அல்லியம் – கம்சனை அழித்து கண்ணபிரான் ஆடிய ஆட்டமே அல்லியம் ஆகும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் மாதவியின் பதினொன் வகை நடனங்களுள் இதுவும் ஒன்று. சிவபெருமானின் ஆனந்த தாண்டவமும் அல்லியம் என வழங்கப்படும்.
ரவி பேலட்டின் சிறப்பான அட்டைப்படம் மாதவியின் நடனத்தைக் குறிப்பதாக எனது புரிதல்.
ஆனால் கவிஞர், அர்த்தநாரீஸ்வரம் என்னும் நடனத்தை பதிவு செய்வதாகச் சொல்கிறார். ஆனந்த தாண்டவம் ஆகவும் அல்லியத்தை புரிந்து கொள்ளலாம்.
இக்கவிதைத் தொகுப்பு கவிதையில் ஒரு பாய்ச்சல்.
அணிந்துரையில் கவிஞர் யவனிகா சிரீராம் சொல்வதுபோல, இக்கவிதைகள் சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய நவீன மனித வாழ்விற்கு ஒரு காவியத்தன்மையை முயற்சிக்கின்றன.
ஒரு விநாடி, கண்டராதித்தனை வாசிப்பது போன்ற மயக்கம்.
அற்புதமான சொல்லாட்சி. பிரமிக்க வைக்கும் கவிமொழி.கற்பனையின் உச்சம்.
ஏழு பிரிவுகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.அற்புதமான உப தலைப்புகளுக்கு இரண்டு உதாரணங்கள்:
தீக்களி, மனப்புரம்
கவிஞர் தன்னுரையில் சொல்வதுபோல, சொல்லேர் உழவு நடத்தியுள்ளார். இருள் கனிகளை கொத்தித் தின்னும் சுடர்க்கிளிகளைச் சொற்களாக வளர்த்து வருகிறேன் என்கிறார் கவிஞர்.
சில கவிதைகளை மட்டும் இங்கு சொல்லி விட்டு, இந்த அனுபவத்தை வாசிப்பவர்களுக்கே விட்டு விடுகிறேன்.
எனக்கு பல கவிதைகள் ஆன்மீக அனுபவங்களைத் தருபவையாக உள்ளன. கீழ்க்கண்ட கவிதையை ஒரு துளி:
ஜோதி
மரமோ பச்சை தீபம்
மலையோ விண்ணோக்கி எழும்
கற்சுடர்
சீறும் கடலலையோ
நீர் ஜுவாலை
என் கூப்பிய கரங்களோ
அருட்பெருஞ்ஜோதி
கற்பூர லிங்கம் கவிதையின் கடைசி வரிகள், நாதன் உள்ளிருக்கையில் என்கிறது:
சடாரென்று எனக்குள் திரும்பினேனங்கே
சடசடத்து
எரிந்து கொண்டிருந்ததொரு
கற்பூர லிங்கம்
மிகவும் பிடித்த அம்மா கவிதை வேம்பு:
வீட்டுக்கு வெளியே நின்ற வேம்பை
நான் அம்மா என்றுதான் அழைப்பேன்
______&
கற்பூரச்சுடர் போல கைகளை உயர்த்தினேன்
எங்கிருந்தோ கிளையசைத்து என்னை
ஆசிர்வதிக்கிறது வேம்பு
நித்திய மலர் கவிதை தியானம் மூலம் கிடைக்கும் உடல் தாண்டிய அனுபவத்தைச் சொல்கிறது.
துக்கிரிகள் கவிதை பொம்மைக்குப் பாலூட்டும் பெண்ணிடமிருந்து பொம்மையைப் பறித்தோடும் துக்கிரிகள் சூழ்ந்த உலகைக் காட்டுகிறது.
பிரமிக்க வைக்கும் கற்பனைக்கு உதாரணமாக கீழ்க்கண்ட வரிகள், நெய்தல் நிலக் குறிப்புகள் கவிதையிலிருந்து:
கடலொரு நீல இலை
அடிக்கிற காற்றிலது
பறந்துவிடாமல் இருக்க
வெட்டவெளியை அதன்மீது
எடை வைத்திருக்கும்
இயற்கையின் சாமர்த்தியம்
வியப்பிற்குரியது
மிகச் சிறந்த படிமங்களுக்கு, குடுவை கவிதை:
மனத்தின் வாசலில் இருந்த
மௌனத்தின் பாறை மீது
தாவி ஏறியது ஒரு சொற்குரங்கு
………
பயந்து போய் பாறையின் மீது குடுவையை
ஓங்கி அடித்தது
மௌனப்பாறை எங்கும் சிதறியது
கனவு நட்சத்திரங்கள்
எனக்குப் பிடித்த மற்றொரு மிகச் சிறந்த கவிதை வாழ்வென்பது:
ஓட்டமும் நடையுமாய் ஓடியது போதும்
மரம் போல கொஞ்ச நேரம் கிளைகளை விரித்து
………
வடுக்களால் அழகுற்று
தழையத் தழைய நிழல்பரப்பி
நின்றிருப்பதல்லால்
வாழ்வென்பது வேறென்ன
பூமி சிக்கிக் கொண்டது எனும் நெடுங்கவிதையில், திசைகளின் விவரிப்பு மிகச் சிறப்பு.
காயகல்பம் கவிதையில் வரும் கீழ்க்கண்ட வரிகள் மிக அருமை:
நாமோ அடிச்சேற்றில் நீந்துகிற குரவை மீன்கள்
வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை
பூமி என்கிற தபேலாவின் மீது குரவைகள்
துள்ளுகிறபோது எழுகிற இசை
ஆர்ப்பரிப்பு மற்றுமொரு அழகான கவிதை:
அலைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து
நடுக்கடலில் கொண்டு கொட்டி விட்டு வந்திருக்கிறேன்
யாரும் பார்க்காத இடத்திலிருந்து ஆர்ப்பரிப்பதில்
இரண்டு மடங்கு சந்தோஷம் அவற்றுக்கு
மற்றும் ஒரு சிறப்பான கவிதை: ஹொக்கைமா பூக்கள்
அற்புதமான கற்பனை. கடைசி சில வரிகள்:
பனி உதடுகளில்
பாலருவி வழியக் கிடக்கும்
மலைக் குழந்தையை
மடியில் கிடத்திக் கொண்டு
தாய்மையின் ஒளியால் அனைவரையும்
ஆசிர்வதிக்கிறது நிலா
நீல நாய்க்குட்டி கவிதையில், கவிஞர் வானத்தை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்:
நட்சத்திர முடிகள் புசுபுசுக்கும்
நீல நாய்க்குட்டிதான் வானம்
காமம் பற்றிய குறுங்கவிதைகள் அருமை.
துயரத்தை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். உன்னத பலவீனம் கவிதையில்:
உண்மையில் துயரமென்பது
வாழ்வற்றுப் போவதல்ல
அழுவதற்கு மடியற்று போவது
கடைசி கடவுள் கவிதை, கடவுளை விமர்சிக்கிறது.
வரிசை ஒரு மிகச் சிறந்த கவிதை.
நெகிழிப்பூ வட்டம் – என்ன அழகான தலைப்பு. நான் ரசித்த சில வரிகள்:
கிளிங் கிளிங் எனும்
ஒலி வடிவ தங்க நாணயங்களை
காற்றில் செலவிட்டபடி
மிதிவண்டியில் கடலாடச் சென்றேன்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த 2023ம் ஆண்டின் மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவாகும்.
அவர் கவிதையால் பூஜிக்கும் காளி இன்னும் பல கவிதைகள் படைக்கத் துணை புரிவாள்.
அற்புதமான வாசிப்பு அனுபவம்.
கவிஞர் கார்த்திக் திலகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நூலின் பெயர் : அல்லியம் {கவிதைத் தொகுப்பு}
நூலாசிரியர்: கார்த்திக் திலகன்
பதிப்பகம் : படைப்பு பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.