அல்லி உதயன் எழுதிய “வலை” சிறுகதை
இரவு, ஒரு தீராத வயிற்று வலி கண்ட மனிதனைப் போல் எழுந்து அலைந்தது. விடிகாலை மருந்தை உட்கொள்ளும் வரை அது அடங்கி அமைதி கொள்ளாது என்றே இவனுக்கு தோன்றியது.
அந்தப் புலர்தலில் ஒரு தெரு நாயைப் போல் சென்னைத் தெருக்களில் வீசியெறியப்படுவோம் என்கிற அச்சம் படர்ந்தது. மெட்டல் டிடக்டர் சோதனைக்காரன் போல் உடம்பு முழுவதையும் தடவிப் பார்த்தான். பாலையில் நீரூற்றுப் போல் ஐம்பது ரூபாய் சட்டையின் உள் பாக்கெட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது.
“வெளியூர் கிளியூர் போனா வந்தா இருக்கிற துட்டத் தகனி தகினியாப் பிரிச்சு வச்சுக்கனும் என்னா?”…. அம்மாவின் எச்சரிக்கை கொஞ்சம் உதவியிருக்கிறது.
அய்யாவும் தன் பங்குக்குச் சொல்வார்…..”ஆமாடா….முழுசா ஒன்ல வச்சு அம்புட்டையும் எழந்துரக் கூடாது….. என்னா நாஞ் சொல்றது?” இப்போது அதுதான் நடந்திருக்கிறது.
தாம்பரத்தைச் சுற்றியே சென்னை வந்து விட்ட்தைப் போல் ஒருவிதப் பரபரப்பு அப்பிக் கொண்டது. கண்டக்டர் இரக்கப்பட்டு ஒரு இருபது ரூபாய் டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தார். இருந்த ஐம்பதில் முப்பது மிச்சம். ஒரு சாதாரண கடையில் டீ குடித்து விட்டு தங்கை வீட்டிற்கு டவுன் பஸ் ஏறினால் அதுவும் காலி. ஊர் திரும்ப அவள் கையை எதிர்பார்க்க வேண்டும்.
அந்த அகாலத்தில் பஸ் முழுதும் திமிங்கலத் தூக்கத்தில் கிடந்தது. கண்டக்டர், டிரைவருக்கு அடுத்து மூன்றாவது ஆளாக இவன் விழித்திருந்தான். :ஆனது ஆச்சு… போனது போச்சு…. அஞ்சாமல் வா” என்றிருக்க முடியவில்லை.
மழை முடிந்து கழுவி எடுத்தது போல் சாலை தெளிவாகவும், அழகாகவும் இருந்தது. அந்த அமைதியின் குரல்வளையை நெறிக்கும் வண்ணம் எதிரும் புதிருமாக வாகனங்களின் ஒட்டம் இருந்தது. மிக அருகில் வந்து போகும் ஹாரன்களின் ஒலியலைகள் மனசுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
முழுக்கவும் உருவியெடுத்து பிறந்த குழந்தையின் அம்மணத்தில் விடப்பட்டதைப் போல் ஒரு விதத் தவிப்பு எழுந்தது. “வெறுங்கை வெங்கடாசலம் போறானாம் பத்து பேரோட” என்று அம்மா சிலேடை போடுவதைப் போல் தங்கையின் வீட்டில் காலடி வைக்க துணிவில்லை.
அம்மா பண்ணி பண்ணிச் சொல்லி விட்டிருந்தாள். ங்கொய்யாவுக்கும் எனக்கும் சேட்டமில்ல. “அம்புட்டுத் தூரம் போயிட்டு வர ஒடம்பு ஒத்துக்காது…. எல்லார் சார்பிலும் நீதேம் போற பாத்துக்க….அப்புறம் அதவுட்டே… இதஎடுத்தேன்னு தெங்காச்சியா நின்னுறாதே….செய்மொற காரியம்….. பத்தாயிரம் பெரிசில்லதே…. இன்னிக்கு நக நட்டே பவுனு ஒன்னு… ஒனேகாலுனு போயிருச்சு… இதச் சாதாரணமாத்தே பாப்பாக…. இருந்தாலும் மொதப் புள்ளக்குச் செஞ்சே ஒரு வர்ஷந்தான ஆகுது…. பின்னப் பிறகு… ஒரு கொடி கொலுச வாங்கிப் போட்டுறலாம்… அதோட பத்து முந்நூறுக்கு ஏதாவது திய்ங்க எடுக்க வங்கிட்டுப் போ… நீ பாட்டுக்கு மணிமணின்னு போயி நின்றாதே…. என்ன?”
அய்யாவும் சேந்தடியாச் சொன்னார். “ஆமடா… கொஞ்ச நாள்ல எனக்கும் மெட்ராஸ் ஐகோர்ட்ல ஒரு வேலையிருக்கு அப்பப் போகும் போது அவகளப் பத்துக்கிறே…. இப்ப நிய்யி அம்மா சொல்றபடி எல்லாஞ் செஞ்சுரு… என்னா நாஞ் சொல்றது?” பதினாறு வயதினிலே ரஜினி, இது எப்படி இருக்கு? என்பது மாதிரி தான் அப்பாவுக்கு, “என்ன நாஞ் சொல்றது?” அம்மா, “என்னா”… என்பது போல் நிறுத்திக் கொள்வாள்.
இவன் ஒவ்வொன்றிற்கும் சவலைப் பிள்ளை போல் தலையாட்டிக் கொள்வான். என்றாலும் புத்திமதி சொல்வதற்கு ஓர் அளவில்லை என்றாகும் போது எரிச்சலடைவான். “இன்னஞ் சின்னபுள்ளைக்கு அ, ஆ சொல்லித்தார மாதிரியிருக்கு நீங்க சொல்றது?” அதே நாம் பாத்துக்கிறேங்கிறேன்ல….” அவர்களுக்கு ஒரு பாணி என்றால் இவனுக்கு “அதே நாம் பாத்துக்கிறேன்றேன்ல….” இம்மூன்றும் அடிக்கடி முட்டி மோதிக் கொண்டிருந்தன.
பகாசூரன் வாயெனப் பிளந்த சலையின் மைய வெளியில் நெடு நீளமாய் ஓடின நியான் விளக்குகள். நிறுத்தங்கள் இல்லாப் பெரும் பயணம் ஓட்டுநருக்குக் காலாற வாக்கிங் போகிற தெம்பைக் கொடுக்கும் போலும். ஸ்டியரிங்க்குக்கும், ஆக்ஸிலேட்டருக்கும் வேலை கொடுக்காமல் பறந்து கொண்டிருந்தான்.
சுத்தடியாக ஒன்றுமில்லாமல் இந்த்தப் பத்தாண்டுகளில் தங்கையைப் பார்க்க சென்றதில்லை இவன். பயணச் செலவுக்கு இணையான ஒன்றைத் தன்னளவிலும் செய்திருக்கிறான்.
தனியாக அம்மா செய்து தருகிற பண்டங்கள், அப்பா தருகிற காசு, என உற்சாக வரவேற்பில் அவர்கள் திளைக்கிற வண்ணமே இவனது புறப்பாடுகள் அமைந்திருக்கின்றன. மாமாவின் தலை எப்போது விழும் என்றே தங்கையின் பிள்ளைகளும் பை பார்துக் காத்திருந்தன.
இப்போது புடிச்ச மீனும் போய் பொட்டி மீனும் போன கதையாக ஒன்று நடந்து விட்டது. நேராகச் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி பயணிக்கும் வாய்ப்புகள் எத்தனையோ வந்திருக்கின்றன. இடையில் காட்டா வெளியில் உள்ள மோட்டல்களில் இறங்கி ஏறியிருக்கிறான். ஒன்னுக்கு ரெண்டுக்குப் போய் வருவதை சாவதானமாகச் செய்துமிருக்கிறான். அம்மா அடிக்கடி சொல்வதைப் போல் ஒரு “பரப்பெடுத்த பய” நின்ற நிமிஷத்தில் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
ஒரு முறை பயன்படுத்தி எறியும் கப்பில் பொங்க பொங்க டீ வாங்கிக் கொண்டு பின்னால் ஓடினான். ஒரு சமயத்தில் கப்பை பாதி டீயோடு வீசி விட்டும் ஓடிப்பார்த்தான். சட்டை பேண்டில் துளிகள் சிதறியது தான் மிச்சம். ஒலிம்பிக் பந்தயக்காரன் போல் வென்று காட்ட முடியவில்லை. சகலமும் அடங்கிய பையோடு சிட்டாகப் பறந்து விட்டான் பாவி.
உடுத்து மாத்துக்குப் பேண்ட், சட்டைகள், துவட்ட எடுக்கத் துண்டு, தலையில் கட்ட மப்ளர், பவுடர், எண்ணெய், சோப்பு, சீப்புக் கண்ணாடி எனப் பார்த்து பார்த்து எடுத்து வைத்ததெல்லாம் போய்விட்டது. அதுகூடப் பரவாயில்லை. ஏற்கனவே புழங்கிக் கழித்தது என விட்டு விடலாம். இருந்தாற் போல் பையில் வைத்திருந்த பத்தாயிரம் மொய்ப்பணமும் சேர்ந்தே போய்விட்டது.
கைப்பற்றுகிற ஒருவனுக்குக் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைதான். இடைகாட்டில் இறங்கி படை இழந்த மன்னனைப் போல் நின்றான்.
கண்டக்டர் உரத்த குரலில் டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தான். இப்படியான வேளைகளில் டிரைவர் தூக்கச் சடவில் கண் சிமிட்டி விடக்கூடாது என்பது அவனுக்கான அறிவுத்தலாக இருக்கலாம். சிரித்துச் சிரித்து இருவரும் இருளைக் கரைத்துக் கொண்டு போனார்கள்.
“கெளாம்பாக்கம் வரவும் எறக்கி வுடுங்க…” இந்த வண்டியை பிடித்த மாத்திரத்தில் கண்டக்டரிடம் தயவாய் வேண்டினான்.
“ஆதேங் கடசி ஸ்டாப் எறங்கித்தே ஆகனும்” என்றான் கண்டக்டர் லந்த்தாக…
வேகத் தடைகள் குறைந்த பலாசலான ரோட்டில் படு பவ்யமாய் வண்டி பாய்ந்து கொண்டிருந்தது. கிளாம்பாக்கம் நெருங்குவதை உணர்ந்து கண்விழிப்புகள் கூடின. பஸ்ஸின் அரசல் புரசல் அடிவயிற்றைக் கலக்கியது. முடிவற்ற நெடுந்தூரப் பயணம் தேவைப்பட்டது இவனுக்கு. “சீர் கொண்டு வந்தால் சகோதரி” என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் எண்ணங்கள் ஓடின. ஆனல் உண்மையில் அம்மா கொடுத்து விட்ட பணம், ஆசை ஆசையாய் மொய் செய்யத்தானே. அதை ஏன் அவளுக்கு செய்யாமல் விட வேண்டும்? இழந்து விட்டேன் போன் மூலம் அனுப்பி வை! என்றால் எதை வைத்து அவர்கள் அனுப்புவார்கள்? இன்னொரு கந்துக்காரனை எப்படி அவர்கள் நினைத்த மாத்திரத்தில் பிடிக்க முடியும். விசேச நேரத்தில் நொடிக்குள் செய்யாதது எப்படி “செய்முறை” யாக இருக்க முடியும்?
“எதுவும் நன்மைக்கே” என்பதைப் போல் ஒன்று போவது இன்னொன்று கிடைப்பதற்காகத் தான் என்று யாரோ சொல்லிக் கேட்டது இன்று நினைப்பு வந்தது. “நெனப்புதா பொழப்பக் கெடுக்கும்” என மற்றொன்றும் கூடவே வந்தது.
எத்தனை கட்டுப் படுத்தினாலும் அலை மோதும் எண்ணங்களில் எது எதுவோ வந்து கொண்டிருந்தது. வண்டி நின்ற பின் கட்டக் கடைசியாய் இறங்க வேண்டும். தன்னைப் போலவே ஒரு ஏமாளி விட்டுச் செல்லும் பை ஒன்றில் “செய்முறை” அளவில் பணம் இருந்தால் போதும். தங்கை வீட்ட்டாரைச் சந்தோசத்தில் திளைக்கச் செய்யலாம்.
“எவஞ் சொத்துக்கும் ஆசப்படக்கூடாது… ஒழைக்காமக் கெடய்க்கிறது எதுவும் நிய்க்காது என்ன?” அம்மாவின் அசரீரிக் குரல் கேட்ட்து.
“பசிச்சாலும் புலி புல்லத் திய்ங்காதும்பாக… அது மாதிரிதே தப்பான வழியில் சம்பாரிக்கிறது எதுவும் நிலைக்காது என்னா நாஞ் சொல்றது?” இது அய்யா.
“நிற்காது நிலைக்காது என்னா?” “என்னா நாஞ் சொல்றது?” அய்யாவும், அம்மாவும் போதகர்களாகப் போயிருக்கலாம்.
நண்பகல் வெட்கித் தலை குனியும் வண்ணம் பூரண விளகொளியில் மினுங்கியது கிளாம்பாக்கம் பேருந்து முனையம். இது இரவா… இல்லை பகலா” என்று மனம் மருகியது. சரக்கொன்றை போல் மிளிர்ந்த தொடர் வரிசைப் பல்புகள் “வா அருகில் வா… தா உயிரைத் தா” என்று வேண்டிக் கொண்டிருந்தன.
தடுப்புத், தடுப்பாக நூற்றுக் கணக்கில் பஸ் நிறுத்தங்கள் அணிவகுத்தன. இறங்கி ஒவ்வொன்றய்க் கடந்தான். குறுக்கும் நெடுக்குமாய் ஒன்றுக்கொன்று சிக்கிக் கொண்ட்தைப் போல பஸ்கள் பல ஊர்களைத் தாங்கி நின்றன.
கண்டக்டர் சொன்னான், “எந்நொன்னுக்கும் விசாரணை மையத்தில் போய்ப் பாரு…. ஓ யோகத்துக்கு நீ விட்டது கெடைக்குதானு….” பொல்லெனப் பெருகிய கூட்டத்திற்கிடையே வண்டியை நிறுத்தி விட்டு டிரைவரும், கண்டக்டரும் டீ கடை பார்த்து மின்னொளியில் நடந்தார்கள்.
பஸ்ஸை விட்டு இறங்கிய ஒவ்வொருவர் தோளில், முதுகில், கையில் ஏதோ ஒரு வடிவத்தில் பைகள். தூக்கச் சடவுகள் தீராமல் தவங்கலான நடையுடன் அவரவர் போகும் இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
வெற்று ஆளாய்…. அம்மா சொல்வதைப் போல், “மணி மணி” என்று இவன் ஒருவன் கடைசியாக இறங்கினான். கண்ட்க்டர் நம்பிக்கையூட்டியதைப் போல் விசாரணை மையம் பார்த்து தளர்வாக எட்டு வைத்தான். திரும்புகிற புறமெல்லாம் தான் இழந்த பையுடன் ஆட்கள் செல்வதாக பிரமை தட்டியது. மொழு மொழு வென்று போன நடை மேடையில் விசாரணை மையம் இருந்தது.
கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். மூடி மூடி விழித்தான். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்கிற பாடலையும் தாண்டி ஒன்று தெரிந்தது. மையத்தின் பக்கவாட்டுத் தரையில் இவன் விட்ட, அதே நிறத்திலான பை.
📚 எழுதியவர்:
15-80 ஸ்டாலின் தெரு,
அல்லிநகரம் (தேனி),
தேனி மாவட்டம் – 625531
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

