புதிய புத்தகங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட வேண்டும். இதுவரை நான் தோற்றதே இல்லை. துவங்கிய சில பக்கங்களிலேயே அல்லது பாதியிலேயே புத்தகங்கள் புறமுதுகு காட்டிவிடும். முதல்முறையாக ஜெயித்தது கார்த்திக் திலகனின் அல்லியம். இறுதிவரை இறுக்கமாய் என் கைகளைப் பற்றிக் கொண்டன அல்லது நான் பற்றிக் கொண்டேன். உண்மையில் அது ஓர் ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆகாயத்துக்கும் பூமிக்குமிடையே, பூஜ்யத்திற்கும் முடிவிலிக்குமிடையே, அநாதி காலத்திற்கும் இன்றைக்குமிடையே சொற்களின் முதுகிலேறிச் சுழன்று, பறந்து, அமிழ்ந்து மொழியின் ஆன்மாவை தரிசிக்கும் பரவச நிலை.
ஆதியிலிருந்து நீளும் ஆழ்நிலை தியானத்திற்குப் பிறகான அபூர்வமான பரமானந்தம், இந்தப் புத்தகத்தின் ஒரேயொரு வாசிப்பில் சாத்தியமாகக் கூடும். சங்க காலம் தொட்டுத் தொடரும் இலக்கிய மரபில் கவிதைகளின் பரிணாம வளர்ச்சியை தவற விட்டவர்களும், நவீனம் பின் நவீனமென தடுமாறும் இளவட்டப் படைப்பாளிகளும் ஒரேயொரு முறை அல்லியத்தை வாசித்து விடுங்கள். செறிவூட்டிய வார்த்தைகளாலும், எளிதில் வாய்க்காத உள்ளுறை படிமங்களாலும் கவிஞர் நிகழ்த்தியிருக்கும் உன்னதமான மொழியின் மாய ஜாலங்களை, உணர்வுகளின் வாண வேடிக்கைகளைக் கண்டிப்பாகக் கண்டு களிக்கலாம்.
கவிதை என்பது யதார்த்தத்தைத் தெய்வமாக்குவது என்றொரு வரையறை பார்த்த ஞாபகம். இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது இதுவரை இங்கிருந்த சகலமும் புனிதமாகி விட்டதாகவே தோன்றுகிறது.
மரமோ பச்சை தீபம்
மலையோ விண்ணோக்கி
எழும் கற்சுடர்
சீரும் கடலலையோ
நீர் ஜுவாலை
என் கூப்பிய கரங்களோ அருட்பெருஞ்ஜோதி
இப்படித் தான் துவங்குகிறது அல்லியம்.
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை, கண்டுகளித்த பரமானந்தத்தை வாசகனுடன் பகிர்ந்து கொள்ளும் யத்தனிப்பு கவிதைகளில்.
மாதொரு பாகனும் அர்த்த நாரீஸ்வரனும் ஒன்று தானே என்ற குழப்பத்தின் மீது ஞானத்தின் ஒளியை பாய்ச்சுகிறது இந்தக் கவிதை.
இருளை பார்க்கலாம் என்று ஓடோடி வந்தது ஒளி
ஒளியைக் கண்டதும் மலைக்குப் பின்னால் விளையாட்டாக மறைந்து கொண்டது இருள்
ஒரு பக்கம் இருளும்
ஒரு பக்கம் ஒளியுமாக மிளிரும் மலை அர்த்தநாரீஸ்வரன்
வானவர்களுக்கு மட்டும் வாய்க்கும் இந்தப் பிரபஞ்ச தரிசனம் வாசகர்களுக்கும் கிட்டும். வார்த்தைகளால் உருவாக்க முடியும் இதுவரை கண்டிராத உச்ச பட்ச மாயத் தோற்றங்களை வாசித்தும் அவதானித்தும் முடித்த பிறகு முகத்தில் அரும்பும் புன்னகை, கவிதைகளின் ஆகச்சிறந்த பயன். மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே என்பதோடு நின்று விட்ட அழகு, கார்த்திக் திலகனின் கைவரிசையில் நவீன சித்திரமாய் விகசித்து நீண்டிருக்கும் கவிதை ஒன்று.
புல் நுனிகளின் கண்ணாடி உலகங்களை திறந்து கொண்டு தேவதைகள் இறங்கி வருகிறார்கள்
சமவெளியின் மனிதன் என்று அறிமுகம் செய்து கொண்டு
நிழலை விரித்து போட்டு அவர்களை உட்கார சொல்லி உபசரிக்கிறேன்
கவிதையின் கூடாரங்களில் அவர்களைத் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்
குட்டி நாய்களென புல்வெளி மீது விழுந்து விளையாடும்
கொழுத்த வெள்ளிக் கதிர்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள் அதுவரை
ஒவ்வொரு வரியிலும் கிளர்ச்சியூட்டும் கனவு நிலை. கடல், மலை, அருவி, நதி, ஒளி, இருள் என்றெல்லாம் விரியும் இயற்கையின் படைப்பில், அவசர மனிதன் காணத் தவறும் அழகின் சிரிப்பை, ஆன்மீக ரகசியத்தை மொழிப் படங்களாக்கி, கவிதைத் தொகுதி முழுக்கக் கண்காட்சி நடக்கிறது .
பூக்களின் தேன் மார்புகளில்
பட்டாம்பூச்சிகள் பால்குடிக்கும் போது சப்பொலிகளின்..
மார்கழி வாசலில்
சாண உருண்டையின் மேல்
செருகி வைக்கப்பட்ட பூசணிப்பூவில்
எறும்பு ஒன்று உள்ளே போவதும்
வெளியே வருவதுமாக..
பனி உதடுகளில்
பாலருவி வழியக் கிடக்கும்
மலைக் குழந்தையை
மடியில் கிடத்திக் கொண்டு..
அலைகளால் செய்த
பட்டுப் பாவாடையை
உயர்த்திப் பிடித்தபடி சுழலும்
சின்னஞ்சிறுமி இந்த பூமி..
இப்படியெல்லாம்
கவிதைகள் சரஞ்சரமாய் கவிஞரின் விரல்களிலிருந்து வழிகின்றன. சொல்லியவை சில. சொல்லப்படாதவை கணக்கற்றவை. கன்டென்ட்டுகளுக்காக அலைபவர்களுக்கு மத்தியில் காண்பவை எல்லாம் கவிதைகளே என்ற ஜென் மனப்பான்மையுடன் தனித்தன்மையான 64 கவிதைகள் 7 உட்பிரிவுகளுக்குள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனையும் கொள்ளை அழகு. இந்திரனின் கையெழுத்திட்டிருந்த அந்த காகிதத்தில் இருந்ததையும், அத்திக் கள் அத்தியாயத்தையும் முப்பால் கற்றுத் தேர்ந்த வீரியமுள்ள விமர்சகர்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டேன். அவர்கள் விவரமாக எழுதுவார்கள்.
மூத்தவர் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ள அழகான அணிந்துரையில் உள்ளபடி “மொழி அவர் பின்னால் ஓடி வருகிறதா இல்லை அவர் மொழியை துரத்திப் பிடித்து விளையாடுகிறாரா என்ற ஆச்சரியம்” இன்னும் எனக்கு விலகவில்லை. சொல்லேர் உழவன் கார்த்திக் திலகனின் இன்னொரு மகத்தான தொகுப்பு, படைப்பு குழுமத்தின் வெளியீடாக கலை நயத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் கவனத்தில் மேலும் பரிசுத்தம் கூடியிருக்குமோவென சொல்லத் தோன்றுகிறது. மற்றபடி காளியம்பதியில் வளரும் சுடர்க்கிளிகளின் அடுத்த வலசைக்காக நீள்வரிசையில் காத்திருக்கிறோம்.
வில்லியம்ஸ்
நூலின் பெயர் : அல்லியம் {கவிதைத் தொகுப்பு}
நூலாசிரியர்: கார்த்திக் திலகன்
பதிப்பகம் : படைப்பு பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.