இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புகழின் உச்சத்தில் இருப்பவர். கோட்பாட்டு இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் செய்த பணிக்காக என்றென்றும் கொண்டாடப்படுவார்.
2. 1879-ம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தேன். சின்ன வயதிலேயே கணிதத்தின் மீதும் அறிவியல் மீதும் அப்படி ஒரு ஆர்வம் வந்துவிட்டது. எதையும் பகுத்துப் பார்க்கும் திறமையும் இருந்தது.
3. அப்பா ஒரு திசைகாட்டியை வாங்கிக் கொடுத்தார். அது என்னைக் கவர்ந்துவிட்டது. உடனே ஆராய்ச்சியில் இறங்கினேன். திசைகாட்டியின் ஊசி ஏன் எப்போதும் வட திசையை நோக்கியே இருக்கிறது என்ற கேள்வி வந்தது.
4. 13 வயது வரை வயலின் மீது ஆர்வம் இல்லை. மொசார்ட் இசையைக் கேட்ட பிறகு, வயலின் மீது அளவற்ற ஆர்வம் வந்துவிட்டது. வயலின், பியானோ கற்றுக்கொண்டேன்.
5. 16 வயதில் என்னுடைய முதல் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜூரிச் பாலிடெக்னிக் அகாடமியில் சேர்ந்தேன். இயற்பியல், கணிதத்தில் பட்டம் பெற்றேன்.
6. காப்புரிமை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கண்டுபிடிப்புகளைச் சரிபார்க்கும் வேலை அது. இதே அலுவலகத்தில் என்னுடைய கண்டுபிடிப்பும் சரிபார்க்கப்படும் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
7. ஆற்றல் (E) என்பது ஒளியின் வேகத்தில் (c) இருமடங்குடன் நிறையைப் (m) பெருக்கும்போது உருவாவது என்பதை E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் விளக்கினேன். அது உலகப் புகழ்பெற்ற சமன்பாடாக மாறியது.
8. 1914-ம் ஆண்டு பெர்லினில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்றேன்.
9. 1907-ம் ஆண்டு தொடங்கிய பொதுச் சார்பியல் கொள்கைக்கான பணியை, 1915-ம் ஆண்டு நிறைவுசெய்தேன்.
10. 1921-ம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலில் என்னுடைய பங்களிப்புக்காக இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’ பெற்றேன். பிறகு பல நாடுகளில் உரையாற்றினேன்.
11. ஒளி, ஈர்ப்பு விசை, காலம், குவாண்டம் இயக்கவியல் போன்ற பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறேன்.
12. இனவாதம் மனிதத்தன்மை அற்றது. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு, யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். உலகம் கொண்டாடும் விஞ்ஞானியாக இருந்தாலும் யூதர் என்ற காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேறினேன். அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன்.
13. அறிவியல் ஆக்கத்துக்குப் பயன்பட வேண்டும் என்றும் போர்கள் அற்ற அமைதியன உலகம் வேண்டும் என்றும் விரும்பினேன். அதற்கான முயற்சிகளிலும் இறங்கினேன்.
14. கையால் எழுதப்பட்ட என்னுடைய சார்பியல் கோட்பாட்டை ஏலம் விட்டு, அதில் கிடைத்த 6 மில்லியன் டாலர்களை இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தேன்.
15. 1955-ம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று நிரந்தரமாக ஓய்வெடுத்துக்கொண்டேன். என்னுடைய மூளையை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர். 1999-ம் ஆண்டு பிரபல டைம் இதழ், ‘நூற்றாண்டின் மனிதர்’ என்று புகழாரம் சூட்டியது.
16. நான் இயற்பியலாளராக இல்லாவிட்டால், ஓர் இசைக் கலைஞனாக ஆகியிருப்பேன். என் வாழ்க்கையில் அதிகப்படியான மகிழ்ச்சியை வயலினிலிருந்து பெற்றிருப்பேன்.
17. அறிவைவிடக் கற்பனைத்திறன் முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனைத்திறனுக்கு எல்லை இல்லை.
– நன்றி தி இந்து நாளிதழ்