ஆலி குஹ்னர் (Allie Kuehner) என்பவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர் ஆவார். நேச்சர் என்ற இலாப நோக்கற்ற குழுவில் பணியாற்றுகிறார். அவரும் அவரது கணவர் கார்ல் குஹ்னர் ஆகிய இருவரும் ஒன்றாக விண்வெளிக்குச் சென்றனர். ஆகவே ப்ளூ ஆரிஜின் பயணத்தில் ஒன்றாகப் பறந்த இரண்டாவது திருமணமான தம்பதிகள் என்ற பெருமையைப் பெற்றனர்.
வாழ்க்கை
இவர் எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வுகளைக் காண ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பான நேச்சர் இஸ் நான்பார்டிசன் (Nature is Nonpartisan) குழுவில் அவர் பணி செய்து வருகிறார். இவர் இயற்கையின் மீது ஆழ்ந்த மரியாதைக் கொண்டவராகவும் இருக்கிறார்.
இவர் இயற்கையைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்படுகிறார். ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாகசக்காரர் மற்றும் ஆய்வாளர் என அழைக்கப்படுகிறார். தொலைதூர நிலப்பரப்புகள் முதல் கரடு முரடான நிலப்பரப்பு வரை சென்று ஆய்வுகளைச் செய்கிறார். இது சுற்றுச்சூழல் மேலாண்மையை வலுப்படுத்துகிறது என அவர் குறிப்பிடுகிறார்.

ஆலியின் கணவரான கார்ல் குஹ்னர் என்பவர் ரியல் எஸ்டேட் மேம்பாடு, முதலீடு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான பில்டிங் அண்ட் லேண்ட் டெக்னாலஜியின் (BLT) தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. தனது மனைவியைப் போலவே இவரும் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர் ஆவார்.
விண்வெளி
நியூ ஷெப்பர்ட் (NS) திட்டத்திற்கான 33 ஆவது பயணம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று நடைபெற்றது. இது ப்ளூ ஆரிஜினின் 13 ஆவது மனித விண்வெளிப் பயணமாகும். சட்டம், ரியல் எஸ்டேட், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் சேர்ந்த ஆறு பயணிகள் இந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர். இந்தப் பயணத்தின் நோக்கம் என்பது நமது கிரகத்தின் அழகைப் பாராட்டுவதும் ,எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் ஆகும்.
இந்தப் பயணம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது. இவர்கள் ப்ளூ ஆரிஜின் காப்ஸ்யூலில் சுமார் மூன்று நிமிடங்கள் விண்வெளியின் எடையின்மையை அனுபவித்தனர். விண்வெளியின் கருமை நிறத்திற்கு எதிராக பூமியின் வளைவு அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். இந்தப் பயணத்தின் போது மாணவர்களிடமிருந்து 1000 க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை எடுத்துச் சென்றனர். இது ப்ளூ ஆரிஜினின் “எதிர்காலத்திற்கான கிளப்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தப் பயணம் 105.2 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது. பூஸ்டர் ஏவப்பட்ட சுமார் 7.5 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சக்தி வாய்ந்த தரையிறக்கத்தைச் செய்தது. அதன் பிறகு காப்ஸ்யூல் பாராசூட்டுகளின் உதவியுடன் சுமார் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, பூஸ்டரிலிருந்து சில நூறு மீட்டருக்குள் தரையிறங்கியது.
இந்தப் பயணம் சர்வதேச விமானக் கூட்டமைப்பு (FAI) அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையான கார்மன் கோட்டைக் கடந்து சென்றது. கார்மன் கோடு என்பது கடல் மட்டத்திலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தைக் குறிக்கிறது. இந்த வரம்பிற்கு மேல் ஆலி குஹ்னர் பயணம் செய்ததால் விண்வெளி வீரர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
சாதனை
ப்ளூ ஆரிஜின் NS-33 இல் பயணம் செய்த 70 ஆவது விண்வெளிப் பயணி என்ற பெருமையை கார்ல் குஹ்னர் பெற்றார். விண்வெளி ஆய்வாளர்கள் சங்கத்தால் பதிவு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களின் பட்டியலில், கார்ல் குஹ்னர் விண்வெளியில் நுழைந்த 750 ஆவது மனிதர் என்ற சிறப்பைப் பெற்றார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

