Alli Udhayan's Subba Reddyarin Poorveekam And Vazhipokku Books Review By Sridhar Manian. Book Day is Branch of Bharathi Puthakalayam.ஒரு ஊர்ல ஒரு ராசாவா…..என்ற சொற்றொடரைக் கேட்டு வளர்ந்த தலைமுறைகள் ஏராளம். அதுவே போல், நிலா நிலா ஓடி வா என்ற பாட்டும்… இவை யாவும் நாம் வழிவழியாகக் கேட்டு வளர்ந்தோம். ஆனால், இன்று வரை நிலா ஏன் ஓடி வரவில்லை என நாம் சிந்திக்கவில்லை. ஏனெனில், புனைவின் கவர்ச்சி, மகத்துவம் அவ்வாறானது.  கதைகளின்றி மழலைப் பருவமில்லை. நம் வயதிற்கேற்றார்போல் கதைகளின் தன்மையும், வடிவமும் மாறுகிறது. கதை மனித வர்க்கத்தினை விட்டுவிடுவதே இல்லை. மனிதன் தான் பார்த்த, கேட்ட செய்திகளை உள்ளவாறே அடுத்தவருக்குக் கடத்துவதில்லை. அது அணுவளவாவது கனம் கூடி மாறுபாடு பெற்று வேறு பரிமாணத்தினைப் பெற்றிருக்கும். ஆக அத்தகைய தருணங்களில் ஒவ்வொரு மனிதனும் கதை சொல்லியாக உருப்பெறுகிறான்.

ஒரு நிகழ்வினையோ, சம்பவத்தையோ பார்ப்பவன் பார்வையாளன் மட்டுமே. ஆனால், அதனை எழுதுபவன் எழுத்தாளனாகிறான். இருப்பினும், அதனை இலக்கியமாக்குபவனே படைப்பாளியாக, தேர்ந்த கதை சொல்லியாக, கலைஞனாகப் பரிமளிக்கிறான். புவியெங்கும் இவ்வாறாக நிகழ்வுகள், கேட்டவைகள், அனுபவங்கள் ஒவ்வொரு கணமும் படைப்பாகப் பிறப்பெடுத்துக் கொண்டவாறே உள்ளன. கோடானுகோடி மனிதர்கள் கதைமாந்தர்களாகின்றனர். இவர்கள் குறித்து எழுதி மாளாது. அவதானிப்பும், கற்பனையும் புனைவு கொள்கின்றன.

அல்லி உதயனின் மூன்றாவது படைப்பிது. ம.காமுத்துரையின் அணிந்துரை மிக அழகாகப் படைக்கப்பட்டுள்ளது. அதுவே, நூல் குறித்த சிறந்த விமர்சனமாகவும் கொள்ளத்தக்கது. அவ்வாறே தேனி சீருடையானின் முன்னுரையும். த.மு.எ.க சங்கத்தின் தவிர்க்கவியலாத செயல்பாட்டாளரான அல்லி உதயன் மேலாண்மறைநாட்டின் படைப்பாளி போன்றே தனது தொழிலுடன் இலக்கியத்தினை வார்த்தெடுப்பது குறிப்பிடத்தக்கது.

Alli Udhayan's Subba Reddyarin Poorveekam And Vazhipokku Books Review By Sridhar Manian. Book Day is Branch of Bharathi Puthakalayam.
‘சுப்பாரெட்டியின் பூர்வீகம்‘ , பாரதி புத்தகாலயம், விலை ரூ. 100, புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

அல்லி உதயனின் ‘சுப்பாரெட்டியின் பூர்வீகம்‘ குறுநாவல் புதுமையான போக்கினைக் கொண்டதாக உள்ளது. பூர்வீகமென்பது பாரம்பரிய சிறப்புடையதாக இருக்கலாம்.  குறிப்பிடத்தக்கவாறு ஏதுமில்லாததொன்றாகவும் இருக்கலாம். . நாவல் ஒரு எளிய தரகுத் தொழில் செய்யும் மனிதனைக் குறித்தும், அவன் வாழ்வலத்தினைக் குறித்தும் கூறுகிறது. ஊடாக, மெல்லிய காதல் கதையும் இழைந்து வருவது சிறப்பு. வழங்கு மொழிப் புனைவான இக்கதை ஓர் இளைஞனின் மனத்தவிப்பினை, புழுக்கத்தினை விவரிக்கிறது. எவ்வாறெனினும், சுப்பாரெட்டியாரின் அகவுலகு நேர்த்தியாக அவரது மனிதநேயத்தினை அடிநாதமாகக் கொண்டு செல்கிறது. வருச நாட்டுச் சம்சாரிகளின் வாழ்வு முறையினை அல்லி உதயன் துல்லியமாகக் காட்சிப்படுத்துவது சிறப்பு. தேனியைச் சூழ்ந்திருக்கும் கிராமப்பகுதிகள் அவரது எழுத்தில் உயிர் பெறுகின்றன. அது போன்றே ரோஜா சைக்கிள் நிறுவனம் குறித்த பகுதிகள் சுவாரசியமானவை, வாசகனுக்கு இத்தரவுகள் புதுமையானவை. எளிய மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இரு சக்கர வாகனங்களுக்கு இப்பகுதி சிறப்புச் செய்கிறது. இன்னும் கூடுதலாகத் தரகுத் தொழிலின் கூறுகளையும் இக்கதை கூறுகிறது. நெல்லின் வகைகள், அதனை அளந்தெடுக்கும் முறைகள் என அப்பகுதியும் வாசகனுக்குப் புதுமையானது. இப்படைப்பின் சிறப்பு அதனைப் படைப்பாளி நிறைவாக்கிடும் உத்தியே. மனித வாழ்வு கேள்விகளால், விடை காணவியலாத வினாக்களால் நிரம்பியதென்பதற்குச் சான்றாக இப்புனைவு நிறைவு கொள்கிறது. வட்டார சொலவடைகளை இந்த நூல் நெடுகிலும் படைப்பாளி அல்லி உதயன் அள்ளித் தெளித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இரண்டாவது குறுநாவலான ‘தியாக மனசுகள்‘ இயக்கத் தோழர்களின் போராட்டத்தினைப் பற்றிப் பேசுகிறது. மாற்றுக் கருத்து, விமர்சனங்களை எதிர் கொள்ளல், அது குறித்தான விவாதங்கள் என்ற காரணிகள் ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளங்கள். ஆனால் இன்றைய அரசியல் சூழல் மாற்றுக் கருத்தினை முன்வைப்பது என்ற நிலையினையே கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது. ஆள்வோரின் கொள்கைகள் மெள்ள மெள்ள மக்களைச் சிந்திக்கவே அனுமதிக்காது அவர்களை மந்தைகளாக உருமாற்றம் செய்திட தன்னாலான அனைத்து முன்னெடுப்புகளை விதிமுறைகள், சட்டங்கள் என்பதன் வாயிலாக நசுக்கிக் கொண்டுள்ளது. மக்களாட்சியின் அடிநாதமான தன் கருத்தினை முன்வைத்தல் என்பதையே தடை செய்திட முயல்கிறது. இந்நிலையில் போராட்டம், புரட்சி என்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தான ஆழ்ந்த ஐயம் நமக்குள் எழுகிறது.  இருப்பினும் இன்றைய தலைமுறைக்கு இவ்வாறான தரவுகளும், நமதுரிமையை வென்றெடுத்திட முறையான போராட்டங்கள் வழி வகுக்கும் என்ற செய்தியினை உறுதியாக எடுத்துக் கூறுகிறது.

Alli Udhayan's Subba Reddyarin Poorveekam And Vazhipokku Books Review By Sridhar Manian. Book Day is Branch of Bharathi Puthakalayam.
அல்லி உதயன் (Alli Udhayan)

அல்லி உதயனின் மற்றொரு படைப்பு ‘வழிப்போக்கு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு. 1980.90 ஆம் ஆண்டுகளில் செம்மலர், தினமணிக்கதிர் இதழ்களில் வெளியான பதினொரு கதைகள் கொண்ட இந்த நூல் மிக எளிய, வறிய மாந்தர்களின் வாழ்க்கை பற்றியது. புனைவின் வரிகளை மனதில் கொண்டால் ஒரு ரூபாயில் வாழ்க்கை நடத்தும் காலம் தோன்றுகிறது. முதல் கதையே சமுதாயத்தில் பல்வேறு சாமானியர்களுக்குப் பல வழிகளிலும் உதவிடும் ஒரு மனிதனைப் பற்றியது. நடைமுறை வாழ்வின் குடும்ப நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய சேவையினை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வது மிக்க சலிப்பினையும், சோர்வையும் அளிப்பது. இருப்பினும் இக்கதை நாயகனுக்கு அவனுடைய தொண்டினைப் பாராட்டி விருது அளிப்பதாகக் கூறும்போது அவன் கூறும் சொற்கள் நம் காலத்தில் தங்களுக்குத் தாங்களே பாராட்டிக் கொண்டு, விளம்பரத் தட்டிகள் வாயிலாக மக்களுக்கு ‘சேவை புரியும் செம்மல்களின்‘ மனத்தில் சுருக்கெனத் தைப்பதாக உள்ளது. சிறப்பான சொற்களைக் கொண்டு நிறைவு பெறும் சிறுகதையாக இது மிளிர்கிறது.

மற்றொரு கதை மகளிர் சங்கங்களின் எதார்த்த நிலையினைப் பற்றிப் பேசுகிறது. சாமானிய மக்களின் அன்றாட வாழ்வு அட்டைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதனை அழகாக விளக்குகிறது. கடன்களால் இத்தகையோரின் வாழ்வில் மாற்றம் உண்டாகிறதோ இல்லையோ வங்கிகள் வட்டி வருவாயினால் அசுர வளர்ச்சி அடைவது உறுதி. கதையெங்கும் ஒரு மிதிவண்டியில் தின்பண்டம் விற்றுத் திரியும் வறிய மனிதனின் வாழ்க்கையினை வாசகனுக்கு அல்லி உதயன் காட்டுகிறார். அருமையான சொற்களும், வாக்கியங்களும் அடங்கிய படைப்பிது. மற்றுமொரு கதை பின்னலாடை நகரில் சூதறியாத குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காட்டி பெண் தொழிலாளர்களை வஞ்சிக்கும் தந்திரத்தினை விளக்குகிறது.

Alli Udhayan's Subba Reddyarin Poorveekam And Vazhipokku Books Review By Sridhar Manian. Book Day is Branch of Bharathi Puthakalayam.
‘வழிப்போக்கு’, பாரதி புத்தகாலயம் விலை ரூ. 90, புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நிறைவில்லாத நிறைவுகள் கதையும் ஒரு மனிதனின் மனப்புழுக்கத்தினையும், தன்னைத் தானே அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள விழைவதனையும் சிறப்பாக விவரிக்கிறது. சிறப்பான படைப்பிது. செம்மலரில் வெளியான ‘பெயர்‘ எனும் சிறுகதையினை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதையாகக் குறிப்பிடலாம். நடப்பு கால அரசியலை மாற்று உத்தியில் பகடிக்குள்ளாகும் கதை. ‘வெறும் பெயர்களால்‘ மக்கள் பெறுவதென்ன என்பதைப் படைப்பாளி அருமையாகக் கூறுகிறார். அல்லி உதயன் இப்படைப்புகளில் தனது கதை மாந்தர்களுக்குப் பெயர் சூட்டவில்லை. இந்த உத்தி சிந்திக்கத்தக்கது. இத்தகையோர் நம்மைப் பிரதிபலிக்கின்றனர். இத்தொகுப்பில் உள்ள படைப்புகளில் காணப்படும் இவர்கள் மிக எளிய, விளிம்பு நிலை மாந்தர்களின் பிரதிகளும், பிரதிநிதிகளுமாவர். பொதுவாக அனைத்து சிறுகதைகளுமே வாசகனுக்கு ஏமாற்றமளிக்காது எளிய நடையில் வாசகனுடன் இழைந்து செல்வதும் உண்மை. அதுபோலவே இயக்கத் தொண்டாற்றிடும் தோழர்களுக்கு இக்கதைகள் பெருமை சேர்ப்பவை, அவர்களுக்குத் தொய்வின்றித் தொண்டாற்றிடும் ஊக்கத்தினையும், மனவலிமையும் அளிக்கவல்லவை.

விறுவிறுப்பு, கவர்ச்சி, பகட்டு, மலினமான வெகுஜன பொழுதுபோக்கு உத்திகளையே அடிப்படையாகக் கொண்டு மக்களை, சமூகத்தினையே தங்களது பிடிக்குள் வைத்திருக்கும் அசுர ஊடகங்களின் வலையிலிருந்து மீண்டு, தப்பித்து இத்தகைய விளம்பரக் கவர்ச்சியற்ற வட்டார வழக்குப் புனைவுகளை வாசகனுக்கு எவ்விதம் கொண்டு சேர்ப்பதென ஒரு மருட்சி இலக்கிய ஆர்வலர்களிடையே நிலவுவதே இன்றைய எதார்த்தம். எவ்வாறெனினும், வெற்றுக் கூச்சல்கள் மின்வெட்டு போல மறைந்தழியும் எனும் நம்பிக்கை. நம்மை ஆட்கொள்வதும் மற்றுமொரு உண்மை. இதனை வெளியிட்டு இயக்கத் தோழர்களுக்கும், வட்டார வழக்குச் சிறுகதைகளைப் படைப்போருக்கும் சிறப்பு சேர்த்திருக்கும் பாரதி புத்தகாலயத்திற்கு நன்றிகள் பல.

 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *