அந்தக் கேள்வியை இதுவரை யாரும் அவனிடம் கேட்டதில்லை.
“இந்த வருடம் பெயிலான பாடத்தை எழுது. அடுத்த வருடம் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்துடு. உன் அப்பாவிடம் நான் பேசிக்கிறேன்.”
அந்த வார்த்தைகள் மதனுக்குள் மூடியிருந்த கதவைத் திறந்தன.
தோல்வியிலிருந்து வெளியே வர அவனுக்குக் கிடைத்த முதல் கை அது.
அதன் பிறகு நாட்கள் மாறத் தொடங்கின.
மனோகர் மாஸ்டர் புத்தகப் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்தார்.
“தோல்வி என்பது மதிப்பெண் குறைவு; மனிதன் குறைவு அல்ல.”
“உன்னை யாராவது லாயக்கு இல்லைன்னு சொன்னா, அதை நம்பாதே.”
“உன் லாயக்கை நீயே நிரூபி.”
அந்த வார்த்தைகள் மதனுக்குள் வேரூன்றின.
மாணவர்களைத் தேடி மனோகர் மாஸ்டர் கிராமம் கிராமமாகச் செல்வார் பெற்றோர்களிடம் பேசுவார்..
“இவனை இன்னொரு முறை படிக்க விடுங்க…”
என்று கெஞ்சினார்.
அவருடன் படித்த முன்னாள் மாணவர்களும் வீடு வீடாகச் சென்றனர்.
ஒரு மாணவன்…
இரண்டு மாணவர்கள்…
பத்து…
நூறு…
எனத் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் புத்தகங்களைத் திறந்தனர்
அந்த நேரத்தில் பெயிலான திருப்பூர். பணியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வார்கள் அதோட அவர்களின் படிப்பு முடிந்து விடும்.
அதை மாற்றியது அந்த டுடோரியல் பள்ளிதான்..
அவர்களில் பலர் காவல்துறையில் சேர்ந்தனர். சிலர் இராணுவத்தில் சேர்ந்தனர். சிலர் ஆசிரியர்களானார்கள். சிலர் அரசுப் பணிகளில் அமர்ந்தனர்.
ஒரு சிறிய டுடோரியல் கல்லூரி, பலருடைய வாழ்க்கைக்குப் பெரிய வழித்தடமாக மாறியது.
மதனும் தோல்வியடைந்த பாடங்களில் வெற்றி பெற்றான். மேல்படிப்பை முடித்தான். உடற்தேர்விலும் எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்று இந்திய இராணுவத்தில் சேர்ந்தான்.
பயிற்சி மைதானத்தில் முதல் நாள் தேசியக் கொடி உயர்ந்தபோது, அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மனதுக்குள் மெதுவாகச் சொன்னான்:
“நான் பருத்தி எடுக்க மட்டும் லாயக்கு இல்ல… நாட்டைக் காக்கவும் லாயக்கு.”
சுதாகரும் பின்னர் இராணுவத்தில் சேர்ந்தான்.
ஜெயராம் மத்திய காவல்துறையில் பணியில் சேர்ந்தான்.
மூவரின் வாழ்க்கையும் புதிய திசையை நோக்கிப் பயணித்தது.
பல ஆண்டுகள் கடந்தன.
சாம்பல் நிற முடியுடனும், மார்பில் பதக்கங்களின் நினைவுகளுடனும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளாக மதனும் ,சுதாகரும் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.
அவர்களின் மனதில் ஒரே ஆசை.
“மனோகர் மாஸ்டரைப் பார்க்க வேண்டும்.”
பழைய தெருவில் நடந்தனர்.
ஆனால்…
அங்கே டுடோரியல் கல்லூரி இல்லை.
அதற்குப் பதிலாக ஒரு பெரிய கிடங்கு இருந்தது.
பருத்தி மூட்டைகள் மலைபோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மதன் அங்கேயே நின்றான்.
நீண்ட நேரம்.
அவன் காதுகளில் மீண்டும் அந்தப் பழைய குரல் ஒலித்தது:
“நீ பருத்தி எடுக்கத்தான்டா லாயக்கு.”
இந்த முறை அவன் கோபப்படவில்லை.
சிரித்தான்.
ஒருகாலத்தில் அவனை உடைத்த அந்த வார்த்தை, இன்று அவன் எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை நினைவூட்டியது.
பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக் கிடங்கின் அருகே நின்றபடி, மனோகர் மாஸ்டருக்கு மனதிற்குள் அமைதியாக வணக்கம் செலுத்தினான்.
“மாஸ்டர்… நீங்க எங்களுக்கு பாடங்களை மட்டும் சொல்லிக்கொடுக்கல. எங்களை நாங்களே நம்பிக்கொள்ளக் கற்றுக்கொடுத்தீங்க. எங்க வாழ்க்கைத் தேர்வில் பாஸ் ஆகச் செய்தீங்க…”
அவன் கண்கள் கலங்கின.
கிடங்கைச் சுற்றிலும் காற்று மட்டுமே வீசியது.
ஆனால் மதனுக்கு,
லாயக்கை மாற்றிய மனோகர் மாஸ்டர்பற்றிய என்னம் .. ஓடிக்கொண்டிருந்து…..
📚 எழுதியவர்:
கடமலை,
தேனி.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


கதை மிகவும் அருமையாக இருந்தது. மென் மேலும் நிறைய கதைகளும், கவிதைகளும் எழுதுவதற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
உண்மைச் சம்பவத்தை அருமையாக நூல் வடிவமா கொடுத்துள்ளீர்கள் அண்ணா…. 💐💐💐💐