நூலின் தகவல்கள்:
அள்ளிப் பருக நீளும் கைகள் (ஹைக்கூ கவிதைகள்)
கவிஞர் மு.அருணகிரி
பக்கம்: 64
விலை: ரூ.75
வெளியீடு: நடுகை பதிப்பகம்
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். ஹைக்கூ கவிதைகள் குறித்தான ஒரு ஒவ்வாமை பார்வை தமிழ் இலக்கியச் சூழலில் நிலவினாலும் எழுதத் துவங்குபவர்கள் பெரும்பாலானர்க்கு இலக்கிய வாசல்படி மூன்று வரி ஹைக்கூ வாகவே இருக்கிறது. அதன் எளிய வடிவம் யாரையும் எளிதில் ஈர்த்து விடும் ஆற்றல் படைத்தது. அதே நேரத்தில் ஒரு நல்ல அசல் ஹைக்கூ எழுதுவது அப்படி ஒன்றும்எளிதானதல்ல. தேர்ந்த வாசிப்பு ஞானம் உள்ளவர்க்கு மட்டுமே அது வசப்படும். ஒரு புத்தகத்தில் 10 ஹைக்கூ இருந்தாலே போதுமானது. மற்றவை யாவும் போலச் செய்தலே. கவிஞர் மு.அருணகிரி அவர்கள் நீண்ட காலம் ஹைக்கூ கவிதைகளில் தம்மை கரைத்துக் கொண்டவர். முதல் நூலிற்கும் இரண்டாம் நூலிற்கும் இடைவெளி 25 ஆண்டுகள். ஆழ்ந்த வாசிப்புத் தவத்தில் இருந்திருப்பார் போல, முத்து முத்தான கவிதைகளோடு அவைக்கு வந்திருக்கிறார். நூலில் மொத்தம் 80 கவிதைகள். அழகிய ஓவியங்களுடன் கவிதைகள் யாவும் மிகுந்த சுவாரசியத்துடன் இருக்கின்றன. எளிய மனிதரின் வலிய கவிதைக்குள் நாமும் நுழைவோம்.
தங்கநாற்கர சாலையென்ற பெயரில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்திய இயற்கை வளத்தை கொள்ளையடித்து கொண்டு போக சூட்சுமத்துடன் நிழல் தரும் குளிர் மரத்தை வெட்டி வீழ்த்தி விளைநிலங்களை ஏழைகளிடம் பறித்து போடப்பட்டதே எட்டுவழிச்சாலைகள் அதில் வழியெங்கும் சுங்கச்சாவடிகள் வைத்து அரசே நடத்துகின்றன வழிப்பறி நிலையங்களை அவை குறித்த சமூகப் பார்வையுடன் ஒரு கவிதை அரசின் வன்முறையை கூட அழகாக சொல்ல முடிகிறது கவிஞரால்,
“உணவுத் தட்டில்
கருப்பாக படர்கிறது
எட்டுவழிச்சாலை.”
ஆலமரத்தையும் அருகிலிருக்கும் குளத்தையும் அனைவரும் தான் பார்க்கிறோம் கவிஞர்கள் பார்வை மட்டுமே புதிய தரிசனங்களைத் தருகிறது புதிய சிந்தனை இக்கவிதையே புத்தகத்தின் தலைப்பாகவும் இருப்பது சிறப்பு.
“அள்ளிப் பருக
நீளும் கைகள்
ஆல விழுது”
செருப்பை பறிகொடுப்பவர்க்கு மட்டுமே தெரியும் பாதத்தின் வழி இப்போதெல்லாம் பெரும்பாலான இடங்களுக்கு செருப்புடனே அனுமதிக்கிறார்கள் கோவிலை தவிர பெரும்பாலும் களவு போவது புதிய செருப்புகளே அதைப் பற்றியும் ஒரு கவிதை,
“யாரோ ஒருவரின்
பாதங்களோடு பயணிக்கிறது
தொலைந்த செருப்பு”
யாசகர்கள் பெருகி வழியும் காலம் தேசமும் அரசும் குடிமக்களை பிச்சைக்காரர்களாக அலைய விடுவது குறித்து ஆள்வோர்க்கு கவலையில்லை. ஆனால் கவிஞர் மனம் கசிகிறார் இப்படி,
“தேங்கிக் கிடக்கிறது
திறக்கப்படாத கதவுகள் முன்
யாசகரின் குரல்”
இப்படி தொகுப்பு முழுவதும் நம் மனசில் தைக்கும் கவிதைகளோடு வந்திருக்கிறார் கவிஞர் அருணகிரி தொடர்ந்து கவிதை எழுத வாழ்த்துகள்.
நூல் அறிமுகம் எழுதியவர்
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

