‘பால் பாஸ்கர் (தமிழ்நாட்டு பசுமை வரலாற்று நாயகன்)’ – நூல் அறிமுகம்
“ஒரு சமூகத்தின் செல்வம் சமூகத்திற்கு வழிகாட்டியாக வாழ்ந்த மனிதர்களே”
திண்டுக்கல் ‘அமைதி அறக்கட்டளை’யின் நிறுவனத் தலைவரும், தமிழ்நாட்டின் சூழலியல் மற்றும் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பால் பாஸ்கரின் வாழ்வு மற்றும் பணிகளை மையமாகக் கொண்டு save அமைப்பின் இயக்குனர் அலோசியஸ் எழுதியுள்ள “தமிழ்நாட்டுப் பசுமை வரலாற்று நாயகன்” நூல் குறித்த அறிமுகம்.
திண்டுக்கலை தளமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பால் பாஸ்கர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்கை வளம் காத்தல், பாரம்பரிய விதைகள் மீட்பு, நச்சுத்தன்மையற்ற நிலையான வேளாண்மை மற்றும் கிராமப்புற விழிப்புணர்வுக்காக அர்ப்பணித்தவர்.
அலோசியஸ் எழுதியுள்ள இந்நூல், வெறும் புகழாரம் சூட்டும் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு அல்ல; மாறாக, தமிழ்நாட்டில் நவீன விவசாயத்தின் பேரழிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, மாற்று வழிகளை நடைமுறைப்படுத்திய ஒரு மக்கள் போராளியின் வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகும்.
பால் பாஸ்கர் அமைதி அறக்கட்டளை மூலமாக முன்னெடுத்த மரங்கள் வளர்ப்பு, நீர் நிலைப் பாதுகாப்பு, நச்சுக்கொல்லிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆகியவற்றை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டுமல்ல, அது அரசியல், சமத்துவம் மற்றும் பொருளாதாரத்தோடு தொடர்புடையது என்பதை இந்நூல் விவரிக்கிறது.
இன்றைய சூழலியல் நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். அந்த வகையில் இந்நூல் மிகச் சரியான நேரத்தில் எழுதப்பட்ட ஆவணமாகும்.
எவ்வித ஜோடிப்புகளும் இன்றி, பால் பாஸ்கரின் களப்பணிகளை அவற்றின் உண்மைத் தன்மையோடு ஆசிரியர் அலோசியஸ் பதிவு செய்துள்ளார்.
விவசாயம் வணிகமயமான சூழலில், பாரம்பரிய முறைகளின் அவசியத்தை பால் பாஸ்கர் எங்கு, எப்படி முன்னெடுத்தார் என்பதை இந்நூல் நம் கண்முன்னே நிறுத்துகிறது.
இந்நூலில் 16 சமூக அறிஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யர், பேராசிரியர் பழனிதுரை, வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், பத்திரிகையாளர் மணா, மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் படைப்புகள் மூலம் பால் பாஸ்கரின் மனித குலத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து விரிவாக பதிவு செய்துள்ளார்கள்.
எங்கெல்லாம் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் விடுதலை வேட்கை உடையவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பால் பாஸ்கர் நின்று மக்களைப் பாதுகாத்து கொண்டிருப்பார் என்று நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் க. பழனிதுரை விமர்சனம் என்ற பெயரில் அரசை விமர்சித்து கொண்டே இருக்காமல் மக்கள் பிரச்சினைகளுக்கான மாற்றுத் திட்டங்களுடன் அரசை அணுகி மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தவார். தன்னுடைய அமைப்பு வளர்வதை மட்டும் கருதாமல் மற்ற அமைப்புகளையும் ஒன்றிணைத்து வளர்ப்பதில் தனி அக்கறை கொண்டவர் பால் பாஸ்கர் என பதிவிட்டுள்ளார்.
அமைதி அறக்கட்டளை மூலம் குழந்ததைகள் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, தொழிலாளர் குழந்தைகளின் மறுவாழ்வு, கல்வி என பல்வேறு தளங்களில் களப்பணியில் ஈடுபட்டு பெரும் பங்களிப்பை வழங்கியவர் என தொகுப்பாசிரியர் அலோசியஸ் தெரிவித்துள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதையும், கொடைக்கானல் கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களை மீட்டு பாத்துகாதவர் பால் பாஸ்கர் என குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்.
“தமிழ்நாட்டுப் பசுமை வரலாற்று நாயகன்” நூல், பால் பாஸ்கர் எனும் தனிமனிதனின் சாதனை மட்டுமல்ல; நிலத்தையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கட்டாயத் தேவையாகும். கார்ப்பரேட் விவசாய முறைகளும், இயற்கைச் சுரண்டல்களும் அதிகரித்துவரும் இக்காலத்தில், இயற்கையோடும் மக்களோடும் இயைந்து வாழ்வதற்கான உத்வேகத்தை இந்நூல் வாசகர்களுக்கு வழங்கும்.
இந்நூலை வாசிப்பதன் மூலமாக நாம் தமிழ்நாட்டின் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் பசுமைப் போராட்ட வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்பதை நாம் உணர முடியும்.
வின்சென்ட்.
சூழலியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு கையேடு போலப் பயன்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. சமூக அக்கறையுள்ள அனைவரும் வாசித்தறிய வேண்டிய நூல் இது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பால் பாஸ்கர் (தமிழ்நாட்டு பசுமை வரலாற்று நாயகன்) |
| தொகுப்பாசிரியர்: | A. அலோசியஸ் |
| வெளியீடு: | தமிழ்நாடு அலையன்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் |
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ.பிரபாகர் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

