Alla vendum Pillai Poem By Navakavi அள்ள வேண்டும் பிள்ளை பூமியை! கவிதை - நவகவி




பூமத்திய ரேகையின் நீளம்- இரு
கைகள் வேண்டும் எனக்கு!
ஏந்த வேண்டும் பூமிப் பிள்ளையை- என்
தாய்மை தவழும் இடுப்பு!
என்- கண்ணீர் மொண்டு -புவியை
கழுவிட வேண்டும்!
என்- புன்னகை கொண்டு- புவிக்கு
மெருகிட வேண்டும்!
(பூமத்திய)
திருவிழாவில் வேண்டும் என்றே….
தவறவிட்ட பிள்ளை.
புவிமகளே உன்னைத் தேடி….
கண்டெடுப்பார் இல்லை.
விண்வெளியில் பூமியின் விசும்பல்
விழுகிறதே விண்மீன் செவியில்.
வரலாற்றின் ரத்தச் சிதறல்
வழிந்தோடி வரும்வை கறைகள்.
கண்ட பின்பும்… எடுக்கலையே….பூமி என்னும் புதையல்.
(பூமத்திய)
காலமெனும் நதியின் ஓரம்….
கரையில் பூத்த தாழை
புவிமகளே நீதான் ஆனால்…..
வாசம் போன ஏழை.
பூநாகம் உள்ளே வாசம்;
புவிப் பூவில் விஷ நெடி வீசும்.
புவிப்பகைவர் முள்ளாய் குந்த
பூமடலே ரம்பம் ஆகும்.
தெரிந்திருந்தும்…. தேடுகிறேன்
…. எங்கே சந்தோஷம்?
(பூமத்திய)
தாலாட்டை போர்ப்பாட் டாக்கி…..
துயில் கலைத்தேன் புவியை.
பாட்டுக்குள் பதியன் போட்டேன்….
அரிமாவின் ஒலியை!
அக்குளுக்குள் புவியை வைத்தேன்!
அக்கினியை உடுத்தச் செய்தேன்!
சிக்கலுக்குள் சிக்கிவிடாமல்
செல் வழியில் ஒளியை பெய்தேன்!
கதிர் ஒளியை…. கத்தரித்தேன்…. நடை விரிப்பாய் நெய்தேன்!
(பூமத்திய)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *