அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் – நூல் அறிமுகம்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
– சித்தார்த்தன் சுந்தரம்
இஸ்லாமியர்கள் யாரையும் சாரத் தேவையற்ற `தன்னிறைவு’, `தற்சார்பு’ சமூகம் என்று `அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்’ நூல் வாயிலாக நூலாசிரியர் பழ. கருப்பையா நபிகள்நாயகத்தையும், குரானையும், ஷரியத் சட்டத்தையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.
இந்நூல் இரண்டு பகுதிகளாக 23 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி இஸ்லாம் மார்க்கம் பற்றியும் அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்தும் சிலாகித்து எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதியில் இச்சமூகத்தினரின் நிலைமை, அரசியல் சூழல், இந்தியாவை உலுக்கிய ஷாபானு வழக்கு என தற்காலச் சமூக, அரசியல் சூழலில் இச்சமூகத்தின் நிலைமை பற்றிக் கூறப்பட்டிருப்பதோடு இஸ்லாமிய மக்களை அவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளுக்கு எதிராக போர்க்கோலம் பூணவும் அறை கூவல் விடுக்கிறது.
இஸ்லாமின் ஐந்து தூண்கள்:
அல்லாவையும் அவர் தூதர் நபியையும் ஏற்பது அப்படி ஏற்றால் தான் அவர்கள் முகமதியர்கள்,
ஐந்து வேளைத் தொழுகை,
ரமலான் போது நோன்பு இருப்பது,
ஹஜ் யாத்திரை,
சகாத் எனும் எனும் கொடை ஆகியவையாகும்.
ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை அறப் பணிக்கு அதாவது, பிறர் துயரைக் களைய கொடுத்தே ஆக வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தின் வரி விதிப்பு போல் இதை இச்சமூகம் கட்டாயப்படுத்துவதாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கொடை கொடுப்பது என்பது தனி மனிதர் விருப்பம் சார்ந்தது என்றாலும் இஸ்லாம் மதத்தில் இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது பாராட்டுக்குரியது. ஆனால், இதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?
உறக்கமே அற்ற ஒன்று வட்டிதான்! என அல்லா கருதியதாகவும் அதனால்தான் `வட்டி வாங்கி உண்பவன் இறைவனின் நிரந்தரப் பகைவனான சைத்தானால் தீண்டப் பெற்றவன்! அத்தகையவன் விசாரணைக்குத் தீர்ப்பு நாளில் எழுப்பப்படும்போது, பைத்தியக்காரனைப் போலன்றி வேறு வகையாக எழமாட்டான்’ என்கிறார். பணத்தால் பணம் ஈட்டுவதை உச்சகட்டச் சுரண்டல் என்கிறது குரான் எனவும் குறிப்பிடுகிறார். இது இன்றைக்கு சில இஸ்லாமிய நாடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. என்னதான், பொருளியல் அறிஞர்கள் நிகழ்காலத் தொழில் வளர்ச்சிக்கு வட்டி முக்கியமென நினைத்தாலும் அல்லா வகுத்த நிலையிலிருந்து இஸ்லாம் எள்ளளவும் மாறவில்லை எனக் கூறுவதோடு `ஊழி பெயரினும் தான் பிறழா இஸ்லாம்’ என இம்மதத்தைப் புகழ்ந்திருக்கிறார்.
`தலாக்’ சொல்லி மணமுறிவு அனுமதிக்கப்பட்ட சமூகமாக இருந்தாலும் பெரும்பான்மையான ஆண்கள் ஒரு மனைவியோடு தான் மரணம் வரை வாழ்கின்றனர். மணமுறிவு அனுமதிக்கப்படாத இந்திய சமூகங்களில் நிகழும் மணமுறிவுகளை விட, மணமுறிவு அனுமதிக்கப்பட்ட இஸ்லாம் சமூகத்தில் மணமுறிவு குறைவு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, தலாக் சொல்லி மணமுறிவு செய்வதை தடுக்கும் வகையில் இஸ்லாமியப் பெண்களின் நலன் கருதி கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் பாதுகாப்புச் சட்டத்தையும் ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. `தலாக்’ சொல்லும் ஒருவரை குற்றவாளியாக்கி அவரை எப்படி மூன்றாண்டுகள் சிறையில் தள்ள முடியும்? அப்படித் தள்ளப்பட்டால் அவர் குடும்பம். தொழில், வேலை என்னவாகும்? என ஒரு நியாயமான கேள்வியையும் முன் வைக்கிறார்.
ஆனால், பல தார மணம் இஸ்லாமில் இருக்கிறது. இதற்குக் காரணமாக நூலாசிரியர் நபிகளைக் குறிப்பிட்டு, `அரேபியா முழுதும் போர் காரணமாக பெருகி இருந்த விதவைகளுக்கு வாழ்வளிப்பதற்காக, எல்லா ஆண்களும் ஒன்றுக்கு மேலான பெண்களை மணக்க இசைவளித்தார்’ எனக் குறிப்பிடுகிறார். ஆனால், இது இந்நவீன உலக யதார்த்த வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமா?
இது போல இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் முக்காடு போடுவதற்கானக் காரணம், `ஒரு பெண்ணை நெருக்கத்தில் காணும்போது தன்னிச்சையாக இல்லாமலேயே, அவள் ஒருவனின் உணர்வுகளைத் தெறிக்க விட்டுவிடக் கூடும் என்பதால், அத்தகைய தேவையில்லாத தடுமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக அவளை அவள் சார்ந்த சமூகம் முக்காடிடச் சொல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைக்குப் பின்பற்றிய இந்தப் பழக்கத்தை இன்றைக்கும் பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொரு சமூகத்துக்கும் ஓர் அடையாளம் இருப்பது போல இச்சமூகப் பெண்டிருக்கும் இது ஓர் அடையாளமாக இருப்பது பெண்ணிய அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? என்பது ஒரு கேள்விக் குறி. இந்த `ஹிஜாப்’பை வைத்தே இன்றைக்கு மதவாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யார் ஆண்டாலும் ஒரு பசியற்ற தன்னிறைவு சமூகத்தை உருவாக்கவே அல்லா மிக எளிய முகம்மதுவை கையிலெடுத்து அவர் மூலம் சமூகத்தைக் கட்டமைத்தார் எனக் கூறுகிறார். ஆனால், ஆட்சியாளரை நம்பி எந்த இஸ்லாமியரும் வாழத் தேவையில்லை என்கிற கூற்று விவாதத்துக்கு உரியது. எல்லாவற்றிற்கும் இச்சமயத்தில் சட்டம் இருக்கிறதென்றால் நாட்டின் இறையாண்மைச் சட்டங்களுக்கு அவர்கள் உட்பட்டவர்களா? இல்லை அப்பாற்பட்டவர்களா?
`இந்தியாவில் பாதிச் சொத்து வக்பு சொத்து; ஆனால் பாதி ஏழைகள் இஸ்லாமியர்கள்’ என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். வக்பு சொத்து என்பதற்கு அவர்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன? இன்றைக்கு மத்தியில் ஆளும் கட்சி ஒவ்வொரு மசூதிக்குக் கீழும் முன்பு கோவில் இருந்தது என சொல்லி 1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பொருட்படுத்தாமல் பிரச்சனையை ஏற்படுத்தி வருவது போல இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒரு கோவில், கட்டிடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அது வக்ப் இடம் என உரிமை கோர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரியான பிரச்சனையெல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக இல்லை. ஆனால் இன்றைக்கு இது துளிர்விட ஆரம்பித்து ஒரு சலசலப்பை பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்துத்துவாவாதிகளின் செயல்பாட்டால் இச்சமயத்தினரின் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எப்போதையும் விட முனைப்போடும், தீவிரத்தோடும் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்றைய சமூக, அரசியல் நிலை குறித்த பகுதியில் நூலாசிரியர் அயோத்தி விவகாரம் பற்றி எழுதுகையில், (பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதுக்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தைப் புதிய பள்ளிவாசல் கட்ட அயோத்தி இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்ட செயல், ஒரு வகையில் `சொரணையற்ற செயல்’ என்றே தனக்குப் படுவதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்) அயோத்தியில் அரசு பாபர் பள்ளிவாசலுக்கு ஈடாக வழங்கிய இடத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் `ஒதுங்கி இருந்து வாழுங்கள்’ என்பதை ஏற்பது போலாகி விடுகிறது! என அது குறித்து தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
சுருக்கமாக, இவர் சொல்ல வருவது என்னவெனில் தற்சமயம் மத்தியில் இருக்கும் ஆட்சி சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து காரியங்களை செய்ய ஆரம்பித்திருக்கிறது இதில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியப் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் (தலாக் சொல்லி மணமுறிவு செய்வது குற்றவியல் சட்டப்படி குற்றம்), குடியுரிமைத் திருத்தச் சட்டம், இனி கையிலெடுக்க இருக்கும் பொதுமைச் சட்டம் (uniform civil code) ஆகியவை அடங்கும்.
இச்சமயத்தினருக்கு எதிராக செயல்படும் அரசும் ஆதரவாக வாக்குகள் வாங்கிச் செல்லும் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாகச் செய்தது என்ன? இன்னும் ஏன் இவர்கள் அவர்களை நம்பியிருக்க வேண்டும்? என பல கேள்விகளை இச்சமயத்தினர் முன் வைப்பதோடு `நீங்கள் ஒருவரல்லர், இருவரல்லர், 30 கோடிப் பேர்! எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கச் செல்லாதீர்கள்! இது வரை நீங்கள் வாக்களித்ததால் பெற்ற பயன் ஒன்றுமில்லை! சனநாயகம் சிறுபான்மையருக்குரிய அமைப்பில்லை!! என்று சொல்லி அவர்களைத் தூண்டுவதோடு `உங்களுக்கு நீங்களே உறுதுணை! காந்தி என்னென்னவோ சொன்னார்: வரி கட்டாதே! அவனுடைய பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாதே ; தனிப் பள்ளி வை! தனிப் பஞ்சாயத்தில் தீர்த்துக் கொள்; வெள்ளையனின் நீதிமன்றத்துக்குப் போகாதே!’
நமக்கு இவ்வளவும் தேவையில்லை. ஷரியத் சட்டத்துக்கு மற்றான சட்டங்களையும் தண்டனைகளையும் நிறைவேற்றவுள்ள நீதி மன்றங்களை அணுகாதீர்கள். பள்ளிவாசல் பஞ்சாயத்துகளிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்படிச் செய்தால் உங்களுக்கு எதிராகத் இயற்றப்படும் சட்டங்களும் நீர்த்துப் போகும் என்கிறார்.
ஒரு சமயத்தினரை வாக்களிக்கச் செல்லாதே என்பதும், உங்களுக்குள்ளேயே நீங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதும் சரியான அணுகுமுறையாக இருக்குமா? நாளைக்கே இன்னொரு சமயத்தைச் சேர்ந்தவர்களும் இப்படி ஆரம்பித்தால் நமது நாட்டின் இறையான்மைக்குக் குந்தகம் ஏற்படாதா? ஏற்கனவே, உங்கள் வாக்குகளை நம்பி எங்கள் வெற்றி இல்லை என்கிற மாதிரியான போக்கு மத்தியில் ஆள்பவர்களிடம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இன்னும் பகைத்துக் கொண்டால் இச்சமயத்தினரின் நிலைமை என்னவாகும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசின் எதேச்சிகார முடிவுகளுக்கு நூலாசிரியர் கூறுவது போல காந்திய வழியில் போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா?
நூலாசிரியர் அவருக்கே உரித்தான எழுத்து நடையில் நறுக்குத் தெரித்தாற் போல பல இடங்களில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளைச் சாடியிருப்பதிலிருந்து தான் யாரையும் சார்ந்திருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவது போல இருக்கிறது.
வக்பு சம்பந்தமான சட்டத்திருத்த மசோதோ எழுப்பியிருக்கும் கொந்தளிப்புக்கு மத்தியில் இந்த நூல் வெளிவந்திருப்பதும், அயலானின் பார்வையில் நூலாசிரியரின் இச்சமயம் சார்ந்த ஆதரவுக் கருத்துகளும், அல்லா இவர்களுக்காக அனுப்பிய இன்னொரு தூதரோ எனக் கருதும்படி `நீங்கள் விரும்பினால் உங்களோடு முன்வரிசையில் நின்று செயல்படவோ, போராடோவோ முடியும்!’ என்று சொல்லி நூலை முடித்திருப்பதும் இச்சமயத்தினரையும், நாட்டையும் எங்கே இட்டுச் செல்லும்?
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்
ஆசிர்யர்: பழ. கருப்பையா
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
விலை : ரூ.200
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.